Published:Updated:

உத்தரப்பிரதேசத்திலிருந்து `The Daily Guardian';மோடியைப் புகழ்ந்து கட்டுரை... எழுதியது யார் தெரியுமா?

``ஒரு பகுதியினருக்கு மட்டுமே எனது கட்டுரையை ஏற்றுக்கொள்வதில் சிக்கல் இருக்கிறது. நமது பிரதமருக்கு ஆதரவான ஒரு வார்த்தையைக்கூட ஏற்றுக்கொள்ள விரும்பாதவர்கள்தான் அவர்கள்.''

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

``இந்தியாவில், கொரோனா இரண்டாம் அலையைக் கட்டுப்படுத்தத் தவறிவிட்டார் மோடி'' என்கிற குற்றச்சாட்டை முன்வைத்து முன்னணி சர்வதேச ஊடகங்கள் பலவும் கட்டுரைகளை வெளியிட்டிருந்தன. இந்த விவகாரத்தில், உலகப் புகழ்பெற்ற `டைம்', `தி கார்டியன்', `தி வாஷிங்டன் போஸ்ட்' உள்ளிட்ட பல்வேறு பத்திரிகைகளும் மோடி தலைமையிலான மத்திய அரசைக் கடுமையாகச் சாடிக் கட்டுரைகள் வெளியிட்டன. லண்டனிலிருந்து வெளியாகும் புகழ்பெற்ற மருத்துவப் பத்திரிகையான `தி லான்செட்', ``கொரோனாவால் ஏற்பட்டிருக்கும் தேசியப் பேரழிவுக்கான முழுப் பொறுப்பும் மோடி அரசினுடையதே'' என்று காட்டமாக எழுதியிருந்தது.

பல சமயங்களில் மோடியின் அரசு பெருந்தொற்றைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் கவனம் செலுத்துவதைக் காட்டிலும், ட்விட்டரில் வரும் விமர்சனத்தை அகற்றுவதிலேயே அதிக கவனம் செலுத்தியது.
லான்செட் பத்திரிகை
நரேந்திர மோடி
நரேந்திர மோடி
AP Photo / Bikas Das

இந்தநிலையில், கடந்த மே 11-ம் தேதியன்று மத்திய அமைச்சர்கள், பா.ஜ.க நிர்வாகிகள் எனப் பலரும் `The Daily Gaurdian' என்ற செய்தித் தளத்தில் வெளியான கட்டுரையின் லிங்க்கை தங்களது சமூக வலைதளப் பக்கங்களில் ஷேர் செய்திருந்தனர். அந்தக் கட்டுரையின் தலைப்பு 'PM MODI HAS BEEN WORKING HARD; DON’T GET TRAPPED IN THE OPPOSITION’S BARBS'. அதாவது...

`பிரதமர் மோடி கடுமையாக உழைத்துக்கொண்டிருக்கிறார்; எதிர்க்கட்சியினரின் போலி கருத்துகளில் சிக்கிக்கொள்ளாதீர்கள்!'
- என்ற பொருளில் தலைப்பு வைக்கப்பட்டிருக்கிறது.

கட்டுரையில் என்ன சொல்லப்பட்டிருக்கிறது?

`பிரதமர் மோடி கொரோனாவுக்கு எதிரான போரில் அயராது உழைத்துக்கொண்டிருக்கிறார்' என்பதுதான் `தி டெய்லி கார்டியன்' கட்டுரையின் மூலக் கருத்து. ``இங்கே ஒரு பிரதமர், நெருக்கடியான சூழலில் அமைதியாக உழைத்துக்கொண்டிருக்கிறார். அரசியல் அறிக்கைகளுக்கு அவர் எதிர்வினையாற்றுவதில்லை. ஏனெனில், இது அதற்கான நேரமில்லை. தனது முழு ஆற்றலைக்கொண்டு தீர்வுகளைத் தேடுவதில் கவனம் செலுத்திவருகிறார். இரட்டை வேகத்தில் செயல்பட்டுவருகிறார். மற்றவர்களைப்போல அவரும், எல்லாவற்றுக்கும் குறை மட்டுமே சொல்லிக்கொண்டிருந்தால் யார் தீர்வு காண்பது?'' என்று ஒரு பத்தியில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

மேலும், பிரதமர்மீது குற்றம் சுமத்த நினைப்பவர்கள், கொரோனா மரணங்களைப் பற்றி மட்டுமே பேசுவதாகவும், கொரோனாவிலிருந்து மீண்ட ஏராளமான இந்தியர்களைப் பற்றிப் பேச மறுப்பதாகவும் அந்தக் கட்டுரையில் சொல்லப்பட்டிருக்கிறது.

கொரோனா
கொரோனா
கொரோனா:`மோடி பொறுப்பைக் கைகழுவிவிட்டார்' - சர்வதேச ஊடகங்கள் கடும் விமர்சனம்

`தி டெய்லி கார்டியன்' பத்திரிகை!

லண்டனில் வெளியாகும் புகழ்பெற்ற செய்தித் தாளான `தி கார்டியன்' போலவே இந்த ஊடகத்தின் பெயரும் இருப்பதால், முதலில் இது போலியாக உருவாக்கப்பட்ட செய்தி ஊடகம் என்கிற குற்றச்சாட்டு சமூக வலைதளங்களில் வைக்கப்பட்டது. ஆனால், `தி டெய்லி கார்டியன்' போலியான செய்தித் தளம் இல்லை.

இந்தியாவில், நியூஸ் X, இந்தியா நியூஸ் உள்ளிட்ட பல்வேறு செய்தி சேனல்களை நடத்தும் ITV நெட்வொர்க்கின் கீழ் இயங்கி வருவதுதான் `தி டெய்லி கார்டியன்'. இந்த ITV நெட்வொர்க், உத்தரப்பிரதேசத்தைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

எழுதியது யார்?

இந்தக் கட்டுரையை எழுதியவர் சுதேஷ் வெர்மா (Sudesh Verma). இவர் பா.ஜ.க-வின் தேசிய ஊடகப் பிரிவில் நிர்வாகியாகச் செயல்பட்டுவருகிறார்.

‘Narendra Modi The Game Changer’ என்ற புத்தகத்தை எழுதியவரும் இவர்தான். ஊடக விவாதங்களில், பலமுறை பா.ஜ.க ஆதரவாளராகப் பங்குகொண்டிருக்கிறார் சுதேஷ் வெர்மா.

சுதேஷ் வெர்மாவின் கட்டுரை வெளியான பின்னர், மத்திய இணை அமைச்சர்களான கிரண் ரிஜ்ஜூ, அனுராக் தாக்கூர், ஜித்தேந்தர் சிங், கிஷன் ரெட்டி உள்ளிட்டோரும், பா.ஜ.க-வின் முக்கியப் பிரமுகர்கள் பலரும் இந்தக் கட்டுரையைத் தங்களது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தனர். இதையடுத்துதான் சமூக வலைதளங்களில் சர்ச்சைகள் கிளம்பத் தொடங்கின.

தி டெய்லி கார்டியன்
தி டெய்லி கார்டியன்
இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்: `1948 டு 2021’ ; ஜெருசலேம் புனிதத் தலத்தில் வெடித்த வன்முறை! - என்ன பிரச்னை?

என்ன சர்ச்சை?

நெட்டிசன்கள் சிலர், ``பா.ஜ.க நிர்வாகி ஒருவர் கட்டுரை எழுதுகிறார். அந்தக் கட்டுரையை பா.ஜ.க அமைச்சர்கள், தலைவர்கள் தங்களது ட்விட்டர் பக்கத்தில் பகிர்கிறார்கள். பல சர்வதேச ஊடகங்களும், இந்திய ஊடகங்களும் `கொரோனா இரண்டாம் அலையின் மிகப்பெரிய தாக்கத்துக்கு மோடி அரசுதான் காரணம்' என்று வெளியிட்ட கட்டுரைகளுக்கு, பதிலடி கொடுக்கும் வகையில் திட்டமிட்டு இந்தக் கட்டுரையை வடிவமைத்திருக்கின்றனர். பா.ஜ.க-வினர் இதைச் சமூக வலைதளங்களில் ஷேர் செய்து, பிரதமருக்கு ஆதரவாகப் பிரசாரம் செய்துவருகின்றனர்'' என்று குற்றச்சாட்டுகளை அடுக்கினர்.

சுதேஷ் வெர்மாவின் பதில் என்ன?

இந்த விவகாரம் சர்ச்சையானது தொடர்பாக ஆங்கில ஊடகம் ஒன்றுக்குப் பேட்டியளித்திருந்தார் சுதேஷ் வெர்மா. அதில், ``நான் பா.ஜ.க நிர்வாகி என்பது பொது வெளியிலுள்ள அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான். இதை நான் எப்போதும் மறைத்ததில்லை. பா.ஜ.க தலைவர்கள் பலரும் நான் எழுதிய கட்டுரையைப் பகிர்ந்திருக்கின்றனர். ஏனெனில், அந்தக் கட்டுரை முழுக்க முழுக்க உண்மையை அடிப்படையாகக்கொண்டு எழுதப்பட்டது. இந்தக் கட்டுரைக்கும் என் அரசியல் சார்புக்கும் எந்தத் தொடர்பும் இல்லை'' என்று கூறியிருக்கிறார்.

மோடி, சுதேஷ் வெர்மா
மோடி, சுதேஷ் வெர்மா
Twitter
ஒரு பகுதியினருக்கு மட்டுமே எனது கட்டுரையை ஏற்றுக்கொள்வதில் சிக்கல் இருக்கிறது. நமது பிரதமருக்கு ஆதரவான ஒரு வார்த்தையைக்கூட ஏற்றுக்கொள்ள விரும்பாதவர்கள்தான் அவர்கள்.
சுதேஷ் வெர்மா

மேலும், ``சர்வதேச ஊடகங்கள் நமது அரசாங்கத்தைக் குறை கூறி எழுதினால் அதை ஏற்றுக்கொண்டு புகழ்ந்து தள்ளுவார்கள். அதுவே இந்தியா ஊடகம் ஒன்று நமது அரசைப் பாராட்டி எழுதினால், அதை ஏற்றுக்கொள்வதில் அவர்களுக்குச் சிக்கல் இருக்கிறது. இது பாசாங்குத்தனம்'' என்றும் கூறியிருக்கிறார் சுதேஷ் வெர்மா.

இந்த விவகாரம் பற்றிய உங்கள் கருத்துகளை கமென்ட்டில் பதிவிடுங்கள்!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு