Published:Updated:

`ராஜேந்திர பாலாஜி குறித்த செய்திக்காக மட்டுமா?' -விருதுநகர் நிருபர் தாக்கப்பட்டதில் தொடரும் சர்ச்சை

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி - ராஜவர்மன்
அமைச்சர் ராஜேந்திர பாலாஜி - ராஜவர்மன்

``தலைவா.. எங்க இருக்கீங்க?" என சாதாரணமாகப் பேசிவிட்டு எம்.எல்.ஏ ராஜவர்மன் உங்ககிட்ட என்னப்பத்தின ஆதாரம் ஏதோ கொடுத்திருக்கானாம்ல. ஒரு ஆள்ட்ட சொல்லிருக்கான். அப்படி ஏதும் இருக்கா?" எனக் கேட்டார் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி.

விருதுநகர் குமுதம் ரிப்போர்ட்டர் இதழின் நிருபர் கார்த்தி தாக்கப்பட்டதற்கு, மாவட்ட அ.தி.மு.கவில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கும் சாத்தூர் தொகுதி எம்.எல்.ஏ ராஜவர்மனுக்கும் இடையேயான மோதல் குறித்து வெளியிடப்பட்ட கட்டுரைதான் காரணம் எனச் சொல்லப்பட்டு வந்த நிலையில், இப்போது உண்மைக் காரணம் அதுவல்ல, ராஜவர்மனின் கையில் உள்ள அமைச்சர் குறித்த ஆவணங்களால்தான் தாக்கப்பட்டுள்ளார் என்ற தகவல் கிடைத்துள்ளது.

நிருபர் கார்த்தி
நிருபர் கார்த்தி

``ராஜேந்திர பாலாஜியை வீழ்த்துவாரா ராஜவர்மன்? விருதுநகர் மாவட்ட அ.தி.மு.கவில் உச்சக்கட்ட மோதல்!" என்ற தலைப்பில் நேற்று (3.3.2020) வெளியான குமுதம் ரிப்போர்ட்டர் வார இதழில் மூன்று பக்கக் கட்டுரை வெளியாகியிருந்தது. அதில், கட்சியின் அமைச்சர் ராஜேந்திரபாலாஜியின் செயல்பாடுகள் குறித்த விமர்சனமும் அமைச்சரால் எம்.எல்.ஏ ஆக்கப்பட்டு கோட்டைக்கு அழைத்துச் செல்லப்பட்ட சாத்தூர் எம்.எல்.ஏ ராஜவர்மனின் ஆரம்ப கால வாழ்வு முதல் மாவட்டச் செயலாளர், அமைச்சர் பதவிக்கான மூவ் குறித்தும், இருவருக்குமான மோதல் குறித்தும் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த இதழ் நேற்று காலை கடைகளுக்கு வந்ததும், ராஜவர்மனுக்கும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கும் போனில் வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில், "உங்க ரகசியம் அடங்கிய வீடியோ உள்ளிட்ட சில ஆதாரங்கள் எங்கிட்ட இருக்கு" எனச் சொன்னாராம். "ராஜவர்மன் சொன்ன ஆதாரம் அந்த ரிப்போர்ட்டர் கார்த்திட்டதான் இருக்கும். ரெண்டு பேரும் ஒரே ஆளுங்கண்ணே" என அமைச்சரின் ஆதரவாளர்கள் கூறியதால்தான் நிருபர் கார்த்தியை இரும்புக் கம்பியால் தலை மற்றும் வாயில் தாக்கியுள்ளதாக இப்போது தகவல் பரவி வருகிறது. தாக்கப்படுவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பாக நிருபர் கார்த்திக்கு அமைச்சர் போனில் பேசியுள்ளார்.

நிருபர் கார்த்தி
நிருபர் கார்த்தி

இதுகுறித்து நிருபர் கார்த்தியிடம் பேசினோம், "நேத்து புக் வந்ததும் காலையில 8 மணியில இருந்து 10 மணி வரை அமைச்சரும், ராஜவர்மனும் மாறி மாறி என்னிடம் போன்ல பேசுனாங்க. "ராஜவர்மனும் நானும் ஒண்ணா" எனச் சொல்லி அமைச்சர் கோபப்பட்டார். இந்த நிலையில சாயங்காலம் 4 மணிக்கு எனக்கு வந்த அழைப்பில் பேசியவர், ‘‘விஸ்வநத்தம் ஆரோக்கியராஜ் பேசுறேன். அமைச்சர் கே.டி.ஆர் பற்றி ஒரு செய்தி பேசணும். அதுக்கான எல்லா ஆதாரமும் தர்றேன். ஆனா சிவகாசியை விட்டு வெளியே சந்திக்கணும்" என்றார்.

``என்ன மேட்டர்னு கேட்டேன். நேர்ல சொல்றேன்"னு சொன்னார். சிவகாசி பஸ் ஸ்டாண்டு வந்துட்டு போன் பண்ணுங்கன்னு சொன்னேன். வேற இடம் யோசிச்சுட்டு சொல்றேன்னு சொல்லி போனை கட் பண்ணிட்டார். ஆனால், அ.தி.மு.கவைச் சேர்ந்த விஸ்வநத்தம் ஆரோக்கியராஜை எனக்கு நன்றாகத் தெரியும். அவர் பெயர் சொல்லிப் பேசிய நபரின் குரல் அது அல்ல. அப்போதே எனக்கு சந்தேகம் வந்தது. ஆனால், நான் அதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.

நிருபர் கார்த்தி
நிருபர் கார்த்தி

ஆபீஸுக்கு கூரியர் தபால் அனுப்பி வைக்க சிவகாசிக்கு பைக்கில் போனேன். இரவு ஏழு மணி இருக்கும். அமைச்சர் ராஜேந்திரபாலாஜி எனக்கு போன் செய்து, ``உங்ககிட்ட ஒரு முக்கியமான செய்தி சொல்ல வேண்டியிருக்கு. இதுல வேண்டாம். லேண்ட் லைன் போன்ல என்னை உடனே கூப்பிடுங்க"ன்னு சொன்னார். நானும் சிவகாசி நகராட்சி அலுவலகம் பக்கத்துல உள்ள எஸ்.டி.டி பூத்திலிருந்து அமைச்சருக்கு போன் செய்தேன்.

``தலைவா.. எங்க இருக்கீங்க?" என சாதாரணமாகப் பேசிவிட்டு எம்.எல்.ஏ ராஜவர்மன் உங்ககிட்ட என்னப்பத்தின ஆதாரம் எதோ கொடுத்திருக்கானாம்ல. ஒரு ஆள்ட்ட சொல்லிருக்கான். அப்படி ஏதும் இருக்கா?" எனக் கேட்டார் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி. ``அப்படி ஏதும் இல்லையே அண்ணே" என்று சொன்னேன். அவர் நம்பவில்லை. கோபப்பட்டு போனை உடனே கட் பண்ணி விட்டார்.

இரவு 8.30 மணி இருக்கும். பெல் ஹோட்டலில் டீ சாப்பிட்டு விட்டு சிறுநீர் கழிப்பதற்காக வெளியே நடந்து போய்க் கொண்டிருந்தேன். அப்போது என்னை நெருங்கி வந்த ஒருவர் "ஏன்டா நியூஸாடா போடுற" என்று சொல்லிவிட்டு, இரும்புக் கம்பியால் என்னுடைய பின்னந்தலையிலும் வாயிலும் ஐந்து முறை ஓங்கி அடித்தார். நான்கு பேர் என்னைப் பிடித்துக்கொள்ள ஒருவர் அடித்தார். என்னுடைய சத்தத்தைக் கேட்டு பப்ளிக் கூட்டம் கூடியதும் ஐந்து பேரும் ஓடிவிட்டனர்!’’ என்றார்.

போராட்டம்
போராட்டம்

சிவகாசி நகர காவல் நிலைய ஆய்வாளர் இம்மானுவேல் ராஜ்குமாரிடம் பேசினோம், "நிருபர் கார்த்தியின் புகாரின் அடிப்படையில் மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக இரண்டு பேரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறோம்" என்றார். இச்சம்பவத்தைக் கண்டித்து பல மாவட்டங்களில் செய்தியாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். நிருபரைத் தாக்கியது அமைச்சர் தரப்பா, எம்.எல்.ஏ தரப்பா என்பது குறித்தும் பல சந்தேகங்கள் எழுந்திருக்கின்றன.

அடுத்த கட்டுரைக்கு