Published:Updated:

`கப்பல் மூழ்காதுன்னு டைட்டானிக் கேப்டன் சொன்னானாம்!’ - மத்திய அரசை விமர்சித்த ராகுல் காந்தி

ராகுல் காந்தி
ராகுல் காந்தி

கொரோனா வைரஸ் தாக்கத்துக்கு எதிராக மத்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் நாடாளுமன்றத்தில் கூறினார்.

கொரோனா வைரஸ் தாக்கம் தொடர்பாக வெளியாகும் செய்திகள் அச்சத்தை ஏற்படுத்துவதாக உள்ளது. இதுவரை இந்தியாவில் 30 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. கொரோனா விவகாரம் தொடர்பாக மக்களவையில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர். கொரோனா வைரஸ் தாக்கத்துக்கு எதிராக மத்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் எடுத்துக்கூறினார்.

நாடாளுமன்றம்
நாடாளுமன்றம்

அப்போது குறுக்கிட்ட ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ராஷ்டிரிய லோக்டேன்டிரிக் கட்சி (Rashtriya Loktantrik Party) எம்.பி ஹனுமன் பெனிவால், ``இத்தாலியிலிருந்து வந்த பெரும்பாலானவர்களுக்குக் கொரோனா வைரஸ் உள்ளது. காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தியின் வீட்டிலிருந்து கொரோனா வைரஸ் பரவியதா என்பது குறித்து விசாரணை நடத்த வேண்டும்” என்றார். ராஷ்டிரிய லோக்டேன்டிரிக் கட்சி மத்தியில் ஆளும் பா.ஜ.கவின் கூட்டணிக் கட்சியாகும்.

ஹனுமன் பெனிவாலின் இந்தப்பேச்சுக்கு காங்கிரஸ் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அவரை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் எனக் கூறி காங்கிரஸ் உறுப்பினர்கள் அமலியில் ஈடுபட்டனர். அவர் பேசும்போது அவரது இடத்துக்குச் சென்ற காங்கிரஸ் உறுப்பினர்கள் கூச்சலிட்டனர். இதையடுத்து அவை மதியம் இரண்டு மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த ஹனுமன் பெனிவால், ``இத்தாலியில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகமாக உள்ளது. காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் சமீபத்தில் இத்தாலி சென்று வந்ததால் அவர்களைப் பரிசோதிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டேன்” என விளக்கமளித்தார்.

ஹனுமன் பெனிவால்
ஹனுமன் பெனிவால்

ஹனுமன் பெனிவாலின் கருத்தைப் பெரிதாக எடுத்துக்கொள்ளாத ராகுல் காந்தி கொரோனாவை மத்திய அரசு கட்டுக்குள் வைத்திருக்கிறது என ஹர்ஷவர்தன் கூறியதை விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள ராகுல், `கொரோனா நெருக்கடியைக் கட்டுக்குள் வைத்திருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் கூறுவது, டைட்டானிக் கப்பலில் கேப்டன் தன் பயணிகளிடம் கப்பல் மூழ்காது, யாரும் பயப்படவேண்டாம் எனக் கூறுவது போல் இருக்கிறது. கொரோனா வைரஸ் நெருக்கடியைச் சமாளிக்க ஒரு நிலையான, உறுதியான திட்டத்தை மத்திய அரசு வழங்க வேண்டிய நேரம் இது” எனத் தெரிவித்துள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு