` மு.க.ஸ்டாலினை முந்திக் கொண்ட உதயநிதி!' - `திடீர்' போராட்டத்தால் வெடித்த அறிவாலய சர்ச்சை

`17-ம் தேதி போராட்டம் நடக்கும் என ஸ்டாலின் அறிவித்திருந்த நிலையில், எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் திடீரென உதயநிதி போராட்டத்தை அறிவித்தது ஏன். அப்படியானால், தலைமையின் கட்டுப்பாட்டில் உதயநிதி இல்லையா?'
மத்திய அரசின் குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை எதிர்த்து உதயநிதி தலைமையில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தியிருக்கிறது தி.மு.க இளைஞர் அணி. `தி.மு.க சார்பில் 17-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என ஸ்டாலின் அறிவித்திருந்த நிலையில், உதயநிதியின் தன்னிச்சையான போராட்ட அறிவிப்பு பல்வேறு கேள்விகளை எழுப்பியிருக்கிறது' என்கின்றனர் அறிவாலய வட்டாரத்தில்.

நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரில் தேசிய குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவைத் தாக்கல் செய்தது மத்திய அரசு. இந்த மசோதாவுக்கு எதிராக அனைத்து எதிர்க்கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டன. அரசியல் கட்சிகளின் எதிர்ப்பையும் மீறி இரண்டு அவைகளிலும் குடியுரிமை சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது. அதன்படி, ` பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்து அகதிகளாக வந்த இந்துக்கள், கிறிஸ்துவர்கள், பார்சிகள், ஜைனர்கள், பௌத்தர்கள் ஆகியோரிடம் உரிய ஆவணம் இல்லையென்றாலும் அவர்கள் குறைந்தது 6 ஆண்டுகள் இந்தியாவில் வசித்தாலே இந்தியக் குடியுரிமையை வழங்கலாம்' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த மசோதாவில் இலங்கையிலிருந்து வந்த ஈழத் தமிழர்கள் சேர்க்கப்படவில்லை. இது தமிழகத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக, மக்களவையில் பேசிய தி.மு.க நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு, ``இந்த மசோதாவில் பல குறைபாடுகள் உள்ளன. கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக இலங்கைத் தமிழர்கள், கிறிஸ்துவர்கள், இஸ்லாமியர்கள் மற்றும் இதர வகுப்பினர் இங்கு வந்து வாழ்கின்றனர். எனவே, உள்துறை அமைச்சர் அந்தக் குறையைச் சரி செய்ய வேண்டும். இந்த மசோதாவை அறிமுகப்படுத்துவதை நாங்கள் எதிர்க்கிறோம்” என்றார். இதன்பிறகு, டி.ஆர்.பாலு வெளிநடப்பு செய்ததாக வெளியான தகவல் தி.மு.க வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில், மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை எதிர்த்து, வரும் 17ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அதிகாரபூர்வமாக அறிவித்திருந்தார் தி.மு.க தலைவர் ஸ்டாலின். அதற்கான ஏற்பாடுகள் நடந்து வந்த நிலையில், இன்று அவசர அவசரமாக குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்தியிருக்கிறார் உதயநிதி ஸ்டாலின். சென்னை, சைதாப்பேட்டையில் தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிராக இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்தப் போராட்டத்தில் இளைஞரணி மாநில துணைச் செயலாளர்கள் வழக்கறிஞர் ஜோயல், அசன் முகமது ஜின்னா உட்பட 4,000-க்கும் மேற்பட்ட தொண்டர்கள் கலந்து கொண்டனர். இதுதொடர்பாக, நேற்று இரவே தமிழகம் முழுவதும் உள்ள இளைஞரணி நிர்வாகிகளுக்குத் தகவல் அனுப்பப்பட்டது. `17-ம் தேதி போராட்டம் நடக்கும் என ஸ்டாலின் அறிவித்திருந்த நிலையில், எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் திடீரென உதயநிதி போராட்டத்தை அறிவித்தது ஏன். அப்படியானால், தலைமையின் கட்டுப்பாட்டில் உதயநிதி இல்லையா?' என தி.மு.க நிர்வாகிகள் மத்தியில் கேள்வி எழுந்தது.

`ஈழத் தமிழர்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் எதிராக இப்படியொரு சட்டத் திருத்தத்தை மத்திய அரசு கொண்டு வந்திருக்கிறது. இதை எதிர்த்துப் போராடுவதற்கு இளைஞர்கள் தன்னிச்சையாகத் திரண்டுள்ளனர். இப்படியொரு போராட்டத்தை நடத்துவதற்கு நேரம் காலம் பார்க்க வேண்டிய தேவையில்லை. தலைமையிடம் அவசர ஒப்புதலைப் பெற்ற பிறகே ஆர்ப்பாட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது' என சீனியர்களுக்கு விளக்கமளித்துள்ளனர் இளைஞரணி நிர்வாகிகள் சிலர். இன்று நடந்த திடீர் ஆர்ப்பாட்டத்தில் நான்காயிரத்துக்கும் மேற்பட்ட தொண்டர்கள் திரண்டதை உதயநிதி எதிர்பார்க்கவில்லை. இதையடுத்துக் கூட்டத்தில் பேசியவர், ` குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு ஆதரவு அளித்ததன் மூலம் அ.தி.மு.க அரசு அடிமை அரசு என்பதை மீண்டும் நிரூபித்துவிட்டது. அது அ.தி.மு.க அல்ல; அடிமை அ.தி.மு.க' எனச் சாடினார்.
மத்திய அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்துக்கு இவ்வளவு கூட்டம் திரளும் எனக் காவல்துறையும் எதிர்பார்க்கவில்லை. அங்கு கூடியவர்களை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ திடலுக்குக் கொண்டு செல்வதற்காக பேருந்துகளைக் கொண்டு வந்திருந்தனர் போலீஸார். இதனால் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால், கூட்டத்தில் கலந்து கொண்ட இளைஞரணித் தொண்டர்கள் மீது போலீஸார் தடியடி நடத்தினர். இதனால் கொந்தளித்த உதயநிதி, அண்ணா சாலையில் அப்படியே அமர்ந்துவிட்டார். தொடர்ந்து, `அவர்கள் மீது ஒரு அடி விழுந்தால்கூட இந்த இடத்தைவிட்டு நகர மாட்டேன். உங்களின் நிழல்கூட அவர்கள் மேல் விழக் கூடாது' என போலீஸ் உயர் அதிகாரி ஒருவரிடம் கோபத்தைக் காட்டினார். ஒருவழியாக, அங்கிருந்து 2 கி.மீட்டர் தொலைவில் உள்ள நந்தனம் ஒய்.எம்.சி.ஏ திடலுக்குக் கொண்டு சென்றனர். இதற்கே 2 மணி நேரம் ஆனதாகக் கூறுகின்றனர் இளைஞரணி நிர்வாகிகள்.

உதயநிதியின் `திடீர்' போராட்ட அறிவிப்பு குறித்து, இளைஞரணி நிர்வாகிகளிடம் பேசினோம். ``தலைவர் ஸ்டாலினிடம் முறையான அனுமதியை வாங்கிய பிறகே ஆர்ப்பாட்டத்தை நடத்துவது என முடிவு செய்தார் உதயநிதி. மத்திய அரசின் குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிராக தேதியைக்கூட அறிவிக்காமல் தி.மு.க போராட்டம் நடத்தலாம். ஆனால், நாங்கள் அப்படிச் செய்ய முடியாது. இளைஞரணியின் செயல்பாடுகளை இளைஞர்கள் மத்தியிலும் பொதுமக்கள் மத்தியிலும் கொண்டு செல்லும் முயற்சியில் தீவிரமாக இறங்கியிருக்கிறோம்.
இதற்காக நேரம் காலத்தைப் பார்க்க வேண்டிய அவசியமில்லை. சிறுபான்மையினருக்கு எதிராகவும் ஈழத் தமிழர்களுக்கு எதிராகவும் இப்படியொரு சட்டத் திருத்தத்தை மத்திய அரசு கொண்டு வந்திருக்கிறது. இதைத் தீவிரமாக எதிர்க்க வேண்டும் என்றார் உதயநிதி. இன்று நடந்த போராட்டமே திடீரென ஏற்பாடு செய்யப்பட்டதுதான். இதற்காகக் கூடிய கூட்டத்தைப் பொறுக்க முடியாதவர்கள்தான், தலைமைக்கு எதிராக உதயநிதி செயல்படுகிறார் எனத் தகவல் பரப்புகின்றனர்" என்கின்றனர் கொதிப்புடன்.