Published:Updated:

கொரோனா வைரஸ்: பதைபதைக்க வைக்கும் குஜராத் நிலவரம்! - என்ன நடக்கிறது அங்கே?

கொரோனா பரிசோதனை
கொரோனா பரிசோதனை ( Channi Anand )

கொரோனாவின் இரண்டாம் அலை இந்தியா முழுவதும் அச்சத்தை ஏற்படுத்திக்கொண்டிருக்கும் சூழலில், குஜராத்திலிருந்து வரும் செய்திகள் அனைத்தும் நடுங்கவைப்பவையாக இருக்கின்றன.

அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவமனை படுக்கைகள் இல்லை என்றும், அவசர ஊர்திகள் இல்லை என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன. இது எல்லாவற்றையும்விட இடுகாடுகளில் வழக்கத்தைக்காட்டிலும் மூன்றிலிருந்து நான்கு மடங்கு அதிகமான உடல்கள் எரியூட்டப்படுகின்றன என்று வரும் செய்திகள் அச்சத்தைத் தருபவையாக உள்ளன.

கொரோனா பாதிப்பு
கொரோனா பாதிப்பு
Twitter

அரசு கொடுக்கும் முரணான தகவல்

ஒருகட்டத்தில் இடுகாடுகளில் இடமில்லாமல் உடல்களைத் திறந்தவெளிகளில் எரிப்பது போன்ற புகைப்படங்களையும் சமூக வலைதளங்களில் காண முடிகிறது. சூழல் இப்படியிருக்க, கொரோனா தொற்றால் உயிரிழப்பவர்கள் என அரசு கொடுக்கும் எண்ணிக்கையும், நிஜத்தில் நிகழ்பவையும் ஒன்றோடு ஒன்றோடு தொடர்பற்றதுபோல இருக்கின்றன என குஜராத் மாநில ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

குஜராத்தில் கொரோனா தொற்றால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை என அரசு கொடுக்கும் எண்ணிக்கை குறைவானதாக இருக்கிறது என உள்ளூர் ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன. குஜராத்தின் சூரத் நகரில் நிலைமை மோசமானதாக இருக்கிறது. அங்கு ஏப்ரல் 12 மற்றும் 13 தேதிகளில் கொரோனாவால் வெறும் 22 பேர் மட்டுமே உயிரிழந்தார்கள் என அரசுத் தரப்பில் கூறப்படுகிறது. ஆனால், அந்த நகரிலுள்ள இடுகாடுகளில் வழக்கத்தைக்காட்டிலும் மூன்று அல்லது நான்கு மடங்கு உடல்கள் தகனம் செய்யப்பட்டுள்ளன.

கொரோனா உயிரிழப்பு
கொரோனா உயிரிழப்பு

உருகிய எரி உலை

இது மட்டுமல்லாமல் சில இடங்களில் உடல்களை தகனம் செய்வதற்கு 8-10 மணி நேரம் வரை காத்திருக்கும் சூழலும் ஏற்பட்டுள்ளது. இதில் துயரத்தின் உச்சமாக சூரத்திலுள்ள இடுகாடு ஒன்றில் தொடர்ந்து உடல்கள் எரியூட்டப்படுவதால், எரி உலை உருகும் சூழல் ஏற்பட்டிருப்பதாக அங்குள்ள நபர்கள் தெரிவித்ததாக ஊடகங்கள் சில தெரிவிக்கின்றன.

குஜராத்தின் அகமதாபாத் நகரில் மருத்துவமனை ஒன்றில் நுழைய நீண்ட வரிசையில் அவசர ஊர்திகள் காத்துக்கொண்டிருக்கும் வீடியோவையும் சமூக ஊடகங்களில் காண முடிந்தது. அகமதாபாத் மருத்துவக் கூட்டமைப்பு, நிலைமை மிகவும் மோசமடைந்து வருவதால் கோவிட் 19 நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்கும் அனைத்து மருத்துவமனைகளிலும் ஏற்பட்டுள்ள ஆக்ஸிஜன் தட்டுப்பாட்டை உடனடியாகச் சரி செய்ய வேண்டும் என மாநில முதல்வர் விஜய் ரூபானிக்கு கடிதம் ஒன்றை எழுதியிருக்கிறது.

குஜராத் முழுவதும் பல்வேறு நகரங்களில் மருத்துவமனை வசதிகள், ஆக்ஸிஜன் மற்றும் ரெம்டிசிவிர் பற்றாக்குறை நிலவிவருகிறது.

மகராஷ்டிராவிலும் இதே நிலைமை

குஜராத்தில் மட்டுமல்ல, மகராஷ்டிராவிலும் இதேநிலைதான். அந்த மாநிலத்தில் ஏற்கெனவே கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் காரணத்தால், மாநிலம் முழுவதும் ஏப்ரல் 14-ம் தேதி முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அந்த மாநிலத்தில் மட்டும் கொரொனா தொற்றால் 30 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களை தகனம் செய்வதற்கு நீண்ட வரிசையில் மக்கள் காத்துக் கிடக்கும் சூழலும் ஏற்பட்டுள்ளது.

தொடரும் கும்பமேளா

மாநிலங்களில் கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்த வண்ணமிருக்க, உத்தரகாண்ட் மாநிலத்தில் நடைபெறும் கும்பமேளாவில் கலந்துகொண்ட சாதுக்கள் 30 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், கும்பமேளாவில் மாஸ்க் அணிவது, சமூக இடைவெளிகளைக் கடைப்பிடிப்பது என அனைத்து நடைமுறைகளும் கடைப்பிடிக்கப்படுகின்றன என அந்த மாநில முதல்வர் தெரிவித்திருக்கிறார். அதுமட்டுமல்லாமல் கும்பமேளா தொடர்ந்து நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

மகராஷ்டிர மாநிலத்தில் மட்டும் ஒரே நாளில் 61,695 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதற்கு அடுத்தபடியாக உத்தரப்பிரதேசத்தில் 22,339 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மூன்றாவதாக, டெல்லியில் 16,699 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,17,353 ஆகும். கடந்த 24 மணி நேரத்தில் 1,185 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதில் மகராஷ்டிரா, கேரளா, கர்நாடகா, தமிழ்நாடு, மேற்கு வங்கம், டெல்லி, உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், குஜராத் ஆகிய மாநிலங்களில் கொரோனா தொற்று அதிகமாகப் பதிவாகியுள்ளன.

அடுத்த கட்டுரைக்கு