கருத்துச் சுதந்திரத்தைப் புதைக்கும் கலைஞர் பேனா! - களேபரமான கருத்துக்கேட்புக் கூட்டம்!

கருத்துச் சுதந்திரத்துக்கு எதிரானதா கலைஞரின் பேனா... இந்தக் கூட்டம் நடத்தப்பட்டவிதம் அப்படித்தான் கேட்கவைக்கிறது.
சென்னை மெரினா கடற்கரையில் ‘கலைஞரின் பேனா நினைவுச்சின்னம்’ அமைப்பதற்கான கருத்துக்கேட்புக் கூட்டம் எதிர்க்கருத்தே சொல்லவிடாமல் சகல அடக்குமுறைகளுடன் நடைபெற்றிருப்பது சர்ச்சையாகியிருக்கிறது!
சென்னை மெரினா கடற்கரையிலிருந்து கடலுக்குள் சுமார் 360 மீட்டர் தள்ளி, முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நினைவாக பேனா நினைவுச்சின்னம் அமைக்கப்படவிருப்பதாக அறிவித்தது தமிழ்நாடு அரசு. இதற்காக, கடலோர ஒழுங்குமுறை ஆணையத்திடம் அனுமதி கேட்டு விண்ணப்பித்த அரசு, அதற்காகச் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு, இடர் மதிப்பீடு மற்றும் பேரிடர் மேலாண்மை உள்ளிட்ட திட்ட அறிக்கைகளையும் சமர்ப்பித்தது. எனினும், மக்களின் கருத்துகளைக் கேட்காமல் திட்டத்தைத் தொடங்கக் கூடாது எனத் தெரிவித்துவிட்டது மத்திய கடல்சார் ஒழுங்குமுறை மேலாண்மை ஆணையம்.

இதனால், கடந்த ஜனவரி 31-ம் தேதி சென்னை கலைவாணர் அரங்கில் பொதுமக்கள் கருத்துக்கேட்புக் கூட்டம் நடைபெற்றது. 1,500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற கூட்டத்தில், தொடக்க உரையாற்றிய மாவட்ட ஆட்சியர் அமிர்தா ஜோதி, ‘மக்கள் சுதந்திரமாகத் தங்களின் கருத்துகளைப் பதிவுசெய்யலாம்’ என்றே தெரிவித்தார். ஆனால், திட்டத்தை எதிர்த்துப் பேசியவர்களின் மைக் ஆஃப் செய்யப்பட்டது தொடங்கி, கூச்சல் போட்டும், மிரட்டியும் அவர்களை மேடையிலிருந்து இறங்கச் செய்தது வரை பல்வேறு அடக்குமுறைகள் நிகழ்ந்தன.

பா.ஜ.க மாநில மீனவர் தலைவர் முனுசாமி, “திருவள்ளுவருக்கு 133 அடி உயரத்தில் சிலை வைத்துவிட்டு, கலைஞருக்கு 137 அடியில் சிலையா... வள்ளுவரைவிட கலைஞர் பெரியவரா?” என்று கேள்வி எழுப்பியபோது, “சுற்றுச்சூழல் பற்றி மட்டும் பேசு” என தி.மு.க-வினர் கூச்சலிட்டனர். இது குறித்து நம்மிடம் பேசிய அவர், “ஒரு மீனவனாக இந்தத் திட்டத்தை எதிர்ப்பது என் கடமை. மீன் இனங்கள் முட்டையிட்டுச் செல்லும் கடற்கரை முகத்துவாரங்களில் இது போன்ற கட்டுமானங்களை அமைத்தால் மீன்வளமும், மீன்பிடித் தொழிலும் பாதிக்கப்படும். மேலும், திருவள்ளுவரைவிட கலைஞருக்குப் பெரிய சிலை அமைப்பதென்பது வள்ளுவரை அவமதிக்கும் செயல். அதைத்தான் என்னுடைய கருத்தாகப் பதிவுசெய்ய நினைத்தேன். ஆனால், ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர்கள் என்னைப் போன்ற யாரையும் கருத்து சொல்லவிடாமல் தடுத்துவிட்டனர். பொதுமக்கள் என்ற போர்வையில், தி.மு.க-வினரும், காசுக்கு அழைத்துவரப்பட்டவர்களும்தான் மண்டபத்தில் இருந்தார்கள்” என்றார்.

சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த மீனா, இந்தத் திட்டத்துக்கு ஆகும் செலவைக் குறிப்பிட்டுப் பேசியபோது, தி.மு.க-வினர் அவரை நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்தவர் என்று கூறி மேடையிலிருந்து இறங்கச் சொல்லிக் கூச்சல் போட்டனர். இதனால் அவர் பாதியிலேயே கீழே இறக்கப்பட்டார்.
இதையெல்லாம் பார்த்துக் கொதித்த நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தன் முறை வந்தபோது, “பள்ளிக்கூடங்களைச் சீரமைக்க நிதியில்லை என்று கைவிரிப்பவர்கள், ரூபாய் 81 கோடியில் பேனாவுக்குச் சிலைவைக்க முன்வருகிறார்கள். மீறியும் கடலுக்குள் அவர்கள் சிலையை வைத்தால் நானே உடைப்பேன்” என்று பேசி எரியும் தீயில் எண்ணெய் ஊற்றினார். இது மூன்றாம்தரப் பேச்சு என்று விமர்சனம் எழுந்தது.
இது குறித்து அந்தக் கட்சியின் சுற்றுச்சூழல் பாசறையைச் சேர்ந்த வெண்ணிலா தாயுமானவனிடம் கேட்டோம். “கருத்துச் சுதந்திரத்துக்கு எதிரானதா கலைஞரின் பேனா... இந்தக் கூட்டம் நடத்தப்பட்டவிதம் அப்படித்தான் கேட்கவைக்கிறது. முறையாக நடத்தப்படாத இந்தக் கூட்டத்தை ரத்துசெய்ய வேண்டும் என நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யவிருக்கிறோம். சீமான் அவர்கள், `சிலையை உடைப்பேன்’ என்று குறிப்பிட்டது தவறான அர்த்தத்தில் அல்ல. விதிகளை மீறிக் கட்டப் பட்ட கட்டடங்களை அரசுகள் இடிப்பது வழக்கம்தானே! நாங்கள் ஆட்சியில் அமரும்போது, சூழலியல் சீர்கேட்டை விளைவிக்கும் இந்தத் திட்டத்தை நிச்சயமாக இடிக்கத்தான் செய்வோம். எனவே, தேவையில்லாமல் நிதியை வீணாக்காதீர்கள் என்ற அர்த்தத்தில்தான் சீமான் அதைச் சொன்னார்” என்றார்.

இது தொடர்பாக தி.மு.க செய்தித் தொடர்பாளர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரனிடம் விளக்கம் கேட்டோம். அவர், “கலைவாணர் அரங்கில் நடைபெற்ற பொதுமக்கள் கருத்துக்கேட்புக் கூட்டத்தில் எந்தத் தடங்கலும் ஏற்படவில்லை. பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சார்ந்த பிரபாகரன்கூட இந்தத் திட்டம் குறித்து எதிர்க்கருத்தையே முன்வைத்தார். அவர் தமிழக சுற்றுச்சூழல் பாதுகாப்புக்குழுவில் உறுப்பினராக இருந்தபோதும், அரசின் திட்டத்தை எதிர்க்கிற அளவுக்குக் கருத்துச் சுதந்திரம் இந்த ஆட்சியில் இருக்கிறது. சீமான் போன்ற அருவருக்கத்தக்க மனிதர்கள் சுற்றுச்சூழல் சம்பந்தமாகப் பேசாமல், கலைஞரை விமர்சிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. `மெரினா கடற்கரையில் கலைஞரைப் புதைக்கவிட்டதே தவறு’ என்கிறார் சீமான். அவர் என்ன மெரினா பீச்சுக்கு ஏஜென்ட்டா... அறிவிலிகள் சிலர், பேனா சிலையின் உயரத்தை வள்ளுவர் சிலையுடன் ஒப்பீடு செய்கிறார்கள். சிலையின் உயரம் என்பது கடல் மட்டத்தைப் பொறுத்து நிர்ணயிக்கப்படுவது. பொதுமக்களைப் பேசவிடாமல் தடுத்ததாகச் சொல்லப்படுவதில் உண்மையில்லை” என்றார்.
பேனா நினைவுச்சின்னம் கடலுக்குள் தேவைதானா என்பதை அரசு மறுபரிசீலனை செய்வது நல்லது!