Published:Updated:

தேனி: `கூட்டுறவுத்துறையில் திமுக-வினருக்குப் பதவியா..?' - அமைச்சர் பேச்சுக்கு பாஜக கண்டனம்!

அரசுத்துறையில் தி.மு.க-வினருக்குப் பொறுப்புகள் வழங்குவதாக அமைச்சர் பெரியசாமி பேசியிருப்பது அரசியல் அரங்கில் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது.

தேனி மாவட்டத்தில் வடக்கு மாவட்டப் பொறுப்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் தரப்பினருக்கும், கம்பம் எம்.எல்.ஏ ராமகிருஷ்ணன், தேர்தல் பணிக்குழு செயலாளர் செல்வேந்திரன் உள்ளிட்ட மூத்த தி.மு.க நிர்வாகிகளுக்கும் ஒத்துப்போகவில்லை. தேனியில் நடைபெறும் கட்சிக் கூட்டங்கள், அரசு நிகழ்ச்சிகளில் இரு தரப்புக்கும் இடையேயான விரிசல் வெளிப்படையாகவே தெரிகிறது.

இந்த நிலையில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு தேனி வடக்கு மாவட்ட தி.மு.க சார்பில் பெரியகுளம் சாலையிலிருக்கும் தனியார் மண்டபத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, ``கோவையில் நடந்த நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பின்தங்கியிருக்கும் தமிழகத்தை நாட்டிலேயே முதல் மாநிலமாக ஆக்குவேன் எனக் கூறியிருக்கிறார். எம்.எல்.ஏ., எம்.பி தேர்தலில் வென்றால் மட்டும் போதாது. உள்ளாட்சித் தேர்தலிலும் வெற்றிபெறுவது மிகவும் முக்கியமானதாகும். அதற்கு தி.மு.க-வினர் ஒற்றுமையுடன் உழைக்க வேண்டும். எத்தனை மனவருத்தங்கள், வேறுபாடுகள் இருந்தாலும்கூட நிர்வாகிகள் ஒன்றாகப் பாடுபட வேண்டும்.

ஆலோசனைக் கூட்டம்
ஆலோசனைக் கூட்டம்
உள்ளாட்சித் தேர்தலில் சீட் கிடைக்காதவர்களுக்கு கூட்டுறவுத்துறையில் பொறுப்புகள் வழங்க ஏற்பாடு செய்கிறேன்.

தேனி மாவட்டத்தில் அனைத்து வார்டுகளிலும் தி.மு.க வெற்றிபெற வேண்டும். பிற கட்சியினர் டெபாசிட்கூட வாங்கக் கூடாது. கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் போடி தொகுதி தி.மு.க-வுக்கு கிடைக்கவில்லை.

தி.மு.க தேர்தல் பணிக்குழுச் செயலாளர் கம்பம் செல்வேந்திரனும் நானும் கல்லூரி நண்பர்கள். அவர் பெரிய பேச்சாளர், வாலிபால் பிளேயர். நான் பேஸ்கட்பால் பிளேயர். இதனால் நாங்கள் கல்லூரி வகுப்புக்குச் சரியாகச் செல்ல மாட்டோம். அதனாலேயே அரசியலுக்கு வந்துவிட்டோம். எம்.ஜி.ஆர் இருந்த காலத்திலும் உள்ளாட்சித் தேர்தலில் அதிக இடங்களில் வெற்றிபெற்ற கட்சி தி.மு.க-தான். இன்று தொண்டர்கள் சுறுசுறுப்பில் தேனி‌ மாவட்டத்தை விஞ்சுவதற்கு எந்த மாவட்டமும் இல்லை. எனவே, நாம் 100 சதவிகித வெற்றியைப் பெற வேண்டும்'' என்றார்.
தி.மு.க வடக்கு மாவட்டப் பொறுப்பாளர் தங்கத்தமிழ்செல்வன், பெரியகுளம் எம்.எல்.ஏ சரவணகுமார் உள்ளிட்டோர் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

அரசுத்துறையில் தி.மு.க-வினருக்கு பொறுப்புகள் வழங்குவதாக அமைச்சர் பெரியசாமி பேசியிருப்பது அரசியல் அரங்கில் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது. இது தொடர்பாக நம்மிடம் பேசிய தேனி மாவட்ட பா.ஜ.க தலைவர் பி.சி.பாண்டியன், ``கூட்டுறவுத்துறை அமைச்சர் இவ்வாறு கூறியிருப்பது அதிகார துஷ்பிரயோகம். கூட்டுறவுத்துறை என்பது கட்சியல்ல. அதில் பொறுப்பு வழங்கப்பட வேண்டுமென்றால் தேர்தல் நடத்தி முறையாக நியமிக்கப்பட வேண்டும். அதில் கட்சியினருக்குப் பொறுப்பு தர ஏற்பாடு செய்வேன் என அமைச்சர் கூறுவது கண்டிக்கத்தக்கது" என்றார்.

ஒன்றிய சேர்மன் பதவி: `இரு தரப்பாகப் பிரிந்து மல்லுக்கட்டும் திமுக!' - பரபரக்கும் மரக்காணம்
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு