Published:Updated:

`குற்றச்சாட்டு, மிரட்டல், இரண்டாவது பவர் சென்டர், ஸ்டாலினுக்குத் தெரியுமா?!’ - என்ன நடக்கிறது ஐபேக்கில்?

`` நாங்கள் வெளியே வந்ததால் தமிழ்நாடு ஐபேக் டீமின் கட்டமைப்பு சிதைந்துவிட்டது. இதனால் கோபப்பட்ட பிரசாந்த் கிஷோர், ஊழியர்கள் சிலரை ஹைதராபாத்துக்கு வரவழைத்தார்".

பிரசாந்த் கிஷோர்
பிரசாந்த் கிஷோர்

`தேர்தல் வித்தகர்' பிரசாந்த் கிஷோருக்கு எதிராக தி.மு.க வட்டாரத்திலேயே பெரும் குமுறல் வெடிக்கத் தொடங்கியிருக்கிறது. `உள்ளாட்சித் தேர்தல் உட்பட பல்வேறு பணிகளை டிமோஸ் என்ற நிறுவனம் செய்து வந்தது. அவர்களை வீழ்த்துவதற்காக ஸ்டாலினோடு கைகோத்துவிட்டார் பிரசாந்த்' என்கின்றனர் அறிவாலய வட்டாரத்தில்.

மு.க.ஸ்டாலின்
மு.க.ஸ்டாலின்

சென்னை அண்ணா நகரில் செயல்பட்டு வருகிறது பிரசாந்த் கிஷோரின் ஐபேக் நிறுவனம். இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு அரசியல் கட்சிகளுக்குத் தேர்தல் வேலையைச் செய்து கொடுப்பதுதான் இந்த நிறுவனத்தின் பணி. 2016 சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க-வுக்கு வேலை பார்ப்பதற்காகச் சென்னையில் கால்பதித்தது ஐபேக் நிறுவனம். 2014 நாடாளுமன்றத் தேர்தலில் நரேந்திர மோடிக்காக வேலை பார்த்தவர் என்ற அடையாளம் இருந்ததால், கிஷோரின் நிறுவனத்தில் பணியில் சேர பலரும் ஆர்வம் காட்டினர். அந்தவகையில், தமிழ்நாட்டிலிருந்து மட்டும் 32 பேர் ஐபேக் நிறுவனத்துக்குள் நுழைந்தனர்.

ஆனால், தி.மு.க தரப்பிலிருந்து பெரிதாக எந்த ரெஸ்பான்ஸும் இல்லாததால், எடப்பாடி பழனிசாமிக்காக சில அடிப்படை வேலைகளைச் செய்து கொடுக்க ஒப்பந்தம் செய்து கொண்டது ஐபேக் நிறுவனம். இதற்காக, 10 கோடி ரூபாய் வரையில் பேசப்பட்டதாகத் தகவல் வெளியானது. அதேவேளையில், நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யத்துக்காகவும் களவேலை பார்க்கத் தொடங்கியது பிரசாந்த் கிஷோர் டீம். `ஒரு மாநிலத்தில் ஓர் அரசியல் கட்சிக்காகத்தான் தேர்தல் வேலை பார்க்க முடியும். ஒரேநேரத்தில் 2 கட்சிகளோடு பேச்சுவார்த்தை நடத்தினால் நம்மைப் பற்றிய தவறான பிம்பம்தான் ஏற்படும்' எனக் கூறி ஐபேக் நிறுவனத்திலிருந்து இருபதுக்கும் மேற்பட்டோர் வெளியேறியதாகத் தகவல் வெளியானது.

இதன் தொடர்ச்சியாக, ஐபேக் நிறுவனத்துடனான ஒப்பந்தத்தை ரத்து செய்துவிட்டார் கமல்ஹாசன். இதுகுறித்துப் பேசிய மக்கள் நீதி மய்ய நிர்வாகிகளும், ` ஒரேநேரத்தில் வேறு கட்சிகளுக்காகவும் பிரசாந்த் கிஷோர் வேலை பார்த்தார். அப்படிப்பட்டவருடன் கைகுலுக்குவது சரியானதல்ல எனக் கமல் நினைத்தார்' என வெளிப்படையாகப் பேசினர். இதையடுத்து, தமிழகத்தில் வேறு எந்த அரசியல் கட்சிகளும் வேலை கொடுக்காததால் ரஜினி, விஜய் உள்ளிட்டோரை ஐபேக் நிறுவனத்தினர் சந்தித்துப் பேசியதாகவும் தகவல் வெளியானது. அங்கும் எந்த பதிலும் கிடைக்காததால், ஸ்டாலினை நேரடியாகச் சந்தித்துப் பேசி தி.மு.க-வுடன் ஒப்பந்தம் போட்டுவிட்டார் பிரசாந்த் கிஷோர். இந்தப் புதிய ஒப்பந்தம்தான் புயலைக் கிளப்பியிருக்கிறது.

நிதிஷ்குமாருடன் பிரசாந்த் கிஷோர்
நிதிஷ்குமாருடன் பிரசாந்த் கிஷோர்

என்ன நடக்கிறது ஐபேக் நிறுவனத்தில்?

``அரசியல் கட்சிகளுக்குத் தேர்தல் வேலை பார்ப்பதில் தங்களுக்குப் போட்டியாக யாரும் வந்துவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார் பிரசாந்த். அவருடைய உண்மையான முகத்தை தி.மு.க தலைவர் ஸ்டாலின் இன்னும் உணரவில்லை. கட்சித் தலைவர்களின் நம்பிக்கைக்குரியவராகவும் அவர் இருக்கப்போவதில்லை" என விவரித்த ஐபேக் நிறுவனத்தின் முன்னாள் ஊழியர்கள் சிலர், ``ஐபேக் நிறுவனத்தின் செயல்பாடுகளைப் பிடிக்காமல் கடந்த ஆகஸ்ட் மாதம் 20 பேர் வேலையிலிருந்து விலகினார்கள். இதற்குக் காரணம், பிரசாந்த் கிஷோரின் செயல்பாடுகள்தான். 2016 சட்டமன்றத் தேர்தலுக்காக வேலைக்கு எடுக்கப்பட்டவர்களில் தற்போது 8 பேர் மட்டுமே அங்கு வேலை செய்கின்றனர். இந்த 8 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். மற்ற ஊழியர்கள் அனைவரும் தமிழ்நாட்டைப் பற்றி எதுவுமே தெரியாத வடமாநிலத்தைச் சேர்ந்தவர்கள். இவர்களுக்கு ஸ்டாலினின் முழுப் பின்னணி, தமிழகக் கள நிலவரங்கள் எல்லாம் மேலோட்டமாகக் கூட தெரியாது.

``கட்சித் தாவலை விஞ்சும் கம்பெனி தாவல்” - பிரசாந்த் கிஷோர் தி.மு.க-வுக்குள் என்ட்ரி!

நாங்கள் வெளியே வந்ததால் தமிழ்நாடு ஐபேக் டீமின் கட்டமைப்பு சிதைந்துவிட்டது. இதனால் கோபப்பட்ட பிரசாந்த் கிஷோர், ஊழியர்கள் சிலரை ஹைதராபாத்துக்கு வரவழைத்தார். அங்கு வைத்து பொய் குற்றச்சாட்டுகளை சுமத்தி மிரட்டினார். `நாங்கள் தவறு செய்ததாக நிரூபியுங்கள். எந்த நடவடிக்கைக்கும் தயாராக இருக்கிறோம்!’ எனக் கூறிவிட்டு வந்துவிட்டோம். இந்த அபாண்ட குற்றச்சாட்டு தொடர்பாக எங்கள் தரப்பு ஆதாரங்களையும் நாங்கள் வைத்திருக்கிறோம்.

அண்ணா அறிவாலயம்
அண்ணா அறிவாலயம்

இதன்பிறகு, சில ஊழியர்கள் மட்டும் ஐபேக் நிறுவனத்துக்குப் போட்டியாக டிமோஸ் என்ற நிறுவனத்தை ஆர்.கே.சாலையில் தொடங்கினர். இவர்களுக்குத் தி.மு.க தரப்பிலிருந்து ஆதரவு கிடைத்தது. இரு தரப்பிலும் ஒப்பந்தமும் போடப்பட்டது. உள்ளாட்சித் தேர்தலுக்கான அடிப்படை வேலைகளையும் டிமோஸ் நிறுவனம் செய்யத் தொடங்கிவிட்டது. இந்நிலையில், சி.ஐ.டி காலனி குடும்பத்தைச் சேர்ந்த முக்கிய நபர் மற்றும் ஏரியா புகழ் பிரமுகர் ஆகியோரின் உதவியோடு ஸ்டாலினை நேரடியாகச் சந்தித்துப் பேசினார் பிரசாந்த் கிஷோர். தி.மு.கவோடு இணைந்து வேலை செய்வது தொடர்பாக அப்போது பேச்சுவார்த்தை நீண்டிருக்கிறது.

அப்போது, ஐபேக்கின் முன்னாள் ஊழியர்கள் சிலரின் பெயரையும் குறிப்பிட்டுக் கோபப்பட்டிருக்கிறார் கிஷோர். இதற்குப் பதில் கொடுத்த தி.மு.க பிரமுகர்கள், `நீங்கள் அவர்கள் மேல் கோபத்தைக் காட்ட வேண்டிய அவசியம் இல்லை, நாங்களாகத்தான் அவர்களை அழைத்தோம். அவர்களையும் உங்களோடு இணைத்துக்கொண்டு வேலைகளைச் செய்யுங்கள்' எனக் கூறியுள்ளனர். அதற்கு அவரோ, `ஒற்றைத் தலைமையில்தான் சிறப்பாகச் செயல்பட முடியும். அவர்களை எங்களோடு சேர்த்துக்கொள்ள முடியாது' எனக் கூறியிருக்கிறார். இதைக் கேள்விப்பட்ட நாங்களும், `கிஷோருடன் வேலை பார்த்தால், மொத்த கிரெடிட்டும் அவர்களுக்கே சென்று சேரும். எனவே, அவர்களுடன் இணைந்து செயல்படுவது என்ற பேச்சுக்கே இடமில்லை' எனக் கூறிவிட்டோம். பி.கே டீம் உள்ளே வந்துவிட்டதால், டிமோஸ் நிறுவனத்துடன் தி.மு.க போட்ட ஒப்பந்தம் என்ன ஆனது எனவும் தெரியவில்லை. உள்ளாட்சித் தேர்தலுக்கான அனைத்துக் களவேலைகளையும் தொடங்கிவிட்டோம். டிசம்பர் இறுதியில் சர்வே ஒன்றை எடுக்கவும் டிமோஸ் திட்டமிட்டிருந்தது. அதற்குள் ஸ்டாலினைச் சந்தித்து உள்ளே நுழைந்துவிட்டார் பிரசாந்த்" என்றவர்கள்,

ஸ்டாலின்
ஸ்டாலின்

``எந்த அரசியல் கட்சிக்கு வேலை பார்த்தாலும் அந்தக் கட்சியில் இரண்டாவது பவர் சென்டராக தான் இருக்க வேண்டும் என விரும்புவார் பிரசாந்த். அப்போதுதான், வேறு யாருக்கும் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இருக்காது. இதுவரையில் பல மாநிலங்களில் இதைத்தான் செய்து வந்தார். தி.மு.க போன்ற கட்சியில் அது சாத்தியப்படுமா எனத் தெரியவில்லை. தவிர, கிஷோரின் டிமாண்டும் அதிகம். ஆளும்கட்சியாக இருந்தால் அவரது டிமாண்டை ஏற்பதில் சிரமம் இருக்காது. எதிர்க்கட்சியாக இருப்பவர்கள் இந்த டிமாண்டை ஏற்பார்களா என்பது போகப் போகத் தெரியும்" என்கின்றனர் விரிவாக.

டிமோஸ் தரப்பின் குற்றச்சாட்டுகள் குறித்து ஐபேக் நிறுவனத்தின் தமிழக அணியின் முக்கியப் பொறுப்பாளரான செல்வாவிடம் பேசினோம். ``நீங்கள் குறிப்பிடும் தகவல்களைப் பற்றி எனக்கு எதுவும் தெரியவில்லை. சில தகவல்களை செய்தியில் பார்த்துத்தான் தெரிந்து கொண்டேன். நான் இரண்டு மாதங்களாக வெளியில் இருக்கிறேன். உள்ளே என்ன நடக்கிறது என்பது குறித்து எனக்கு எதுவும் தெரியாது" என்றதோடு முடித்துக் கொண்டார்.