Published:Updated:

துணைவேந்தர் நியமனத்துக்குப் போட்டி போடும் மாநில அரசு, ஆளுநர்! - சர்ச்சையின் பின்னணி என்ன?

அண்ணா பல்கலைக்கழகம்
News
அண்ணா பல்கலைக்கழகம்

துணைவேந்தர் நியமனத்தில் மத்திய அரசு தலையிட்டு ஆளுநர் மூலம் இடையூறுகள் ஏற்படுத்துவதாக அ.தி.மு.க ஆட்சிக்காலத்திலிருந்தே குற்றச்சாட்டுகளை முன்வைத்த தி.மு.க., தற்போது மாநில அரசே துணைவேந்தர் நியமனத்தைக் கையில் எடுத்துக்கொள்ளப்போவதாக அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களுக்குத் துணைவேந்தர் நியமனம் செய்வது, தொடர்ந்து சர்ச்சைக்குள்ளாகிவருகிறது. துணைவேந்தர் நியமனம் என்பது தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்தியா முழுவதுமே சர்ச்சைக்குள்ளாகிவருகிறது. அதன் ஒரு பகுதியாகத்தான் மேற்கு வங்கம், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களை அடுத்து தமிழ்நாட்டிலும் `துணைவேந்தர் நியமனத்தை மாநில அரசே செய்யும்’ என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடரின் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்தில் பேசிய பா.ம.க சட்டமன்றக்குழுத் தலைவர் ஜி.கே.மணி, ``பல்வேறு பல்கலைக்கழகங்களிலும் துணைவேந்தர் நியமனம் தாமதமாகிக்கொண்டிருக்கிறது. அவற்றுக்கு விரைவில் துணைவேந்தர்களை நியமிக்க வேண்டும்” எனக் கோரிக்கை வைத்தார். இதற்கு பதிலளித்துப் பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, ``பல்வேறு மாநிலங்களில் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் நியமிக்கும் அதிகாரம் மாநில அரசிடமே உள்ளது. புதிதாக உருவாக்கப்பட்ட தெலங்கானா மாநிலத்திலும் இந்த நிலையே உள்ளது. துணைவேந்தர் நியமனத்தில் மாநில அரசின் பங்கும் இருக்க வேண்டும். இதற்கெல்லாம் முடிவுகட்ட வேண்டும் என்று சொன்னால், பல்கலைக்கழக துணைவேந்தர்களை மாநில அரசே நியமித்துக்கொள்ள வேண்டும் என்ற முடிவு என்பதே சிறப்பாக இருக்கும். முதலமைச்சர் இது குறித்து ஆலோசித்துக்கொண்டிருக்கிறார். விரைவில் இது குறித்து அறிவிப்பு வெளியிடப்படும்” எனக் கூறினார்.

முதல்வர் ஸ்டாலின் - ஆளுநர் ரவி
முதல்வர் ஸ்டாலின் - ஆளுநர் ரவி

அப்போது பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ``வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும் சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில், பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களை மாநில அரசே நியமனம் செய்வது குறித்த தீர்மானம் நிறைவேற்றப்படும்” என்று தெரிவித்தார்.

துணைவேந்தர் நியமனத்தில் மத்திய அரசு தலையிட்டு ஆளுநர் மூலம் இடையூறுகள் ஏற்படுத்துவதாக அ.தி.மு.க ஆட்சிக்காலத்திலிருந்தே தி.மு.க குற்றச்சாட்டுகளை முன்வைத்துவருகிறது. தற்போது மாநில அரசே துணைவேந்தர் நியமனத்தைக் கையில் எடுத்துக்கொள்ளப்போவதாக அறிவித்துள்ளது. தொடரும் துணைவேந்தர் நியமன சர்ச்சை குறித்து விசாரணையில் இறங்கினோம்…

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் சபாபதி மோகனிடம் பேசினோம். ``மாநில அரசின் நிதியில்தான் பல்கலைக்கழக நிர்வாகம் நடைபெறுகிறது. கட்டடங்கள் கட்ட, நியமனம் செய்ய, ஆசிரியர்கள், இதர ஊழியர்களுக்கு ஊதியம் வழங்க என அனைத்துக்கும் மாநில அரசுதான் நிதி வழங்குகிறது. ஆனால், பல்கலைக்கழகத்தின் ஆட்சி மன்றக்குழு, திட்டக்குழு, பட்டமளிப்பு விழாவில் யார் உரையாற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட அனைத்தும் ஆளுநரின் ஒப்புதலுடன்தான் தீர்மானிக்கப்படுகின்றன. பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் நியமனத்திலும் ஆளுநர் சார்பில் ஒருவர் இடம்பெற்றிருப்பார். இப்படி அனைத்து வகையிலும் தலையிடும் ஆளுநர், பல்கலைக்கழகத்துக்கான நிதி விவகாரத்தில் துரும்பளவுக்குக்கூட உதவி செய்ய மாட்டார்.

பல்கலைக்கழக மானியக்குழுவும் மாநிலத்தில் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு ஆண்டுக்கு 4 முதல் 5 கோடி ரூபாய்தான் நிதி ஒதுக்கும். இதுவே ஒன்றிய அரசின் கீழ் இயங்கும் ஐஐடி-க்கு கிட்டத்தட்ட 200 கோடி ரூபாய் வரை ஒதுக்குகிறார்கள். ஒரு மாநிலத்தின் ஒட்டுமொத்த பல்கலைக்கழகங்களுக்கும் ஒதுக்கும் நிதியைக் கணக்கிட்டாலே இதைவிடக் குறைவாகத்தான் வரும். கருணாநிதி ஆட்சியிலிருந்தபோது மூன்று பட்டியலினத்தவர்கள், நான்கு பிற்படுத்தப்பட்டோர், ஒரு சிறுபான்மையினர் என அனைத்துப் பிரிவிலிருந்தும் தமிழ்நாட்டின் பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களாக நியமிக்கப்பட்டிருந்தனர். ஆனால், கடந்த ஏழு ஆண்டுகளில் நடந்த நியமனங்களில் இந்தச் சமூகநீதியெல்லாம் காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளன. தமிழ்நாட்டோடு எந்தத் தொடர்பும் இல்லாதவர்களை, தமிழ்நாட்டின் கல்வித்துறையில் மிக முக்கிய முடிவுகளை எடுக்க எப்படி அனுமதிக்க முடியும். தமிழ்நாட்டின் மிகப்பெரிய எண்ணிக்கையில் தனியார் பல்கலைக்கழகங்கள் இருக்கின்றன. அதன் எந்த விவகாரத்திலும் யாரும் தலையிட முடியாது. ஆனால், அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் பல்கலைக்கழகங்களில் அனைவரின் தலையீடும் இருக்கிறது.

சபாபதி மோகன் முன்னாள் துணைவேந்தர்
சபாபதி மோகன் முன்னாள் துணைவேந்தர்

பல்கலைக்கழகங்களின் செயல்பாடுகளை முறைப்படுத்த அதன் பல்வேறு சட்டதிட்டங்களில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட உள்ளன. அதற்கான பரிந்துரைகளை முதல்வரிடம் கொடுத்திருக்கிறோம். விரைவில் தமிழ்நாட்டின் பல்கலைக்கழகங்களின் நிர்வாகம் ஒட்டுமொத்தமாகத் தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டில் வரும். அதை முதல்வர் செயல்படுத்திக்காட்டுவார்.” எனப் பல்கலைக்கழகத்தின் செயல்பாடு மற்றும் நிதி நடைமுறைகளில் ஆளுநரின் தலையீட்டால் ஏற்படும் சிக்கல்கள் குறித்து விவரித்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

துணைவேந்தர் நியமன சர்ச்சை குறித்து பா.ஜ.க மாநிலப் பொதுச்செயலாளர், பேராசிரியர் இராம.ஸ்ரீனிவாசனிடம் பேசினோம். ``தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் துணைவேந்தர் நியமனத்தை மாநில அரசே செய்யும் எனவும், அதற்கான சட்ட முன்வரைவை அடுத்த சட்டமன்றக் கூட்டத்தொடரில் தாக்கல் செய்யவிருப்பதாகவும் அறிவித்திருப்பது ஏற்புடையதல்ல. இது சரியான நடைமுறை என்றால் கலைஞர் ஆட்சியில் இருந்தபோதே செய்திருப்பார். ஒரு மாநிலத்துக்கு ஆளுநரே தேவையில்லை எனப் பேசிய கலைஞரே இதை முன்னெடுக்காதபோது ஸ்டாலின் இப்படிச் சொல்வது சரியல்ல. தமிழ்நாட்டில் துணைவேந்தர் நியமனத்தின்போது எந்த அளவுக்கு ஊழல் புகார்கள் வந்தன, நியமனத்தை எதிர்த்து எத்தனை வழக்குகள் போடப்பட்டன, எத்தனை துணைவேந்தர்கள்மீது சி.பி.ஐ, லஞ்ச ஒழிப்புத்துறையில் வழக்குகள் பதிவாகியுள்ளன என்பதைக் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். ஆனால், மோடி பிரதமராகப் பதவி ஏற்றதற்குப் பிறகு துணைவேந்தர் நியமனம் நேர்மையாக, சரியாக, பாரபட்சமின்றி, வேண்டியவர், வேண்டாதவர் எனப் பார்க்காமல், கல்வியாளர்களை மட்டுமே நியமனம் செய்வது நடைமுறைப்படுத்தப்படுகிறது. உதயநிதி ஸ்டாலினை அண்ணா பல்கலைக்கழகத்தின் ஆட்சி மன்றக் குழுவில் நியமிக்கும் தி.மு.க அரசின் நியமனங்கள் எப்படி நியாயமானதாக இருக்கும்... பல்கலைக்கழகங்களிலும் தங்கள் குடும்பத்தின் ஆதிக்கத்தைக் கொண்டுவரவே தி.மு.க அரசு முயல்கிறது. அப்படித்தான் இந்த முயற்சியைப் பார்க்க முடிகிறது.

இராம ஶ்ரீநிவாசன் பாஜக
இராம ஶ்ரீநிவாசன் பாஜக

ஆளுநருக்கான அதிகாரத்தைக் குறைக்கும் சட்ட மசோதாவில் ஆளுநர்தானே கையெழுத்திட வேண்டும்? அப்படி ஒரு சட்ட மசோதா வந்தால் ஆளுநர் அதை நிராகரிக்க வேண்டும். துணைவேந்தர் நியமனம் என்பது சட்டத்தின் அடிப்படையில் இல்லாமல் மரபினடிப்படையில் வந்தது. 70 ஆண்டுக்கால நடைமுறையை, மரபை மாற்றும் முடிவை தி.மு.க கைவிட வேண்டும்” என்றார்.