Published:Updated:

`குடியுரிமை திருத்தச் சட்டம்' - ரஜினி கருத்தும் எதிர்வினையும்!

வன்முறை கூடாது என்ற பொத்தாம் பொதுவாக கருத்து தெரிவிக்கும் ரஜினி, குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து ஏன் கருத்து தெரிவிக்கவில்லை என்று சமூக வலைதளங்களில் பலர் கேள்வி எழுப்பியுள்ளனர்.

ரஜினி
ரஜினி

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்துள்ளன. போராட்டக்காரர்கள்மீது காவல்துறையினர் தாக்குதல் நடத்தியதால், பல இடங்களில் வன்முறைச் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.

Anti CAA Protests
Anti CAA Protests

இந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள கருத்து, கடும் எதிர்வினைகளைச் சந்தித்துள்ளது. ரஜினி தன் ட்விட்டர் பக்கத்தில், ``எந்தவொரு பிரச்னைக்கும் தீர்வுகாண வன்முறை மற்றும் கலவரம் ஒரு வழி ஆகிவிடக்கூடாது. தேசப்பாதுகாப்பு மற்றும் நாட்டு நலனை மனதில்கொண்டு, இந்திய மக்கள் எல்லோரும் ஒற்றுமையுடனும் விழிப்புணர்வுடனும் இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். வன்முறைகள் என் மனதிற்கு வேதனை அளிக்கிறது” என்று கூறியுள்ளார். வன்முறை கூடாது என்ற பொத்தாம் பொதுவாக கருத்து தெரிவிக்கும் ரஜினி, குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து ஏன் கருத்து தெரிவிக்கவில்லை என்று சமூக வலைதளங்களில் பலர் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் கே.கனகராஜிடம் பேசினோம்.

``நடிகர் ரஜினிகாந்த் எப்போதுமே ஆளும் வர்க்கத்துக்கு ஆதரவாக இருக்க வேண்டுமென்று நினைக்கிறார். தொடர்ச்சியாகப் பல விஷயங்களில் அவர் வெளிப்படுத்தியுள்ள கருத்துகளிலிருந்தே இதைப் புரிந்துகொள்ள முடியும். மோடி அரசு கொண்டுவந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கை நம் நாட்டின் பொருளாதாரத்தை எந்தளவுக்கு சீரழித்திருக்கிறது என்பதற்கு நிறைய உதாரணங்கள் உள்ளன. ஆனால், அந்த நடவடிக்கையை வரவேற்ற ரஜினிகாந்த், `பணமதிப்பிழப்பு நடவடிக்கை நாட்டுக்கு நல்லது’ என்று சொன்னார். ஸ்டெர்லைட் விவகாரத்தில் அவர் பேசியபோது, `போராடினால் நாடு சுடுகாடாகும்’ என்று சொன்னார்.

கனகராஜ்
கனகராஜ்

வன்முறை என்று பொத்தாம் பொதுவாகச் சொன்னால் எப்படி? யார் நடத்திய வன்முறை? போலீஸ் நடத்திய வன்முறையைப் பற்றி ரஜினி என்ன சொல்கிறார்? குடியுரிமை திருத்தச் சட்டத்தை இவர் ஆதரிக்கிறாரா, எதிர்க்கிறாரா? அதை முதலில் அவர் சொல்லட்டும்.

போலீஸ் தாக்குதலில் ஒருவருக்கு கண்பார்வை போய்விட்டது. மாணவர்கள்மீது தாக்குதல் நடத்திய போலீஸைக் கண்டிக்க மாட்டீர்களா? இணையத்தைத் துண்டிப்பதும், தொலைபேசியைத் துண்டிப்பதும், மெட்ரோ ரயில் போக்குவரத்தை நிறுத்துவதும் வன்முறை இல்லையா? எதை வன்முறை என்று நீங்கள் நினைக்கிறீர்கள்... ஒருவர்மீது கல்லெறிவது மட்டும்தான் வன்முறையா?

அஸ்ஸாமில் 19 லட்சம் பேர் குடியுரிமை இல்லாமல் ஆக்கப்பட்டுள்ளார்கள். குடியரசுத் தலைவராக இருந்த பக்ருதீன் அலி அகமது குடும்பத்தினர் 17 பேர், ஆவணங்களை அளிக்கவில்லை என்று குடியுரிமை மறுக்கப்பட்டுள்ளார்கள். அவர்களைக் கொண்டுபோய் தடுப்பு முகாம்களில் அடைப்பது வன்முறை இல்லையா... அதைப் பற்றி ரஜினியின் கருத்து என்ன? இப்படி அவர் செலெக்டிவ்வாகப் பேசுவது, அவரின் அரசியல் கொள்கை எது என்பதைப் புரிந்துகொள்ள உதவுகிறது. கட்சியை ஆரம்பிக்கும் முன்பே அவர் இப்படியெல்லாம் பேசுவது, அவரின் அரசியல் எவ்வளவு மோசமானது என்பதையே காட்டுகிறது” என்றார்.

நடிகர் ரஜினிகாந்த்தின் ஆதரவாளரான இயக்குநர் பிரவீன்காந்திடம் பேசினோம்.

``நடிகர் ரஜினிகாந்த், தமிழ்நாட்டுக்கு மட்டுமேயான ஒரு நடிகராக இருந்தால், அவர் எந்தவொரு கருத்தையும் எளிதாகச் சொல்லிவிடலாம். சீமான் போன்றவர்கள் என்ன பேசினாலும், அது தமிழ்நாட்டுக்குள் முடிந்துவிடும். ஆனால், ரஜினி பேசினால் தேசிய சேனல்களிலும் அது விவாதிக்கப்படுகிற கருத்தாகிவிடும். அவரின் கருத்துகள் அந்தளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்துபவையாக இருக்கும்போது, அவர் மிகவும் நிதானமாகவும் பொறுமையாகவும் பேச வேண்டியிருக்கிறது. அதனால்தான், வன்முறைக்கு எதிரான கருத்தை அவர் பதிவுசெய்திருக்கிறார்.

பிரவீன் காந்த்
பிரவீன் காந்த்

குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து அவர் நேரடியாக என்ன கருத்து சொன்னாலும் அது சரியாக இருக்காது. அந்தச் சட்டம் சரிதான் என்று அவர் சொன்னால், அது பல விளைவுகளை ஏற்படுத்தும். தவறு என்று சொன்னால் ஆட்சியாளர்களுக்கு நெருக்கடியைக் கொடுக்கும். எனவே, இரண்டு பக்கங்களையும் அவர் பேலன்ஸ் செய்ய வேண்டியிருக்கிறது. எனவே, அவர் பொறுப்புடன் பேச வேண்டியுள்ளது. அவர் இஸ்லாமிய மக்களுக்கு எதிராக இருக்கிறார் என்றோ, இலங்கைத் தமிழர்களைக் கண்டுகொள்ளவில்லை என்றோ யாரும் சொல்ல முடியாது. பொறுப்புகள் அதிகமாக இருப்பதால் அவர் பேலன்ஸ் செய்ய வேண்டியிருக்கிறது.

CAA, NPR, NRC மூன்றையும் பற்றித் தெரியுமா... இவற்றுக்கிடையிலான ஒற்றுமை, வேற்றுமை என்ன?

மேலும், அரசியல் கட்சியை அவர் ஆரம்பித்துவிட்டால், எந்தவொரு பிரச்னையிலும் தன்னுடைய நிலைப்பாட்டை தெளிவாக அவரால் சொல்லிவிட முடியும். ஆனால், இன்னும் அவர் கட்சியை ஆரம்பிக்கவில்லை. யாரை ஆதரிப்பது, யாரை எதிர்ப்பது என்பதை முடிவுசெய்வதற்கான பணிகள் இப்போது நடந்துகொண்டிருக்கின்றன. இந்த நேரத்தில், எந்தவொரு கருத்து சொன்னாலும், அது எதிராகப் போய்விடும்.

Rajinikanth
Rajinikanth

இப்போது, மாணவர்கள் போராட்டம் நடத்துகிறார்கள். அவர்களை அழைத்து அரசு பேசவேண்டும். ரஜினிகாந்த், மாணவர்கள் வன்முறையில் ஈடுபடுகிறார்கள் என்று சொல்லவில்லை. முதலில் யார் வன்முறைக்குக் காரணமாக இருக்கிறார்களோ அவர்களைத்தான் ரஜினிகாந்த் எச்சரிக்கிறார். அந்த வகையில், போராடும் மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ள காவல்துறையைத்தான் அவர் கண்டித்துள்ளார்” என்றார்.