Published:Updated:

ராமர் கோயில் பூமி பூஜை: காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து பறிக்கப்பட்ட அதே நாளில்... வருகிறாரா மோடி?

ராமர் கோயில் மாதிரி படம்

இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்கவிருக்கிறார் என்ற செய்திகள் வந்துகொண்டிருப்பதால், அது குறித்து விமர்சனங்கள் எழுந்துள்ளன.

ராமர் கோயில் பூமி பூஜை: காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து பறிக்கப்பட்ட அதே நாளில்... வருகிறாரா மோடி?

இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்கவிருக்கிறார் என்ற செய்திகள் வந்துகொண்டிருப்பதால், அது குறித்து விமர்சனங்கள் எழுந்துள்ளன.

Published:Updated:
ராமர் கோயில் மாதிரி படம்

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள பாபர் மசூதி - ராம ஜென்ம பூமி தொடர்பான வழக்கு நீண்டகாலம் தீர்க்கப்படாமல் இருந்துவந்தது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் உச்ச நீதிமன்றம் அந்த வழக்கை முடித்துவைத்தது. ரஞ்சன் கோகோய் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு நவம்பர் 9-ம் தேதி தீர்ப்பு வழங்கியது. சர்ச்சைக்குரியதாகக் கருதப்பட்ட 2.77 ஏக்கர் நிலத்தை இந்துக்களுக்கு வழங்க உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம், அந்த இடத்தில் ராமர் கோயில் கட்டுவதற்கு அனுமதி அளித்தது.

பாபர் மசூதி, உச்ச நீதிமன்றம், ஐந்து நீதிபதிகள் அமர்வு
பாபர் மசூதி, உச்ச நீதிமன்றம், ஐந்து நீதிபதிகள் அமர்வு

முஸ்லிம்கள் மசூதி கட்டிக்கொள்வதற்கு வேறோர் இடத்தில் 5 ஏக்கர் நிலம் வழங்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பில் கூறியது. ஒரு காலத்தில் பாபர் மசூதி அமைந்திருந்த அந்த இடத்தில், ராமர் கோயில் கட்டுவதற்கான ஏற்பாடுகள் தற்போது மும்முரமாக நடைபெற்றுவருகின்றன. ஆகஸ்ட் 3-ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 5-ம் தேதி வரையில் மூன்று நாள்கள் வேத மந்திரங்கள் ஒலிக்க, பூமி பூஜை நிகழ்ச்சி பிரமாண்டமான முறையில் நடைபெறவிருக்கிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

தற்போது கொரோனா வைரஸால் ஒட்டுமொத்த இந்தியாவும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, உத்தரப் பிரதேசத்தில் கொரோனாவின் தாக்கம் தீவிரமடைந்து வருகிறது. அங்கு, 55,000-க்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும், புதிதாக 2,529 பேருக்குக் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. 1,300 பேர் கொரோனாவால் மரணமடைந்துள்ளனர். இத்தகைய சூழலில், இப்படியொரு நிகழ்ச்சியை அங்கு நடத்தலாமா என்று பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

மோடி
மோடி

மேலும், இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்கவிருக்கிறார் என்ற செய்திகள் வந்துகொண்டிருப்பதால், அது குறித்து விமர்சனங்கள் எழுந்துள்ளன. அவரது பயணம் குறித்து பிரதமர் அலுவலகத்திலிருந்து அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளியாகவில்லை. ஆனாலும், நிச்சயமாக அவர் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காரணம், அக்டோபர், நவம்பரில் பீகார் சட்டமன்றத்துக்குத் தேர்தல் வரவிருக்கிறது. அதற்கடுத்ததாக மேற்கு வங்கம், அஸ்ஸாம், கேரளா, புதுச்சேரி, தமிழ்நாடு, ஜம்மு - காஷ்மீர் ஆகிய மாநிலங்களிலும் சட்டப்பேரவைத் தேர்தல்கள் நடைபெறவுள்ளன. இந்தத் தேர்தல்களின்போது பிரசாரத்துக்கு ராமர் கோயில் கட்டுமானப் பணிகள் பெரிதும் கைகொடுக்கும் என்ற அரசியல் கணக்கு பா.ஜ.க-வுக்கு இருக்கலாம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ராமர் கோயிலுக்கான பூமி பூஜை நடத்தப்படுவது குறித்து வேறு சில சர்ச்சைகளும் எழுந்துள்ளன. ஜம்மு - காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட வேண்டும் என்பது ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்ட இந்துத்வா அமைப்புகளின் நீண்டகாலக் கோரிக்கை. பா.ஜ.க-வின் தேர்தல் அறிக்கைகளிலும் இது ஒரு வாக்குறுதியாக தொடர்ந்து இடம்பெற்றுவந்துள்ளது. மத்தியில் கடந்த ஆண்டு இரண்டாவது முறையாக மோடி தலைமையிலான பா.ஜ.க வெற்றிபெற்று அதிகாரத்தில் அமர்ந்தவுடன், ஜம்மு - காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்து கடந்த ஆண்டு நீக்கப்பட்டது. கடந்த ஆகஸ்ட் 5-ம் தேதிதான் அந்த சம்பவம் நிகழ்ந்தது.

ராமர் கோயில் கட்டுமானப் பொருள்கள்
ராமர் கோயில் கட்டுமானப் பொருள்கள்

ஜம்மு - காஷ்மீரைப் போலவே, அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவது என்பது பா.ஜ.க-வின் மற்றொரு மிகப்பெரிய அஜெண்டாவாக இருந்தது. எனவே, ஜம்மு - காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட அதே தேதியில் ராமர் கோயிலுக்கு பூமி பூஜை நடத்த முடிவுசெய்திருக்கிறார்கள் என்றும், ஒரே தேதி என்பது ஏதேச்சையாக அமைந்த ஒன்றல்ல என்றும் அரசியல் பார்வையாளர்கள் கருதுகிறார்கள். ஒரு காலத்தில் பாபர் மசூதி அமைந்திருந்த இடத்தில்தான் ராமர் கோயில் கட்டப்படவிருக்கிறது. அங்கு, ஆகஸ்ட் 5-ம் தேதி அந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் பிரதமர் மோடி, 40 கிலோ எடை கொண்ட வெள்ளி செங்கல் ஒன்றை அடிக்கல்லாக நாட்டவிருக்கிறார்.

பூமி பூஜை முடிந்த பிறகு ராமர் கோயில் கட்டுமானப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று, மூன்று முதல் மூன்றரை ஆண்டுகளில் பணிகளை முடிப்பதற்குத் திட்டமிட்டுள்ளார்கள். அதாவது, 2024-ம் ஆண்டு நாடாளுமன்றப் பொதுத்தேர்தல் நடைபெறுவதற்கு முன்பாக ராமர் கோயில் கட்டிமுடிக்கப்பட்டுவிடும் என்று சொல்லப்படுகிறது. கட்டுமானப் பொருள்களும் கட்டுமானத்துக்கான எந்திரங்களும் ஏற்கெனவே அயோத்திக்கு வந்துசேர்ந்துவிட்டன. `எல் அண்டு டி’ நிறுவனம்தான் கட்டுமானப் பணிகளை மேற்கொள்ளவிருக்கிறது. ராமர் கோயிலை 141 அடி உயரத்துக்கு கட்டும் வகையில் 1988-ம் ஆண்டு வரைபடம் உருவாக்கப்பட்டிருந்தது. தற்போது, மேலும் 20 அடி உயர்த்த முடிவுசெய்துள்ளனர். இதன்படி, ராமர் கோயில் 161 அடி உயரம் கொண்டதாக அமையும். மேலும், புதிய வரைபடத்தின்படி கூடுதலாக இரண்டு மண்டபங்கள் அமைக்கப்படவுள்ளன.

கொரோனா வைரஸ் பாதிப்புகள் தீவிரமாக இருக்கும் சூழலில், இதுபோன்ற நிகழ்ச்சியில் அதிகமாக எண்ணிக்கையில் மக்கள் கூடுவதற்கு வாய்ப்பு உள்ளது. எனவே, மிகக் குறைந்த எண்ணிக்கையிலான வி.ஐ.பி-க்கள் மட்டுமே நிகழ்ச்சியில் பங்கேற்பார்கள் என்று நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கூறியுள்ளனர். நடைமுறையில் அதைச் செயல்படுத்துவார்களா என்பது தெரியவில்லை. பூமி பூஜை நிகழ்ச்சியை பொதுமக்கள் காண்பதற்கு வசதியாக ஆங்காங்கே பிரமாண்டமான டிஜிட்டல் திரைகள் வைப்பதற்கும் ஏற்பாடு செய்துவருகிறார்கள்.

இதற்கு மத்தியில், பாபர் மசூதி இடிப்பு தொடர்பான வழக்கு, லக்னோவில் உள்ள சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றத்தில் தினசரி விசாரணை என்ற அடிப்படையில் வேகவேகமாக விசாரிக்கப்பட்டு வருகிறது. அயோத்தில் அமைந்திருந்த 300 ஆண்டுகள் பழைமைவாய்ந்த பாபர் மசூதி, 1992-ம் ஆண்டு டிசம்பர் 6-ம் தேதி கரசேவகர்களால் இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டது. இது தொடர்பான வழக்கில் பா.ஜ.க-வின் மூத்த தலைவர்களான எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, கல்யாண்சிங், உமாபாரதி உள்ளிட்டோர் குற்றம்சாட்டப்பட்டுள்ளனர். ஆகஸ்ட் 31-ம் தேதிக்குள் உச்ச நீதிமன்றத்தின் மேற்பார்வையில் இந்த வழக்கை முடிக்கும் வகையில், சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றுவருகிறது.

உமாபாரதி
உமாபாரதி

கடந்த 27 ஆண்டுகளாக நடைபெற்றுவரும் இந்த வழக்கில், குற்றம்சாட்டப்பட்டவர்கள் விசாரணைக்கு ஆஜராவதில்லை என்று கடந்த ஜூன் மாதம் சிறப்பு நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்தது. அதன் பிறகு, சமீபத்தில் உமாபாரதி நீதிமன்றத்தில் ஆஜரானார். தற்போது 61 வயதாகும் உமாபாரதி, இந்த வழக்கில் 27-வது குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டுள்ளார். தாம் ஒரு ராம பக்தர் என்று வாக்குமூலம் அளித்த உமாபாரதி, ராமர் கோயில் கட்டுவதற்கான பிரசாரத்தில் தாம் முழு மனதுடன் பங்கேற்றதாகத் தெரிவித்தார். அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, கல்யாண் சிங் ஆகியோர் விரைவில் நீதிமன்றத்தில் ஆஜராவார்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

ராமர் கோயில் பூமி பூஜையில் பங்கேற்பதற்கு பிரதமருடன் சேர்ந்து எல்.கே.அத்வானி அயோத்திக்குச் செல்ல வாய்ப்பு இருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனால், அதற்கான வாய்ப்பு மிக மிகக் குறைவு. அதற்கு ஒரு காரணம் உள்ளது. எல்.கே.அத்வானி பா.ஜ.க-வினரால் இரும்பு மனிதர் என்று ஒரு காலத்தில் பார்க்கப்பட்டவர். பா.ஜ.க-வின் அகில இந்தியத் தலைவராகவும் அவர் இருந்தார். துணை பிரதமர் பதவியையும் அவர் வகித்தார். அயோத்தியில் பாபர் மசூதியை இடித்து, அந்த இடத்தில் ராமர் கோயில் கட்டப்பட வேண்டும் என்பதற்காக ரதயாத்திரையை நடத்தியவர் அத்வானி.

ஆனால், நரேந்திர மோடி மற்றும் அமித் ஷா அதிகாரத்துக்கு வந்த பிறகு, பா.ஜ.க-வில் அத்வானி ஓரங்கட்டப்பட்டார். அவருக்கு கட்சியில் எந்தவித முக்கியத்துவமும் இல்லை. ஏற்கெனவே, பொது நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றிருந்த அத்வானி, பிரதமர் மோடியைப் பார்த்து வணக்கம் செலுத்தியபோது, பதில் வணக்கம் செலுத்தாமல் அத்வானியை மோடி கடந்துசென்றுவிட்ட வீடியோ வைரலாகியது. அத்வானியை மோடி அவமானப்படுத்திவிட்டதாக பா.ஜ.க-வினரே வருத்தப்பட்டார்கள். ராமர் கோயில் கட்டுமானப் பணிகளை வைத்து, முழுக்க முழுக்கத் தம்மை முன்னிறுத்திக்கொள்ளவும், தாம் செல்வாக்கு பெறவும் மட்டுமே மோடி முயற்சி செய்வார். வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தல்கள் மற்றும் 2024-ல் வரவிருக்கும் நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில் மிகப்பெரிய அளவிலான வாக்கு அறுவடைக்கு ராமர் கோயில் பயன்படுத்தப்படும் என்பதில் சந்தேகமில்லை.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism