Published:Updated:

ரஜினிகாந்த் மீது நடவடிக்கை ரத்து... வருமான வரித்துறையின் செயல்பாடு உள்நோக்கம் கொண்டதா?

ரஜினிகாந்த்
ரஜினிகாந்த் ( vikatan )

``வந்த வருமானத்துக்கு முறையாக வரி செலுத்தாததால்தானே வருமான வரித்துறை நடவடிக்கை எடுத்திருக்கிறது. பிறகு ஏன் அதற்கு விலக்குக் கொடுக்க வேண்டும்?"

2002 முதல் 2005 வரையிலான மூன்று ஆண்டுகளுக்கு வருமான வரி தாக்கலில் இருந்த குறைபாடுகள் காரணமாக ரஜினிகாந்த்துக்கு 66,22,436 ரூபாய் அபராதமாக விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், வருமான வரித்துறை மேல்முறையீட்டுத் தீர்ப்பாயத்தில் ரஜினிகாந்த் மீது தொடுக்கப்பட்ட வழக்கைத் திரும்பப்பெறுவதாக, வருமான வரித்துறை அறிவித்தது. இதையடுத்து, ரஜினிகாந்த் மீதான வழக்கைத் தள்ளுபடிசெய்வதாகத் தீர்ப்பாயம் உத்தரவிட்டது.

Representational Image
Representational Image

இந்த விவகாரத்தில், ரஜினிகாந்த் தரப்பில் கூறப்பட்ட விளக்கம்தான் தற்போது பெரிய அளவில் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. தனக்கு வட்டித்தொழில் குறித்து தெரியாது என்றும், பொருளை அடமானம் வைத்து பணம் தருவதையே வட்டித் தொழில் என நினைத்தேன் என்றும் கூறியுள்ளார். மேலும், ``எனது நெருங்கிய நண்பர்களுக்கு மட்டுமே பணத்தைக் கடனாக வழங்கினேன். இது எப்படித் தொழிலாகும்" என்றும் கூறியுள்ளார். அதேவேளை, 18% வட்டிக்கு கடன் வழங்கியுள்ளதாகவும் அதில் ஒரு பகுதி வாராக்கடனாகிப் போனதாகவும் தெரிவித்துள்ளார். இவரது விளக்கத்தில், நெருங்கிய நண்பர்களுக்குப் பணம் வழங்கியது எப்படி தொழிலில் சேருமென்றும், இதை வியாபாரமாகச் செய்யவில்லை என்றும் விளக்கமளித்திருக்கிறார். அவரது விளக்கத்தை ஏற்றுக்கொண்ட வருமான வரித்துறை, அவர்மீதான வழக்கைத் திரும்பப்பெறுவதாக அறிவித்துள்ளது.

இந்த வழக்கின் சாராம்சம் குறித்து ஆடிட்டர் கோபால்கிருஷ்ணராஜு கூறுகையில், ``ரஜினிகாந்த் மீது 2002 முதல் 2005-ம் ஆண்டு வரையிலான 3 நிதியாண்டுகளில் செலுத்தப்பட்ட வருமான வரி தொடர்பாக, 3 அபராத வழக்குகள் உள்ளன. இந்த வழக்குகளை எதிர்த்து, முதற்கட்டமாக வருமான வரித்துறை ஆணையரிடம் ரஜினிகாந்த் முறையீடுசெய்தார். ஆனால், அந்த முறையீடு தள்ளுபடியானது. அடுத்ததாக, வருமான வரித்துறை தீர்ப்பாயத்தில் முறையீடு செய்தார். அதை விசாரித்த தீர்ப்பாயம், வருமான வரித்துறையின் வழக்கைத் தள்ளுபடி செய்தது. இதை எதிர்த்துதான் வருமான வரித்துறை மேல்முறையீட்டுத் தீர்ப்பாயத்தில் மேல்முறையீடு செய்திருந்தது.

ஆடிட்டர் கோபால் கிருஷ்ணராஜு
ஆடிட்டர் கோபால் கிருஷ்ணராஜு
vikatan

இந்த நிலையில், 2019 ஆகஸ்ட் 8 அன்று, வருமான வரித்துறைக்கு மத்திய நேரடி வரிகள் வாரியம் (CBDT - Central Board of Direct Taxes), அனுப்பிய சுற்றறிக்கை முக்கியத்துவம்பெறுகிறது. அந்த சுற்றறிக்கையில், வருமான வரித்துறைக்குச் செலுத்தவேண்டிய தொகை 1 கோடி ரூபாய்க்குக் கீழே இருந்தால், மேல்முறையீட்டுக்குப் போக வேண்டாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ரஜினிகாந்த் செலுத்தவேண்டிய அபராதத்தொகை 66,22,436 ரூபாயாக இருப்பதால், தற்போது அந்த சுற்றறிக்கையைக் காரணமாகக் காட்டி, வருமான வரித்துறை தனது மேல்முறையீட்டைத் திரும்பப் பெற்றுள்ளது. எனவே, தீர்ப்பாயம் முன்னதாக அளித்த தீர்ப்பின்படி, ரஜினிகாந்த் அபராதத்தைச் செலுத்தவேண்டியதில்லை என்று முடிவெடுக்கப்பட்டு, அந்த வழக்கு முடிவுக்கு வந்துள்ளது" என்றார்.

ஜிஎஸ்டி-யை முறையாகச் செலுத்தாத சிறுதொழில் நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்புவதும், அபராதம் விதிப்பதுமாகக் கடுமைகாட்டிவரும் வருமான வரித்துறை, ரஜினிகாந்த் விவகாரத்தில் மட்டும் அவருக்கு சாதகமாகச் செயல்பட்டிருக்கிறதோ என அகில இந்திய பொதுத்துறை வங்கிகள் கூட்டமைப்பின் முன்னாள் பொதுச்செயலாளர் தாமஸ் ப்ராங்கோவிடம் கேட்டோம். ``வருமான வரி வசூலிப்பதற்கான விதிகள் அனைவருக்கும் பொதுவாக இருக்க வேண்டும். ஒரு அரசியல் கட்சிக்கு சாதகமாக இருந்தால், அவர்களுக்கு ஒரு விதி, மற்றவர்களுக்கு சாதகமாக இருந்தால் அவர்களுக்கு ஒரு விதி என்றிருப்பது தவறு. இவ்வளவு வருமானம் ரஜினிகாந்த்துக்கு எங்கிருந்து வந்தது... அதற்குரிய வரியை முறையாகச் செலுத்தினாரா, அபராதம் எதற்காக விதிக்கப்பட்டது என்பதுதான் கேள்வி. வந்த வருமானத்துக்கு முறையாக வரி செலுத்தாததால்தானே வருமான வரித்துறை நடவடிக்கை எடுத்திருக்கிறது. பிறகு ஏன் அதற்கு விலக்குக் கொடுக்க வேண்டும்? இந்த விவகாரத்தில் வருமான வரித்துறை செய்திருப்பது மிகப்பெரிய தவறு. இதுகுறித்து தெளிவான விளக்கத்தை அளிக்கவேண்டிய கடமை அவர்களுக்கு இருக்கிறது.

தாமஸ் ப்ராங்கோ
தாமஸ் ப்ராங்கோ
vikatan

நண்பர்களிடமிருந்தும் உறவினர்களிடமிருந்தும் பெறக்கூடிய கடன் என்பது சிறிய அளவில் இருக்கலாம். ஆனால், இங்கே கோடிக்கணக்கில் கொடுத்துள்ளார் என்றால் அதற்கு எந்த விதிமுறை அனுமதிக்கிறது? வருமான வரித்துறை மேல்முறையீட்டை விலக்கியுள்ள இன்றைய காலகட்டத்தையும், பெரியார் மீதான அவரது விமர்சனத்துக்கான காலகட்டத்தையும் ஒப்பிட்டுப் பார்க்கவேண்டிய கட்டாயம் வருகிறது. ஒரு வாரத்துக்கு முன்புதான் மத்திய அரசுக்கு ஆதரவாக இருப்பதாகக் காட்டிக்கொண்டிருக்கிறார். உடனே, வருமான வரித்துறையின் மேல்முறையீட்டு வழக்கு விலக்கிக்கொள்ளப்படும் அறிவிப்பு வருகிறது.

மேற்கு வங்காளத்தில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சந்தன் மித்ராவுக்கு சாரதா சிட்ஃபண்டு மோசடியில் தொடர்பு இருப்பதாகச் சொல்லப்பட்ட நிலையில், கட்சியை விட்டு விலகி பா.ஜ.க-வில் சேருகிறார். அதன்பின், அவர்மீதான குற்றச்சாட்டு கிடப்பில் போடப்படுகிறது. மகாராஷ்டிராவில், அஜித்பவார்மீது பா.ஜ.க தொடர்ச்சியாகப் பல்வேறு குற்றச்சாட்டுகளைச் சுமத்திவந்த நிலையில், தேர்தலுக்குப்பின் பா.ஜ.க அரசில் துணை முதல்வராகப் பதவியேற்கப்போகிறார் என்றதுமே, அவர்மீதான வழக்குகள் அனைத்துமே ஒரே நாளில் விலக்கப்படுகின்றன. எனவே, சட்டம் ஒழுங்கு, நேர்மை என்பதெல்லாம் அரசாங்கத்துக்கு ஆதரவு, எதிர்ப்பு என்ற நிலைப்பாட்டின் அடிப்படையிலேயே கையாளப்படுவது தெரியவருகிறது. அதேபோலத்தான், தற்போது ரஜினிகாந்த் விவகாரத்திலும் நடந்துள்ளதாக நான் பார்க்கிறேன்" என்றார்.

Rajinikanth
Rajinikanth
`நெருங்கிய நண்பர்களுக்கு மட்டுமே கொடுத்தேன்!’ - `வட்டித் தொழில்' சர்ச்சையில் ரஜினி

பண மதிப்பிழப்பு நடவடிக்கை, ஜிஎஸ்டி அமலாக்க நடவடிக்கைகளுக்குப்பின், சிறு குறு தொழில் நிறுவனங்கள் பெரிய அளவில் நெருக்கடிக்குள்ளாகிவருகின்றன. இன்னொரு பக்கம் பெரிய தொழிலதிபர்கள், வாராக் கடன்களை வைத்துவிட்டு வெளிநாடுகளில் செட்டிலாகிறார்கள். மேலும், கார்ப்பரேட் நிறுவனங்களிடமும் மத்திய அரசு இணக்கமாக நடந்துகொள்வது விமர்சனத்துக்கு உள்ளாகிவருகிறது. இந்தச்சூழலில், மத்திய அரசோடு நேரடியாக இணக்கம் காட்டிவரும் ரஜினிகாந்துக்கு சாதகமாக, வருமான வரித்துறையின் இந்த நடவடிக்கை பல்வேறு கேள்விகளை எழுப்பாமல் இல்லை.

அடுத்த கட்டுரைக்கு