Published:Updated:

``பிரிவினை பேசும் சீமான், மணியரசன் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்காதது ஏன்?''- சி.பி.ராதாகிருஷ்ணன்

ரஜினிகாந்த் - சீமான்
ரஜினிகாந்த் - சீமான்

தீப்பெட்டியை உரசினால்தான் தீப்பிடிக்கும்; ஆனால் தமிழக அரசியலில், ரஜினிகாந்தின் பெயரை உச்சரித்தாலே திகுதிகுவென தீப்பிடிக்கிறது.

செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் முதல் இயக்குநராக ஆர்.சந்திரசேகரன் நியமிக்கப்பட்டிருக்கும் செய்தியை ட்விட்டரில் பதிவு செய்த மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால், அதனை நடிகர் ரஜினிகாந்துக்கும் டேக் செய்திருப்பது தமிழக அரசியலில் பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

செம்மொழி தமிழாய்வு நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டு 10 வருடங்களைக் கடந்துவிட்ட பின்னரும்கூட, நிறுவனத்தின் இயக்குநர் பொறுப்பில் யாரையும் பணியமர்த்தாமல் காலம் தாழ்த்தி வந்தது மத்திய அரசு. இதையடுத்து தமிழக அரசியல் கட்சியினர் தொடர்ந்து, இதுகுறித்த கோரிக்கைகளை மத்திய அரசிடம் முன்வைத்து வந்தனர். இந்த நிலையில், கடந்த ஜூன் 1-ம் தேதி, செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தின் இயக்குநராக தமிழார்வலரும் பேராசிரியருமான ஆர்.சந்திரசேகரனை நியமித்தது, மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம்.

மத்திய அமைச்சரின் ட்விட்டர் பதிவு
மத்திய அமைச்சரின் ட்விட்டர் பதிவு

இந்தச் செய்தியைத் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட அமைச்சர் ரமேஷ் பொக்ரியால், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் நடிகர் ரஜினிகாந்த் ஆகியோருக்கும் இந்தப் பதிவை டேக் செய்திருந்தார். இதையடுத்து, நடிகர் ரஜினிகாந்தும், செம்மொழி தமிழாய்வு நிறுவன இயக்குநராக ஆர்.சந்திரசேகரனை நியமித்திருப்பதற்கு தனது பாராட்டுகளைத் தெரிவித்து மத்திய அமைச்சருக்குக் கடிதம் எழுதினார்.

இந்த விவகாரம்தான் தற்போது தமிழக அரசியல் தளத்தில் பல்வேறு விவாத அலைகளை எழுப்பிவருகிறது. `மக்கள் பணிக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல் தலைவர்களோடு, நடிகர் ரஜினிகாந்த் பெயரையும் ட்விட்டர் பதிவில் சேர்த்தது ஏன்...' என்ற கேள்விதான் ஒட்டுமொத்த சர்ச்சைகளின் மையக்கருத்து.

இதுகுறித்து `நாம் தமிழர் கட்சி'யின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், `செம்மொழி தமிழாய்வு நிறுவன இயக்குநர் நியமனத்துக்கும், நடிகர் ரஜினிகாந்துக்கும் என்ன தொடர்பு...?' என்று ஆவேசக் கேள்வியை எழுப்பியுள்ளார். மேலும் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், `மத்திய அரசினுடைய அலுவல் பணியிலும் நிர்வாக முடிவுகளிலும் ரஜினிகாந்துக்கு என்ன வேலை? ரஜினி என்ன மத்திய அமைச்சரா... அல்லது மாநில அமைச்சரா? மக்கள் பிரதிநிதியா? ஐ.ஏ.எஸ். அதிகாரியா?' என்று அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்திருந்ததோடு, `ரஜினியைத் திருப்திப்படுத்துவதற்காகவே சந்திரசேகரனை செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்தின் இயக்குநராக நியமனம் செய்தீர்களா?' என்றும் கொதிப்புடன் கேள்வி கேட்டுள்ளார்.

சீமான்
சீமான்

இந்த விவகாரம் குறித்துப் பேசுகிற அரசியல் விமர்சகர்கள், ``தமிழக அரசியலில், பா.ஜ.க-வை கால் ஊன்றவைப்பதற்கான முயற்சிகளில் மத்திய பா.ஜ.க அரசு தொடர்ந்து முயன்று வருகிறது. பலம் வாய்ந்த தி.மு.க-வுக்கு எதிராக வலிமை கொண்ட தலைவர்கள் யாரும் தமிழக பா.ஜ.க-வில் இல்லை. எனவே, ரஜினிகாந்த் தயவில் பா.ஜ.க-வின் கணக்கை தமிழகத்தில் தொடங்கிவிட வேண்டும் என்ற முடிவில் இருக்கிறது பா.ஜ.க தலைமை. அதனால்தான் தேவையே இல்லாமல், வம்படியாக இந்த விவகாரத்தில் ரஜினிகாந்த் பெயரைச் சேர்த்து அரசியல் செய்திருக்கிறார்கள். அதாவது, `செம்மொழி தமிழாய்வு மையத்துக்கு முதன் முதலாக இயக்குநரை நியமித்த கட்சி பா.ஜ.க' என்ற பெருமை அக்கட்சிக்குக் கிடைக்கிறது. அடுத்ததாக, தமிழக அரசியல் சூழலில், `ரஜினிகாந்த் தமிழர் அல்ல... அவர் மராட்டியர்; கன்னடர்' என இன ரீதியாகப் பிரித்துப் பார்க்கப்படுவதை மாற்றுவதற்கான உத்தியாகவும் இந்த விவகாரத்தில் ரஜினிகாந்த் பெயரைச் சேர்த்திருக்கிறார்கள். இதன்மூலம் `ரஜினிகாந்த் தமிழரல்லாதவர்' என்ற பிம்பத்தை உடைத்து, `தமிழ் ஆர்வலர்' என்ற அடையாளத்தைக் கொடுக்க முயன்றிருக்கிறார்கள்.

தமிழ்த் தேசியம் பேசுகிற கட்சிகளும் அமைப்புகளும்தான் இந்த விவகாரத்தைக் கடுமையாக எதிர்த்துவருகின்றன. மற்றபடி தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இந்த விஷயத்தைப் பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை. தமிழ்நாட்டில் உள்ள, தமிழரல்லாதவர்களின் வாக்கு சதவிகிதம் தேர்தலில், வெற்றி தோல்வியை நிர்ணயிக்கிற அளவுக்கு வலுவாக இருந்துவருகிறது என்பதுதான் இதற்கான காரணம்'' என்கின்றனர்.

இதற்கிடையில், `தமிழ்த் தேசியப் பேரியக்க'த்தின் தலைவர் பெ.மணியரசன் நம்மிடம் இதுகுறித்துப் பேசியபோது, ``தமிழ் மொழி வளர்ச்சி மற்றும் இலக்கியம் குறித்து இதுவரையிலும் ரஜினிகாந்த் எந்தவொரு கருத்தும் தெரிவித்தது இல்லை. அப்படியிருக்கும்போது, திடீரென இன்றைக்கு `செம்மொழி தமிழாய்வு நிறுவனம் இயக்குநர்' நியமனத்துக்கு ரஜினிகாந்த், வாழ்த்து தெரிவித்திருப்பது, `அப்துல்காதருக்கும் அமாவாசைக்கும் என்ன சம்பந்தம்...' என்ற கேள்வியைத்தான் எழுப்புகிறது.

பெ.மணியரசன்
பெ.மணியரசன்

`தமிழகத்தில் எப்படியாவது காலூன்றிவிட வேண்டும்' என்ற ஆசையில்தான் பா.ஜ.க-வினர் இதுபோன்ற காரியங்களைச் செய்துவருகிறார்கள். தன்னாட்சி அதிகாரம் கொண்ட `காவிரி ஆணைய'த்தை மத்திய நீர்வளத்துறையின் கீழ் கொண்டுவந்துவிட்டார்கள். கட்டுப்படியான விலையைக் கொடுக்காமல், உழவர்களின் வயிற்றில் அடித்துவரும் அரசியல்வாதிகளால் நாட்டின் ஒட்டுமொத்த வேளாண் துறையுமே அழிந்துகொண்டிருக்கிறது. இந்தத் துன்ப நிலையை ஈடுகட்டுவதற்கான ஒரே வாய்ப்பாக `இலவச மின்சாரம்'தான் தமிழக உழவர்களுக்குக் கைகொடுத்து வருகிறது. அதையும் சட்டத் திருத்தம் என்ற பெயரில் பறிக்கத் திட்டம் கொண்டுவந்துவிட்டது மத்திய பா.ஜ.க அரசு.

கொரோனா உயிர்க்கொல்லியைத் தடுக்கும் மருத்துவக் கருவிகளை வாங்குவதில்கூட மாநில உரிமையைப் பறித்துவிட்டனர். இப்படித் தொடர்ச்சியாக மாநிலங்களின் உரிமைகளைப் பறித்துவருபவர்கள், ஜம்மு காஷ்மீர் அவசர சட்டத்துக்குப் பிறகு குறிப்பாக தமிழ்நாட்டின் உரிமைகளைப் பறிப்பதில் அதீத ஆர்வம் காட்டிவருகிறார்கள். எனவேதான் நமக்கு நல்லது செய்ய பாடுபடுவதுபோல், பாசாங்கு செய்துவருகிறார்கள். அதனால்தான் செம்மொழி விஷயத்தில், பிரபலமான ரஜினிகாந்தை முன்னிறுத்தி திட்டமிட்ட அரசியலைச் செய்துவருகிறார்கள்.

தமிழ் மொழியின் மீது உண்மையான அக்கறை இருப்பதுபோல் செம்மொழி நிறுவனத்துக்கு இயக்குநரை நியமித்திருக்கிறது மத்திய அரசு. அத்தோடு விட்டிருந்தால்கூட, `பரவாயில்லை ஏதோ செய்திருக்கிறார்கள்' என்று நாம் நினைத்திருந்திருப்போம். ஆனால், எப்போது ரஜினிகாந்த் இந்த விஷயத்தைப் பாராட்டினாரோ அப்போதே பா.ஜ.க-வின் பாசாங்கு அம்பலப்பட்டுவிட்டது. அவர்களது உள்நோக்கம் என்னவென்று புரிந்துவிட்டது. எனவே, இதன் பின்னணியில் இருக்கும் அரசியல், உண்மையிலேயே நமக்கு அச்சத்தைத்தான் தருகிறது. தமிழர்கள்தான் இனி எச்சரிக்கையாக இருக்கவேண்டும்'' என்கிறார் அவர்.

இந்த விவகாரத்தில், ரஜினிகாந்த் பற்றிய விமர்சனங்களுக்கு விளக்கம் கேட்டு அரசியல் விமர்சகரும் ரஜினிகாந்தின் நெருங்கிய நண்பருமான ரவீந்திரன் துரைசாமியிடம் பேசினோம்...

``மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால், ரஜினிகாந்த் பெயரை தன் ட்விட்டரில் டேக் செய்ததென்பது வழக்கமான நடைமுறை அல்ல என்றாலும்கூட, சட்டப்படி அதில் தவறு ஒன்றும் இல்லை என்பதுதான் என் கருத்து.

ரவீந்திரன் துரைசாமி
ரவீந்திரன் துரைசாமி

தமிழ்நாட்டில், கருணாநிதி மற்றும் ஜெயலலிதாவுக்கு இணையான செல்வாக்குகொண்ட ஒரு தலைவராக ரஜினிகாந்தைப் பார்க்கிறார் பிரதமர் மோடி. அதனால்தான் அவருக்கு அதிக முக்கியத்துவமும் கொடுத்துவருகிறார். இதன் தொடர்ச்சியாகவே மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலும் அந்த ட்விட்டர் பதிவில் ரஜினிகாந்தையும் டேக் செய்திருக்கிறார்.

காமராஜருக்கு நேருவிடம் இருந்த செல்வாக்குதான் முதல் அரசியல் சட்டத் திருத்தத்தை ஏற்படுத்திக் கொடுத்தது, நெய்வேலி நிலக்கரிச் சுரங்கம் மற்றும் திருச்சி பெல் நிறுவனம் ஆகியவற்றையும் கொண்டுவந்தது என்பது வரலாறு. வரவிருக்கிற சட்டமன்றத் தேர்தலில், பா.ஜ.க-வோடு ரஜினிகாந்த் கூட்டணி வைக்கிறாரோ இல்லையோ... ஆனால், ரஜினிகாந்த் முதல் அமைச்சரானால், பிரதமர் மோடியிடம் தனக்கு இருக்கும் செல்வாக்கைப் பயன்படுத்திக்கொண்டு, தமிழ்நாட்டின் நீண்டநாள் கோரிக்கைகளை நிறைவேற்றித்தர முடியும். குறிப்பாக சமநீதிக்கான மேல்சபையை மீண்டும் கொண்டுவருவார்'' என்கிறார் உறுதியாக.

``தமிழ்நாட்டில் அரசியல் செய்யும் உள்நோக்கத்துடன்தான், செம்மொழி இயக்குநர் நியமன விவகாரத்தில் ரஜினிகாந்த் பெயரைப் பயன்படுத்துகிறதா மத்திய பா.ஜ.க அரசு..." என்ற கேள்விக்கு விடைகேட்டு தமிழக பா.ஜ.க மூத்த தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணனிடம் பேசினோம்...

``செம்மொழி தமிழாய்வு நிறுவனத்துக்கு இன்னாரை இயக்குநராக நியமனம் செய்திருக்கிறோம் என்ற செய்தியை, தங்கள் நட்பு வட்டாரத்தில் உள்ளோருக்குத் தெரியப்படுத்தும் விதமாக அமைச்சர் டேக் செய்திருக்கிறார் அவ்வளவுதான்... இதில் எங்கே அரசியல் இருக்கிறது?

தமிழுணர்வாளர்கள் என்ற பெயரில், உலகம் முழுவதும் தமிழை வியாபாரமாக்கிக்கொண்டு வருகிற சீமான் போன்ற ஒரு அரசியல்வாதியைத் தமிழ்நாடு இதுவரை கண்டதில்லை. எதை வைத்துதாவது அரசியல் பிழைப்பு நடத்தவேண்டும் என்ற நோக்கத்தில் செயல்பட்டுவரும் அரசியல்வாதிகளும், தமிழுணர்வாளர்கள் என்ற பெயரில், தமிழை விற்றுக்கொண்டிருப்பவர்களும்தான் இங்கே அதிகம் பேர். பா.ஜ.க அரசையோ, பிரதமர் மோடியையோ விமர்சிக்கத் தகுதியே இல்லாதவர்கள் இவர்கள்.

சி.பி.ராதாகிருஷ்ணன்
சி.பி.ராதாகிருஷ்ணன்

தமிழகம் என்றைக்கும் ஒரே குடையின்கீழான ஆட்சியைக் கொண்ட நாடாக இருந்தது இல்லை என்பதுதான் வரலாறு. கொங்குநாடு 24 நாடுகளாகப் பிரிந்திருந்தன. இதேபோல பாண்டிய, சேர, சோழ, தொண்டை நாடு என எல்லாமே பல்வேறு பிரிவுகளாகப் பிரிந்துகிடந்தவைதான். இதையெல்லாம் தூய தமிழ்த்தேசிய உணர்வாளர்கள் போல பேசிக்கொண்டிருக்கும் பெ.மணியரசன், சீமான் போன்றவர்கள் உணர்ந்துகொள்ள வேண்டும். பிரிவினைவாதம் தமிழ்நாட்டிலிருந்து வேரடி மண்ணோடு பிடுங்கி எறியப்படவேண்டும். தூய தமிழ்த் தேசியம் என்ற பெயரில், இதுபோல் பிரிவினைவாதம் பேசிக்கொண்டிருக்கும் இவர்கள் மீது இதுவரை நடவடிக்கை ஏதும் எடுக்காமல் இருந்துவருவதுதான் மத்திய அரசு செய்துவருகிற மாபெரும் தவறு'' என்றார் காட்டமாக.

அடுத்த கட்டுரைக்கு