Published:Updated:

`எந்த மாநிலத்திலும் இப்படிக் கூட்டணி அமைத்ததில்லை!' - கமல், எடப்பாடி பணிகளால் காலியாகும் `ஐபேக்?'

பிரசாந்த் கிஷோர்
பிரசாந்த் கிஷோர்

`கமலுக்காகக் களத்தில் ஆய்வு நடத்துவதா... அ.தி.மு.க-வுக்காக வேலை பார்ப்பதா...' என்ற குழப்பம் நீடித்து வருகிறது. இரண்டு கட்சிகளுடன் பி.கே போட்ட ஒப்பந்தத்தில் என்ன இருக்கிறது என்றும் தெரியவில்லை.

ஒரேநேரத்தில் அ.தி.மு.க மற்றும் மக்கள் நீதி மய்யத்துக்குக் களவேலை பார்த்துக்கொண்டிருக்கிறது `தேர்தல் வித்தகர்' பிரசாந்த் கிஷோரின் ஐபேக் டீம். `ஒரு மாநிலத்தில் இரண்டு கட்சிகளுக்காக வேலை பார்ப்பதால் ஐபேக் அணிக்குள் சர்ச்சை எழுந்துள்ளது. இதன்காரணமாக, கடந்த வாரத்தில் 20 பேர் வரையில் வேலையில் இருந்து விலகிவிட்டனர்' என்கின்றனர் ஐபேக் வட்டாரத்தில்.

கமல்ஹாசன்
கமல்ஹாசன்

இந்தியாவில் உள்ள பிரதான கட்சிகள் பலவும் `தேர்தல் வித்தகர்' பிரசாந்த் கிஷோரின் ஐபேக் நிறுவனத்தை நம்பியுள்ளன. 2014 தேர்தலில் நரேந்திர மோடிக்காகத் தேர்தல் வேலைபார்த்த ஐபேக் டீம், அதற்கடுத்து வந்த நாள்களில் நிதிஷ் குமார், ராகுல்காந்தி, ஜெகன் மோகன் ரெட்டி எனப் பல தலைவர்களுக்குத் தேர்தல் வேலை பார்த்தது. தற்போது மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்காகக் களத்தில் உழைத்துக்கொண்டிருக்கிறார்கள். தமிழகத்தில் 2021-ம் ஆண்டு வரக்கூடிய சட்டமன்றத் தேர்தலுக்காக அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலில் கணிசமான அளவு வாக்குகளைப் பெற்ற நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யமும் பிரசாந்த் கிஷோரிடம் பணிகளை ஒப்படைத்துள்ளது. கிராமம், நகரம் வாரியாக எவ்வளவு பொறுப்பாளர்களை நியமிக்க வேண்டும்... கட்சியின் அடிப்படைக் கட்டமைப்பை வலுப்படுத்த என்ன செய்ய வேண்டும் என்பன போன்ற ஆலோசனைகளை மக்கள் நீதி மய்யத்துக்கு வழங்கியுள்ளது ஐபேக் டீம். அதன் அடிப்படையில் கட்சியின் உள்கட்டமைப்பை மேம்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர் ம.நீ.ம நிர்வாகிகள்.

கமல்ஹாசனுக்காக வேலை பார்க்கும் அதேநேரம் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்காகவும் ஐபேக் டீம் வேலை பார்த்து வருகிறது. இதற்காக ரூ.5 கோடி ரூபாய் அட்வான்ஸ் வழங்கப்பட்டிருப்பதாகவும் அரசியல் வட்டாரத்தில் தகவல் பரவியது. `தமிழகம் முழுவதும் அ.தி.மு.க அரசை மக்கள் எப்படிப் பார்க்கிறார்கள்.. இப்போது உள்ள ஆட்சியை எப்படி மதிப்பிடுகிறீர்கள்...`சிறப்பு' 'மிகச் சிறப்பு' `மோசம்' `படுமோசம்' என நான்கு வகைகளாகப் பிரித்துள்ளனர். முதல்வரின் செயல்பாடுகளை எப்படிப் பார்க்கிறீர்கள், அடுத்த முதல்வராக யார் வர வேண்டும் என்பன போன்ற கேள்விகளை மையமாக வைத்து மக்களிடம் கேள்விகள் கேட்கப்பட இருக்கின்றன. இந்த சர்வே கொடுக்கக்கூடிய முடிவுகளை வைத்தே 2021 தேர்தலுக்கான காய் நகர்த்தல்களில் ஈடுபட இருக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

``ஐபேக் கொடுக்கப்போகும் ஐடியாக்களை நம்பி அ.தி.மு.க-வும் ம.நீ.மய்யமும் காத்திருக்கின்றன. ஆனால், ஒரேநேரத்தில் இரண்டு கட்சிகளுக்கு வேலை பார்ப்பது தொடர்பாக ஐபேக் அணிக்குள்ளேயே ஒரு பஞ்சாயத்து ஓடிக்கொண்டிருக்கிறது" என விவரித்த அந்த நிறுவனத்தின் ஊழியர் ஒருவர், ``இரண்டு கட்சிகளிடமும் அட்வான்ஸ் வாங்கிக்கொண்டு செயல்படுவதில் ஊழியர்கள் சிலருக்கு விருப்பமில்லை. அதனை நேரடியாகவே பேசத் தொடங்கிவிட்டனர். 10 வருடங்களுக்கு முன்பு ஐபேக் நிறுவனத்தைத் தொடங்கும்போது, `இந்த சிஸ்டம் ஊழல்மயமாகி வருகிறது. இதை மாற்றுவதற்கு ஒரு தலைவர் தேவை. நீங்களோ நானோ இதை மாற்ற முடியாது. அதற்கு ஒரு முகம் வேண்டும். இன்றைக்கு வலுவான முகம் என்றால் அது மோடிதான்' எனக் கூறினார் பிரசாந்த் கிஷோர்.

அவரது வார்த்தைகளை நம்பி பெரிய அளவில் சம்பளம் வாங்கிக் கொண்டிருந்தவர்கள் எல்லாம் குறைவான சம்பளத்துக்கு வேலை பார்க்க வந்தனர். அதற்கேற்ப தரமான ஓர் அணியும் அமைந்தது. ஆனால், மத்திய அரசின் பண மதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி உள்ளிட்ட விவகாரங்களால் டீமுக்குள் சலசலப்பு ஏற்பட்டது. தொடர்ந்து பணிகள் நடந்து வந்தன. இருப்பினும், எந்தவொரு மாநிலத்திலும் இரண்டு கட்சிகளுக்காக ஒரேநேரத்தில் நாங்கள் வேலை பார்த்ததில்லை. `கமலுக்காகக் களத்தில் ஆய்வு நடத்துவதா... அ.தி.மு.க-வுக்காக வேலை பார்ப்பதா...' என்ற குழப்பம் நீடித்து வருகிறது. இரண்டு கட்சிகளுடன் பி.கே போட்ட ஒப்பந்தத்தில் என்ன இருக்கிறது என்றும் தெரியவில்லை.

அ.தி.மு.க நிர்வாகிகள் கூட்டம்
அ.தி.மு.க நிர்வாகிகள் கூட்டம்

இதுவரையில் கட்சிகள் கூட்டணி அமைத்துத்தான் பார்த்திருக்கிறோம். முதல்முறையாக மாநிலத்தில் உள்ள இரண்டு கட்சிகளுடன் ஐபேக் நிறுவனம் கூட்டணி அமைத்திருக்கிறது. `இது எங்களுக்கு ஒத்துவராது' எனக் கூறி 20 பேர் வரையில் வேலையைவிட்டுச் சென்றுவிட்டனர். அ.தி.மு.க-வை பா.ஜ.க-வின் பி டீம் என்று சொல்கிறார்கள். அப்படியானால், கமல்ஹாசன் யாருடைய பி டீம் என்று தெரியவில்லை. அப்படியானால் நாம் இரண்டு பி டீம்களுக்காக வேலை பார்க்க வேண்டுமா என்ற கேள்வியும் எழுந்தது" என ஆதங்கத்தை வெளிப்படுத்தியவர்,

பாத்ரூமில் வழுக்கிவிழுந்து கை உடைந்தவர்கள் எத்தனை பேர்?- போலீஸுக்கு 10 ஆர்.டி.ஐ கேள்விகள்!

`` தி.மு.க, அ.தி.மு.க போன்ற பிரதான கட்சிகளிடமிருந்து மக்கள் நீதி மய்யத்தை நோக்கி வாக்காளர்களை இழுத்து வரக்கூடிய வேலையைச் செய்ய வேண்டும். எடப்பாடிக்கு வேலை செய்துவிட்டு அவரது கட்சிக்கு ஆதரவான வாக்காளர்களை எப்படிக் கமல் கட்சியை நோக்கி ஈர்க்க வைக்க முடியும். இதை எப்படிச் செயல்படுத்த முடியும். 2016 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக ஸ்டாலினை நேரில் சந்தித்துப் பேசினார் பிரசாந்த் கிஷோர். அவர் கூறிய விஷயங்கள் பிடிபடாததால், ஐ.டி விங்க் நிர்வாகிகளைச் சந்திக்க வைத்தார் ஸ்டாலின். அவர்களும் பி.கே-விடம் விவாதித்துவிட்டு ஸ்டாலினுக்குத் தகவல் கொடுத்தனர்.

அதில், `தமிழ்நாட்டு நிலவரமே பி.கே-வுக்குப் புரியவில்லை. அவர் சொல்லக்கூடிய விஷயங்கள் எல்லாம் வடஇந்தியாவுக்குப் பொருந்தும். நமது ஊருக்கு அவர் செட்டாக மாட்டார்' எனக் கூறிவிட்டனர். சொல்லப்போனால் பி.கே-வின் முதல் சாய்ஸாக தி.மு.க-தான் இருந்தது. ஆனால், தி.மு.க அவரை நிராகரித்துவிட்டது. ஒரு மாநிலத்தில் எந்தச் சமூகம் அதிகமாக இருக்கிறது, அவர்களது மனதை மாற்றி எப்படி இன்னொரு கட்சிக்குக் கொண்டு வருவது என்பன உள்ளிட்ட கொள்கைகளை வகுத்துக் கொடுக்கின்றனர். தமிழகத்தின் சூழல்களை பிரசாந்த் கிஷோரால் புரிந்துகொள்ள முடியவில்லை. அதுதான் இரண்டு கட்சிகளுக்கும் வேலை பார்க்கக்கூடிய நிலைக்குக் கொண்டு சென்றிருக்கிறது" என்றார் விரிவாக.

ஸ்டாலின்
ஸ்டாலின்

ஐபேக் அணிக்குள் எழுந்துள்ள சர்ச்சை குறித்துப் பேசும் அந்நிறுவனத்தின் பிரதிநிதிகள், ``ஒவ்வொரு மாநிலத்திலும் சமூகரீதியாக இருக்கும் மக்களை முன்வைத்தே ஆய்வு நடத்தப்பட இருக்கிறது. மக்கள் நீதி மய்யத்தை ஓர் அரசியல் கட்சியாக மேம்படுத்துவதற்கான ஆலோசனைகள் மட்டுமே வழங்கப்பட்டு வருகின்றன. அ.தி.மு.க-வைப் பொறுத்தவரையில் அந்தக் கட்சிக்கான செல்வாக்கு குறித்து ஆய்வு நடத்தப்பட இருக்கிறது. இதில் எந்தவிதக் குழப்பமும் இல்லை.

மக்களிடம் கேட்கப்படும் கேள்விகளும், `கடந்தமுறை யாருக்கு வாக்களித்தீர்கள்... இப்போது உள்ள கட்சித் தலைவர்களில் யார் மீது நம்பிக்கை இருக்கிறது. எதனால் அந்தத் தலைவரின் மீது நம்பிக்கை வைக்கிறீர்கள்?' என்பன உள்பட 20 கேள்விகள் இடம்பெற்றிருக்கும். ஒருவர் ஓர் இடத்தில் பொய் சொன்னால்கூட மற்ற கேள்விகளில் அவரது உண்மை நிலையைக் கண்டறியலாம். 20 கேள்விகளில் உண்மையாக பதில் சொல்லக்கூடிய வகையில் 3 கேள்விகளாவது இடம்பெற்றிருக்கும். அதைவைத்துதான் வாக்காளர்களின் மனநிலையை அறிந்துகொள்கிறோம். தி.மு.க-வைக் காலி செய்யக்கூடிய வேலைகளும், அடுத்தகட்டமாக வாக்குவங்கியை பாதிக்கக்கூடிய சிறிய கட்சிகளைக் காலி செய்வதும் இந்தப் பணியின் ஓர் அங்கமாக இருக்கிறது. இதில் குழப்பங்களுக்கு இடமில்லை" என்கின்றனர் உறுதியாக.

அடுத்த கட்டுரைக்கு