Published:Updated:

காங்கிரஸ் கனவைத் தகர்த்த சுயேச்சை எம்.எல்.ஏ! - ஹரியானாவில் மீண்டும் கிங்மேக்கரான கோபால் கந்தா

காங்கிரஸ் - ஜே.ஜே.பி கூட்டணி அமைத்தாலும் பெரும்பான்மை கிடைக்காது. கூட்டிக் கழித்தாலும் கணக்கு இடிக்கிறது.

Gopal Kanda
Gopal Kanda

அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை நிரந்தர நண்பனும் இல்லை என்பதற்கு சான்றாகியுள்ளது ஹரியானா சட்டமன்றத் தேர்தல். ஹரியானாவில் மொத்தம் உள்ள 90 சட்டமன்றத் தொகுதிகளுக்கு கடந்த 21-ம் தேதி தேர்தல் நடந்தது. வாக்கு எண்ணிக்கையில் பா.ஜ.க, காங்கிரஸ் ஆகிய இரண்டு கட்சிகளுக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் ஆட்சி அமைப்பதில் சிக்கல் நிலவி வருகிறது. பா.ஜ.க 40 இடங்களில் வெற்றிபெற்றுள்ளது. காங்கிரஸ் 31 இடங்களிலும், ஜனநாயக ஜனதா கட்சி 10 இடங்களிலும், இந்திய தேசிய லோக் தள் 1, சுயேச்சைகள் 7 இடங்களிலும் வெற்றிபெற்றுள்ளனர்.

துஷ்யந்த சவுதாலா
துஷ்யந்த சவுதாலா

ஜனநாயக ஜனதா கட்சி 10 இடங்களில் வெற்றி பெற்றதால் அந்தக் கட்சியின் ஆதரவு கிடைத்தால் ஆட்சியைப் பிடிக்கலாம் என்ற நிலை இருந்தது. ஜனநாயக ஜனதா கட்சியின் இளம் தலைவரான துஷ்யந்த சவுதாலா கிங் மேக்கரானார். ``ஹரியானா சட்டசபை ஜே.ஜே.பி-யின் சாவியால்தான் திறக்கப்படும். எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் எனக்கு யார் முதல்வர் பதவி தருகிறார்களோ? அவர்களுக்கு ஆதரவு'' என அறிவித்தார் துஷ்யந்த் சவுதாலா. காங்கிரஸ் தரப்பு துஷ்யந்த சவுதாலாவிடம் பேச்சுவார்த்தை நடத்தியது. காங்கிரஸ் - ஜே.ஜே.பி கூட்டணி அமைத்தாலும் பெரும்பான்மை கிடைக்காது. கூட்டிக் கழித்தாலும் கணக்கு இடிக்கிறது. காங்கிரஸ் ஆட்சி அமைக்க வேண்டுமென்றால் இன்னும் 5 இடங்கள் தேவைப்படுகின்றன.

ஹரியானா மாநிலத் தேர்தல்... நடப்பது என்ன? A டு Z தகவல்கள் #VikatanInfographics

40 இடங்களைக் கைப்பற்றிய பா.ஜ.க-வுக்கு 10 சீட்டுகளை வைத்திருக்கும் துஷ்யந்த் சவுதாலாவிடம் முதல்வர் பதவியைத் தூக்கிக் கொடுப்பதில் விருப்பம் இல்லை. பா.ஜ.க-வின் பார்வை சுயேச்சைகள் பக்கம் திரும்பியது. 7 சுயேச்சைகளை வளைத்தால் ஆட்சியைப் பிடித்துவிடலாம் என்பது பா.ஜ.க கணக்கு. பா.ஜ.க-வின் பிளானை எக்ஸிக்யூட் செய்யும் பணியில் ஹரியானா லோகித் கட்சியின் தலைவர் கோபால் கந்தா இறங்கியுள்ளார்.

கோபால் கந்தா
கோபால் கந்தா

சுயேச்சை எம்.எல்.ஏ-வுடன் கோபால் விமானத்தில் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலானதையடுத்து, இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. கந்தா ஏன் பா.ஜ.க-வுக்கு உதவ வேண்டும் என்கிறீர்களா, எதிரிக்கு எதிரி நண்பன் என்ற ஃபார்முலாதான். ஹரியானாவில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது கோபால் கந்தா அமைச்சர் பதவியை விலக வேண்டும் என பா.ஜ.க-வினர் போர்க்கொடி தூக்கினர். கோபால் கந்தாவும் பா.ஜ.க-வை கடுமையாக விமர்சனம் செய்து வந்தார்.

ஹரியானா, மகாராஷ்டிரத்தில் கரையேறுமா காங்கிரஸ்?

காங்கிரஸ் கட்சியிலிருந்து அவர் நீக்கப்பட்டதையடுத்து ஹரியானா லோகித் கட்சியைத் தொடங்கினார் இவர். ஹரியானா தேர்தலில் இப்போது கிங் மேகராக உருவெடுத்துள்ளார் கந்தா. இந்திய தேசிய லோக் ஜனதள கட்சியின் மூலம் தன் அரசியல் பயணத்தைத் தொடங்கினார். சாதாரண ஷூக்கடையில் இருந்து தனது வியாபாரத்தைத் தொடங்கியவர். ஹரியானாவின் முன்னாள் முதல்வர் ஓம் பிரகாஷ் சவுதாலாவின் மூத்த மகன் அஜித் சவுதாலாவுடன் நல்ல நட்பில் இருந்தார். படிப்படியாக அவரது வளர்ச்சி இருந்தது. சொந்தமாக ஏர்லைன்ஸ் நிறுவனம் ஒன்றையும் தொடங்கினார்.

கோபால் கந்தா
கோபால் கந்தா

2009-ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் கந்தாவுக்கு வாய்ப்புத் தர இந்திய தேசிய லோக் ஜனதள கட்சி மறுப்பு தெரிவித்தது. இதையடுத்து கட்சியிலிருந்து விலகி தேர்தலில் சுயேச்சையாக களமிறங்கினார். இந்திய தேசிய லோக் ஜனதள கட்சியின் வேட்பாளரை 6,521 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். அப்போது ஹரியானாவில் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்க எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. 40 சீட்டுகளைக் கைப்பற்றியும் காங்கிரஸால் ஆட்சியமைக்க முடியவில்லை. அப்போது 6 சுயேச்சைகளை ஒருங்கிணைத்து காங்கிரஸ் கட்சி ஆட்சியமைக்க உதவினார் கந்தா. இதன் காரணமாக அவருக்கு அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டது.

இவரது ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் பணியாற்றிய பணிப்பெண் ஒருவர் 2012-ம் ஆண்டு தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில் கோபால் கந்தா மீது குற்றம்சாட்டப்பட்டது. பணிப்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் அவர் தற்கொலை செய்துகொள்ள தூண்டியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து கோபால் தலைமறைவானார். அதன் பின்னர், நீதிமன்றத்தில் சரணடைந்தார். ஒரு வருடத்தில் அந்தப் பணிப்பெண்ணின் தாயும் தற்கொலை செய்துகொண்டார். இந்த விவகாரம் அப்போது பரபரப்பாகப் பேசப்பட்டது. சிறையிலிருந்து 2014-ம் ஆண்டு ஜாமீனில் வெளியே வந்தார். இந்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. செக் மோசடி உட்பட சில வழக்குகளும் இவர் மீது நிலுவையில் உள்ளன. தன்னை தூக்கிவிட்ட தேசிய லோக் ஜனதள கட்சி, அமைச்சர் பதவி கொடுத்த காங்கிரஸ் கட்சிக்கு எதிராக இப்போது களமிறங்கியுள்ளார் கந்தா.

போராட்டம்
போராட்டம்

ஹரியானாவில் பா.ஜ.க ஆட்சியமைத்தால் கோபால் கந்தாவுக்கு அமைச்சர் பதவி உறுதி எனக் கூறப்படுகிறது. ``எந்தக் கட்சி கோபால் கந்தா அமைச்சர் பதவியில் இருந்து விலக வேண்டும், இளம்பெண் மரணத்தில் அவர் கைது செய்யப்பட வேண்டும் எனப் போராடியதோ அதே கட்சி அவருக்கு அழைப்பு விடுத்துள்ளது. கந்தா பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர். இந்த அவமானம். இப்போது அவர் பா.ஜ.க-வில் இணைந்துவிட்டதால் தூய்மையானவராக மாறிவிட்டாரா” எனக் கர்நாடக காங்கிரஸ் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர். இது ஒருபுறம் இருக்க, கோபால் கந்தா ஆதரவில்தான் நாம் ஆட்சியமைக்க வேண்டுமா எனப் பொங்குகின்றனர் பா.ஜ.க-வினர். முன்னாள் மத்திய அமைச்சர் உமாபாரதி இதுதொடர்பாகக் கடுமையாகச் சாடியுள்ளார். ``கொலை வழக்கில் தொடர்புடைய கந்தாவின் ஆதரவில்தான் ஆட்சியமைக்க வேண்டுமா? இரண்டு பெண்களின் மரணத்துக்குக் காரணமானவர். நமது கட்சியின் நேர்மையான போக்குக்கு இவரது ஆதரவு தேவையில்லை. அவர் மீதான வழக்கு நீதிமன்றத்தில் இருக்கிறது” எனக் காட்டமாகக் கூறியிருக்கிறார்.