Published:Updated:

முழு ஊரடங்குடன் கொரோனா நிவாரண நிதி... புதிய அரசால் சாத்தியமா?!

புலம்பெயர் தொழிலாளர்கள்
புலம்பெயர் தொழிலாளர்கள் ( AP )

தமிழக முதல்வராகப் பொறுப்பேற்ற மு.க.ஸ்டாலின் கையெழுத்திட்ட 5 முக்கிய அறிவிப்புகளில் குடும்பங்களுக்கு கொரோனா நிவாரண நிதி 4,000 ரூபாய் அளிக்கப்படும் என்பதும் முக்கியமானது. இருக்கும் நிதி நெருக்கடியில் இது சாத்தியமா?

தமிழகத்தில் ஓரளவு கட்டுக்குள் இருந்த கொரோனா தொற்று தற்போது அதிகரித்து வருகிறது. மருத்துவமனை வாசல்களில் ஆம்புலன்ஸில் நீண்ட வரிசையில் ஆக்ஸிஜனுக்காக காத்திருக்கிறார்கள். கொரோனாவை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்துவருகிறது. மருத்துவர்களும் இரவு பகல் பார்க்காமல் மிகத் தீவிரமாக கொரோனாவுக்கு எதிராகப் போராடி வருகின்றன. ஆனால், முகக் கவசத்தை முறையாக அணியாமல், பொது இடங்களில், விற்பனை நிலையங்களில் முறையான சமூக இடைவெளியைப் பின்பற்றாமல் இருப்பது என மக்கள் தொடர்ந்து அலட்சியமாக நடந்துகொள்வதையும் பார்க்க முடிகிறது. இதனால், தற்போது தமிழக அரசு படிப்படியாக ஊரடங்கை அமல்படுத்தி வருகிறது. ஊரடங்கு, தடுப்பூசி திருவிழா என அரசு எந்த அளவிற்கு நடவடிக்கைகள் எடுக்கின்றதோ அதே அளவு மக்களும் கொரோனா தொற்று பரவல் தடுப்பில் விழிப்புணர்வுடன் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். அப்போதுதான் கொரோனா பரவலிலிருந்து நாடு விரைவில் விடுதலை அடையும்.

தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்
தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்

கொரோனா தடுப்பில் ஊரடங்கு என்பது இறுதி ஆயுதம் தான். ஆனால், நிலைமை கைமீறிப்போகும் போது முழு ஊரடங்கு என்பதைத் தவிர மக்களைக் காக்க அரசிடம் அதைத் தவிர வேறு வழியும் இல்லை என்று வல்லுநர்கள் அறிவுறுத்தி வருகிறார்கள்.

பொருளாதாரம் - காத்திருக்கும் சவால்கள்  - “மீண்டும் ஓர் ஊரடங்கு வேண்டாம்!”

ஊரடங்கை அமல்படுத்திவிட்டு குடும்பத்திற்கு 4,000 ரூபாய் முதல் 5,000 ரூபாய் வரை நிவாரண நிதியாகக் கொடுத்துவிட்டால் மக்கள் பொருளாதாரப் பிரச்னைகளிலும் இருந்தும் கொரோனா தொற்றிலிருந்தும் காப்பாற்றலாம் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. பதவியேற்றதும் முதல் கையெழுத்தாக முதல்வர் மு.க.ஸ்டாலின், கொரோனா நிவாரண நிதியாக குடும்பங்களுக்கு 4,000 ரூபாய் வழங்கப்படும் என்ற அறிவிப்பிலும் கையெழுத்திட்டார். தற்போது இருக்கும் நிதி நெருக்கடியில் புதிதாக ஆட்சி அமைக்க உள்ள மு.க.ஸ்டாலின் அரசால் இது சாத்தியமாகுமா என பொருளாதார அறிஞர் பேராசிரியர் ஜோதி சிவஞானத்திடம் பேசினோம்...

“இன்றைக்கு இருக்கும் தமிழகத்தின் நிதிநிலைக்கு குடும்பத்திற்கு ரூ. 4,000 ஆயிரம் நிவாரண நிதியாகக் கொடுப்பது சிக்கலானது. பணித்துறை இந்த முறை நிச்சயம் பாதிக்கப்படும். இதனால், அரசுக்கு வருவாய் பெரிய அளவில் பாதிக்கப்படும். இந்த நிதியாண்டின் முடிவில் மொத்தக் கடன் விகிதம் 5.7 லட்சம் கோடியாக இருக்கும் என்று சொல்கிறார்கள். மாநிலங்களுக்கு வர வேண்டிய வரிவருவாய் 20 சதவிகிதம் குறைந்திருக்கிறது என்றால் மத்திய அரசிடம் இருந்து மாநிலங்களுக்கு வர வேண்டிய வரி வருவாய் 30 சதவிகிதம் குறைந்திருக்கிறது. கொரோனா முடிந்துவிட்டது என்று நினைத்திருந்த வேளையில் மிக வீரியமாக இரண்டாவது அலை பரவிக்கொண்டிருக்கிறது.

ஜோதி சிவஞானம்
ஜோதி சிவஞானம்

புதிதாக வந்துள்ள தி.மு.க அரசு ஏதாவது ஒரு தீர்வைக் கொண்டுவர வேண்டும் என்று முயற்சி செய்வார்கள் என்றுதான் நினைக்கிறேன். பதவியேற்கும் முன்பே கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மு.க.ஸ்டாலின் தொடங்கிவிட்டார் என்பதால் நிச்சயம் மக்கள் பொருளாதார நெருக்கடிகளைச் சந்திக்காத அளவிற்கான திட்டங்களைச் செயல்படுத்துவார் என்ற நம்பிக்கை இருக்கிறது.

முழு ஊரடங்கை அமல்படுத்தக்கூடாது. ஏனென்றால் கொரோனா தொற்றால் ஏற்பட்ட இழப்பை விட ஊரடங்கால் ஏற்பட்ட பாதிப்பு அதிகம். நோய் பாதிக்கும் அளவு பற்றியாவது நமக்கு ஒரு தெளிவு இருக்கிறது. ஆனால், ஊரடங்கால் ஏற்படும் இழப்பை நம்மால் நிச்சயம் அளவிட முடியாது. முதல்நாள் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தால் அடுத்தநாள் காலையில் சொந்த ஊரை நோக்கி தொழிலாளிகள் நடக்கத் தொடங்கிவிடுகிறான். 24 மணி நேரம் கூட தங்களைக் காத்துக்கொள்ள முடியாத பொருளாதாரச் சூழலில் தான் இன்றும் பல ஆயிரம் தொழிலாளர்கள் இந்தியாவில் வாழ்ந்துகொண்டிருக்கின்றான். மகராஷ்டிரா, கேரளா-வில் ஊரடங்கு அறிவித்தப்பின்னர் கிட்டத்தட்ட 10 மில்லியன் மக்கள் சொந்த ஊரை நோக்கிச் சென்றிருக்கிறார்கள். சமீபத்தில் 100 நாள் ஊரடங்கு வேலைத்திட்டத்தில் பதிவிடும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் தரவுகள் கூறுகின்றன.

முழு ஊரடங்கு
முழு ஊரடங்கு

முதல் அலையின் போது கொரோனா தொற்று பற்றிய புரிந்துகொள்ள நேரம் தேவையாக இருந்தது, தடுப்பூசி இல்லை எனவே ஊரடங்கு தேவைப்பட்டது. ஆனால், தற்போது இந்தச் சிக்கல்கள் ஏதும் இல்லை. நோய் பற்றியும் பரவும் விதம் பற்றியும் தெளிவான பார்வை இருக்கிறது. கொரோனா தடுப்பூசி இருக்கிறது. தடுப்பூசி அனைவருக்கும் கொடுக்கும் நடவடிக்கைதான் இனி எடுக்க வேண்டும். அதுவும் இலவசமா கொடுக்கப்பட வேண்டும். ஏனென்றால் தடுப்பூசி என்பது உணவு, நீர், உறைவிடம் போல தற்போது அத்தியாவசியமான ஒன்றாகிவிட்டது” என்றார்.

கொரோனா: இரண்டாம் அலையின் முதல் முழு ஊரடங்கு! - எப்படி இருந்தது தமிழகம்? #PhotoAlbum

தருமபுரி தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர், மருத்துவர் செந்தில் குமாரிடம் பேசினோம்

கொரோனா தொற்று பரவல் அதிகரித்த இரண்டாவது, மூன்றாவது வாரங்களில் புதிதாக பொறுப்பேற்கும் அரசு முழு ஊரடங்கு போட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. டெல்லி, உத்தரப்பிரதேசத்தில் இருக்கும் நிலைமை விரைவில் தமிழகத்திற்கும் வரும். தமிழகத்தில் பணமும், அதிகாரமும் உள்ள நபருக்கே உரிய மருத்துவ வசதி கிடைப்பதே மிகவும் சிரமமாக இருக்கிறது. இந்தச் சூழலில் பாமர மக்களின் நிலைமையை யோசித்துக்கூடப் பார்க்க முடியவில்லை. அந்தளவிற்கு வேதனையாக இருக்கிறது. தமிழகத்தில் சுகாதாரக் கட்டமைப்பு சிறப்பாக இருப்பது என்பதில் மறுப்பதற்கு இல்லை. ஆனால், மருத்துவ ஊழியர்கள் பற்றாக்குறையும், படுக்கை வசதிகளும் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு இல்லை என்பதுதான் உண்மை. புதிதாக முதல்வராகப் பொறுப்பேற்க உள்ள தி.மு.க தலைவர் ஸ்டாலின் தற்காலிகப் பணியாளர்களாக இருந்த செவிலியர்கள் 1,200 பேரை நிரந்தரமாக்கி உள்ளார். அதேபோல படுக்கை வசதிகளை மேம்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும். மருத்துவ உபகரணங்களும் அதிக அளவில் உற்பத்தி செய்யப்படும். இப்போது இறப்பவர்கள் எல்லாம் முந்தைய அரசாங்கத்தின் நிர்வாகத்திறன் இன்மையால்தான் என்பது மறுப்பதற்கு இல்லை. இந்த நிலை இன்னும் கூடுதலாக ரெண்டு மாதங்கள் நீடிக்கும். மத்திய அரசு சார்பில் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இனியும் எடுக்காது எனும் சூழலில் பொறுப்பேற்க உள்ள புதிய அரசுக்கு இருக்கும் மிகப்பெரிய சவாலே கொரோனாவை கட்டுப்படுத்துவதாகத்தான் இருக்கப்போகிறது.

செந்தில்குமார் - தி.மு.க எம்.பி
செந்தில்குமார் - தி.மு.க எம்.பி

இந்தச் சவாலைச் சமாளிக்க வேண்டும் என்றால் தமிழகத்தில் கட்டாயம் அடுத்த இரண்டு மாதங்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட வேண்டும். ஜூன் 3-ஆம் தேதி வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ள 4,000 ரூபாய் நிவாரணத் தொகையை உடனடியாக வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் கையெழுத்திட்டார். நெருக்கடிகளைச் சமாளித்து தி.மு.க இந்தத் திட்டத்தை திறம்படச் செயல்படுத்தும்” என்றார்.

அடுத்த கட்டுரைக்கு