Published:Updated:

` பா.ஜ.க-வுக்கு எதிரான நிலைப்பாடா?!' - ரஜினி பேச்சின் பின்னணியை விவரிக்கும் அரசியல் விமர்சகர்

கலிலுல்லா.ச

``மக்கள் உணர்வை புரிந்துவருகிறரா? தமிழ்நாட்டின் நலன் சார்ந்து வருகிறாரா என்பதில்தான் அவருடைய வெற்றி இருக்கிறது"

ரஜினி
ரஜினி

` 30 கோடி மாணவர்களின் எதிர்காலத்திற்கானது இந்தப் புதிய கல்விக்கொள்கை. ஆனால், அதைப் பற்றிப் பரந்துபட்ட அளவில் விவாதங்கள் எழுப்பப்படவில்லை என்பது வருத்தமளிக்கிறது. கிராமப்புற, பழங்குடி மாணவர்கள், இதனால் பெரிதும் பாதிக்கப்படப்போகின்றனர். மூன்று வயதிலிருந்தே மும்மொழிகளைக் கற்க வேண்டும் என அவர்கள்மீது திணிப்பது ஆபத்தானது” என்று நடிகர் சூர்யா நிகழ்ச்சி ஒன்றில் பேசினார்.

அதைத்தொடர்ந்து, ``கல்வி என்பது ஒரு சமூக அறம். பணம் இருந்தால் விளையாடு என்று சொல்கிற சூதாட்டமாக அது மாறக்கூடாது. நம் நாட்டில் கல்வியானது ஏழைகளுக்கு ஒன்றாகவும் வசதி படைத்தவர்களுக்கு ஒன்றாகவும் இருக்கிறது என்பதை உணர, புள்ளி விவரங்கள் தேவையில்லை. மனசாட்சியே போதுமானது” என்று அடுத்து அறிக்கை ஒன்றையும் வெளியிட்டார்.

சூர்யா
சூர்யா

இது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. சூர்யாவின் கருத்துக்கு ஆதரவாகவும், எதிராகவும் கண்டனக்குரல்கள் எழுந்தன. கே.எஸ்.ரவிக்குமார், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், மக்கள் நீதிமய்யம் கட்சியின் தலைவர் கமல், திருமாவளவன் உள்ளிட்டோர் ஆதரவளித்தனர். பா.ஜ.க சார்பில் சூர்யா மீது பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. நேற்று நடந்த காப்பான் இசை வெளியீட்டு விழாவில், ``சூர்யா சொன்னதை மோடி கேட்டிருப்பார். சூர்யாவின் கருத்தை நான் ஆதரிக்கிறேன்” என்று ரஜினி கருத்து தெரிவித்துள்ளார்.

``ரஜினி, சூர்யா, திருமாவளவன் போன்றவர்கள் புதிய கல்வி கொள்கை குறித்து தங்களது எதிர்ப்பை பதிவு செய்து மக்களை குழப்புகிறார்கள். புதிய கல்விக் கொள்கை வந்தால் சமமான கல்வி அனைத்துத் தரப்பினருக்கும் நிச்சயமாக கிடைக்கும்” என தமிழிசை சௌந்தரராஜன் விமர்சித்துள்ளார்.

இந்நிலையில் இதுதொடர்பாக அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி, ``ரஜினியைப் பொறுத்தவரை சட்டமன்றத் தேர்தலுக்கு 8 மாதங்களுக்கு முன் அரசியல் களத்துக்கு வரலாம் என்று எண்ணுகிறார். அடுத்த முதல்வர் யார் என்பதில் தமிழகத்தில் வெற்றிடம் இருப்பதாக அவர் கருதுகிறார். அந்த வெற்றிடத்தை தான் நிரப்ப முடியும் என அவர் நம்புகிறார். கருணாநிதிக்கு வாக்களித்தவர்களில் பாதிபேர் தனக்கு வாக்களிப்பார்கள் என்று எதிர்பார்கிறார். மக்கள் உணர்வை புரிந்துவருகிறரா? தமிழ்நாட்டின் நலன் சார்ந்து வருகிறாரா என்பதில்தான் அவருடைய வெற்றி இருக்கிறது.

ரவீந்திரன் துரைசாமி
ரவீந்திரன் துரைசாமி

அப்படிப்பார்க்கும்போது, பா.ஜ.கவுக்கு ஆதரவாக ரஜினி செயல்படுகிறார் என்ற முன்முடிவுக்கு நாம் எப்படி வரமுடியும். பா.ஜ.க விரும்புகிறது என்பதால் ரஜினி அந்தக் கட்சியுடன் இணைந்துவிடுவார் என்றெல்லாம் கூறிவிடமுடியாது. அவர் இன்னும் அரசியல் களத்துக்கு வரவில்லை. அதனால் பா.ஜ.கவுக்கு எதிரான நிலைப்பாடு எடுப்பதற்கான தேவை எழவில்லை” என்றார்.

மேலும், ``விஜயகாந்த் இடைத்தேர்தலில் போட்டியிட்டு ஜெயலலிதாவை பலவீனப்படுத்தியதுபோல, ஆளும்கட்சியை பலவீனப்படுத்த கமல் களத்துக்கு வந்திருக்க வேண்டும். ஒருவேளை வேலூர் தேர்தலில் போட்டியிட்டு நாம் தமிழர் கட்சியைவிட குறைவான வாக்குகள் பெற்றுவிட்டால், அது தனக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என்று கருதி விலகினாரா என்று தெரியவில்லை” என்றார்.