Published:Updated:

செலவழித்த பணத்தைத் தருவாரா ஓ.பி.ஆர்... தனி மரமான ராஜேந்திர பாலாஜி... கழுகார் அப்டேட்ஸ்!

கழுகார்
கழுகார்

“இன்று ஏகப்பட்ட செய்திகள் குவிந்துள்ளன. ஒவ்வொன்றாகச் சொல்கிறேன் கேளும்” என்றபடி, ஹேங்க்அவுட்ஸ் மீட்டிங் ஸ்கிரீனில் தோன்றிய கழுகார், காபியை உறிஞ்சிக்கொண்டே பேசத் தொடங்கினார்.

டீனுக்கு முட்டுக்கட்டை... பழி தீர்க்கிறாரா அமைச்சர்?

அமைச்சர்கள், தமக்கு ஒத்துழைக்காத அதிகாரிகளை வேறு ஊருக்கு தூக்கி அடிப்பதுதான் வழக்கம். ஆனால், தனது சொந்த ஊரில் பணியாற்றும் மருத்துவக் கல்லூரி டீனுக்கு வேண்டுமென்றே டிரான்ஸ்ஃபர் கிடைக்காமல் அமைச்சர் தரப்பு பழி தீர்ப்பதாக புதுக்கோட்டையில் பேசிக்கொள்கிறார்கள். தஞ்சாவூரைச் சேர்ந்த மயக்கவியல் மருத்துவர் மீனாட்சிசுந்தரம், கடந்த ஓர் ஆண்டுக்கும் மேலாக புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரியில் டீனாகப் பணியாற்றிவருகிறார்.

விஜய பாஸ்கர்
விஜய பாஸ்கர்

இவருக்கும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கும் பிரச்னை எனக் கூறப்படுகிறது. இதனால், தனது சொந்த ஊரான தஞ்சாவூருக்கு டிரான்ஸ்ஃபர் வாங்க முயற்சி செய்துவருகிறார் டீன். ஆனால், டிரான்ஸ்ஃபர் கொடுக்கக் கூடாது என்பதில் அமைச்சர் தரப்பு முட்டுக்கட்டை போடுகிறதாம்! அமைச்சர் தரப்பில் கேட்டால், “விதிமுறைகளின்படிதான் எதையும் செய்ய முடியும். அதிலும் கொரோனா காலத்தில் எப்படி இடமாற்றம் தருவார்கள்?” என்கிறார்கள்.

ம.தி.மு.க எம்.பி மீது பாயும் உடன்பிறப்புகள்!

ஈரோடு எம்.பி-யான கணேசமூர்த்தி மீது தி.மு.க-வினர் கடும் அதிருப்தியில் இருக்கிறார்கள். “கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக தொகுதி வளர்ச்சி நிதியில் இருந்து ஒரு கோடி ரூபாயைக் கொடுத்ததுடன் சரி. வேறெந்த உதவியும் செய்யவில்லை. கணேசமூர்த்தியின் வீடு அருகே இருக்கும் அ.தி.மு.க பகுதிச்செயலாளர்கூட, தினமும் 500 பேருக்கு நிவாரணப் பொருள்களை வீடு வீடாகக் கொடுத்துவருகிறார். ஈரோடு மாவட்டத்தில் ஒரு தி.மு.க எம்.எல்.ஏ கூட இல்லை. தி.மு.க ஆதரவுடன், தி.மு.க-வின் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்ற எம்.பி-யும் இப்படி இருந்தால், நாளைக்கு எந்த முகத்தை வைத்துக்கொண்டு மக்களிடம் ஓட்டு கேட்பது?” என்று புலம்புகிறார்கள் உடன்பிறப்புகள்!

நெல்லை தி.மு.க எம்.பி மீது நில அபகரிப்பு புகார்!

நெல்லை நாடாளுமன்ற உறுப்பினரும் தி.மு.க-வின் மாவட்டப் பொருளாளருமான ஞானதிரவியம் மீது நில அபகரிப்பு புகார் எழுந்திருக்கிறது. ராதாபுரம் அருகே உள்ள சங்கனாபுரம் கிராமத்தைச் சேர்ந்த ஞானசேகரன் என்பவரின் மனைவி குமாரி பகவதி என்பவர், நெல்லை மாவட்ட எஸ்பி-யிடம் இது தொடர்பாக புகார் அளித்திருக்கிறார். அதில், தனக்குச் சொந்தமான சுமார் 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான சொத்தை ஞானதிரவியம் அபகரிக்க முயல்வதாகவும், அதைத் தட்டிக்கேட்டதற்கு தனது குடும்பத்தினருக்கு கொலை மிரட்டல் விடுப்பதாகவும் புகார் அளித்திருக்கிறார். ஆனால் ஞானதிரவியம் தரப்பினரோ, “நெல்லை மாவட்டத்தில் கொரோனா நிவாரணப் பணிகளில் ஞானதிரவியம் தீவிரம் காட்டிவருகிறார். அதைத் தடுக்கவே இந்த பொய்ப் புகாரைக் கொடுக்க ஆளுங்கட்சியினர் தூண்டியிருக்கிறார்கள். இதை சட்டப்படி எதிர்கொள்வோம்” என்கிறார்கள்.

`மது வருமானத்துக்கு மாற்று வழி தேடச்சொன்ன ரஜினி!' `திட்ட அறிக்கை' தயாரித்த தமிழருவி மணியன்

செலவழித்த பணத்தைத் தருவாரா ஓ.பி.ஆர்?

கொரோனா காலத்தில் தீவிரமாகக் களத்தில் இறங்கி நிவாரணப் பணிகளில் இயங்கினார், தேனி எம்.பி-யான ரவிந்திரநாத் குமார். அவரின் தந்தையும் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வமும் உடன் இருந்தார். ஆனால், ஆரம்பத்தில் இருவரும் காட்டிய வேகம் தற்போது இல்லையாம். கழக நிர்வாகிகளைக் கைகாட்டிவிட்டு இருவரும் அடிக்கடி சென்னை சென்றுவிடுகிறார்கள் என்கிறார்கள்.

ரவிந்திரநாத்
ரவிந்திரநாத்

இதுகுறித்து பேசிய மாவட்ட நிர்வாகிகள் சிலர், “ஆரம்பத்தில் ஓ.பி.ஆர் காட்டிய வேகத்தைப் பார்த்து நாங்களே மிரண்டுபோனோம். அத்துடன் சரி, எங்களை கைகாட்டிவிட்டு நகர்ந்துகொண்டார். இப்போது, பல இடங்களில் அவர் தரப்பில் கொடுத்த நிவாரண உதவிகளைவிட நாங்கள் அதிகமாகச் செய்திருக்கிறோம். எல்லாம் எங்கள் சொந்தப் பணம். செலவு செய்த பணத்தைக் கொடுப்பாரா என்று தெரியவில்லை” என்று புலம்புகிறார்கள்.

மணல் மாஃபியாக்களுக்கு ஆதரவாக அமைச்சரின் தம்பி?

கரூர் மாவட்ட காவிரியில் மணல் அள்ளி மொட்டையடித்து விட்டார்கள். தி.மு.க, அ.தி.மு.க என இரு கட்சிப் பிரமுகர்களும் இதில் உடந்தை. அரசும் தன் பங்குக்கு மணல் குவாரி அமைத்து மணலை சுரண்டி விற்றது. சமூக செயற்பாட்டாளர்களின் தொடர் போராட்டங்களால் ஒருகட்டத்தில் இங்கு அரசு மணல் குவாரிகள் மூடப்பட்டன. தற்போது கொரோனா ஊரடங்கு காலத்தைப் பயன்படுத்தி, மணல் கொள்ளை அதிகமாக நடக்கிறது. காவிரி, அமராவதி, நொய்யல் உள்ளிட்ட நீர்நிலைகளில் ஆளுங்கட்சியினர் 24 மணி நேரமும் மணல் அள்ளுகிறார்கள். போலீஸார் பிடித்தாலும் “லோடு யாரோடது தெரியுமா... அமைச்சரின் தம்பி வண்டி இது!” என்று சொல்லி மிரட்டுகிறார்களாம்!

போலி இ-பாஸ்... அலறும் நெல்லைவாசிகள்!

நெல்லை மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர், பல்வேறு மாநிலங்களில் தொழில் நிமித்தமாகத் தங்கியிருந்தனர். ஊரடங்கு விதிகளில் தளர்வு ஏற்பட்டுள்ள நிலையில், அவர்களில் பலரும் சொந்த கிராமங்களை நோக்கி திரும்பத் தொடங்கியுள்ளனர். இவர்களில் பலர் போலியான இ-பாஸ் மூலம் வருகிறார்கள். நெல்லை மாவட்ட சோதனைச் சாவடியில், இப்படி வருபவர்களை போலீஸார் கண்டுபிடித்தாலும் அவர்களை எங்கே அனுப்புவது என்று தெரியாமல் விழிபிதுங்கிவருகிறார்கள்.

மீண்டும் அ.தி.மு.க-வை உரசும் கே.சி.பி!

அ.தி.மு.க-வில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் எம்.பி-யான கே.சி.பழனிச்சாமி, “கட்சியில் இருந்து என்னை நீக்கும் அதிகாரம் இவர்களுக்கு இல்லை. உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படும் பொதுச் செயலாளருக்குதான் அந்த அதிகாரம் இருக்கிறது” என சவால் விட்டார். இதற்கிடையே, அ.தி.மு.க பெயரில் இணையதளம் நடத்துகிறார் என்ற புகாரைச் சொல்லி அவரை கைதுசெய்தது அ.தி.மு.க அரசு. வெளியில் வந்து இத்தனை நாள்கள் அமைதியாக இருந்தவர், இப்போது மீண்டும் அ.தி.மு.க -வை சீண்டத் தொடங்கிவிட்டார்.

சமீபத்தில் அ.தி.மு.க பிரமுகர் ஒருவருடன் பேசிய கே.சி.பி, ‘கொரோனா பணிகளில் அ.தி.மு.க அரசின் பணிகள் சரியில்லை; தி.மு.க-வின் ‘ஒன்றிணைவோம் வா’ திட்டம் அருமையாக இருக்கிறது’ என்றெல்லாம் புகழ்ந்து தள்ளினாராம். கே.சி.பி ஏற்கெனவே 234 தொகுதிகளிலும் ‘KCP Supporters’ என்ற பெயரில் வாட்ஸப் குழு நடத்திவருகிறார். தற்போது ஸூம் செயலியில் தினமும் 100 பேர்களிடம் மீட்டிங் நடத்தி, அந்தந்த தொகுதிகளில் உள்ள பிரச்னைகளுக்கு தீர்வு காண்போம் என்று கொளுத்திப் போட்டிருக்கிறாராம்.

தனி மரமான ராஜேந்திர பாலாஜி!

ராஜேந்திர பாலாஜி
ராஜேந்திர பாலாஜி

அமைச்சர் ராஜேந்திர பாலாஜியிடம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்பு போல சகஜமாகப் பேசுவதில்லையாம். சீனியர் அமைச்சர்களும் தொடர்புகொள்வது இல்லையாம். மாவட்டச் செயலாளர் பதவியைப் பிடுங்கிய பிறகு, மாவட்ட நிர்வாகிகளும் ஒதுங்கிவிட்டார்கள். மாதவரம் பால் பண்ணையில் ஊழியர் ஒருவருக்கு கொரொனா பாதிப்பு ஏற்பட்டு சில நாள்கள் தயாரிப்பு நிறுத்தப்பட்டு, வெளி மாவட்டங்களிலிருந்து சென்னைக்கு பால் கொண்டு வரப்பட்டது. அதற்கான ஏற்பாடுகளுக்குக்கூட அமைச்சரை எதுவும் கேட்கவில்லையாம். ஆவின் அதிகாரிகளே அனைத்தையும் செய்துவிட்டார்கள். தனிமரமாக வாடுகிறாராம் பாலாஜி!

Vikatan
அடுத்த கட்டுரைக்கு