Published:Updated:

பா.ஜ.க கூட்டணிக் கட்சிக்காக தேர்தல் ஆணையம் சமரசமா?

சிக்கிம் முதல்வருக்கு ஆதரவான உத்தரவை அடுத்து, சர்ச்சையில் உள்ளது தேர்தல் ஆணையத்தின் முடிவு.

ஜெயலலிதா - பிரேம் சிங் தமங்
ஜெயலலிதா - பிரேம் சிங் தமங் ( Vikatan )

இந்தியாவின் ஜனநாயகம் மீண்டும் கேள்விக்குள்ளாகி இருக்கிறது. இந்தியாவின் ஜனநாயகத்தைத் தாங்கி நிற்கும் அமைப்புகளான, நீதித்துறை, சிபிஐ, தேர்தல் ஆணையம் உள்ளிட்ட அமைப்புகள் தொடர்ந்து சர்ச்சையில் சிக்கி, இந்தியாவின் அரசியல் சூழல் மீதான பயத்தை அதிகரித்துக் கொண்டே வருகின்றன.

பிரேம் சிங் தமங்
பிரேம் சிங் தமங்

இந்நிலையில், இந்திய அரசியலமைப்பை அர்த்தமுள்ளதாக மாற்றும், இந்தியத் தேர்தல் ஆணையம் மற்றுமொரு புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளது. சிக்கிமில் இந்த வருடம் நாடாளுமன்றத் தேர்தலுடன் சேர்த்து சட்டமன்றத் தேர்தலும் நடைபெற்றது. அந்தத் தேர்தலில் கடந்த 20 ஆண்டுக்காலம் சிக்கிமை ஆட்சி புரிந்த பவன் குமார் சாம்லிங் தோற்கடிக்கப்பட்டார். சிக்கிம் கிரந்திகாரி மோர்ச்சா எனும் மாநிலக் கட்சி, பவனின் சிக்கிம் ஜனநாயக முன்னணியை விட இரண்டு தொகுதிகளை அதிகம் கைப்பற்றி ஆட்சியைப் பிடித்தது. அதன்படி, சிக்கிம் கிரந்திகாரி மோர்ச்சா தலைவர் பிரேம் சிங் தமங் (எ) பி.எஸ்.கோலே முதல்வராகப் பொறுப்பேற்றுக்கொண்டார்.

ஆனால், பிரேம் சிங் தமங் ஒரு ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டு, சிறையிலிருந்து திரும்பியவர். அவ்வாறு தண்டனை பெற்ற ஒருவர் விடுதலையான தேதியிலிருந்து 6 ஆண்டுகள் கழித்தே தேர்தலில் போட்டியிட முடியும் என்று தேர்தல் ஆணையத்தின் விதி இருந்தது. இந்நிலையில் பிரேம் சிங் தமங் ஊழல் வழக்கில் விடுதலையான 2018 ஆகஸ்ட் மாதம் 10-ம் தேதி முதல் 2024-ம் ஆண்டு வரை 6 ஆண்டுகள் அவரால் தேர்தலில் போட்டியிட முடியாத நிலை இருந்தது.

பா.ஜ.க.வுடன் கூட்டணி
பா.ஜ.க.வுடன் கூட்டணி

சட்டமன்ற உறுப்பினரல்லாதவர் முதலமைச்சரானால், 6 மாதங்களுக்கு உள்ளாக அவர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றியடைந்து சட்டமன்ற உறுப்பினராக வேண்டும் என்ற சட்டம், பிரேம் சிங் தமங் தொடர்ந்து ஆட்சியில் இருக்கவும் தடையாக இருந்தது. இந்நிலையில், பிரேம் சிங் தமங் தேர்தல் ஆணையத்திடம் கொடுத்த மனுவின் அடிப்படையில், தேர்தல் ஆணையம், அவருக்குத் தேர்தலில் போட்டியிட விதிக்கப்பட்ட தடையை 13 மாதங்களாகக் குறைத்து நேற்று உத்தரவு பிறப்பித்தது. அதைத் தொடர்ந்து பிரேம் சிங் தமங் இடைத்தேர்தலில் போட்டியிட நேற்று மனுத்தாக்கல் செய்தார். இடைத்தேர்தலுக்கு பிரேம் சிங் தமங்கின் சிக்கிம் கிரந்திகாரி மோர்ச்சா கட்சி பா.ஜ.க-வுடன் கூட்டணி அமைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வைத் தொடர்ந்து இரு கேள்விகளுக்குப் பதில் தேட வேண்டியது அவசியமாகிறது, ஒன்று, இந்த விஷயத்தில் தேர்தல் ஆணையத்தின் அதிகாரம் என்ன? இரண்டு, தேர்தல் ஆணையம் 13 மாதங்களாகத் தடைக்காலத்தைக் குறைத்திருப்பதற்காக சொல்லப்பட்ட காரணம் என்ன?

தேர்தல் ஆணைய உத்தரவு
தேர்தல் ஆணைய உத்தரவு

முதலில், தேர்தல் ஆணையத்தின் அதிகாரம் என்ன என்பது பற்றிப் பார்ப்போம்...

மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் பிரிவு 11, `தேர்தல் ஆணையம், முறையாக காரணங்களைப் பதிவு செய்து, இந்த அதிகாரத்தின் கீழுள்ள பிரிவுகளின் படி ஒருவரின் தகுதியின்மையை (தடை காலத்தை) குறைக்கவோ, நீக்கவோ முழு அதிகாரம் உடையது' எனக் கூறுகிறது. இதன்படி தேர்தல் ஆணையம் தன்னுடைய அதிகாரத்திற்கு உட்பட்டே இந்த முடிவினை எட்டியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இரண்டாவது, தேர்தல் ஆணையம் 13 மாதங்களாகத் தடைக்காலத்தைக் குறைத்திருப்பதற்காகச் சொல்லப்பட்ட காரணம் என்ன?

தமங் அளித்த மனுவில், '1990 ஆம் ஆண்டின் ஊழல் குற்றத்திற்காக தனக்கு தண்டனை வழங்கப்பட்டது 1996-97 வருடங்களில்தான், அப்போதைய மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் படி, இரண்டாண்டுகளுக்கு மேல் தண்டனை பெற்றவர்களுக்குத்தான் தேர்தலில் போட்டியிடத் தகுதி இல்லை என்று இருந்தது. எனவே, தனக்கு ஆறு ஆண்டுகள் தடை செல்லாது' எனக் கூறி இருந்தார்.

`இது வாஜ்பாயின் பா.ஜ.க அல்ல!’ - யஷ்வந்த் சின்ஹா

மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் பிரிவு 8 , 2003 ஆம் ஆண்டுதான் `2 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை பெற்றவர்' என்ற பகுதியை நீக்கி திருத்தியெழுதப்பட்டது. அதன் அடிப்படையிலேயே தற்போது தமங்கின் தடைக்காலத்தைக் குறைத்து உத்தரவிட்டிருந்தது தேர்தல் ஆணையம்.

சரி இதற்கும் தமிழ்நாட்டிற்கும் என்ன சம்பந்தம் என்று தானே கேட்கிறீர்கள்... சொல்கிறேன்!

தேர்தல் ஆணையம் சிக்கிம் முதல்வருக்கு அளித்திருக்கும் தடை காலம் 13 மாதங்கள். இது இவர் சிறையிலிருந்து விடுதலையான 2018 ஆகஸ்ட் மாதம் 10-ம் தேதி முதல் 2019 செப்டம்பர் மாதம் 10-ம் தேதி வரையான காலம் ஆகும்.

உச்ச நீதிமன்றத்தில் பின்வாங்கிய தேர்தல் ஆணையம்! - கர்நாடக அரசியலில் புதிய திருப்பம்

ஆனால், பிரேம் சிங் தமங் சிக்கிம் முதல்வராகப் பதவியேற்றுக்கொண்ட தினம் 2019 மே மாதம் 27-ம் தேதி, அதாவது அவர் தேர்தலில் போட்டியிடக்கூட தடை பெற்றிருந்த காலம். அப்படியெனில், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப்படி, சட்டமன்ற உறுப்பினராகப் போட்டியிடக்கூட தகுதியில்லாத ஒருவரை ஆளுநர் முதலமைச்சராகப் பதவிப்பிரமாணம் செய்து வைத்தது செல்லுமா? இதுதான் அதிமுக்கியமான கேள்வி.

இதற்கான பதிலும் ஒரு உச்ச நீதிமன்ற தீர்ப்பின் வழியாகவே நமக்குக் கிடைக்கிறது. (உச்ச நீதிமன்ற தீர்ப்புகள் முன்மாதிரி (precedent) சட்டங்களாக எடுத்துக்கொள்ளப்படும்). அதுவும் தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வழக்கில் உச்ச நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பு, இதற்கு முன்னோடியாக இருக்கிறது.

டான்சி ஊழல் வழக்கில் ஜெயலலிதா தண்டனை பெற்றது 2000 ஆம் ஆண்டு. ஆனால், 2001 ஆம் ஆண்டு ஜூன் மாதம் அவர் முதலமைச்சராகப் பதவி ஏற்றுக் கொண்டார்.

இதைத் தொடர்ந்து 2001 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் உச்ச நீதிமன்றத்தின் அரசியலமைப்பு சிறப்பு அமர்வு, சட்டமன்ற உறுப்பினராகத் தகுதியற்ற ஒருவரை, முதலமைச்சராகப் பதவி ஏற்றுக்கொள்ள ஆளுநர் அழைப்பு விடுத்தது அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என்றும், சட்டமன்ற உறுப்பினர் ஆகாமல் ஒருவர் ஆறு மாதம் முதலமைச்சராக இருக்கலாம் என்றும் சட்டம், தகுதியிழப்பு செய்யப்பட்ட இந்த இடத்தில் பொருந்தாது என்றும் தீர்ப்பளித்தது.

பிரேம் சிங்க் தமங் பதவியேற்பு
பிரேம் சிங்க் தமங் பதவியேற்பு

இந்நிலையில், இந்தத் தீர்ப்பின் அடிப்படையில், தற்போது சிக்கிம் முதலமைச்சராக பிரேம் சிங்க் தமங் தொடர முடியாது. அதற்கான தகுதியை அவர் இழந்துவிட்டார். மேலும், அவர் முதலமைச்சராகத் தொடர்வது அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது. ஆனால், இது தொடர்பாகக் கேள்வியும் கேட்கப்படவில்லை, பதிலும் சொல்லப்படவில்லை என்பதே உறுத்தலாக இருக்கிறது. ஜெயலலிதா இந்த வழக்கின் முடிவில் பதவி விலகி, ஓ.பன்னீர்செல்வம் முதலமைச்சரானார். ஆனால் தமங் மட்டும் இன்னும் ஆட்சிக் கட்டிலில் இருப்பது ஏன்? மத்திய அரசு, தேர்தல் ஆணையம், நீதித்துறை என அனைத்து அமைப்புகளும் பதில் சொல்லக் கடமைப்பட்டிருக்கிறது. நமக்கல்ல, ஜனநாயகத்திற்கு!