Election bannerElection banner
Published:Updated:

கொரோனா: திணறும் யோகி அரசு; பல்லிளிக்கும் உத்தரப்பிரதேசத்தின் மருத்துவக் கட்டமைப்பு!-என்ன நடக்கிறது?

கொரோனா
கொரோனா

பேரிருள் சூழ்ந்த ஒரு காலகட்டத்தில் நுழைந்திருப்பதாக மக்கள் உணர்கிறார்கள். இதன் எல்லையில் ஒளி இருக்கலாம். ஆனால், ஒளி இருக்கும் திசையை நோக்கிப் போவதற்கான வழி எது என்று அரசுக்குத் தெரியவில்லை.

கொரோனா வைரஸ், உத்தரப்பிரதேசத்தின் மோசமான மருத்துவ உள் கட்டமைப்பை வெளிக்காட்டியிருக்கிறது. அங்கிருந்து வரும் ஒவ்வொரு செய்தியும் நெஞ்சைப் பதைபதைக்கவைப்பதாக இருக்கின்றன. அரசின் தலைமைப் பீடத்தில், அதிகாரத்தின் உச்சத்திலிருக்கும் நபர்களே தங்களுக்கு மருத்துவ உதவி கிடைக்கவில்லை என சமூக ஊடகங்களில் கதறிக்கொண்டிருக்கிறார்கள். உண்மையில், இந்த இரவைத் தாண்டிவிட்டால் ஏதோ முன்ஜென்மத்துப் புண்ணியம் என்பதுபோலத்தான் உண்மையில் அங்கு நிலைமை இருக்கிறது.

திக்கற்று நிற்கும் மக்கள்

உதாரணமாக, டெல்லி பெண்கள் ஆணையத்தின் தலைவர் சுவாதி மாலிவால், தன் தாத்தாவுக்கு உரிய நேரத்தில் மருத்துவ உதவி கிடைக்காமல் கொரோனாவால் மரணித்துவிட்டார் எனக் கண்ணீருடன் ட்வீட் பகிர்ந்திருக்கிறார்.

கொரோனா நோயாளர்கள் அரசின் உதவி மையத்தைத் தொடர்புகொண்டு அழைத்தால் `செத்துப்போ’ என்று பதில் வருகிறது. இது அரசுக் கட்டமைப்பின் நிலை என்றால், தனியார் மருத்துவமனைகளும் கொரோனா நோயாளர்களைக் கைவிட்டுவிட்டதாகவே தெரிகிறது. கான்பூரில் மாவட்ட நீதிபதிக்கே ஒரு தனியார் மருத்துவமனையில் மருத்துவம் மறுக்கப்பட்டிருக்கிறது.

கொரோனா
கொரோனா
Aijaz Rahi

இது பொறுப்பில் இருக்கும் நீதிபதியின் நிலை என்றால், ஓய்வுபெற்ற நீதிபதியின் நிலை கண்ணீரை வரவழைப்பது.

ஓய்வுபெற்ற நீதிபதி ரமேஷ் சந்திரா, மறைந்த தன் மனைவியின் உடலை அங்கிருந்து எடுத்துச் செல்ல அதிகாரிகள் உதவத் தவறியதால் உதவி கேட்டு தன் கைப்பட இந்தியில் எழுதிய கடிதம், சமூக வலைதளத்தில் நூற்றுக்கணக்கானோரால் பகிரப்பட்டது.

`நானும் என் மனைவியும் கொரோனா நோயாளிகள். நேற்று காலையிலிருந்து அரசு உதவி எண்ணுக்கு 50 முறை தொடர்புகொண்டுவிட்டேன். யாருமே மருந்து கொண்டு வந்து கொடுக்கவோ, எங்களை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லவோ வரவில்லை. அதிகாரிகளின் அலட்சியத்தால், இன்று காலை என் மனைவி உயிரிழந்துவிட்டார்’ என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

நீதிபதிகள், அரசு அங்கத்தினரின் நிலைமை மட்டும் இதுவல்ல. மருத்துவர்களின் நிலைமையே அங்கு மிக மோசமாக உள்ளது. மருத்துவர் ராஜீவ் சுக்லா தனது மகனுக்கு கொரோனா பரிசோதனை செய்ய ஒரு பரிசோதனை மையத்தைக் கண்டுபிடிக்க ஒரு நாள் முழுவதும் அலைந்ததாகக் கூறுகிறார்.

அங்கிருந்து வரும் காணொலிகள் அனைத்தும் பதறவைக்கின்றன. எதிர்காலத்தின் மீதான ஓர் அவநம்பிக்கையை விதைக்கின்றன. இது ஒட்டுமொத்தமாக உத்தரப்பிரதேச உள்கட்டமைப்பின் தோல்வியைக் காட்டுகிறது.

கொரோனா
கொரோனா

எங்கு பார்த்தாலும் பிணக்குவியல்களாக இருப்பதாகக் கூறுகிறார் வாராணாசியைச் சேர்ந்த நிர்மலா கபூர். வாராணாசி இந்தியப் பிரதமர் மோடியின் தொகுதி என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவின் அதிகார மையமாகச் சுதந்திர காலகட்டத்தில் இருந்தே இருக்கும் உத்தரப்பிரதேசத்துக்கு எப்படி இந்த நிலைமை ஏற்பட்டது? மோசமான சுகாதார கட்டமைப்பு என்கிறார்கள் வல்லுநர்கள். அரசியல் ஜனநாயகம் மட்டுமல்ல, அனைத்திலும் ஜனநாயகம் இருக்க வேண்டும். மக்களுக்கு அனைத்தும் கிடைக்கப்பெறச் செய்திருக்க வேண்டும். உத்தரப்பிரதேசத்தில் ஏழை மக்களுக்குச் சுகாதாரம் என்பது எட்டாக் கனியாகவே இருந்தது. இது போன்ற பெருந்தொற்று காலகட்டங்களில் அது மிக மோசமாக பிரதிபலிக்கிறது என்கிறார் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த் சஞ்சீன் ஶ்ரீவஸ்தவா.

மக்கள்தொகையும் சுகாதாரமும்

இந்தியாவிலேயே அதிக மக்கள்தொகைகொண்ட மாநிலம். இன்னும் புரியும்படிச் சொல்ல வேண்டுமானால், உலகிலேயே அடர்த்தியாக மக்கள் வாழும் பகுதிகளில் இதுவும் ஒன்று.

சுமார் 24 கோடி மக்கள்தொகையுடன், இந்தியாவிலேயே அதிக மக்கள்தொகை கொண்ட மாநிலமாக உத்தரப்பிரதேசம் இருக்கிறது. இந்திய தேசத்தில் ஆறில் ஒருவர் உத்தரப்பிரதேசத்தவர். இது தனி நாடாக பிரிக்கப்பட்டால், உலகில் மக்கள்தொகை அதிகமுள்ள நாடுகளில், சீனா, இந்தியா, அமெரிக்கா மற்றும் இந்தோனேசியாவுக்கு அடுத்தபடியாக ஐந்தாவது இடத்தை உத்தரப்பிரதேசம் பிடிக்கும்.

ஆனால் மக்கள்தொகைக்கு ஏற்றவாறு அங்கு மருத்துவ உள்கட்டமைப்பு இருக்கிறதா என்றால், ‘இல்லை’ என்பதுதான் பதில். ஆம், தமிழகத்தில். நீங்கள் ஏதோ ஒரு மாவட்டத்தில் 20 கி.மீ ஏதோவொரு சாலையில் பயணியுங்கள். நீங்கள் ஓர் ஆரம்ப சுகாதார நிலையத்தைப் பார்க்கலாம், அனைத்து கிராமங்களுக்கும் கிராம செவிலியர்கள் (VHN) செல்வார்கள். மாவட்டத் தலைமை மருத்துவமனை என வலுவான உள்கட்டமைப்பைக்கொண்டிருக்கிறது. ஆனால், இப்படியான கட்டமைப்பு அங்கு இல்லை.

கொரோனா
கொரோனா

உள்ளிருப்பு மருத்துவர்கள் நலச் சங்கத்தின் முன்னாள் தலைவர் நீரஜ் மிஸ்ரா அரசு மிக அலட்சியமாக நடந்துகொள்வதாகக் குற்றஞ்சாட்டுகிறார்.

கொரோனா
கொரோனா
Aijaz Rahi

“மக்கள் ஆக்ஸிஜன் அளவு குறைந்து தவித்துக்கொண்டிருக்கும்போது, கொரோனாவுக்கான பரிசோதனை தகவல் அறிக்கையை சுகாதாரத்துறை கேட்கிறது. அது இல்லாதவர்களிடம் பரிசோதனை செய்த பின்பு வரும்படி கேட்கிறது. ஆனால், அந்தப் பரிசோதனை முடிவுகள் வர நான்கு முதல் ஐந்து நாள்கள் ஆகும். அந்த முடிவுகள் கைக்குக் கிடைக்கும்போது அந்த நபர் மரணமேகூட அடைந்திருப்பார்” என்கிறார் நீரஜ் மிஸ்ரா.

அதாவது நம்மூரில் சொல்வார்களே... `தாகத்தில் ஒருவன் தவித்துக்கொண்டிருக்கும் போது தண்ணீர் தராமல், செத்த பின் பால் ஊற்றுவான்’ அப்படித்தான் இருக்கிறது அங்கே நிலைமை.

பொது சுகாதார மையத்தின் தலைவர் மருத்துவர் சி.எஸ்.வர்மாவும் இந்த நிலையை ஒப்புக்கொள்கிறார்.

``பரிசோதனை மையங்களில் ஆள் பற்றாக்குறை நிலவுகிறது. போதுமான உள்கட்டமைப்பு இல்லை. ஆனால், அதேநேரம், அரசிடம் போர்க்கால அடிப்படையில் இதைக் கையாள எந்தத் திட்டமும் இல்லை” என்கிறார் வர்மா.

யோகி ஆதித்யநாத்
யோகி ஆதித்யநாத்

பேரிருள் சூழ்ந்த ஒரு காலகட்டத்தில் நுழைந்திருப்பதாக மக்கள் உணர்கிறார்கள். இதன் எல்லையில் ஒளி இருக்கலாம். ஆனால், ஒளி இருக்கும் திசையை நோக்கிப் போவதற்கான வழி எது என்று அரசுக்குத் தெரியவில்லை. அந்த ஒளியை அடையும்போது எத்தனை பேர் மிச்சம் இருப்பார்கள் என மக்களுக்குத் தெரியவில்லை.

இதுதான் இப்போது உத்தரப்பிரதேசத்தின் நிலை!

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு