Published:Updated:

சபாநாயகரா... சர்ச்சை நாயகரா? - புதுச்சேரியில் வெடித்த மரபுமீறல் விவகாரம்...

புதுச்சேரி
பிரீமியம் ஸ்டோரி
புதுச்சேரி

சபாநாயகராகத் தேர்வுசெய்யப்பட்ட ஒருவருக்கு, அரசு நிர்வாகத்தில் நேரடியாகத் தலையிடுவதற்கு உரிமை இல்லை

சபாநாயகரா... சர்ச்சை நாயகரா? - புதுச்சேரியில் வெடித்த மரபுமீறல் விவகாரம்...

சபாநாயகராகத் தேர்வுசெய்யப்பட்ட ஒருவருக்கு, அரசு நிர்வாகத்தில் நேரடியாகத் தலையிடுவதற்கு உரிமை இல்லை

Published:Updated:
புதுச்சேரி
பிரீமியம் ஸ்டோரி
புதுச்சேரி

‘‘அரசியல் செய்வது சபாநாயகரின் வேலை அல்ல. அப்படி அரசியல் செய்ய வேண்டுமென்றால் பதவியை அவர் ராஜினாமா செய்துவிட்டு அரசியல் செய்யலாம். அதைவிடுத்து பா.ஜ.க-வின் ஏஜென்ட்டாக சபாநாயகர் செயல்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது’’ - புதுச்சேரி சபாநாயகர் செல்வத்தைத்தான் இப்படிக் கடுமையாக விமர்சித்திருக்கிறார் முன்னாள் முதல்வர் நாராயணசாமி! என்னதான் பிரச்னை அங்கு?

சபாநாயகரா... சர்ச்சை நாயகரா? - புதுச்சேரியில் வெடித்த மரபுமீறல் விவகாரம்...

பெரும்பான்மை எம்.எல்.ஏ-க்களின் ஆதரவுடன் தேர்ந்தெடுக்கப்படும் சட்டப்பேரவைத் தலைவரான சபாநாயகர்தான் சட்டப்பேரவைக் கூட்டங்களுக்கு தலைமை வகிப்பார். ஒரு எம்.எல்.ஏ., சபாநாயகராகத் தேர்வான பிறகு அரசியல் கட்சி விவகாரங்களில் நேரடியாகவோ, மறைமுகமாகவோ தலையிடக் கூடாது; அவர் அனைத்துக் கட்சி எம்.எல்.ஏ-க்களுக்கும் பொதுவானவர் என்பது மரபு. இந்த மரபை புதுச்சேரி சபாநாயகர் செல்வம் அடித்து, துவைத்து, காலி செய்துவருகிறார் என்று எழுந்திருக்கும் குற்றச்சாட்டுதான் தற்போது புதுச்சேரியின் ஹாட் நியூஸ். என்.ஆர்.காங்கிரஸ் – பா.ஜ.க கூட்டணி புதுச்சேரியில் ஆட்சிக்கு வந்ததும், மணவெளி தொகுதியின் பா.ஜ.க எம்.எல்.ஏ செல்வம் சபாநாயகராகத் தேர்வுசெய்யப்பட்டார். அன்று முதல் இவரது செயல்பாடுகள் அனைத்தும் சர்ச்சைக்குள்ளாகிவருகின்றன.

‘‘புதுச்சேரியில் புதிதாகக் கட்டப்படவிருக்கும் சட்டப்பேரவைக் கட்டடத்துக்கு 320 கோடி ரூபாய் நிதி தர வேண்டும் என்று கோரிக்கை வைத்தேன்... மத்திய அரசு ஒப்புக்கொண்டது. புதிய கட்டடத்துக்கு அடிக்கல் நாட்டுவதற்காக உள்துறை அமைச்சர் அமித் ஷா வருகிறார்’’ என்று முதலமைச்சரைப்போல பேட்டி கொடுத்தவர், உள்துறை அமைச்சர் நமச்சிவாயத்துடன் டெல்லி சென்று நாடாளுமன்றத் தலைவர் ஓம் பிர்லா, மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்டவர்களைச் சந்தித்தார். அதோடு, “பட்ஜெட் கூட்டத்துக்கு அனுமதி பெற முதல்வர் ரங்கசாமி விரைவில் டெல்லி சென்று பிரதமரைச் சந்திப்பார்” என்று செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார். ஆனால், அப்போது டெல்லி செல்லாமலேயே மத்திய அரசின் அனுமதியை ரங்கசாமி பெற்றது தனிக்கதை.

விருப்ப மனு வாங்கும் செல்வம்
விருப்ப மனு வாங்கும் செல்வம்

சபாநாயகராகத் தேர்வுசெய்யப்பட்ட ஒருவருக்கு, அரசு நிர்வாகத்தில் நேரடியாகத் தலையிடுவதற்கு உரிமை இல்லை என்கிற நிலையில், ‘‘சட்டப்பேரவைச் செயலகத்தின் அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் நியமனம், நிதி நிர்வாகத்தில் சபாநாயகருக்கு அதிகாரம் வேண்டும்’’’ என்று டெல்லியில் இவர் பேசியதும் பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியது. பொதுமக்களுக்கு இலவச அரிசியை அரியாங்குப்பம் தொகுதி எம்.எல்.ஏ தட்சிணாமூர்த்தியுடன், சபாநாயகரும் சேர்ந்து வழங்குவதாக இருந்தது. ஆனால், ‘நீண்ட நேரமாக மக்கள் காத்திருக்கிறார்களே’ என்று மக்களுக்கு அரிசியை விநியோகித்த ரேஷன் கடை ஊழியரை ஒருமையில் திட்டியதுடன், ‘‘சஸ்பெண்ட் செய்துவிடுவேன். ஏற்கெனவே சம்பளம் இல்லாமல் இருக்கீங்க’’ என்று மிரட்டியது எல்லை மீறலின் உச்சம் என்கிறார்கள்.

பா.ஜ.க மகளிர் பிரிவைச் சேர்ந்த இரு நிர்வாகிகளுக்குள் மோதல் ஏற்பட... அதில் ஒரு தரப்பைத் தன் அலுவலகத்துக்கே அழைத்து பஞ்சாயத்துப் பேசியது கட்சிக்குள்ளேயே சலசலப்பை ஏற்படுத்தியது. இவை மட்டுமா... தான் ஒரு சபாநாயகர் என்பதையே மறந்து, கட்சி அலுவலகத்துக்குச் சென்று ஆலோசனைக் கூட்டங்களில் கலந்துகொள்வது, பா.ஜ.க எம்.எல்.ஏ-க்களுடன் சென்று மத்திய அமைச்சர்களைச் சந்திப்பது, உள்ளாட்சித் தேர்தலுக்காக சொந்தக் கட்சி நிர்வாகிகளிடம் விருப்ப மனுக்களைப் பெறுவது, தன்னிச்சையாகச் செய்தியாளர்கள் சந்திப்பு நடத்துவது என இவர் மரபுகளை மீறாத நாளே கிடையாது என்கிறார்கள் புதுச்சேரி அரசியல் பார்வையாளர்கள்!

சபாநாயகரா... சர்ச்சை நாயகரா? - புதுச்சேரியில் வெடித்த மரபுமீறல் விவகாரம்...

“வாரியங்கள் நஷ்டத்தில் இயங்குவதால் வாரியத் தலைவர் பதவிகளை வழங்க முடியாது” என்று முதல்வர் ரங்கசாமி கைவிரித்ததும், நொந்துபோன பா.ஜ.க ஆதரவு சுயேச்சை எம்.எல்.ஏ-க்கள் தங்களது ஆதரவை வாபஸ் பெற முடிவெடுத்தனர். அப்போது அவர்களை அழைத்து பஞ்சாயத்து செய்ததுடன், “வாரியத் தலைவர்கள் பதவிகளை வழங்க வேண்டும் என்று முதல்வரிடம் நான் தெரிவித்திருக்கிறேன்” என்று பா.ஜ.க கட்சித் தலைவராகவே மாறி செய்தியாளர்களுக்குப் பேட்டி கொடுத்தார் சபாநாயகர். மேலும், அந்த எம்.எல்.ஏ-க்களைச் சமாதானப்படுத்துவதற்காக புதுச்சேரி வந்திருந்த மத்திய இணை அமைச்சர் பிரகலாத் சிங் பட்டேலிடம் அழைத்துச் சென்றார்.

சபாநாயகரின் மரபுமீறல்கள் பற்றி சட்டப்பேரவை நிகழ்வுகளில் நீண்டகால அனுபவம்கொண்டவரும், புதுச்சேரி அ.தி.மு.க-வின் கிழக்கு மாநிலச் செயலாளருமான அன்பழகனிடம் கேட்டோம். ‘‘எம்.எல்.ஏ-க்களுக்குப் பிரச்னைகள் ஏற்படும்போது அதைத் தீர்த்துவைப்பதுதான் சபாநாயகரின் கடமை. ஆனால், வெளிப்படையாகக் கட்சி நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதும், எம்.எல்.ஏ-க்களுடன் சென்று அமைச்சர்களைச் சந்திப்பதும் சபாநாயகர் பதவிக்கான மாண்புக்கு அழகல்ல. சட்டப்பேரவைக்கு செல்வம் புதியவர் என்பதால் இப்படிச் செய்கிறார் என்று நினைக்கிறேன். அனுபவம் வாய்ந்த பா.ஜ.க மூத்த தலைவர்கள்தான் சட்டப்பேரவை விதிகள் குறித்து அவருக்குத் தெளிவுபடுத்த வேண்டும்” என்றார்.

அன்பழகன்
அன்பழகன்

இது பற்றியெல்லாம் சபாநாயகர் செல்வத்திடமே கேட்டோம். “சபாநாயகரின் அதிகார வரையறை எனக்கும் தெரியும். அனைத்தையும் படித்துவிட்டுத்தான் இந்தப் பதவியை ஏற்றிருக்கிறேன். எந்த வரம்பையும் நான் மீறியதில்லை” என்றவரிடம், “சபாநாயகர் என்பவர், தான் சார்ந்த கட்சிக் கூட்டங்களுக்குச் செல்லக் கூடாது. ஆனால், நீங்கள் பா.ஜ.க எம்.எல்.ஏ-க்கள் கூட்டத்தில் கலந்துகொண்டீர்கள். மேலும், உங்கள் கட்சியின் மேலிடப் பொறுப்பாளர் நிர்மல் குமார் சுரானாவை வரவேற்றிருக்கிறீர்கள்... இவையெல்லாம் மரபுமீறல் இல்லையா?” என்று கேட்டோம். அதற்கு, “நான் ஒரு எம்.எல்.ஏ என்ற வகையில் எம்.எல்.ஏ-க்கள் கூட்டத்தில் கலந்துகொண்டேன். எனது தொகுதிப் பிரச்னைக்காக மத்திய அமைச்சரைச் சந்தித்தேன். நிர்மல் குமார் சுரானாவை நான் வரவேற்கவில்லை. நான் அங்கு சும்மா நின்றுகொண்டிருந்தேன்...” என்றார் மழுப்பலாக!

‘நடுநிலையுடன் செயல்படுவேன்’ என்று உறுதிமொழி எடுத்துக்கொண்டு சபாநாயகர் பதவிக்கு வருபவர்கள், அந்தப் பதவியின் மாண்புகளைக் காப்பாற்ற வேண்டும்.