Published:Updated:

`எஸ்.ஆர்.பி-க்கு அழுத்தம் கொடுத்த அரசு துணைச் செயலர் யார்?!'- துரைமுருகன் அறிக்கையின் அதிர்ச்சிப் பின்னணி

அ.தி.மு.க ஆட்சியில் தலைமைச் செயலகம், எப்படி அரசியல்மயமாகியுள்ளது என்பதற்கும் அரசு அதிகாரிகள் ஆளுங்கட்சிப் பணியில் எப்படி தங்களது தரத்தைத் தாழ்த்திக்கொண்டு ஈடுபடுகிறார்கள் என்பதற்கும் இந்த நிகழ்வும் ஓர் உதாரணம்.

எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம் எம்.பி
எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம் எம்.பி

`குடியுரிமைச் சட்டத் திருத்த மசோதாவை ஆதரித்து வாக்களிக்க வேண்டும் என தலைமைச் செயலக துணைச் செயலாளர் ஒருவர், அ.தி.மு.க எம்.பி எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியத்திடம் பேசினார்' என தி.மு.க பொருளாளர் துரைமுருகன் முன்வைத்த குற்றச்சாட்டு, அ.தி.மு.க வட்டாரத்தில் புயலைக் கிளப்பியிருக்கிறது.

துரைமுருகன்
துரைமுருகன்

நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத் தொடரில் தேசிய குடியுரிமைச் சட்டத் திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவுக்கு எதிராக நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக அஸ்ஸாம், நாகலாந்து மற்றும் திரிபுரா மாநிலங்களில் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. இந்நிலையில், நேற்று முன்தினம் டெல்லியிலுள்ள ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாணவர்கள் மீது காவல்துறையினர் நடத்திய தாக்குதல் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடர்பாக ட்விட்டரில் குறிப்பிட்ட மோடி, `குடியுரிமைச் சட்டம் தொடர்பாக நடைபெறும் வன்முறைகள் மிகுந்த கவலையை அளிக்கின்றன. விவாதம், கலந்துரையாடல், கருத்து வேறுபாடு ஆகியவை ஜனநாயக நாட்டின் ஒரு பகுதி. ஆனால், அன்றாட வாழ்க்கைக்கு இடையூறாக இருப்பதும் பொதுச் சொத்துகளுக்கு சேதம் விளைவிப்பதும் நமது நெறிமுறை அல்ல. இந்திய குடிமக்கள் எந்த மதத்தைச் சார்ந்தவராக இருந்தாலும், குடியுரிமைச் சட்டம் அவர்களுக்கு எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாது என்பதை சந்தேகத்துக்கு இடமின்றி உறுதிப்படுத்துகிறேன். இந்தியர்கள் இந்தச் சட்டத்தைக் குறித்து கவலைப்பட ஒன்றுமில்லை. பிற நாடுகளில் துன்புறுத்தல்களுக்கு ஆளாகி, இந்தியாவைத்தவிர அவர்கள் செல்ல வேறு இடமில்லை என்ற நிலையில் இருப்பவர்களுக்காக உருவாக்கப்பட்டதே இந்தச் சட்டம்' எனக் குறிப்பிட்டிருந்தார்.

குடியுரிமைச் சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு
குடியுரிமைச் சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு

இந்நிலையில், குடியுரிமைச் சட்டத் திருத்த மசோதாவை அ.தி.மு.க ஆதரித்தது குறித்து தி.மு.க பொருளாளர் துரைமுருகன் வெளியிட்ட கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவர் தனது அறிக்கையில், ` மூத்த அரசியல்வாதியும் அ.தி.மு.க-வின் மாநிலங்களவை உறுப்பினருமான எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம், ` குடியுரிமை மசோதா குறித்து அ.தி.மு.க அலுவலகத்தில் விவாதித்துக்கொண்டிருந்த போது, தலைமைச் செயலகத்திலிருந்து துணைச் செயலாளர் ஒருவர் தொலைபேசியில் தொடர்புகொண்டு, அந்த மசோதாவை மாநிலங்களவையில் ஆதரித்து வாக்களிக்க வேண்டும்' என்று கூறியதாகத் தெரிவித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. அ.தி.மு.க ஆட்சியில் தலைமைச் செயலகம், எப்படி அரசியல்மயமாகியுள்ளது என்பதற்கும் அரசு அதிகாரிகள் ஆளுங்கட்சிப் பணியில் எப்படி தங்களது தரத்தைத் தாழ்த்திக் கொண்டு ஈடுபடுகிறார்கள் என்பதற்கும் இந்த நிகழ்வும் ஓர் உதாரணம். ஒரு மசோதாவில் வாக்களிப்பது அல்லது எதிர்த்து வாக்களிப்பது என்பது, அ.தி.மு.க. தலைமை எடுக்க வேண்டிய கொள்கை முடிவு.

அதை அ.தி.மு.க, தனது கட்சித் தலைமை அலுவலகத்திலிருந்து, ஒருவர் மூலம் தெரிவிக்கலாமே தவிர, தலைமைச் செயலகத்தில் உள்ள துணைச் செயலாளர் ஒருவர் மூலம் எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம் போன்ற அனுபவமிக்க மாநிலங்களவை உறுப்பினரிடமே இப்படித் தெரிவித்திருப்பது, மிகுந்த வேதனையைத் தருகிறது. எஸ்.ஆர்.பிக்கே இந்த நிலைமை என்றால், அ.தி.மு.க-வில் உள்ள மற்ற மாநிலங்களவை உறுப்பினர்கள், இந்த மசோதாவில் யாருடைய நிர்பந்தத்திற்குப் பணிந்து வாக்களித்துள்ளார்கள் என்பதையும் யூகிக்க முடிகிறது. சிறுபான்மையின மக்களுக்கும் ஈழத் தமிழர்களுக்கும் எதிரான இந்தக் குடியுரிமை மசோதாவில் வாக்களிப்பது குறித்த அ.தி.மு.க-வின் முடிவை, ஒரு அரசு துணைச் செயலாளர் எடுக்கிறார் என்றால், அ.தி.மு.க., அதன் தலைமையின் கட்டுப்பாட்டில் செயல்படுகிறதா.. அல்லது மத்திய பா.ஜ.க அரசின் ஏஜென்டுகளாக தலைமைச் செயலகத்தில் அமர வைக்கப்பட்டிருக்கும் ஒரு சில அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் செயல்படுகிறதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது' எனக் குறிப்பிட்டிருந்தார்.

தலைமைச் செயலகம்
தலைமைச் செயலகம்

துரைமுருகனின் அறிக்கை குறித்து நம்மிடம் பேசிய அ.தி.மு.க நிர்வாகிகள் சிலர், `` நாடாளுமன்ற விவாதங்களில் என்ன நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என்பதைப் பற்றி முதல்வரோ அல்லது துணை முதல்வரோ பேசுவதுதான் சரியானது. ஜெயலலிதா இருந்த காலகட்டத்தில் நாடாளுமன்றக் குழுத் தலைவருக்கு போன் போட்டுப் பேசுவார். ஒருகட்டத்தில், ஜெயலலிதா கூறும் தகவல்களை மைத்ரேயன், தம்பிதுரை, நவநீத கிருஷ்ணன் ஆகியோருக்குத் தலைமைச் செயலாளர் தெரிவிப்பது வழக்கம். ராமமோகன் ராவ் சி.எஸ்ஸாக இருந்தபோதும் அப்படித்தான் நடந்தது. பிரச்னைகளின் அடிப்படையில் செயலாளர் அந்தஸ்தில் இருப்பவர் பேசுவார். அரசின் துணைச் செயலாளர் பேசுவது என்பது மரபுக்கு எதிரானது. இப்படியொரு முக்கியத்துவம் வாய்ந்த ஒரு மசோதா குறித்து துணைச் செயலாளர் அந்தஸ்தில் இருப்பவர் பேசியிருக்கக் கூடாது. அண்ணா தி.மு.க-வுக்கு எஸ்.ஆர்.பி புதியவராக இருக்கலாம். ஆனால், நாடாளுமன்றத்தில் அவர் சீனியர் எம்.பி. அவருக்கு துணைச் செயலாளர் அந்தஸ்தில் உள்ள அதிகாரி அழுத்தம் கொடுத்ததை ஏற்க முடியவில்லை" என விவரித்தவர்கள்,

நாட்டின் நலனையும் தமிழக மக்களின் நலனையும் கருத்தில் கொண்டே நாடாளுமன்றத்தில் பேசுகிறோம். கட்சித் தலைமை சொல்வதைக் கேட்கிறோம். இதில், வேறு எந்த ரகசியங்களும் இல்லை.
நவநீத கிருஷ்ணன் எம்.பி.

`` ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு எடப்பாடி பழனிசாமி, பன்னீர்செல்வம் ஆகியோருடன் இணைந்து செயல்படாமல் தனித்து வலம் வருகிறார் எஸ்.ஆர்.பி. பா.ஜ.க-வோடு அ.தி.மு.க கூட்டுச் சேர்ந்ததையும் அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதனால்தான், தேர்தல் பிரசாரத்துக்கும் அவர் போகவில்லை. குடியுரிமைச் சட்டத் திருத்தத்துக்கு எதிராகப் பேசியதன் மூலம், இத்தனை ஆண்டுக்காலம் அவர் செய்து வந்த அரசியலுக்கு விரோதமாக அமைந்துவிட்டது. அதனால்தான், நாடாளுமன்றத்தில் ஆதரித்துப் பேசிவிட்டு வெளியே வந்து, `எனக்கு அழுத்தம் இருந்தது' எனக் கூறிவிட்டுச் சென்றுவிட்டார். எஸ்.ஆர்.பி-க்குப் பதிலாக வேறு யாராவது அழுத்தம் இருந்தது எனக் கூறியிருந்தால் விவகாரம் வேறு மாதிரியாகியிருக்கும். அழுத்தம் இருந்தது என எஸ்.ஆர்.பி பேசியதன் பின்னணியில் அரசியல் காரணங்கள் இருக்கலாம். சொல்லப் போனால், அன்றைக்கு நவநீத கிருஷ்ணனின் இணைப்புக்கு வந்துதான் துணைச் செயலாளர் ஒருவர் பேசியிருக்கிறார். இதை அருகில் இருந்த எஸ்.ஆர்.பி-யிடம் அவர் கூறியிருக்கிறார். துணைச் செயலாளர் நேரடியாக எஸ்.ஆர்.பியும் பேசவில்லை" என்கின்றனர் விரிவாக.

நவநீத கிருஷ்ணன்  எம்.பி.
நவநீத கிருஷ்ணன் எம்.பி.

அ.தி.மு.க எம்.பி எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியத்திடம் பேசினோம். `` எனக்கு யாரும் அழுத்தம் கொடுக்க முடியாது. துரைமுருகன் என்ன ஞானியா.. அன்றைக்கு, `சி.எம் அலுவலகத்திலிருந்து போன் வந்தது' என அருகில் இருந்தவர் சொன்னார். `ஆதரித்து வாக்களிக்கலாம், எதாவது எதிர்ப்பு இருந்தால் பதிவு செய்யலாம்' என்றார். நானும் அதைத்தான் செய்தேன். வேறு எந்த அழுத்தமும் இல்லை" என்றார் கொதிப்புடன்.

இதையடுத்து, அ.தி.மு.க மாநிலங்களவை குழுத் தலைவர் நவநீத கிருஷ்ணனிடம் பேசினோம். `` அப்படியெல்லாம் எதுவும் கிடையாது. இந்த அமைப்பில் யாரும் யாருக்கும் அழுத்தம் கொடுத்துவிட முடியாது. பா.ஜ.க அரசுகூட எங்களுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை. மேலிடத்திலிருந்து எங்களுக்குக் கொடுக்கப்படும் தகவலின் அடிப்படையில் செயல்படுகிறோம். எங்கள் கட்சித் தலைமையின் முடிவு இது.

இந்தச் சட்டத் திருத்தத்தால் இந்திய முஸ்லிம்களுக்குப் பாதிப்பில்லை. முஸ்லிம் நாடுகளிலிருந்து வெளியேற்றப்படுபவர்களுக்குப் பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என்ற அடிப்படையில் முடிவெடுத்திருக்கிறார்கள். துரைமுருகன் மிகப் பெரிய தலைவர். அனுபவம்மிக்கவர். இந்த விவகாரத்தில் எல்லாம் அவர் கருத்து கூறக் கூடாது. நாட்டின் நலனையும் தமிழக மக்களின் நலனையும் கருத்தில் கொண்டே நாடாளுமன்றத்தில் பேசுகிறோம். கட்சித் தலைமை சொல்வதைக் கேட்கிறோம். இதில், வேறு எந்த ரகசியங்களும் இல்லை" என்றார் உறுதியாக.