Published:Updated:

சர்ச்சைக் கடலில் கருணாநிதி பேனா... குற்றச்சாட்டும்... உண்மை நிலவரமும்!

கருணாநிதி நினைவிடம்
பிரீமியம் ஸ்டோரி
கருணாநிதி நினைவிடம்

நவீன தமிழகத்தைக் கட்டமைத்தவர் கலைஞர். இந்தியாவிலேயே அறுபது ஆண்டுகள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதியாக இருந்தவர் அவர் மட்டுமே.

சர்ச்சைக் கடலில் கருணாநிதி பேனா... குற்றச்சாட்டும்... உண்மை நிலவரமும்!

நவீன தமிழகத்தைக் கட்டமைத்தவர் கலைஞர். இந்தியாவிலேயே அறுபது ஆண்டுகள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதியாக இருந்தவர் அவர் மட்டுமே.

Published:Updated:
கருணாநிதி நினைவிடம்
பிரீமியம் ஸ்டோரி
கருணாநிதி நினைவிடம்

முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவிடத்துக்கு அருகே கடலுக்குள் பேனா வடிவ நினைவுச்சின்னம் வைப்பதற்கான பூர்வாங்கப் பணிகளைத் தொடங்கியிருக்கிறது அரசு. ஓர் அமைச்சர் ‘இது முன்பே இருந்த திட்டம்தான்’ என்றும், மற்றோர் அமைச்சர் ‘அப்படி எந்தத் திட்டமும் இல்லை’ என்றும் மாற்றி மாற்றிப் பேசிவரும் நிலையில், இந்த விவகாரத்தில் உண்மையில் நடப்பது என்ன என்பதை விசாரித்தோம்.

கருணாநிதிக்கு நினைவிடம்...

தி.மு.க ஆட்சிக்கு வந்ததும், “நவீன தமிழ் நாட்டை உருவாக்கிய சிற்பியான கலைஞரின் சாதனைகள் குறித்து வருங்காலத் தலைமுறை அறியக்கூடிய வகையில், நவீன விளக்கப் படங்களுடன், அண்ணா நினைவிட வளாகத்தில் 2.21 ஏக்கர் பரப்பளவில், 39 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நினைவிடம் அமைக்கப்படும்” என்று 24.08.2021-ல் சட்டமன்றத்தில் அறிவித்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின். நினைவிடத்தின் மாதிரி புகைப்படத்தையும் தனது ‘ட்விட்டர்’ பக்கத்தில் பகிர்ந்திருந்தார் முதல்வர். அந்த மாதிரி படத்தில், சூரியன் வடிவில் கருணாநிதியின் நினைவிடமும், அதன் முகப்பில் பிரமாண்ட பேனா வடிவத் தூணும் இடம்பெற்றிருந்தன.

கடலுக்குள் பேனா சிலை... வரைபடம்
கடலுக்குள் பேனா சிலை... வரைபடம்

அதற்கான கட்டுமானப் பணிகள் நடந்துவரும் சூழலில், திடீரென கடலுக்குள் 80 கோடி ரூபாய் செலவில் 134 அடி உயரத்தில் கருணாநிதிக்கு பிரமாண்ட பேனா வடிவ நினைவுச்சின்னம் அமைக்கப்படவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகின. இது குறித்து அரசு சார்பில் அதிகாரபூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாக வில்லையென்றாலும், தொடக்கத்திலேயே எதிர்க்கட்சியினர், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், மீனவர்கள் என்று பல்வேறு தரப்பிலிருந்தும் எதிர்ப்புகள் கிளம்பின.

இந்த நிலையில்தான் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, ``இது புதிய அறிவிப்பு கிடையாது. முதற்கட்டப் பணிகள் நடந்துவரும் நிலையில், இரண்டாம் கட்டப் பணிகளுக்கு இப்போதுதான், அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது” என்றார். மருத்துவத்துறை அமைச்சர்

மா.சுப்பிரமணியனோ, ``அரசு இன்னும் அதிகார பூர்வ அறிவிப்பை வெளியிடவில்லை. அது வெறும் பத்திரிகைச் செய்தி மட்டுமே” என்று அதை மறுத்தார். இந்த நிலையில், கடலில் அமைக்கப்படவிருக்கும் நினைவுச்சின்னம் தொடர்பாக தமிழ்நாடு பொதுப்பணித்துறை, மத்திய சுற்றுச்சூழல்துறை அமைச்சகத்தின் நிபுணர் மதிப்பீட்டுக்குழுவுக்கு ஜூலை மாத இறுதியில் கடிதம் எழுதியது. அதன் பிறகே கடலில் பேனா சிலை அமையவிருப்பது உறுதியானது.

சர்ச்சைக் கடலில் கருணாநிதி பேனா... குற்றச்சாட்டும்... உண்மை நிலவரமும்!

கரையிலிருந்து கடலுக்குள் சென்ற பேனா!

அரசு சார்பில் என்ன நடக்கிறது என்று தெரிந்துகொள்ள பொதுப்பணித்துறைச் செயலாளர் தயானந்த் கட்டாரியாவிடம் பேசினோம். ``இது பற்றிய தகவல்களுக்கு நீங்கள் தமிழ் வளர்ச்சித்துறையில்தான் பேச வேண்டும்” என்று சொல்லிவிட்டார். இதைத் தொடர்ந்து, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறைச் செயலாளர் மகேசன் காசிராஜனிடம் பேசினோம். ``எங்கள் துறையில் அப்படி எந்தச் செயல்முறையும் இல்லை” என்று சுருக்கமாக முடித்துக்கொண்டார். எதிர்க்கட்சிகளின் கடுமையான விமர்சனம் காரணமாக, இந்த விவகாரம் பற்றி அரசுத் தரப்பில் யாரும் பேசக் கூடாது என்று வாய்வழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருப்பதாலேயே இவர்கள் பேச மறுப்பதாகச் சொல்லப்பட்டது. எனவே, விவரமறிந்த கோட்டை அதிகாரிகளிடம் விசாரித்தோம்.

``பேனா சிலை அமைப்பது ஏற்கெனவே சொல்லப்பட்ட திட்டம்தான். முன்பு நினைவிடம் அருகில் அமைப்பதாக இருந்த சிலை, பின்னர் கடலுக்கு மாற்றப்பட்டது. கடந்த மாதம், இந்தப் பணிக்கு, சென்னை மாவட்ட கடற்கரை ஒழுங்குமுறை ஆணையம் ஒப்புதல் அளித்தது. அடுத்ததாக, மாநில கடற்கரை ஒழுங்குமுறை ஆணையத்தின் ஒப்புதலும் பெறப்பட்டிருக்கிறது. அடுத்தகட்டமாக, பொதுப்பணித்துறை சார்பில் கடற்கரை ஒழுங்குமுறை மண்டல (Coastal Regulation Zone) அனுமதியைக் கோரப்பட்டிருக்கிறது. பேனா நினைவுச்சின்னத்துக்குச் செல்ல 650 மீட்டர் நீளத்தில் பெரிய இரும்புப்பாலத்தை அமைக்கவேண்டியிருக்கிறது. கடலில் அமையவிருக்கும் பாலம், அலை எழும்பும் மட்டத்திலிருந்து ஆறு மீட்டர் உயரமும், ஏழு மீட்டர் அகலமும் இருக்கும். முன்பு அறிவித்த 39 கோடி ரூபாயில் நினைவிடம் மட்டுமே கட்ட முடியும். கடலில் நினைவுச்சின்னம் கட்ட கூடுதலாகச் செலவாகும் என்பதால், அடுத்த சட்டமன்றக் கூட்டத்தொடரில் 110 விதியின்கீழ் அதற்கான அறிவிப்பு வரக்கூடும்” என்றார்கள் தெளிவாக.

ரவி
ரவி

இது தொடர்பாக நம்மிடம் பேசிய அரக்கோணம் அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் ரவி, ``தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற கஜானாவில் காசில்லை என்று சொன்ன தி.மு.க அரசு, அதே காரணத்தைச் சொல்லி தாலிக்குத் தங்கம், இலவச மடிக்கணினி, இருசக்கர வாகன மானியம் போன்ற திட்டங்களையும் நிறுத்தி விட்டது. ஆனால், சென்னையில் 39 கோடி ரூபாய் செலவில் கருணாநிதிக்கு நினைவிடம்; மதுரையில் 114 கோடி ரூபாயில் அவர் பெயரில் நூலகம்; சென்னை அண்ணா சாலையில் 1.7 கோடி ரூபாயில் சிலை என்று முதல்வர் ஸ்டாலின் அவருடைய அப்பாவுக்காக மட்டும் மக்கள் வரிப்பணத்தை வாரி இறைத்துக் கொண்டிருக்கிறார். ஆட்சி நிர்வாகம் என்றால் என்ன என்று தெரியாதவர்கள் ஆட்சி செய்து கொண்டிருக்கிறார்கள்” என்றார் காட்டமாக.

தி.மு.க-வின் செய்தி தொடர்பு இணைச் செயலாளர் இராஜீவ் காந்தியோ, ``நவீன தமிழகத்தைக் கட்டமைத்தவர் கலைஞர். இந்தியாவிலேயே அறுபது ஆண்டுகள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதியாக இருந்தவர் அவர் மட்டுமே. தமிழ்நாட்டுக்கும், தமிழ் மக்களுக்கும், தமிழ்மொழிக்கும் கலைஞரின் எழுத்தும் பேச்சும் ஆற்றிய பணிகள் எண்ணிலடங்காதவை. தமிழ்நாட்டின் அடையாளமாக இருக்கும் அவருடைய நினைவாக பேனா சிலை வைப்பதைத் தமிழ் மக்கள் வரவேற்கவே செய்வார்கள்” என்றார்.

கலைஞரின் தகுதியை யாரும் குறைசொல்ல வில்லை. இந்த நிதி நெருக்கடியில் இவ்வளவு அவசரம் தேவைதானா என்பதே கேள்வி!