Published:Updated:

`பொருளாதார நெருக்கடி இல்லை…' எடப்பாடி சொல்வது உண்மையா?

இந்தியப் பொருளாதாரம் மந்தநிலையில் இருப்பது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் கேட்டபோது, ''தமிழகத்தில் நெருக்கடி எதுவும் இல்லை'' என்று அவர் சொன்ன பதில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Edappadi Palaniswami
Edappadi Palaniswami

இந்தியாவில் நிலவிவரும் பொருளாதார மந்தநிலை குறித்து நாடு தழுவிய அளவில் விவாதங்கள் நடைபெற்றுவருகின்றன. உற்பத்தித் துறைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருப்பதாகப் புள்ளிவிவரங்கள் வந்துகொண்டிருக்கின்றன. மக்களிடம் வாங்கும் சக்தி குறைந்துவிட்டதால் விற்பனை சரிந்துள்ளது என்ற காரணத்தால், கார் உற்பத்தி நிறுவனங்கள் உட்பட பல்வேறு தொழிற்சாலைகளும் விடுமுறை அறிவிப்புகளை வெளியிட்டுவருகின்றன. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவ்வப்போது செய்தியாளர்களைச் சந்தித்து பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுவருகிறார்.

Nirmala Sitharaman
Nirmala Sitharaman

இந்நிலையில், கோவைக்கு வந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் பொருளாதார மந்தநிலை குறித்து செய்தியாளர்கள் கேள்வி கேட்டபோது, ''தமிழகத்தில் பொருளாதார நெருக்கடி இல்லை'' என்று அவர் பதிலளித்தார். முதல்வரின் இந்தக் கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து சி.ஐ.டி.யூ-வின் மாநிலச் செயலாளரான எஸ்.கண்ணனிடம் பேசியபோது, இந்தியப் பொருளாதாரம் மந்தநிலையில் இருக்கிறது என்கிற யதார்த்தத்தை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடர்ந்து மறுத்துவருகிறார். அதுபோலத்தான் தமிழக முதல்வரின் அணுகுமுறையும் இருக்கிறது.

Automobile Industry
Automobile Industry

தமிழ்நாட்டில் ஆட்டோமொபைல் நிறுவனங்கள் உட்பட பல்வேறு தொழில்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. அசோக் லேலண்டு நிறுவனத்தில் 16 நாள்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. யமஹா நிறுவனத்தில் 800 ஒப்பந்தத் தொழிலாளர்கள் வேலையிலிருந்து அனுப்பப்பட்டுள்ளனர். அப்போலோ டயர் நிறுவனத்தில் 1,000 ஒப்பந்தத் தொழிலாளர்கள் டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளார்கள். இதுபோல பல நிறுவனங்களில் ஒப்பந்தத் தொழிலாளர்கள் டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளனர்.

நிரந்தரத் தொழிலாளர்கள் இன்னும் பாதிக்கப்படவில்லை. அதனால்தான், பல்வேறு நிறுவனங்களும் விடுமுறை அறிவிப்பை வெளியிடுகின்றன. ஹூண்டாய் கார் நிறுவனத்தில் உற்பத்தி குறைந்துள்ளது. மாருதி, ஃபோர்டு, நிஸான் ஆகிய நிறுவனங்களில் பெருமளவுக்கு உற்பத்தியில் சரிவு ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் ஆண்டு ஒன்றுக்கு சுமார் 14 லட்சம் கார்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. தற்போது, பெருமளவுக்கு உற்பத்தி சரிந்துள்ளது. கார் நிறுவனங்களில் உற்பத்தி பாதிக்கப்பட்டிருப்பதால், அந்த நிறுவனங்களைச் சார்ந்திருந்த உதிரிபாகங்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. காட்டாங்கொளத்தூரில் இயங்கிவந்த உதிரிப்பாகத் தயாரிப்பு நிறுவனம் ஒன்று சமீபத்தில் மூடப்பட்டது. ஏற்கெனவே, நோக்கியா பாதிக்கப்பட்டுள்ளது.

Cars
Cars

ஒரு கம்பெனியை மூடினால், அந்த கம்பெனியில் செயல்பட்டு வந்த கேன்டீன் மூடப்படுகிறது. அதனால், பிஸ்கட், டீ போன்ற உணவுப் பொருள்களின் விற்பனை பாதிக்கப்படுகிறது. தொழிலாளர்களை ஏற்றிவரும் பேருந்துகள் இயங்கவில்லை. அங்கு துப்புரவுத் தொழிலில் ஈடுபட்டுவந்த தொழிலாளர்கள் வேலையிழக்கிறார்கள். இதுபோன்ற மறைமுக வேலைவாய்ப்புகள் பறிபோகின்றன.

இதனால், பல்லாயிரக்கணக்கில் வேலைவாய்ப்புகள் பறிபோயுள்ளன. குறிப்பாக, காஞ்சிபுரம் மாவட்டத்தில் மட்டும் சுமார் 50,000 பேர் வேலையிழந்துள்ளனர். அந்தத் தொழிலாளர்களின் குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. ’எந்தப் பாதிப்பும் இல்லை’ என்று சொல்வது ஏமாற்று வேலை. ஏற்கெனவே, ’குட்டி ஜப்பான்' என்று சொல்லப்பட்டுவந்த சிவகாசியே, இன்றைக்கு ஒட்டுமொத்தமாக மூடப்பட்டுக்கிடக்கிறது. அந்தத் தொழிலை மீட்பதற்கு என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? பல மாதங்களாகியும் ஏன் அது இன்னும் மீட்கப்படவில்லை?

Car Factory
Car Factory

கோயம்புத்தூரில் மோட்டார் உற்பத்தி பாதிக்கப்பட்டு சுமார் 40,000 பேர் வேலையிழந்திருப்பதாகத் தகவல்கள் வருகின்றன. கிருஷ்ணகிரியில் ஆட்டோமொபைல் தொழிலில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளால் ஏராளமானோர் வேலையிழந்துள்ளனர். சென்னை, காஞ்சிபுரம், கோயம்புத்தூர் உட்பட ஏழு மாவட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. மற்ற மாவட்டங்களிலும் அடுத்தடுத்து பாதிப்புகள் ஏற்படும். பாதிப்புகள் இருப்பது உண்மைதான் என்பதை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் ஆட்சியாளர்களுக்கு இல்லையென்றால், அவர்கள் எப்படி இந்த நெருக்கடியிலிருந்து நாட்டையும் மக்களையும் காப்பாற்றுவார்கள்?” என்ற கேள்வியுடன் முடித்தார் தொழிற்சங்கத் தலைவர் எஸ்.கண்ணன்.

ஆனால், முதல்வரின் கருத்து தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டிருக்கிறது என்ற வாதத்தை முன்வைக்கிறார், அ.தி.மு.க-வின் செய்தித் தொடர்பாளரான வழக்கறிஞர் சிவசங்கரி.

“உலக அளவிலும் இந்திய அளவிலும் ஒரு பொருளாதார மந்தநிலை இருக்கிறது. ஆனாலும்கூட, தமிழ்நாட்டில் நெருக்கடி இல்லை என்ற அர்த்தத்தில்தான் முதல்வர் அந்தக் கருத்தைச் சொன்னார். கார் உற்பத்தி பாதிப்பு இருக்கிறது என்பது உண்மை. எலெக்ட்ரிக் வாகனத்துக்கு மாறுவதால் பிரச்னை இருக்கிறது. இது, இந்தியா முழுவதுக்குமான பிரச்னை.

Tea and biscuit
Tea and biscuit

தமிழ்நாட்டில் விவசாயம், உள்ளூர் சார்ந்த தொழில்கள் நன்றாக நடைபெற்றுவருகின்றன. குடிசைத் தொழில்கள், வியாபாரம், சிறுதொழில் நிறுவனங்கள் என உள்ளூர் அளவில் வேலைவாய்ப்புகளைத் தரக்கூடிய தொழில்கள் இருப்பதால் நமக்கு நெருக்கடி இல்லை.

பெண்கள் சுயஉதவிக் குழுக்கள் சிறப்பாக இயங்கிவருகின்றன. ஊதுபத்தி தயாரிப்பு, உணவுப் பொருள்கள் தயாரிப்பு, மசாலா தயாரிப்பு, கைவினைப் பொருள்கள் உற்பத்தி போன்ற சிறிய தொழில்களில் பெண்கள் ஈடுபடுகிறார்கள். ரூ.5,00,000 கடன் வாங்கினால், ஒன்றரை லட்சம் மானியம் வழங்கப்படுகிறது. மூன்றரை லட்சம் திருப்பிச் செலுத்தினால் போதும். அந்த மாதிரி நிறைய விஷயங்கள் இங்கு அரசால் செய்யப்படுகின்றன. சுய உதவிக் குழுத் தலைவர் கையெழுத்து போட்டால் உடனே கடன் தரப்படுகிறது. அதனால், தற்போதைய பொருளாதாரச் சூழலை நாம் எளிதாகச் சமாளித்துக்கொண்டிருக்கிறோம். இப்போது, முதலீட்டாளர்களை முதல்வரே நேரடியாகப் போய்ச் சந்திக்கிறார். எனவே, முதலீட்டாளர்களுக்கு மிகப்பெரிய நம்பிக்கை ஏற்பட்டுள்ளது" என்றார்.