பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை, வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!
லட்சத்தீவு..! அமைதியை விரும்புவர்களுக்கு அருமையான தேசம்.! 2001 முதல் 2004 வரை அங்கே தான் நான் வேலை பார்த்தேன். 2004-ஆம் ஆண்டு இந்தோனேசியா, இந்தியா, இலங்கை உள்ளிட்ட நாடுகள் சுனாமியால் பேரிழப்பை சந்தித்தபோது, அரபிக்கடலில் அமைதியாகத் தான் இருந்தது லட்சத்தீவு. அந்த அளவுக்கு சாந்த சொரூபி.
பேரிரைச்சலை எழுப்பும் தொழிற்சாலைகள் ஏதும் கிடையாது. எப்போதும் சிலுசிலுவென்று வீசும் கடல் காற்று. தென்னங்கீற்று அசையும் சத்தத்தை தவிர வேறு எந்த சத்தத்தையும் அங்கே கேட்க முடியாது. முழுக்க முழுக்க தென்னை மரங்கள் நடுவே வீடுகள் இருப்பதால், அங்கே வெயிலின் வெளிச்சமே நம்மீது விழாது.

பெயர்தான் லட்சத்தீவு என்றாலும், 36 தீவுகள் தான் ஆங்காங்கே சிதறிக் கிடக்கின்றன. அவற்றில் அகத்தி, கவரத்தி, அமினி, மினிகாய், அந்த்ரூத் உள்ளிட்ட 12 தீவுகளில் மட்டுமே மக்கள் வசிக்கின்றனர். அதுவும் 98 சதவீதம் பேர் இஸ்லாமியர்கள். மீதம் உள்ள 2 சதவீதம் பேர், கேரளா, கர்நாடகா மற்றும் தமிழ்நாட்டில் இருந்து பணிக்கு சென்றவர்களாக இருப்பர். அதேபோல், வெளியூரில் இருந்து வேலைக்காக சென்றவர்கள் மீது பாசத்தை தெளிப்பதில், அந்த மக்களுக்கு ஈடு இணை இருக்க முடியாது. மாமா நல்லா சாப்பிடு மாமா.. (அவர்கள் முஸ்லிம் என்பதால் நம்மை மாமா என்றே அழைப்பர்)
பங்காரம் என்ற தீவு சுற்றுலாவாசிகளுக்காக உருவாக்கப்பட்ட தீவு. அங்கு ஆண்டுதோறும் சுற்றுலா பயணிகள் வந்து செல்வர். காங்கிரஸ் தலைவர்கள் ராகுல்காந்தி, சோனியாகாந்தி ஆகியோர் இங்கு அவ்வப்போது வந்து தங்கி, ஓய்வு எடுத்துச் செல்வார்கள். அந்த அளவுக்கு இயற்கையை நேசிப்பவர்களுக்கு உல்லாசபுரி இந்த தீவு. தீவுக்கு அருகே பவளப்பாறைகளும், வண்ண வண்ண மீன்களும் பவனி வருவதை பார்க்கலாம். இங்கு ஸ்கூபா டைவிங்கும் மிகவும் பிரபலமானது.
முழுக்க முழுக்க இஸ்லாமியர்கள் மட்டுமே வசிக்கும் இந்த தீவுகளில் மொத்த மக்கள் தொகையே 65 ஆயிரத்திற்கு உள்ளே தான் இருக்கும். 12 தீவுகளில் அகத்தியில் மட்டும் விமான நிலையம் உள்ளது. மற்ற தீவுகளுக்கு ஹெலிபேட் உள்ளது. அவசர தேவைக்கு ஹெலிகாப்டர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.
இந்த 12 தீவுகளையும் நிர்வாகம் செய்பவர் அட்மினிஸ்ட்ரேட்டர் ஆவார். அதாவது இந்திய ஆட்சிப்பணி அதிகாரி ஒருவர், இந்த தீவுகளை நிர்வாகம் செய்வார். இங்கு நிர்வாக அதிகாரியாக இருந்த தினேஷ்குமார் கடந்த டிசம்பரில் கொரோனா தாக்கி, சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில் உயிரிழந்தார்.

அதன்பிறகு, லட்சத்தீவுக்கு நிர்வாக அதிகாரியாக குஜராத்தை சேர்ந்த பிரபுல் ஹோடா படேல் நியமிக்கப்பட்டார். இவர், இந்திய ஆட்சிப்பணி அதிகாரி இல்லை. இவர் நரேந்திர மோடி குஜராத் முதல்வராக இருந்தபோது, அந்த மாநில உள்துறை இணை அமைச்சர் பொறுப்பு வகித்தவர்.
லட்சத்தீவில் சினிமா தியேட்டர் கிடையாது. ஒயின்ஷாப்புக்கு அனுமதி இல்லை. காவல் நிலையங்கள் உண்டு என்றாலும் பெரும்பாலும் கொலை, கொள்ளை உள்ளிட்ட எந்த குற்றவழக்குகள் பதிவாகாது. நான் தங்கி வேலை பார்த்த அகத்தி தீவில் விமான நிலையம் இருப்பதால், காலை 10 மணிக்கு கொச்சியில் இருந்து ஒரு விமானம் வரும். அப்போது, காவல் நிலையத்தில் இருந்து ஒரு ஜீப்பில் விமான நிலையத்திற்கு போலீஸார் செல்வர். அந்த விமானம் புறப்பட்டு சென்ற பிறகு திரும்பி காவல் நிலையம் வருவர். மீண்டும் அந்த விமானம் 3-30 மணிக்கு வந்துவிட்டு திரும்பி செல்லும். அப்போதும், போலீஸார் விமான நிலையம் வந்து செல்வர். இதுமட்டும் தான் அவர்களது வேலையாக இருக்கும்.
மற்றபடி பி.டபுள்யூடி, இ.பி. சுகாதாரம், ஹார்பார், எஜூகேசன் போன்ற துறைகள் உண்டு. பிஎஸ்என்எல், போஸ்ட் ஆபிஸ், வங்கி போன்ற பொதுத் துறை நிறுவனங்கள் உண்டு. அந்த்ரூத் என்ற தீவில் மட்டும் கிளைச்சிறை உண்டு.
லட்சத்தீவில் விவசாயம் செய்யும் நிலப்பரப்பு இல்லை என்பதால், மீன்பிடித்தலும், கொப்பறைத் தேங்காய் வணிகமும்தான் முதன்மையான தொழில். ஒவ்வொரு ஆண்டும் சீசன் காலத்தில், கொப்பறைத் தேங்காயையும், சூறை மீனையும் விற்பனை செய்வதற்காக லட்சத்தீவுகளில் இருந்து தூத்துக்குடிக்கு சரக்கு கப்பல்கள் இயக்கப்படும்.
இப்போது ஒட்டு மொத்த தீவு மக்களும், நிர்வாக அதிகாரிக்கு எதிராக போர்க்குரல் எழுப்பி உள்ளனர். காங்கிரஸ் தலைவர் ராகுல், தமிழக முதல்வர் ஸ்டாலின், வைகோ, கமல் உள்ளிட்ட தலைவர்கள் லட்சத்தீவின் நிர்வாக அதிகாரியை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர். கேரளாவை சேர்ந்த அரசியல்வாதிகள், அவ்வளவு ஏன் லட்சத்தீவு பிஜேபி செயலாளர் முகம்மது காசிமும், நிர்வாக அதிகாரிக்கு எதிர்ப்பு தெரிவித்து, அவரை மாற்ற வேண்டும் என்கிறார். அவரும் எதிர்ப்பு போராட்டத்தில் பங்கேற்று ஆதரவு தெரிவித்துள்ளார்.

இதற்கான காரணம் என்ன? அங்கு என்னதான் நடக்கிறது? என்பதை அறிந்து கொள்ள அகத்தி தீவில் வசிக்கும் நண்பர் ஒருவரை தொடர்பு கொண்டு பேசினேன்.
அவர் சொன்ன தகவல்களை இங்கே பகிர்கிறேன்.. “முழுக்க முழுக்க இஸ்லாமியர்கள் என்பதால், இங்கு மாட்டுக்கறியும், மீனும் தான் முதன்மை உணவு. பள்ளி மாணவர்களுக்கான பகல் உணவிலும் கூட மாட்டுக்கறியே வழங்கப்பட்டு வந்தது. ஆனால், பிரபுல் படேல் நிர்வாகத்திற்கு வந்தபிறகு மாட்டுக்கறி விற்பனைக்கு தடை விதித்தார். அதாவது, Lakshadweep Animal Preservation Regulations என்ற பெயரில் கால்நடைகள் பாதுகாப்பு சட்டம் என்ற சட்டத்தின் திரை மறைவில், நேரடியாகவோ, மறைமுகமாகவோ, மாட்டுக்கறி விறபனைக்கு தடை கொண்டு வந்தார். மீறினால் கைது செய்யப்பட்டு,10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை வழங்கப்படும்; 1 லட்சம் ரூபாயில் இருந்து 5லட்சம் ரூபாய் வரை அபராதம் கட்ட நேரிடும்.
LDAR (Lakshadweep Development Authority Regulations) என்ற புதிய சட்டத்தை கொண்டு வந்தார். இதன்படி, லட்சத்தீவில் வசிக்கும் எவரையும் எந்த காரணமும் கூறாமல், நிலத்தில் இருந்து வெளியேற்றிவிடலாம்.
PASA (Lakdhadweep Anti-Social Activity Regulations) என்ற புதிய சட்டத்தையும் கொண்டு வந்தார். இந்த சட்டத்தின் கீழ், எவரையும் காரணம் எதுவுமே இல்லாமல் கைது செய்து, ஓராண்டு சிறையில் அடைக்கலாம்.
Draft Panchayat Notification என்ற பெயரில், இரண்டு குழந்தைகளுக்கு மேல் இருப்பவர்கள், உள்ளாட்சி மன்றத் தேர்தலில் போட்டியிட முடியாது. லட்சத்தீவில் ஒவ்வொரு குடும்பத்திலும் நிறைய குழந்தைகள் இருப்பார்கள். கடவுள் கொடுக்கும் சொத்து என வரையறையின்றி குழந்தையை பெற்று வளர்ப்பார்கள். அதற்கு செக் வைக்கும் வகையில், இந்த சட்டத்தை கொண்டு வந்திருக்கிறது மத்திய அரசு.
தீவு முழுவதும் தென்னந்தோப்பால் சூழப்பட்டிருக்கும் என்பதால், கடற்கரையோரம் தான் கொஞ்சம் வெயில் தென்படும். அங்கே தான் பரண் அமைத்து தாங்கள் பிடித்து வந்த மீன்களை காயவைப்பார்கள். அதேபோல், வலை போன்ற மீன்பிடி உபகரணங்களும் அங்கே ‘ஷெட்’ போட்டு வைத்திருப்பார்கள். கடற்கரையின் அழகு கெட்டுப்போகிறது என்ற பெயரில், மீனவர்களின் ஷெட்டுக்களையும் அகற்ற உத்தரவிட்டிருக்கிறார். சுற்றுலாத்துறையை மேம்படுத்துகிறேன் என்ற பெயரில், மதுக்கடைகளை திறக்கவும் ஆணை பிறப்பித்திருக்கிறார் புதிய அட்மினிஸ்ட்ரேட்டர். இதையெல்லாம் நாங்கள் ஒருபோதும் ஏற்கமாட்டோம்” என்றார்.
அமைதியாக அரபிக்கடலின் தாலாட்டில் தூங்கிய அந்த மக்களை கொந்தளிக்க வைத்திருக்கிறது மோடி அரசு.
-சி.அ.அய்யப்பன்.
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.