Published:Updated:

அ.தி.மு.க Vs தி.மு.க ; ஆ.ராசாவின் ‘பின்புலம்’ : சாதிரீதியில் விமர்சித்தாரா எடப்பாடி?

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

ஆ.ராசாவின் `பின்புலம்’ என்ன என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியது சமூக வலைதளங்களில் சர்ச்சையானது. பின்புலம் என்று எதைச் சொன்னார் எடப்பாடி பழனிசாமி?

தமிழகத்தை ஆளும் அ.தி.மு.க-வினரும் எதிர்க்கட்சியினரான தி.மு.க-வினரும் மாறி மாறி ஊழல் குற்றச்சாட்டுகளைக் கூறிவந்த நிலையில், இரு கட்சிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டிருக்கிறது. ராமநாதபுரத்தில் தி.மு.க-வின் துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசாவின் உருவபொம்மையை அ.தி.மு.க-வினர் எரிக்க, இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கிவரும் நேரத்தில் ஊழல் பற்றிய விவாதம் தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்திவருகிறது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள் வேலுமணி, விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் மீது தி.மு.க பல்வேறு குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து கூறிவருகிறது.

தி.மு.க தலைவர் ஸ்டாலின்
தி.மு.க தலைவர் ஸ்டாலின்
எம். விஜயகுமார்.

இந்தநிலையில், தி.மு.க-வின் துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா மத்தியத் தொலைத் தொடர்புத்துறை அமைச்சராக இருந்த காலத்தில் நடைபெற்றதாக குற்றம்சாட்டப்பட்ட 2ஜி ஊழல் பற்றிப் பேச ஆரம்பித்தார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி. அதைத் தொடர்ந்து, 2ஜி வழக்கு பற்றி எதுவும் தெரியாமல் முதல்வர் பேசுவதாகக் கூறிய ஆ.ராசா, 2ஜி வழக்கு குறித்துத் தன்னுடன் விவாதிக்கத் தயாரா என்று முதல்வருக்குச் சவால் விடுத்தார். அந்த விவகாரம் இப்போது, `ஆ.ராசாவின் பின்புலம் என்ன?’ என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் கேள்வியில் வந்து நிற்கிறது.

தற்போதைய இந்தச் சர்ச்சையில் அ.தி.மு.க., தி.மு.க என இரண்டு தரப்பினருமே வார்த்தைகளைச் சிதறவிட்டிருக்கிறார்கள். தி.மு.க-வின் மேடையில் பேசிய மு.க.ஸ்டாலின், `2ஜி ஊழல் குற்றச்சாட்டு குறித்து விவாதிக்க வருமாறு முதல்வருக்கு ஆ.ராசா சவால் விட்டிருக்கிறார். உங்களுக்கு ஆண்மை இருந்தால், தெம்பு இருந்தால், திராணி இருந்தால் விவாதத்துக்கு வாருங்கள்’ என்று முதல்வருக்கு சவால் விடுத்தார். செய்தியாளர்களிடம் பேட்டியளித்த ஆ.ராசா, `சசிகலா காலில் விழுந்து முதல்வராக வந்தவர் நீங்கள். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் அல்ல. மேல்முறையீட்டில் நம்பரே ஆகாத ஒரு வழக்கை எடுத்துக்கொண்டு ஒரு முதல்வர் பேசலாமா... முட்டாள்தனமாகப் பேசாதீர்கள்’ என்றார்.

ஆ.ராசா
ஆ.ராசா

`உலக அளவில் இந்தியாவுக்குத் தலைகுனிவை ஏற்படுத்தியவர் ஆ.ராசா. அவர் விவாதத்துக்கு அழைத்தால் நான் போக வேண்டுமா... அவர் ஒரு சாதாரண ஆள். தி.மு.க-வுக்கு வேண்டுமானால் அவர் பெரிய ஆளாக இருக்கலாம். அவரிடம் நிறைய `வைட்டமின்’ இருக்கிறது. அதனால், அவரை தி.மு.க-வில் வைத்துக்கொண்டிருக்கிறார்கள். அவருக்கு இவ்வளவு வசதி எங்கிருந்து வந்தது... அரசியலுக்கு வருவதற்கு முன்பாக அவர் எப்படி இருந்தார்... இப்போது எந்த மாதிரியான காரில் அவர் போகிறார்... அவரது பின்புலம் என்ன, மைக் முன்பாக பேட்டி கொடுத்தால் பெரிய ஆளா... நான் ஒரு விவசாயி. என் அப்பா விவசாயி. என் தாத்தா விவசாயி. பரம்பரை பரம்பரையாக விவசாயம் செய்கிறோம்’ என்று கொந்தளித்தார் எடப்பாடி பழனிசாமி.

இந்த விவகாரம் குறித்து தி.மு.க-வைச் சேர்ந்த தருமபுரி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரான டாக்டர் செந்தில்குமாரிடம் பேசினோம். ``தமிழகத்தில் பத்து ஆண்டுகளாக நாங்கள் ஆட்சியில் இல்லை. 2014-க்குப் பிறகு மத்தியிலும் நாங்கள் ஆட்சியில் இல்லை. அப்படியிருக்கும்போது எங்கள்மீது ஊழல் குற்றச்சாட்டை முன்வைப்பது எந்த வகையிலும் ஏற்க முடியாது. முதல்வர் சொல்லக்கூடிய 2ஜி வழக்கில், எந்த நீதிமன்றத்திலும் குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை. ஊடகத்தில் வந்த செய்தியின் அடிப்படையில் ஒரு முதல்வர் குற்றம்சாட்டுவது எப்படிச் சரியாக இருக்கும்?

பொதுஜனம் மாதிரி பேசுவதை ஒரு முதல்வர் தவிர்க்க வேண்டும். மேடைப் பேச்சாளர்கள் ஒரு விஷயத்தை ஒரு மேடையில் பேசிவிட்டு, அடுத்த மேடையை நோக்கிப் போய்விடுவார்கள். அந்த மாதிரி ஒரு முதல்வர் நடந்துகொள்ளக் கூடாது. ஒரு முதல்வர் இப்படிப் பேசும்போது அவரை ஒரு மேடைப் பேச்சாளர் போலத்தான் நாங்களும் பார்க்க வேண்டியிருக்கும்.

செந்தில்குமார்
செந்தில்குமார்

முதல்வர் பதவியில் இருப்பவர்கள் கண்ணியமாகப் பேச வேண்டும். தன் மீதோ, தன் அரசு மீதோ எதிர்க்கட்சியினரால் ஒரு குற்றச்சாட்டு முன்வைக்கப்படும்போது, நிதானமாக பதில் சொல்ல வேண்டும். அந்தக் குற்றச்சாட்டுகளுக்கு இரண்டாம்கட்டத் தலைவர்களோ, மேடைப் பேச்சாளர்களோ பதில் சொல்லலாம். ஆனால், மேடைப் பேச்சாளரைப்போல ஒரு முதல்வர் இறங்கிவந்து பேசுவது முதல்வர் பதவிக்கு அழகல்ல.

நான் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கிறேன். என் அளவில்கூட சில விஷயங்களைத் தவிர்த்துவிடுகிறேன். ஆனால், இரண்டாம்கட்டத் தலைவர்களைப்போல முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசிக்கொண்டிருக்கிறார். இப்படி அவர் பேசுவதை அவரது கட்சித் தொண்டர்கள்கூட ஏற்கவில்லை. `இதையெல்லாம் ஏன் முதல்வரே நேரடியாகப் பேச வேண்டும்’ என்று சொல்கிறார்கள்.

ஸ்டாலின்
ஸ்டாலின்

`அரசியலுக்கு வருவதற்கு முன்பு ஆ.ராசா எப்படி இருந்தார்... அவரது பின்புலம் என்ன?’ என்ற முதல்வரின் பேச்சு தவறானது. அவரது பேச்சை ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரியாக எடுத்துக்கொள்வதற்கு வாய்ப்பிருக்கிறது. அதை, `சமுதாய’ரீதியிலான விமர்சனம் என்றும் சிலர் பார்க்கிறார்கள்” என்றார்.

இது குறித்து அ.தி.மு.க-வின் செய்தித் தொடர்பாளர் சிவசங்கரியிடம் பேசினோம். ``முதல்வரும் சரி, அமைச்சர்களும் சரி... எப்போதுமே கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்த மாட்டார்கள். ஆனால், தி.மு.க-வினர் கடந்த ஆறு மாதங்களாக, `அ.தி.மு.க ஆட்சியில் ஊழல்... ஊழல்’ என்று பேசிக்கொண்டிருக்கிறார்கள். ஏனென்றால், அவர்கள் அ.தி.மு.க அரசுக்கு எதிராகக் கையிலெடுத்த ஒவ்வொரு பிரச்னையையும் எங்களுக்குச் சாதகமாக மாற்றிக்கொண்டு வருகிறோம். உதாரணமாக, நீட் தேர்வை வைத்து எங்களுக்கு எதிராக அரசியல் செய்யப்பார்த்தார்கள்.

எடப்பாடி  பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

ஆனால், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துப் படிப்பில் இட ஒதுக்கீடு வழங்குவதற்காக ஒரு மசோதாவை ஆளுநருக்கு அனுப்பினோம். பிறகு, அது தொடர்பாக அரசாணை வெளியிட்டோம். இன்றைக்கு 300-க்கும் மேற்பட்ட அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவக் கல்லூரிகளில் நுழைகிறார்கள். அவர்களுக்கான படிப்புச் செலவையும் அரசே ஏற்கிறது. தமிழ்வழிக் கல்வியில் படித்தவர்களுக்கு 20 சதவிகித இட ஒதுக்கீடு வழங்க மசோதா கொண்டுவந்திருக்கிறோம். இப்படி ஆக்கபூர்வமாக நிறைய விஷயங்களை அ.தி.மு.க அரசு செய்துகொண்டிருக்கிறது.

அம்பானி நிறுவனங்கள் புறக்கணிப்பு; டோல்கேட் கட்டணம் கிடையாது - உக்கிரமடையும் விவசாயிகள் போராட்டம்!

இவை தொடர்பான செய்திகளை மக்களிடம் சென்று சேரவிடாமல் செய்வதற்காகவே, `ஊழல்... ஊழல்’ என்று பேசிக்கொண்டிருக்கிறார்கள். எந்தத் தரவும் இல்லாமல், எந்த ஆதாரமும் இல்லாமல் ஊழல்... ஊழல் என்று அவர்கள் பேசுவதை எப்படி ஏற்க முடியும்... எந்த அமைச்சரும் ஊழலில் தண்டிக்கப்படவில்லை. யாரும் சிறைக்குப் போகவில்லை. எல்லாமே ஆன்லைன் டெண்டர்தான். இவர்கள் எதை ஊழல் என்று சொல்கிறார்கள்... எனவேதான், உலகமே திரும்பிப் பார்க்க வைத்த 2ஜி ஊழலை நீங்கள்தானே செய்தீர்கள் என்று முதல்வர் பேசுகிறார்.

ஒரு மாநிலத்தின் முதல்வரைப் பார்த்து எதிர்க்கட்சித் தலைவரான மு.க.ஸ்டாலின் தரம் தாழ்ந்து பேசுகிறார். பயன்படுத்தக் கூடாத வார்த்தைகளைச் சொல்லிப் பேசுகிறார். `ஆண்மை இருக்கா’ என்றெல்லாம் கேட்கிறார். எதிர்க்கட்சித் தலைவரின் மகனும், மூத்த அமைச்சர்களைத் தரக்குறைவாகப் பேசுகிறார். எனவேதான், `ஊழலுக்கே ஊற்றுக்கண் நீங்கள்தான்’ என்று நாங்கள் பேச வேண்டியிருக்கிறது. எல்லாவற்றையும் நன்றாகப் பேசிவிட்டு, `ஆத்தா’ என்று சொல்கிறார். கேட்டால், வட்டார மொழியில் ஆத்தா என்று சொன்னேன் என்கிறார். எங்களை வளர்த்தெடுத்து ஆளாக்கிய எங்கள் தாயைப் பற்றி பேசும்போது எங்களால் எப்படிச் சும்மா இருக்க முடியும்?

சிவசங்கரி
சிவசங்கரி

ஆ.ராசாவின் பின்புலம் என்ன என்று முதல்வர் பேசியது அவரது பொருளாதாரப் பின்னணியைத்தான். `அரசியலுக்கு வருவதற்கு முன்பாக உங்கள் சொத்து என்ன?.. சொத்துப் பட்டியலை வெளியிட முடியுமா... அரசியலுக்கு வருவதற்கு முன்பாக உங்கள் பொருளாதாரப் பின்புலம் என்ன?’ என்றுதான் முதல்வர் கேட்டார். சாதி பற்றி அ.தி.மு.க-வினர் ஒருபோதும் பேச மாட்டார்கள். மத்திய அமைச்சராக இருந்தவர் தயாநிதி மாறன். தற்போது எம்.பி-யாக இருக்கிறார். அவர்தான், `நாங்கள் தாழ்த்தப்பட்ட மக்களா?’ என்று பேட்டி கொடுத்தார். தி.மு.க-வின் எம்.பி-யான ஆர்.எஸ்.பாரதியும் ஒடுக்கப்பட்ட மக்களைப் பற்றி இழிவாகப் பேசியிருக்கிறார். தி.மு.க-வினரின் விமர்சனங்களுக்கு நாங்கள் பதில் சொல்ல வேண்டியிருக்கிறது. அவர்கள் எந்த ஆயுதத்தை எடுக்கிறார்களோ, அதே ஆயுதத்தை நாங்களும் எடுக்க வேண்டியிருக்கிறது” என்றார் சிவசங்கரி.

அடுத்த கட்டுரைக்கு