Published:Updated:

ஆதார் பாதுகாப்பானதா? - மேலும் மேலும் குழப்பும் மத்திய அரசு!

ஆதார்
பிரீமியம் ஸ்டோரி
ஆதார்

இந்தியாவில் ஒவ்வொரு குடிமகனுக்கும் அடையாள அட்டை’ என்பதைக் கேட்பதற்கு நன்றாகத்தான் இருக்கிறது.

ஆதார் பாதுகாப்பானதா? - மேலும் மேலும் குழப்பும் மத்திய அரசு!

இந்தியாவில் ஒவ்வொரு குடிமகனுக்கும் அடையாள அட்டை’ என்பதைக் கேட்பதற்கு நன்றாகத்தான் இருக்கிறது.

Published:Updated:
ஆதார்
பிரீமியம் ஸ்டோரி
ஆதார்

எப்போதும் சர்ச்சைகளைக்கொண்டிருக்கும் ‘ஆதார்’ குறித்து, சமீபத்தில் வெளியிடப்பட்ட இரண்டு முரண்பட்ட அறிவிப்புகள், மக்கள் மத்தியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கின்றன!

கருவிழி முதல் கைரேகை வரை தனிநபர் தரவுகளைக்கொண்டிருக்கும் ஆதார் அடையாள அட்டை, ஆரம்பத்திலிருந்தே சர்ச்சைகளும் குழப்பங்களும் நிறைந்ததாகவே இருக்கிறது. ஆதார் மூலமாகத் தனிநபர் தரவுகள் கசிய வாய்ப்பிருக்கிறது... அது தனிநபரின் அந்தரங்க உரிமைகளை பாதிக்கும் என்றெல்லாம் அச்சம் தெரிவிக்கப்பட்டது. ஆதார் வேண்டாம் என்று பா.ஜ.க., இடதுசாரிகள் உட்பட பல அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. மக்களின் அச்சத்தையும், அரசியல் கட்சிகளின் எதிர்ப்புகளையும் புறந்தள்ளிவிட்டு, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசால் ‘ஆதார்’ கொண்டுவரப்பட்டது.

ஆதார் பாதுகாப்பானதா? - மேலும் மேலும் குழப்பும் மத்திய அரசு!

அதன் பிறகு, `ஆதாரைக் குடும்ப அட்டையுடன் இணையுங்கள்’, `வங்கிக் கணக்குடன் இணையுங்கள்’, `சமையல் எரிவாயு இணைப்பு எண்ணுடன் இணையுங்கள்’ என்று அனைத்துக்கும் ஆதார் என்ற கட்டாய நிலையை ஆட்சியாளர்கள் உருவாக்கிவிட்டார்கள். ‘ஆதார், தனிநபரின் அந்தரங்க உரிமையை மீறுகிறது’ என்று சொல்லி பா.ஜ.க எதிர்ப்பு தெரிவித்தது. ஆனால், ஆட்சிக்கு வந்த பிறகு முந்தைய நிலைப்பாட்டிலிருந்து பா.ஜ.க பல்டி அடித்தது. ஆதார் இல்லாமல் எங்கும் செல்ல முடியாது, ஆதார் இல்லாமல் எந்தச் சேவையையும் பெற முடியாது என்கிற நிலைதான் பா.ஜ.க ஆட்சியிலும் இருக்கிறது.

இந்தச் சூழலில்தான், ‘இந்திய தனித்துவ அடையாள ஆணையம்’ (ஆதார்), அதிர்ச்சிக்குரிய ஓர் அறிவிப்பைச் சமீபத்தில் வெளியிட்டது. `ஆதார் நகல்கள் தவறாகப் பயன்படுத்தப்படுவதற்கு வாய்ப்பு இருப்பதால், எந்தவொரு நிறுவனத்துக்கும் அவற்றை வழங்க வேண்டாம். கட்டாயம் வழங்க வேண்டும் என்கிற பட்சத்தில், ஆதார் எண்ணின் கடைசி நான்கு இலக்கங்களைத் தவிர மீதமுள்ள எண்கள் மறைக்கப்பட்ட நிலையிலான நகல்களை வழங்கலாம். இதை இணையத்திலிருந்து பதிவிறக்கம் செய்ய முடியும்’ என்று அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது.

மேலும், `ஆதார் அட்டையைப் பாதுகாப்பில்லாத கணினி மூலம் பதிவிறக்கம் செய்ய வேண்டாம். கணினி மையங்களில் பதிவிறக்கம் செய்வதைத் தவிர்க்க வேண்டும். கணினி மையங்கள் மூலம் பதிவிறக்கம் செய்தால், கணினியிலிருந்து அந்த நகலை முழுவதுமாக நீக்குமாறு கேட்டு, அதை உறுதிசெய்துகொள்ள வேண்டும்’ என்றும் அந்த அறிவிப்பில் கூறப்பட்டிருந்தது. ஆதார் அமைப்பால் வெளியிடப்பட்ட இந்த அறிவிப்பு, நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அடுத்த சில மணி நேரத்தில் அந்த அறிவிப்பை மத்திய அரசு வாபஸ் பெற்றது. “எந்தவொரு நிறுவனத்துக்கும் ஆதார் நகல் கொடுப்பதைத் தவிர்க்கவும் என்ற அறிவிப்பு, தவறான புரிதலுக்கு வழிவகுக்கும் என்பதைக் கருத்தில்கொண்டு உடனடியாக அது திரும்பப் பெறப்படுகிறது” என்று கூறிய மத்திய தொழில்நுட்பத்துறை அமைச்சகம், “ஆதார் அட்டை வைத்திருப்பவர்கள் தங்களின் ஆதார் எண்களைப் பயன்படுத்துவதிலும், பகிர்வதிலும் வழக்கமான விவேகத்துடன் செயல்படுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்” என்று குறிப்பிட்டுள்ளது. ஆனால், இது மேலும் குழப்பங்களுக்குத்தான் வழிவகுத்திருக்கிறது.

அருணன்
அருணன்

இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த பேராசிரியர் அருணனிடம் பேசினோம். “ ‘இந்தியாவில் ஒவ்வொரு குடிமகனுக்கும் அடையாள அட்டை’ என்பதைக் கேட்பதற்கு நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால், அடிப்படையில் இது மிகவும் ஆபத்தான ஒரு திட்டம். ஆதார் கொண்டுவரப்பட்டபோதே எங்கள் கட்சி அதை எதிர்த்தது. இரண்டு அமெரிக்க நிறுவனங்கள்தான் ஆதாருக்கான மென்பொருளை வடிவமைத்தன. அந்த நிறுவனங்கள், அமெரிக்க நாட்டின் பாதுகாப்பு நிறுவனங்களுடன் தொடர்புடையவை. அவர்களிடம் இந்திய குடிமக்களின் தனிநபர் தரவுகள் இருப்பது பெரும் ஆபத்து என்று எச்சரித்தோம். அதை மீறி ஆதாரைக் கொண்டுவந்தார்கள்.

‘அனைவருக்கும் அடையாள அட்டை’ என்று சொல்லிவிட்டு, அதைத் தொலைபேசி எண், சமையல் எரிவாயு இணைப்பு என எல்லாவற்றுடனும் இணைக்க வேண்டும் என்று சொன்னார்கள். எல்லாவற்றையும்விட, `ஒவ்வொருவரின் வங்கிக் கணக்கையும் ஆதாருடன் இணைக்க வேண்டும்’ என்று கட்டாயமாக்கியது மிக மிக ஆபத்தானது. ஆதார் எண் தெரிந்தாலே நம் வங்கிக் கணக்கிலிருந்து பணத்தைத் திருட முடியும் என்ற ஆபத்தான நிலை ஏற்பட்டிருக்கிறது. ஒவ்வொருவரின் அந்தரங்கத்துக்கும், வங்கியில் இருக்கும் பணத்துக்கும் எந்த உத்தரவாதமும் கிடையாது என்கிற நிலை மிக மோசமானது. எந்தவொரு நிறுவனத்திடமும் ஆதார் நகலை அளிக்க வேண்டாம் என்கிற அறிவிப்புக்கான காரணத்தை, அதன் இரண்டாவது அறிக்கையில் மத்திய அரசு வெளிப்படையாகச் சொல்லியிருக்க வேண்டும். ‘விவேகத்துடன் செயல்படுங்கள்’ என்பதற்கான அர்த்தமும் விளங்கவில்லை. மொத்தத்தில் மக்களை மத்திய அரசு பல சிக்கல்களில் மாட்டிவிடுகிறது என்பது மட்டும் நன்றாக விளங்குகிறது” என்றார்.

நாராயணன் திருப்பதி
நாராயணன் திருப்பதி

இது குறித்து பா.ஜ.க-வின் மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதியிடம் பேசினோம். “வேலை உட்பட பல்வேறு விஷயங்களுக்காக, தனியார் நிறுவனங்களிடமும், அமைப்புகளிடமும் பொதுமக்கள் தங்களின் ஆதார் அட்டைகளின் நகல்களை அளிக்கிறார்கள். அவசியமான இடங்களில் மட்டுமே அதைக் கொடுக்க வேண்டும். தேவையில்லாத இடங்களில் ஆதார் நகலைக் கொடுக்கும்போது, அதனால் தேவையற்ற பிரச்னைகள் ஏற்படலாம் என்பதால், இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தால் ஒரு முன்னெச்சரிக்கை அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது. நாம் எவ்வளவுதான் கவனமாக இருந்தாலும், இன்றைய டிஜிட்டல் உலகில் சில தவறுகள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. அதனால்தான், ஏ.டி.எம் அட்டையில் இருக்கும் எண்களை யாரிடமும் பகிராதீர்கள் என்று வங்கிகளிலிருந்து தொடர்ந்து எச்சரிக்கிறார்கள். அதுபோலத்தான், ஆதார் தொடர்பான அறிவிப்பும் வெளியிடப்பட்டது. அதைவைத்து சிலர் தேவையற்ற குழப்பங்களை ஏற்படுத்த முயன்றதால், உடனடியாக அந்த அறிவிப்பு வாபஸ் பெறப்பட்டிருக்கிறது” என்றார்.

மக்களிடம் நாளுக்கு நாள் ஆதார் குறித்த அச்சம் அதிகரித்துவருகிறது. அவர்களின் குழப்பங்களைத் தீர்த்துவைக்கவேண்டியது மத்திய அரசின் உடனடிக் கடமை!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism