பாலிவுட் நடிகர் ஷாருக் கான் மகன் ஆர்யன் கான், 2021-ம் ஆண்டு அக்டோபர் மாதம் போதைப்பொருள் பயன்படுத்தியதாக சொகுசு கப்பலில் கைதுசெய்யப்பட்டார். அப்போது மும்பையில் மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரியாக இருந்த சமீர் வான்கடே தலைமையிலான அதிகாரிகள் மும்பையிலிருந்து கோவாவுக்குச் சென்ற கப்பலில் ரெய்டு நடத்தி ஆர்யன் கானையும், அவருடைய நண்பர்களையும் கைதுசெய்தார். ஆனால், ஆர்யன் கானைக் கைதுசெய்த பிறகு அவரை இந்த வழக்கிலிருந்து விடுவிக்க ஷாருக் கானிடம் ரூ.25 கோடி கேட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. இது குறித்து ஆரம்பத்திலேயே புகார் வந்தாலும், அந்தக் குற்றச்சாட்டை சமீர் வான்கடே மறுத்துவந்தார். இந்தக் குற்றச்சாட்டுகளால் சமீர் வான்கடே சென்னைக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.

சமீபத்தில் சமீர் வான்கடே, மூன்று அதிகாரிகள்மீது சி.பி.ஐ அதிகாரிகள் லஞ்ச ஊழல் வழக்கு பதிவுசெய்தனர். இதனால் சமீர் வான்கடே கடும் அதிர்ச்சியடைந்திருக்கிறார். சி.பி.ஐ வழக்கு பதிவுசெய்த பிறகு சமீர் வான்கடே இல்லத்தில் ரெய்டு நடத்தப்பட்டது.
மும்பை உட்பட நாடு முழுவதும் 29 இடங்களில் இந்த ரெய்டு நடந்தது. இந்த நடவடிக்கைக்குப் பிறகு சமீர் வான்கடே வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ``தேசபக்தனாக இருந்ததற்குத் தக்க பரிசு கிடைத்திருக்கிறது. என்னுடைய மனைவியும், குழந்தைகளும் இருந்தபோது சி.பி.ஐ அதிகாரிகள் 18 பேர் 12 மணி நேரத்துக்கும் மேலாக எனது வீட்டில் ரெய்டு நடத்தியிருக்கின்றனர்.

அவர்களின் சோதனையில் ரூ.23,000 பணமும், நான்கு சொத்து ஆவணங்களும் கிடைத்தன. அந்தச் சொத்துகள் நான் இந்தப் பணிக்கு வருவதற்கு முன்பே வாங்கியதாகும். சி.பி.ஐ அதிகாரிகள் என்னுடைய மனைவியின் போனை வாங்கிச் சென்றிருக்கின்றனர். என்னுடைய தந்தையின் வீட்டிலிருந்து ரூ.28,000 பணமும், என்னுடைய சகோதரி வீட்டிலிருந்து ரூ.28,000 பணமும், என்னுடைய மாமனார் வீட்டிலிருந்து 1,800 ரூபாயும் சோதனையில் பறிமுதல் செய்திருக்கின்றனர்" என்று வேதனையுடன் குறிப்பிட்டிருக்கிறார்.