Published:Updated:

பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன்: அதிரடியாகப் பேசுகிறாரா... அதிகம் பேசுகிறாரா?!

பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன்

சமூக ஊடகங்களில் மட்டுமல்ல... பொது இடங்களில் பேசும் போது எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்கு அதிரடியாகப் பதிலளித்து வருகிறார் பி.டி.ஆர். இவரது பேச்சே இவருக்கு ப்ளஸாகவும் சில இடங்களிலும் மைனஸாகவும் மாறிவிடுறது..!

பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன்: அதிரடியாகப் பேசுகிறாரா... அதிகம் பேசுகிறாரா?!

சமூக ஊடகங்களில் மட்டுமல்ல... பொது இடங்களில் பேசும் போது எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்கு அதிரடியாகப் பதிலளித்து வருகிறார் பி.டி.ஆர். இவரது பேச்சே இவருக்கு ப்ளஸாகவும் சில இடங்களிலும் மைனஸாகவும் மாறிவிடுறது..!

Published:Updated:
பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன்

தமிழ்நாடு நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் மற்ற அமைச்சர்களைவிட அரசியல் களத்தில் எப்போதும் பேசுபொருளாக இருக்கிறார். அதிரடியான நடவடிக்கைகளுக்காக மட்டுமின்றி அவரின் சமூக வலைத்தள கருத்துகளுக்காகவும் நேர்மறை விமர்சனங்களைச் சந்தித்து வருபவர். ஜக்கி வாசுதேவ், பா.ஜ.க மூத்த தலைவர் ஹெச்.ராஜா தொடங்கி அ.தி.மு.க தலைவர்கள் வரை அரசியலில் இவரது அதிரடி பேச்சுக்குப் பலி ஆகாதவர்களே இல்லையென்ற அளவுக்கு தற்போது ஆகிவிட்டது. இதன் உச்சமாக தற்போது தன்னுடைய சொந்தக் கட்சியின் மூத்த தலைவரையே பழனிவேல் தியாகராஜன் ட்விட்டரில் விளாசியிருப்பதாக வெளியாகும் தகவல்கள்தான் அரசியல் வட்டாரத்தில் அனலைக் கிளப்பியிருக்கிறது.

தனியார் செய்தித் தொலைக்காட்சிக்கு நேர்காணல் அளித்த தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர் டி.கே.எஸ். இளங்கோவன் “எதிர்க்கட்சிகள் விமர்சனம் வைப்பது இயல்பானதுதான். எப்போதும் அவற்றைக் கவனமாக எதிர்கொள்ள வேண்டும். அதில் பழனிவேல் தியாகராஜன் கொஞ்சம் சறுக்குகிறார். அவர் பேசுவது அனைத்தும், அந்தச் சறுக்கலினால் உண்டான எரிச்சலின் வெளிப்பாடாகவே இருக்கிறது. வேண்டுமென்று யாரையும் அவர் வம்புக்கு இழுப்பதில்லை. அவர், தன்னை ஓர் அரசியல்வாதியாகப் பக்குவப்படுத்திக் கொள்ள வேண்டும். அதிகாரத்தில் இருப்பவர்கள் மக்கள் நலன் சார்ந்து ஆக்கப்பூர்வமான செயல்களில் ஈடுபட வேண்டும் என்பதுதான் அனைவரின் எதிர்பார்ப்பாக இருக்கும். இதை நான் அறிவுரையாகவே அவரிடம் சிலமுறை சொல்லியிருக்கிறேன். தொடர்ந்து இதேபோலப் பேசினால் நிச்சயம் கட்சித் தலைமை அழைத்து சில அறிவுரைகளை வழங்கும்” எனக் கூறியிருந்தார்.

அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்
அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

“கட்சியின் அடுத்தடுத்த இரண்டு தலைவர்களால் இரண்டு முறை கட்சிப் பொறுப்பு பறிக்கப்பட்ட வயதான முட்டாளை அழைத்து என்னைப் பற்றிப் பேசச் சொல்லி உளறவைத்திருக்கிறார்கள்.” என பெயரைக் குறிப்பிடாமல் ட்வீட் செய்திருந்தார். பழனிவேல் தியாகராஜனின் இந்த ட்வீட் டி.கே.எஸ். இளங்கோவன் பற்றியதுதான் எனக் கூறி தி.மு.க வட்டாரத்தில் பெரும் சர்ச்சை உருவாகவே அந்த ட்வீட்டை சில மணி நேரங்களில் டெலிட் செய்துவிட்டாராம் தியாகராஜன்.

பழனிவேல் தியாகாராஜனின் பேச்சுகள் அதிரடியா... கொஞ்சம் ஓவராகப் பேசுவதுபோல இருக்கிறதா?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

“தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தனக்கு எதிராகப் பேசுபவர்களை நாய், வடிகட்டிய முட்டாள்கள், மாட்டு மூத்திரம் குடிப்பவர்கள், மூளை கெட்டவர்கள், மனநலம் சரியில்லாதவர் எனக் கடுமையான சொற்களைக் கொண்டு விமர்சனம் செய்கிறார். ஒரு மாநிலத்தின் நிதியமைச்சராக இருந்துகொண்டு பொதுவெளியிலும், சமூக வலைத்தளங்களிலும் இப்படிப் பதிவிடுவது அவர் வகிக்கும் பதவிக்கும் அவரது கல்வி அறிவுக்கும் அழகல்ல. அமைச்சராக இல்லாம ஒரு கட்சியின் பிரதிநிதியாக இருந்து இப்படிப் பேசினால் யாரும் கேள்வி கேட்கப் போவதில்லை. அதற்குக் கடந்த காலத்தில் பலர் உதாரணமாக இருந்திருக்கிறார்கள். அரசியலில் இதை விடக் கடுமையான விமர்சனங்களைக் கடந்து வந்தவர்கள்தான் மிகப்பெரிய இடத்தை அடைந்திருக்கிறார்கள். அதற்கும் பலர் உதாரணமாக இருக்கிறார்கள். தன் மீது வைக்கப்பட்டும் விமர்சனங்களைத் தாங்கிக் கொள்ளக் கூடிய பக்குவம் இல்லாதவராக பழனிவேல் தியாகராஜன் இருக்கிறார். இப்படியானவர் அரசியலில் இருக்க நிச்சயம் தகுதியில்லாதவர். நிதியமைச்சர் இப்படிப் பேசுவது அவருக்கு மட்டுமல்ல அவர் சார்ந்திருக்கும் கட்சிக்கும் மக்கள் மத்தியில் அவப்பெயரை ஏற்படுத்தும். அவர் கட்சியில் இருக்கும் மூத்த தலைவர்கள் அறிவுரை கூறினோம், முதல்வர் அழைத்துக் கண்டித்தார் என்றெல்லாம் சொல்கிறார்கள். ஆனால், எந்தளவுக்கு அவற்றையெல்லாம் அவர் எடுத்துக் கொண்டு பின்பற்றுகிறார் என்பது கேள்விக்குறியாக இருக்கிறது.

பி.டி.ஆர்.தியாகராஜனின் ட்வீட்
பி.டி.ஆர்.தியாகராஜனின் ட்வீட்

தனது முன் கோபத்தையும் எல்லாவற்றிற்கும் பதில் சொல்ல வேண்டும் என்ற குணத்தையும் பழனிவேல் தியாகராஜன் மாற்றிக்கொள்ள வேண்டும். அரசியலில் விமர்சனங்களைக் கவனித்துக் கடந்துவிட வேண்டுமே தவிர அவற்றிற்குப் பதில் சொல்லிக்கொண்டிருக்க வேண்டியதில்லை” என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கொஞ்சம் ஓவராகவே பேசுகிறார் என்று எதிர்க்கட்சியினர் கருத்துகளைப் பகிர்ந்துகொண்டனர்.

“தன்னைப் பற்றி ஒருவர் கருத்துச் சொல்லும்போது அதைக் கேட்டுக் கொண்டு எப்படிப் பொறுமையாகச் செல்ல முடியும். எல்லா விதத்திலும் சரியாக இருக்கும் ஒருவரால் நிச்சயம் விமர்சனங்களை அப்படி எளிதில் கடந்துவிட முடியாது. பழனிவேல் தியாகராஜனின் எதிர்வினைகளும் இதனடிப்படையிலானதுதான். ஜி.எஸ்.டி கவுன்சில், நிதி தொடர்பான விவகாரங்கள், அ.தி.மு.க ஆட்சிக்கால ஊழல்கள், மத்திய அரசின் நடவடிக்கைகளில் இருக்கும் குறைகளை வெறுமனே இல்லாமல் புள்ளி விவரங்களோடு வெளிக்கொண்டு வருகிறார். அதேநேரத்தில் பழனிவேல் தியாகராஜன் மீது எந்தப் புகாரும் சொல்ல முடியவில்லை. இந்த ஆத்திரத்தில் அவர் குறித்து தவறான தகவல்களைப் பரப்புகிறார்கள். அதற்கு நல்ல உதாரணம் நிதியமைச்சர் ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்காததற்கு எதிர்க்கட்சியினர் சொன்ன காரணங்கள்தான். நிதியமைச்சராக பி.டி.ஆர் நியமிக்கப்பட்டபோது தமிழ்நாடு மட்டுமல்லாது தேசிய அளவில் அனைத்து ஊடகங்களும் சரியான ஒருநபர் பதவியில் உட்கார வைக்கப்பட்டிருக்கிறார் என்று பாராட்டினார்கள். யாருமே பேசத் தயங்கிய ஜக்கி வாசுதேவ் குறித்தும், எப்போதுமே தவறான தகவல்களைக் கொடுத்துக் கொண்டிருக்கும் ஹெச்.ராஜா-வுக்கு அதிரடியாகவும் பதிலளித்தார். இதெல்லாம் இதுவரை தமிழ்நாடு அரசியல் சூழலில் எந்தத் தலைவரும் செய்யாத எதிர்வினை.

பழனிவேல் தியாகராஜன் Vs அண்ணாமலை
பழனிவேல் தியாகராஜன் Vs அண்ணாமலை

தான் செய்தது தவறு என்று உணர்ந்து பல சந்தர்ப்பங்களில் அதற்கு மன்னிப்புக் கேட்டிருக்கிறார் பழனிவேல் தியாகராஜன். வெளிநாட்டில் படித்ததால் அவரது தமிழ் பேசும் நடை கொஞ்சம் சிக்கலாக இருக்கிறது. அவரது ஆங்கிலம் அட்டகாசமாக இருக்கிறது. இவற்றைப் புரிந்துகொள்ளாதவர்கள்தான் பழனிவேல் தியாகராஜனின் அதிரடிப் பேச்சு குறித்துக் குறை சொல்லிக்கொண்டிருப்பார்கள். அதைப்பற்றியெல்லாம் கண்டுகொள்ளாமல் தன்னுடைய அதிரடி பாணியை அவர் தொடர வேண்டும்” நன நம்மிடம் பேசிய தி.மு.க-வினர் விளக்கம் அளித்தனர்.