Published:Updated:

`ஊரடங்கு இல்லை.. 144 தடை உத்தரவு மட்டுமே!’ - கொரோனா தடுப்பு நடவடிக்கையில் புதுச்சேரி

கொரோனா
கொரோனா

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக, புதுச்சேரியில் மார்ச் 31-ம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பதுடன் பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டிருக்கின்றன.

உலகையே அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸால் சுமார் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், 10,000-க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்திருக்கின்றனர். அதனால் அனைத்து நாடுகளும், பொதுமக்கள் கூடும் இடங்களை மூட உத்தரவிட்டிருப்பதுடன், வீட்டை விட்டு மக்கள் வெளியே வருவதற்குத் தடை விதித்திருக்கின்றன.

`ஊரடங்கு இல்லை.. 144 தடை உத்தரவு மட்டுமே!’ - கொரோனா தடுப்பு நடவடிக்கையில் புதுச்சேரி

இந்தியாவில் இந்த வைரஸ் பரவாமல் தடுப்பதற்காக, மத்திய அரசு பல்வேறு கட்டுப்பாடுகளையும், முன்னேற்பாடு நடவடிக்கைகளையும் மேற்கொண்டுவருகிறது. புதுச்சேரியில் பள்ளி, கல்லூரி, திரையரங்கு, மால், சண்டே மார்க்கெட், பார்கள் முதலியவற்றை வரும் 31-ம் தேதி வரை மூட உத்தரவிட்டிருக்கும் முதல்வர் நாராயணசாமி, கொரோனா விழிப்புணர்வு குறித்த அதிகாரிகளின் பணியை நேரில் சென்று பார்வையிட்டுவருகிறார்.

  • இந்நிலையில், புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் இன்று மாலை செய்தியாளர்களைச் சந்தித்த முதல்வர் நாராயணசாமி, ”புதுச்சேரி கடற்கரைச் சாலையில் காலை மற்றும் மாலை நேரங்களில் மக்கள் கூட்டமாக நடைப்பயிற்சி மேற்கொள்வதால், கொரோனா வைரஸ் பரவுவதற்கான வாய்ப்புகள் அதிக அளவில் இருக்கிறது. அதனால் புதுச்சேரியின் கடற்கரைச் சாலை, வரும் 31-ம் தேதி வரை முழுமையாக மூடப்படுகிறது. ஏற்கெனெவே அறிவித்தது போல நாளை (22.03.2020) காலை 7 மணி தொடங்கி இரவு 9 மணி வரை தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகள், வியாபார நிறுவனங்கள் என அனைத்தும் மூடப்படும். மதுபானக்கடைகள் முழுமையாக மூடப்படும். மக்கள் நடமாட்டம் முழுமையாக தவிர்க்கப்படும்.

முதல்வர் நாராயணசாமி செய்தியாளர் சந்திப்பு
முதல்வர் நாராயணசாமி செய்தியாளர் சந்திப்பு

வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. 10 வயதுக்குட்பட்ட குழந்தைகள் 31-ம் தேதி வரை வெளியே நடமாடுவதைத் தடுக்க வேண்டும். அதேபோல 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் கண்டிப்பாக வெளியில் நடமாடக்கூடாது. சுப நிகழ்ச்சிகள் மற்றும் துக்க நிழ்ச்சிகளில்கூட குறைவான நபர்களே கலந்துகொள்ள வேண்டும்.

புதுச்சேரி எல்லைகளில் ஆய்வு செய்யும் முதல்வர் நாராயணசாமி
புதுச்சேரி எல்லைகளில் ஆய்வு செய்யும் முதல்வர் நாராயணசாமி

இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் வேகமாகப் பரவி வருகிறது. இரண்டு தினங்களுக்கு முன்பு, நாளொன்றுக்கு 20 முதல் 25 பேருக்கு மட்டுமே தெரிந்த அறிகுறி, நேற்று ஒரே நாளில் 68 ஆக அதிகரித்திருக்கிறது. கொரோனா வைரஸ் இந்தியாவில் அதிக அளவில் பரவத் தொடங்கியிருப்பதை உணர்ந்து, அதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை நாம் மேற்கொள்ள வேண்டும்.

தமிழகப் பகுதியான ஆரோவில்லுக்கு வரும் ஏராளமான அயல்நாட்டவர்கள் புதுச்சேரிக்கும் வருகிறார்கள். அவர்கள் எங்கே செல்கிறார்கள், எங்கே தங்குகிறார்கள் என்பதைக் கண்டுபிடிப்பது மிகவும் சிரமம் என்பதால், மாவட்ட ஆட்சியரும், காவல்துறை அதிகாரிகளும் ஆரோவில் சென்று ஆய்வு மேற்கொண்டனர். வெளிநாட்டவர்கள் ஆரோவில்லுக்குள் வரக்கூடாது என்று கடந்த 14-ம் தேதியிலிருந்து தடை விதிக்கப்பட்டிருக்கிறது. அதை மீறி வெளிநாட்டிலிருந்து ஆரோவில் வருபவர்கள் தடுக்கப்படுவார்கள். கிழக்கு கடற்கரைச் சாலையில் ஆரோவில் செல்லும் வழியில், மாவட்ட ஆட்சியர் மற்றும் மருத்துவக் குழுவினர் கண்காணித்து, அவர்களைப் பரிசோதனை செய்தவற்கான நடவடிக்கையும் எடுக்கப்பட்டிருக்கிறது.

கொரோனா தடுப்பு நடவடிக்கைளைப் பார்வையிடும் நாராயணசாமி
கொரோனா தடுப்பு நடவடிக்கைளைப் பார்வையிடும் நாராயணசாமி

மருத்துவமனைக்கு வருபவர்கள் குறைவான எண்ணிக்கையில் வர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. திங்கள்கிழமை (23-ம் தேதி) காலை முதல் வரும் 31-ம் தேதி வரை 144 தடை உத்தரவு போடப்பட்டிருக்கிறது. இந்த நாள்களில் காலை 8 மணி முதல் 9 மணி வரையும், மாலை 6 மணி முதல் 9 மணி வரையும் பொதுமக்கள் கடைகளுக்குச் சென்று தங்களுக்குத் தேவையான பொருள்களை வாங்கலாம். உணவுப் பொருள்கள், மருந்து, பால் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள் விற்கும் கடைகள் 24 மணி நேரமும் திறந்திருக்கும். ஆனாலும் அங்கும் கூட்டம் சேருவதைத் தவிர்க்க வேண்டும் என்று தெரிவித்திருக்கிறோம். புதுச்சேரிக்கு வருகின்ற வாகனங்கள் குறைவாக இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால், முழுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படவில்லை. அத்தியாவசிய துறைகள் அனைத்தும் தொடர்ந்து இயங்கும். நானும் அமைச்சர்களும் அவர்களுடன் இணைந்து கொரோனா வைரஸ் புதுச்சேரி மாநிலத்தில் பரவாமல் இருப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்போம்” என்றார்.

ஊரடங்கு இல்லை.144 தடை உத்தரவு மட்டுமே!

புதுச்சேரி மாநிலத்தில் நாளை 22 -ம் தேதி மட்டும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வரும் திங்கட்கிழமை 23-ம் தேதி முதல் 31 தேதி வரை 144 தடை உத்தரவு மட்டும் புதுச்சேரி மாநிலத்தில் அமலில் இருக்குமென முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். 'திங்கள்கிழமை முதல் மார்ச் 31-ம் தேதி வரை கடைகள், உணவகங்கள் உள்ளிட்ட வணிக நிறுவனங்கள் வழக்கம்போல் திறந்திருக்கும். இந்த குறிப்பிட்ட நாளில் 5 நபர்களுக்கு மேல் ஒன்றுகூடக்கூடாது என்ற 144 தடை உத்தரவு மட்டும் அமலில் இருக்கும்' என முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு