Published:Updated:

``ஜஸ்ட் பாஸ் வெங்காயம் யார்?'' - தடதடக்கும் தமிழக அரசியல்

வானதி சீனிவாசன்

ஐ.ஏ.எஸ் தேர்வில், 10 % இட ஒதுக்கீட்டினருக்கான கட் ஆஃப் மார்க் மிகக் குறைவாக இருப்பது குறித்து `ஜஸ்ட் பாஸ் வெங்காயம் யார்?’ என்று கேள்வி எழுப்பியுள்ளது தி.மு.க. இது குறித்துப் பேசும்போது, ``பா.ஜ.க-வுக்கும் ஜஸ்ட் பாஸ் விமர்சனத்துக்கும் சம்பந்தம் இல்லை'' என்கிறார் வானதி சீனிவாசன்.

Published:Updated:

``ஜஸ்ட் பாஸ் வெங்காயம் யார்?'' - தடதடக்கும் தமிழக அரசியல்

ஐ.ஏ.எஸ் தேர்வில், 10 % இட ஒதுக்கீட்டினருக்கான கட் ஆஃப் மார்க் மிகக் குறைவாக இருப்பது குறித்து `ஜஸ்ட் பாஸ் வெங்காயம் யார்?’ என்று கேள்வி எழுப்பியுள்ளது தி.மு.க. இது குறித்துப் பேசும்போது, ``பா.ஜ.க-வுக்கும் ஜஸ்ட் பாஸ் விமர்சனத்துக்கும் சம்பந்தம் இல்லை'' என்கிறார் வானதி சீனிவாசன்.

வானதி சீனிவாசன்
`மருத்துவப் படிப்புகளில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு மறுக்கப்படுகிறது' என்ற அதிர்ச்சியிலிருந்தே இன்னும் மீளாத நிலையில், இப்போது ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் உள்ளிட்ட குடிமைப் பணியிடங்களுக்கான தேர்விலும் `பிற்படுத்தப்பட்டவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது' என்ற அதிரவைக்கும் செய்திகள் வெளிவந்துகொண்டிருக்கின்றன.

இது குறித்து தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ``மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (UPSC) நடத்தியுள்ள 2019-ம் ஆண்டுக்கான ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் உள்ளிட்ட இந்தியக் குடிமைப் பணிகளுக்கான தேர்வின் ஒவ்வொரு கட்டத்திலும், இதர பிற்படுத்தப்பட்டோருக்கான `கட்-ஆஃப்' மதிப்பெண்களை அதிகரித்து, சமூகநீதிக்கு பெரும் பாதகத்தை ஏற்படுத்தியிருக்கின்றனர். அதேநேரம், கடந்த வருடம் மத்திய அரசு கொண்டு வந்த உயர்சாதியினருக்கான 10% இட ஒதுக்கீட்டில் இடம்பெற்றவர்களுக்கோ மிகக் குறைந்த அளவிலான `கட் ஆஃப்' மதிப்பெண்களே நிர்ணயிக்கப்பட்டிருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது" என்று கூறியுள்ளார்.

மு.க.ஸ்டாலின்
மு.க.ஸ்டாலின்

இது குறித்துப் பேசிய தி.மு.க செய்தித் தொடர்பு இணைச் செயலாளரும், பேராசிரியருமான கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், ``இட ஒதுக்கீட்டின் மூலம் `ஜஸ்ட் பாஸ் வெங்காயங்கள் பதவிகளுக்கு வந்துவிடுகிறார்கள்’ என்று உண்மைக்குப் புறம்பான குற்றச்சாட்டை, குறிப்பிட்ட ஒரு பிரிவினர் தொடர்ந்து உள்நோக்கத்துடன் சொல்லிக்கொண்டேயிருக்கிறார்கள். ஆனால், உண்மையில் அவர்கள்தான் குறைந்த மதிப்பெண்களின் அடிப்படையில் இட ஒதுக்கீட்டின் மூலமாக உயர்பதவிகளை வந்தடைகிறார்கள் என்ற உண்மை தற்போதைய குடிமைப்பணி தேர்வின் மூலமாக வெளியுலகுக்குத் தெரியவந்திருக்கிறது. இது எப்படி என்று விளக்கமாகவே சொல்கிறேன்...

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் உள்ளிட்ட குடிமைப் பணிகளுக்காக மூன்று கட்டத் தேர்வுகளை மத்திய அரசு தேர்வாணையம் நடத்திவருகிறது. இவற்றில் முதற்கட்டமாக நடைபெறும் `முதல்நிலைத் தேர்வு' கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்றது. இந்தத் தேர்வில், வெற்றி பெற்ற இதர பிற்படுத்தப்பட்டோருக்கான கட் ஆஃப் மதிப்பெண் என்பது 95.34. அதேநேரம், உயர் சாதியினருக்கான 10% இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கோ வெறும் 90 மதிப்பெண்களே `கட் ஆஃப்’ என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எனவே, பிற்படுத்தப்பட்ட மாணவர்களைவிட 5.34 மதிப்பெண்கள் குறைவாகப் பெற்றிருந்த உயர்சாதி வகுப்பினர் அடுத்தகட்ட தேர்வான `முதன்மைத் தேர்வு' எழுதுவதற்குத் தகுதி பெற்றிருக்கின்றனர்.

அடுத்ததாக, முதன்மைத் தேர்விலும்கூட இதர பிற்படுத்தப்பட்டோருக்கான கட் ஆஃப் மதிப்பெண் 718, பட்டியலினத்தவருக்கு 706, பழங்குடியினத்தவர்களுக்கு 699 என்றிருக்கும் நிலையில், உயர் சாதியினருக்கான 10% இட ஒதுக்கீட்டில் பயன்பெறுபவர்களுக்கோ வெறும் 696 மதிப்பெண்கள் மட்டுமே கட் ஆஃபாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த நடைமுறையால், பழங்குடியினத்தவர்களைவிடவும் குறைவான மதிப்பெண்கள் பெற்ற உயர் சாதி வகுப்பினர்கூட குடிமைப் பணிகளுக்கான நேர்முகத் தேர்வில் கலந்துகொள்ளும் தகுதியைப் பெற்றுவிடுகின்றனர்.

மேலும், நேர்முகத் தேர்விலும்கூட, இதர பிற்படுத்தப்பட்டவர்களுக்கான கட் ஆஃப் மதிப்பெண் 925-ஆக நிர்ணயிக்கப்பட்டிருந்த சூழலில், உயர் சாதியினருக்கோ வெறும் 909 மதிப்பெண்களே நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. எனவே, பிற்படுத்தப்பட்டவர்களைவிடவும் 16 மதிப்பெண்கள் குறைவாகப் பெற்ற உயர் சாதியினர் நாட்டின் மிக உயர்ந்த அரசுப் பதவிகளான ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் பதவிகளுக்குத் தேர்வாகியுள்ளனர் என்ற அதிர்ச்சி தரும் உண்மை அம்பலமாகியுள்ளது.

கான்ஸ்டன்டைன் ரவீந்திரன்
கான்ஸ்டன்டைன் ரவீந்திரன்

இதுமட்டுமல்ல... மொத்தம் அறிவிக்கப்பட்ட 927 பணியிடங்களுக்கு 829 பேர் மட்டுமே தற்போது தேர்வு செய்யப்பட்டு பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 98 பணியிடங்களை `ரிசர்வ் லிஸ்ட்'டில் வைத்திருப்பதாக அறிவித்திருக்கிறார்கள். இப்படி ரிசர்வ் லிஸ்ட்டில் இடம் பெற்றிருப்போரின் பெயர்களையும் வெளியிடாமல், மறைத்து வைத்திருக்கிறார்கள். இப்படி வெளிப்படைத்தன்மை இல்லாமல் இருட்டடிப்பு வேலை செய்வது ஏன்?

`நாட்டின் நிர்வாகக் கட்டமைப்பில் இதர பிற்படுத்தப்பட்டோர், பட்டியலின, பழங்குடியின மக்களின் உரிமையும் இருக்க வேண்டும்’ என்ற சமூகநீதியைக் குழிதோண்டிப் புதைக்கும்விதமாகப் பல்வேறு சூழ்ச்சிகளைக்கொண்டு ஆப்புவைக்கிறது மத்திய பா.ஜ.க அரசு'' என்று கொதித்தார்.

இந்த நிலையில், `ரிசர்வ் லிஸ்ட்' என்ற வகையில் பெயர் வெளியிடப்படாமல், மர்மமாக வைக்கப்பட்டிருக்கும் 98 பணியிடங்கள் குறித்துப் பேசுகிறார் `அகில இந்திய பிற்படுத்தப்பட்ட வகுப்பு பணியாளர் நலச் சங்கங்களின் கூட்டமைப்பு' பொதுச் செயலாளர் கருணாநிதி,

``அரசுத்துறையிலுள்ள 100 பணியிடங்களுக்காக, ஆட்களைத் தேர்வு செய்யும் பணி நடைபெறுகிறது என்று உதாரணத்துக்கு வைத்துக்கொள்வோம். அதில், முதல் 50% பணியிடங்களை பொதுப் போட்டியின் அடிப்படையிலும், மீதமுள்ள 50% பணியிடங்களை இட ஒதுக்கீட்டின் அடிப்படையிலும் தேர்வு செய்வதுதான் நடைமுறை. குடிமைப் பணித் தேர்விலும் முதல் 50% இடங்கள் பொதுப் போட்டியின் அடிப்படையில், அதிக மதிப்பெண் பெற்றவர்களைக்கொண்டு நிரப்பப்படும். அதன் பிறகே இட ஒதுக்கீட்டுப் பிரிவான 50% இடங்கள் நிரப்பப்படும்.

கருணாநிதி
கருணாநிதி

குடிமைப் பணித் தேர்வு எழுதுபவர்களில் பெரும்பான்மையோர், தங்களது விருப்பத் தேர்வாக `ஐ.ஏ.எஸ் பணி'யைத்தான் குறிப்பிட்டு விண்ணப்பிக்கின்றனர். ஆனாலும் தேர்வுகளின் முடிவில், அவர்கள் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில்தான் அவர்கள் ஐ.ஏ.எஸ் ஆகிறார்களா அல்லது ஐ.பி.எஸ்., ஐ.எஃப்.எஸ்., ஐ.ஆர்.எஸ் என அடுத்தடுத்த பதவிகளுக்குத் தேர்வாகிறார்களா என்பது நிர்ணயமாகிறது. இதில்தான் சிக்கலும் வருகிறது.

உதாரணமாக, இட ஒதுக்கீட்டு உரிமையைப் பெறும் தகுதியுள்ள பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் ஐ.ஏ.எஸ் ஆக விரும்பி, தேர்வெழுதியிருக்கலாம். தேர்வுகளின் முடிவில், அவர் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் பொதுப்போட்டியிலும் கலந்துகொள்ளலாம். ஆனால், பொதுப்போட்டியின் முடிவில் அவர் பெற்ற மதிப்பெண்களுக்கு ஐ.ஏ.எஸ் பதவி கிடைக்காமல், அதற்கடுத்த நிலையிலான பதவிகளில் ஒன்றுதான் கிடைத்திருக்கும்.

இந்தச் சூழலில், அதே பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மற்றொரு நபர் மேற்கண்ட நபரைவிடவும் குறைவான மதிப்பெண்களைப் பெற்றிருந்தாலும்கூட இட ஒதுக்கீட்டின் அடிப்படையிலான போட்டியில் ஐ.ஏ.எஸ் ஆக தேர்ந்தெடுக்கப்பட்டுவிடலாம். இப்போது, பொதுப்போட்டியில் போட்டியிட்டு ஐ.ஏ.எஸ் பதவி கிடைக்காமல்போன நபர், பிற்படுத்தப்பட்டவர்களுக்கான இட ஒதுக்கீட்டுக்குள் வந்து ஐ.ஏ.எஸ் பணியைப் பெறுவதற்கான விருப்பத்தைத் தெரிவித்தால், அவருக்கு அதற்கான வாய்ப்பு வழங்கப்படும். இப்படி வாய்ப்பு வழங்கப்படும்போது, ஏற்கெனவே பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டில் ஐ.ஏ.எஸ் ஆக வரவேண்டிய ஒரு நபர் போட்டியிலிருந்து பின்னுக்குத் தள்ளப்படுவார். மதிப்பெண்களின் அடிப்படையில், கடைசி நிலையில் உள்ள ஒருவர் ஒட்டுமொத்தமாக போட்டியிலிருந்தே வெளியேற்றப்படுவார்.

இதேபோல், பொதுப்பட்டியலிலும் ஒரு மாற்றம் நிகழும். அதாவது பொதுப்பட்டியலிலிருந்து இட ஒதுக்கீட்டுக்குள் ஒரு நபர் சென்றுவிட்டதால், பொதுப்பட்டியலில் ஒரு காலியிடம் உருவாகும். இந்த காலி இடத்தை நிரப்புவதற்கு ஏற்கெனவே குறைவான மதிப்பெண்கள் பெற்று காத்திருப்போர் பட்டியலிலுள்ள நபரேகூட தேர்வாகலாம். இப்படி மாற்றம் செய்வதற்கு வசதியாகத்தான் 98 பணியிடங்கள் நிரப்பப்படாமல், `ரிசர்வ் லிஸ்ட்'டில் வைக்கப்படுகின்றன. இந்த நடைமுறையில் எப்படிப் பார்த்தாலும் இட ஒதுக்கீட்டுப் பிரிவினர்தான் பாதிக்கப்படுகின்றனர்.

இட ஒதுக்கீடு எனும் சமூகநீதிக்கு பாதிப்பு ஏற்படுவதைச் சொல்லி, ஏற்கெனவே இது குறித்து வழக்குகள் நீதிமன்றத்தில் பதிவாகின. அதன் பிறகு, இந்த நடைமுறையை சரிப்படுத்துவதற்காகவே `16-ன் கீழ் உட்பிரிவு 4' என்ற சட்ட விதியை உருவாக்கி, அதிகாரபூர்வ நடைமுறையாக மாற்றிவிட்டனர்'' விரிவாக விளக்குகிறார் கருணாநிதி.

இந்த நிலையில், உயர் சாதியினருக்கான 10% இட ஒதுக்கீட்டில் பயன்பெறுபவர்களுக்கான கட் ஆஃப் மார்க் வித்தியாசங்கள் மற்றும் `ரிசர்வ் லிஸ்ட்' பணியிடங்கள் குறித்து எழுப்பப்படும் கேள்விகளுக்கு விளக்கம் கேட்டு தமிழக பா.ஜ.க துணைத் தலைவர் வானதி சீனிவாசனிடம் பேசினோம்...

``ஜஸ்ட் பாஸ் என்ற விமர்சனமே தப்பானது... ரொம்பவும் கேவலமானது. இது போன்ற விமர்சனங்களில் எனக்கு எப்போதுமே உடன்பாடு கிடையாது. இந்த விமர்சனத்துக்கும் பா.ஜ.க-வுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை!

வானதி சீனிவாசன்
வானதி சீனிவாசன்

முதல் தலைமுறையாகக் கல்வி கற்கும் சூழலில் இருப்பவர்களின் மதிப்பெண்கள் என்பது ஆரம்பநிலையில் குறைவானதாகத்தான் இருக்கும். அடுத்தடுத்த தலைமுறையினர் படித்து முன்னேறி வரும்போதுதான் இந்த கட் ஆஃப் மார்க் வித்தியாசம் குறைய ஆரம்பிக்கும்.

அதாவது, `கட் ஆஃப் மார்க்' என்பதே, குறிப்பிட்ட அந்தப் பிரிவுக்குள் உள்ளவர்கள் பெற்றிருக்கும் மதிப்பெண் வரிசை எப்படியிருக்கிறது என்பதைப் பார்த்துத்தான் தீர்மானிக்கப்படுகிறது. உதாரணமாக, கல்லூரி அட்மிஷன் போதும்கூட குறிப்பிட்ட பிரிவில் எவ்வளவு பேர் வந்திருக்கிறார்கள், அவர்களது மதிப்பெண் விகிதம் எந்த அளவில் இருக்கிறது என்பதையெல்லாம் பார்த்துத்தான் ஒரு முடிவு எடுப்பார்கள்.

தமிழ்நாட்டிலேயேகூட பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மற்றும் பொதுப்பிரிவினருக்கான கட் ஆஃப் மதிப்பெண்கள் என்பது ஒரு காலத்தில் மிகப்பெரிய இடைவெளி வித்தியாசத்தில்தான் இருந்துவந்தன. ஆனால், இந்த வித்தியாசம் இன்றைய சூழலில் பெருமளவு குறைந்துவிட்டது. காரணம் ஒவ்வொரு தலைமுறையினராக கல்வியறிவு பெற்று முன்னேறிவருகின்றனர்.

உயர் சாதியினருக்கான 10% இட ஒதுக்கீடு என்பது கடந்த ஆண்டுதான் அறிமுகப்படுத்தப்பட்டு நடைமுறைக்கு வந்திருக்கிறது. அந்தவகையில் பார்க்கும்போது, குறிப்பிட்ட இந்தப் பிரிவிலிருந்து குடிமைப் பணித் தேர்வில் பங்கேற்றோர் மற்றும் அவர்கள் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில்தான் கட் ஆஃப் மார்க் நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. இது மற்ற பிரிவினரைவிட மிகக் குறைவாக இருக்கிறது என்றால், இதுவரை இட ஒதுக்கீட்டுக்குள் வராதவர்கள், முழுமையான கல்வியறிவு பெற்று அதிகாரம் நிறைந்த பணிகளுக்கு வர முடியாமல் இருந்திருக்கின்றனர் என்ற உண்மைநிலை வெளிப்படுகிறது.

Representational Image
Representational Image

எனவே, ஆரம்பகாலத்தில், பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மற்றும் பொதுப்பிரிவினருக்கிடையிலான கட் ஆஃப் மதிப்பெண்களில் எப்படி மிகப்பெரிய இடைவெளி வித்தியாசம் இருந்ததோ, அதேபோன்ற நிலைதான் இன்றைக்கு உயர் சாதியினருக்கான 10% இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கும் இருக்கிறது. எனவே, காலப்போக்கில், இந்த கட் ஆஃப் மார்க் வித்தியாசம் என்பது குறையக்கூடிய சூழல் ஏற்படும்.

அடுத்ததாக, `ரிசர்வ் லிஸ்ட்' என்ற வகையில் 98 இடங்களை நிரப்பாமல் வைத்திருப்பதற்கான காரணம் என்னவென்ற நிர்வாகரீதியிலாக விளக்கம் எங்களுக்கு இன்னும் கிடைக்கப்பெறவில்லை. எனவே, அதற்கான பதிலை இப்போதைய சூழலில் என்னால் சொல்ல இயலவில்லை!'' என்றார் தெளிவாக.