பொங்கல் பண்டிகைக்கு 21 பொருள்கள் அடங்கிய பரிசுத்தொகுப்பு வழங்கப்படும் என்று அறிவிப்பு வெளியாகி, அது விநியோகிக்கப்பட்ட நாளிலிருந்தே பொருள்கள் தரம் சரியில்லை, புளியில் பல்லி, பரிசுப் பணம் எங்கே எனப் பல்வேறு விமர்சனங்கள், குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்நிலையில் பொங்கல் பண்டிகை முடிந்த பிறகும்கூட பொங்கல் பரிசுத் தொகுப்பு மீதான குற்றச்சாட்டுகள் ஓய்ந்தபாடில்லை. தமிழகச் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரான எடப்பாடி பழனிசாமி, பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கியதில் 500 கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளது என தி.மு.க அரசின் மீது குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

தொடர் புகார் மற்றும் குற்றசாட்டுகள் காரணமாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பொங்கல் பரிசுத்தொகுப்பு விவகாரம் குறித்து நாளை ஆலோசனை நடத்தவிருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நாளை காலை 11 மணியளவில் தலைமைச் செயலகத்தில் முதல்வர் தலைமையில் நடைபெறவிருக்கும் ஆலோசனைக் கூட்டத்தில், உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, உணவுப்பொருள் மற்றும் வழங்கல்துறையின் ஆணையர் ராஜாராம், உணவுப்பொருள் கொள்முதல் செய்த அதிகாரிகள் ஆகியோர் பங்கு பெறுகின்றனர். மேலும் பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கியதில் தவறுகள் நடந்திருக்கும் பட்சத்தில், விசாரணைக்குழு அமைக்கப்பட்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகள்மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தலைமைச் செயலக வட்டாரங்கள் கூறுவதாகச் செய்திகள் வெளிவந்தவண்ணம் உள்ளன.