Published:Updated:

`யார் சொல்லிப்பேசினார் ரவீந்திரநாத்?’ - அ.தி.மு.க-வில் வெடிக்கும் புதிய சர்ச்சை!

கலிலுல்லா.ச

நாடாளுமன்றத்தில் ஓ.பி.எஸ் மகன் ரவீந்திரநாத் குமார் முத்தலாக் சட்டத்திருத்த மசோதாவை ஆதரித்ததை எடப்பாடி பழனிசாமி விரும்பவில்லை என்கிறார்கள் அ.தி.மு.க-வினர்.

ரவீந்திரநாத் குமார்
ரவீந்திரநாத் குமார்

மோடி தலைமையிலான அரசு இரண்டாவது முறையாக பதவி ஏற்றபின் பல்வேறு மசோதாக்களை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றி வருகிறது. அந்தவகையில் நேற்று முன்தினம் மக்களவையில் முத்தலாக் சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றபட்டது. அப்போது பேசிய ஓ.பி.ரவீந்திரநாத் குமார், ``இந்த மசோதா மூலம் பெண்களுக்கு சமூகத்தில் சம உரிமைகளையும், நல் வாய்ப்புகளையும் ஈட்டித்தரும். இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் கூறியுள்ள பாலின சமத்துவத்துக்கு, இந்த முத்தலாக் சட்ட திருத்த மசோதா மேலும் வலு சேர்க்கிறது. சமூக சடங்குகளை பெண்கள் மீது திணிக்காமல், சம உரிமைகளை வழங்கிடும் முத்தலாக் சட்ட திருத்த மசோதாவுக்கு ஆதரவளிக்கிறோம்” என்று பேசினார்.

ஒ.பி.எஸ் - எடப்பாடி
ஒ.பி.எஸ் - எடப்பாடி

மக்களவையில் முத்தலாக் மசோதா விவகாரத்தில் அ.தி.மு.க-வின் குரலாக ஓ.பி.ரவீந்திரநாத் கட்சியில் ஆலோசிக்காமல் எடுத்த முடிவை எடப்பாடி தரப்பு விரும்பவில்லை என்கிறார்கள். இது தொடர்பாக அ.தி.மு.க தரப்பில், ``வேலூர் நாடாளுமன்றத்தேர்தலில் வெற்றி பெற்று, மற்றொரு எம்.பியை அ.தி.மு.க சார்பில் நாடாளுமன்றத்துக்கு அனுப்ப வேண்டும் என்று எடப்பாடி கருதுகிறார். ஓ.பி.எஸ்ஸின் கை ஏற்கெனவே டெல்லியில் உயர்ந்துவரும் நிலையில், தமக்கு சாதகமான நபர் ஒருவரும் மக்களவையில் இருக்க வேண்டும் என்பதுதான் அவர்திட்டம். அதனடிப்படையில்தான் வேலூரைச் சேர்ந்த முஹமது ஜானை மாநிலங்களவை உறுப்பினாராக்கினார்.

நாங்கள் உங்கள் தொகுதியிலிருக்கும் ஒருவரை, ராஜ்யசபாவுக்கு அனுப்புகிறோம்; நீங்கள் லோக்சபாவுக்கு ஒருவரை எங்களுக்கு கொடுங்கள்’ என்று வேலூர் மக்களிடம் கேட்கலாம் என்றிருந்தவருக்கு ஓ.பி.எஸ் மகனின் பேச்சு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. `முத்தலாக் சட்டத்திருத்த மசோதா’ வை அ.தி.மு.க ஆதரிப்பதன் மூலம், வேலூரில் பெரும்பான்மையாக இருக்கும் முஸ்லிம் மக்களின் வாக்குகளை இழக்க நேரிடும் என்பது தெரிந்தும், ரவீந்திரநாத்குமார் இப்படி பேசியிருக்கிறார்” என்கிறார்கள்.

அமித்ஷா - ஓபிஎஸ்
அமித்ஷா - ஓபிஎஸ்

`முன்னதாக டெல்லி சென்று அமித் ஷாவை சந்தித்த ஓ.பன்னீர்செல்வம், தன் மகனுக்கு அமைச்சர் பதவி கேட்டிருக்கிறார். இந்த நிலையில், பா.ஜ.க கொண்டுவரும் முத்தலாக் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதெல்லாம் முடியாத காரியம்’ என்கிறார்கள் ஓ.பி.எஸ் தரப்பினர்.

இது தொடர்பாக அன்வர்ராஜாவிடம் பேசினோம். ``ஏற்கெனவே கட்சி என்ன முடிவெடுத்ததோ அதைத்தான் நான் பேசினேன். நான் பேசினது புத்தகமாகவே வந்துவிட்டது. புத்தகத்தில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் நான் பேசியதுதான் கட்சியின் நிலைபாடு. இவர் நாடாளுமன்றத்தில் பேசியது கட்சி நிலைப்பாடாக இருக்கவாய்ப்பில்லை. கட்சியின் நிலைப்பாடுதான் என் நிலைப்பாடு.

அன்வர் ராஜா
அன்வர் ராஜா

ஆரம்பத்தில் முத்தலாக்கை எதிர்த்தோம். அப்படிபார்க்கும்போது, அவர் பேசியது கட்சியின் நிலைப்பாடாக இருக்கமுடியாது. நேற்று ஒரு நிலைப்பாடு இன்று ஒரு நிலைப்பாடு என்று கட்சிக்கு இருக்கமுடியுமா? கட்சித்தலைமையை ஆலோசிக்காமல் நாடாளுமன்றத்தில் அவர்பேசியிருக்கலாம். முத்தலாக்கை எதிர்ப்பதுதான் அ.தி.மு.க-வின் நிலைப்பாடு” என்று முடித்துக்கொண்டார்.