Published:Updated:

`சீமானை காப்பி அடிக்கிறார்கள்’, `முருகன் தமிழர் என்று குழப்புகிறார்கள்’... நாம் தமிழர் Vs பா.ஜ.க!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
வேல் யாத்திரையில் எல்.முருகன்
வேல் யாத்திரையில் எல்.முருகன்

`தமிழர் நிலத்தின் கடவுள் முருகன். அவர் எங்கள் முப்பாட்டான்’ என்று சொல்லிவருகிறது நாம் தமிழர் கட்சி. வேல் பயணம் மேற்கொண்டுவரும் நேரத்தில், `முருகன் இந்துக் கடவுள்’ என்ற வேல் யாத்திரையை பா.ஜ.க கையிலெடுத்திருக்கிறது. இந்த இரு `முருகன்’ அரசியலுக்கும் என்ன வித்தியாசம்?

திருத்தணியில் நவம்பர் 6-ம் தேதி தொடங்கி, திருச்செந்தூரில் டிசம்பர் 6-ம் தேதி முடிவடையவிருந்த பா.ஜ.க-வின் வேல் யாத்திரை தமிழக அரசியல் களத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. `தமிழக அரசு அனுமதி மறுத்தாலும், எங்களுக்கு முருகனின் அனுமதி இருக்கிறது’ என்று பா.ஜ.க மாநிலத் தலைவர் எல்.முருகன் தலைமையில் துள்ளிவந்த வேல் யாத்திரையைத் தடுத்து நிறுத்திவிட்டது எடப்பாடி பழனிசாமி அரசு. கந்தசஷ்டி கவசத்தை `கறுப்பர் கூட்டம்’ என்ற யூடியூப் சேனல் இழிவுபடுத்திவிட்டது என்றும், அதை தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் கண்டிக்கவில்லை என்றும் சில மாதங்களுக்கு முன்பாக முருகன் வழிபாட்டு அரசியலை தமிழக பா.ஜ.க கையிலெடுத்தது.

அதைத் தொடர்ந்து, இந்துப் பெண்களை விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன் இழிவுபடுத்திவிட்டதாக தமிழக பா.ஜ.க கொதித்தெழுந்திருக்கிறது. இதற்கிடையேதான், அறுபடை வீடுகளான திருத்தணி முதல் திருச்செந்தூர் வரை வேல் யாத்திரை நடத்தப்போவதாக தமிழக பா.ஜ.க அறிவித்தது. அரசியல் ஆதாயத்துக்காக வேல் யாத்திரையை பா.ஜ.க கையிலெடுப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. மக்களிடையே மத உணர்வைத் தூண்டி, சமூகத்தில் பிளவையும் வன்முறையையும் ஏற்படுத்த பா.ஜ.க முயல்கிறது என்றும் எதிர்க்கட்சிகள் விமர்சித்தன.

சீமான்
சீமான்

`தமிழர் நிலத்தின் கடவுள்’ என்று முருகனைக் கொண்டாடிவரும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பா.ஜ.க-வின் வேல் யாத்திரையைக் கடுமையாக விமர்சித்தார். ``பா.ஜ.க-வினருக்கு அரசியல் செய்வதற்கு ஒன்றும் இல்லை. மதம் என்கிற ஒன்றைத் தவிர அவர்களுக்கு வேறு ஒன்றும் கிடையாது. அயோத்தியில் ராமரைவைத்து அரசியல் செய்து வென்றதைப்போல, கேரளாவில் ஐயப்பனை வைத்து அரசியல் செய்யலாம் என்று முயன்றார்கள். அதில் தோற்றுப்போனார்கள். தமிழ்நாட்டில் இன்றைக்கு முருகனைக் கையிலெடுக்கிறார்கள். நான் கட்சி ஆரம்பிப்பதற்கு முன்பிருந்தே பா.ஜ.க இருக்கிறது. இத்தனை ஆண்டுகளாக முருகனைத் தொடாமல் இருந்த இவர்கள், இன்றைக்கு ஏன் முருகனைக் கையிலெடுக்கிறார்கள் தெரியுமா... எனக்கு பயந்துதான்.

`முப்பாட்டன் எங்கள் மூதாதையன்’ என்று நான் வேல் தூக்கும்போது கேலி செய்தார்கள், இழிவாகப் பேசினார்கள். `ஆயுதபூஜைக்கும், விநாயகர் சதுர்த்திக்கும், சரஸ்வதி பூஜைக்கும் அரசு விடுமுறை இருக்கிறபோது, தமிழ்க் கடவுளின் தைப்பூசத்துக்கு ஏன் அரசு விடுமுறை இல்லை...’ என்று நான் கேட்டபோது எனக்கு ஆதரவாக யாரும் வரவில்லை.

பொருளாதார வீழ்ச்சி, வறுமை, பசி, பட்டினி, பாலியல் வன்கொடுமை, வேலையில்லாத் திண்டாட்டம் என மக்களைப் பாதிக்கும் எந்தப் பிரச்னை பற்றியும் பா.ஜ.க-வினர் பேச மாட்டார்கள். பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு உட்பட தமிழகத்தில் மக்களைப் பாதிக்கும் பிரச்னைகள் ஏராளம் இருக்கின்றன. அவற்றை மூடிமறைப்பதற்காக வேல் யாத்திரை போகிறார்கள்.

நாம் தமிழர் கட்சியினர் வேல் பயணம்
நாம் தமிழர் கட்சியினர் வேல் பயணம்

வேல் எடுத்து அவர்கள் செய்யும் அரசியல் எடுபடாது. அந்த வேலைவைத்தே அரசியல் களத்தில் அவர்களை வீழ்த்துவோம். நீங்கள் என்னதான் வேல் எடுத்து `அரோகரா...’ போட்டாலும், `வெற்றி வேல்... வீர வேல்...’ என்று கத்தினாலும்... `முருகா...’ என்று சொன்னாலே சீமான் முகம்தான் நினைவுக்கு வரும்’’ என்றார் சீமான்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

வேல் யாத்திரை: அ.தி.மு.க அரசின் அனுமதி மறுப்பு... அரசியல் பின்னணி என்ன?

இந்த விவகாரம் குறித்து பா.ஜ.க-வின் செய்தித் தொடர்பாளர் எஸ்.ஜி.சூர்யாவிடம் பேசினோம். ``முருகன் ஓர் இந்துக் கடவுள். ஆனால், முருகனை இந்துக் கடவுள் என்று நாம் தமிழர் கட்சி ஏற்றுக்கொள்ளவில்லை. ஏற்கெனவே இருந்துவரும் முருகன் வழிபாட்டுமுறையைச் சீர்குலைக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் அவர்கள் செயல்படுவதுபோலத் தெரிகிறது. அவர்களின் கருத்தை மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. காரணம், இந்து மதத்தைச் சேர்ந்தவர்கள்தான் முருகனை வழிபடுகிறார்கள். முருகனை வடநாட்டில் `கார்த்திகேயன்’ என்று வணங்குகிறார்கள் என்றெல்லாம் சொல்லிக் குழப்புகிறார்கள். ஆனால், உலகம் முழுவதும் வணங்கக்கூடிய விநாயகரின் சகோதரர் என்ற முறையில், முருகனை இந்துக் கடவுள் என்றுதான் நாங்கள் பார்க்கிறோம்.

சூர்யா
சூர்யா

வேல் யாத்திரையின் நோக்கம் குறித்து பா.ஜ.க-வின் மாநிலத் தலைவர் எல்.முருகன் மிகத் தெளிவாகவே விளக்கியிருக்கிறார். கந்தசஷ்டி கவசத்தைக் கறுப்பர் கூட்டம் இழிவுபடுத்தியது. அதைத் தமிழகத்திலுள்ள முக்கியக் கட்சிகள் கண்டிக்கவில்லை. இந்துக்களின் மனம் புண்படுத்தப்பட்டபோது, இந்துக் கடவுள்கள் ஆபாசமாகப் பேசப்பட்டபோது, தி.மு.க உள்ளிட்ட பிரதான அரசியல் கட்சிகள் இந்துக்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுக்கவில்லை.

எனவே, பாதிக்கப்பட்ட இந்துக்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுக்க நாங்கள் இருக்கிறோம் என்பதை உணர்த்துவதற்காக வேல் யாத்திரையை பா.ஜ.க நடத்துகிறது. அத்துடன், மோடி அரசு செய்திருக்கும் சாதனைகளையும், மக்கள்நலத் திட்டங்களையும் மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்பதும் வேல் யாத்திரையின் நோக்கம்’’ என்றார் அவர்.

கமலாலயத்தில் எல்.முருகன் மற்றும் பா.ஜ.க-வினர்
கமலாலயத்தில் எல்.முருகன் மற்றும் பா.ஜ.க-வினர்

`அறுபடைவீடுகளில் ஒவ்வோர் ஆண்டும் வேல் பூஜையை நாம் தமிழர் கட்சி நடத்திவருகிறது. அவர்களின் வேல் பூஜைக்கும், பா.ஜ.க-வின் வேல் யாத்திரைக்கும் என்ன வித்தியாசம்?’ என்ற கேள்வியை நாம் தமிழர் கட்சியின் துணை அமைப்பான வீரத் தமிழர் முன்னணியின் மாநில ஒருங்கிணைப்பாளர் முனைவர் செந்தில்நாதன் முன்பாக வைத்தோம்.

``ஐவகை நிலங்களில் முதல் நிலமான குறிஞ்சி நிலத்தின் கடவுள் முருகன். பண்பாட்டு விழுமியத்தின் முழுமுதற் கடவுள் முருகன். ஒருகாலத்தில் நம் இனத்தைக் காத்து நின்ற ஒரு போர் வீரனாக அவரைப் பார்க்கிறோம். எனவே, முருகனைக் கொண்டாடுகிறோம். `நாம் தமிழர் கட்சிக்கு ஓட்டுப் போடுங்கள்...’ என்று கேட்பதற்காக முருகனை நாங்கள் வணங்கவில்லை. ஆனால், பா.ஜ.க-வினரின் முருகன் வழிபாடு என்பது முற்றிலும் வேறானது. சித்தாந்தரீதியில் இரண்டும் எதிரெதிரானவை. திடீரென இப்போது வேல் யாத்திரை என்று புறப்படுவதற்கு இரண்டு காரணங்களைச் சொல்கிறார்கள்.

செந்தில்நாதன்
செந்தில்நாதன்

ஒன்று, கந்தசஷ்டி கவசத்தை `கறுப்பர் கூட்டம்’ அவமதித்துவிட்டது என்பது ஒரு காரணம். பா.ஜ.க அரசின் சாதனைகளை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்பது இன்னொரு காரணம். கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனல் நிர்வாகிகள் மீது அரசு நடவடிக்கை எடுத்துவிட்டது. அத்துடன் அந்தப் பிரச்னை முடிந்துவிட்டது. பா.ஜ.க அரசின் சாதனைகளை மன் கி பாத் நிகழ்ச்சி மூலம் ஒவ்வொரு மாதமும் பிரதமர் பேசுகிறார். அது மக்களிடம் போய்ச் சேருகிறது. அப்படியிருக்கும்போது, கொரோனா பெருந்தொற்று அச்சுறுத்தல் இருக்கும் இந்தக் காலத்தில் வேல் யாத்திரை நடத்தி பிரசாரம் செய்ய வேண்டிய அவசியம் என்ன?

இந்த மண்ணில் வளர வேண்டும் என்கிற நெருக்கடி பா.ஜ.க-வுக்கு இருக்கிறது. அதற்காக, மதரீதியாக பல யுக்திகளை அவர்கள் கையாளுகிறார்கள். மகாராஷ்டிரவைப்போல, விநாயகர் சதுர்த்தி மூலம் கட்சியை வளர்க்கலாம் என்று முயன்றார்கள். அது நடக்கவில்லை. ஆண்டாளை வைரமுத்து இழிவுபடுத்திவிட்டதாக பிரச்னை செய்தார்கள். அதிலும் வெற்றி கிடைக்கவில்லை. ராமர் யாத்திரை மூலமும் முயன்றார்கள். அதிலும் தோல்வி. எனவே, தமிழர் கடவுளான முருகனைத் தொட்டால் அரசியலில் நிலைபெறலாம் என்று நினைக்கிறார்கள். ஆனால், இந்த முயற்சியும் தோல்வியில்தான் முடியும் என்பதை இவர்கள் நடத்திய வேல் யாத்திரையைவைத்து முடிவுக்கு வந்துவிடலாம்.

வேல் யாத்திரை: அ.தி.மு.க அரசின் அனுமதி மறுப்பு... அரசியல் பின்னணி என்ன?

பா.ஜ.க தலைவர் எல்.முருகன் வைத்திருந்தது மட்டும்தான் வெண்கல வேல். அவர் அருகில் நின்றவர்கள் வைத்திருந்ததெல்லாம் பிளாஸ்டிக் வேல். விரதம் இருந்து, மாலை அணிந்து, செருப்பு அணியாமல் வேல் எடுத்துச் செல்ல வேண்டும். இவை எதையும் அவர்கள் கண்டுகொள்ளவில்லை. அத்தனை பேரும் செருப்பு அணிந்திருந்தார்கள். நாம் தமிழர் கட்சியைக் காப்பியடிக்க முயல்கிறார்கள்.

நாம் தமிழர் கட்சியினர் வேல் பயணம்
நாம் தமிழர் கட்சியினர் வேல் பயணம்

ஆனால், அவர்களுக்கு அது பொருந்தவில்லை. பக்தி உருகச் செய்யும் வேல் பயணத்துக்கும், வேடிக்கையாகச் செய்யும் வேல் பயணத்துக்கும் நிறைய வேறுபாடுகள் இருக்கின்றன. அதை மக்கள் நன்கு புரிந்துகொண்டுவிட்டார்கள்’’ என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு