Election bannerElection banner
Published:Updated:

பெட்ரோல் குண்டு வீச்சு; 6 பெண்கள், 3 இளைஞர்கள் அகற்றம்... முடிவுக்கு வந்தது ஷாகீன்பாக் போராட்டம்!

கொரோனா அச்சத்திலும் ஷாகீன்பாக் போராட்டம்
கொரோனா அச்சத்திலும் ஷாகீன்பாக் போராட்டம்

"கொரோனாவைத் தடுக்க முறையாக சானிடைஸர் பயன்படுத்துகிறோம். மாஸ்க் கட்டியுள்ளோம். முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை நாங்கள் மேற்கொண்டிருக்கிறோம்."

சி.ஏ.ஏ போராட்டத்துக்கு எதிராக டெல்லியில் ஷாகீன்பாக் பகுதியில், தொடர்ந்து பெண்கள் போராட்டம் நடத்தி வந்தனர். இந்த நிலையில், இந்தியாவில் கொரோனா பரவி வருவதால், டெல்லியில் ஒரே இடத்தில் ஐந்து பேருக்கு மேல் கூட தடை விதிக்கப்பட்டது. கடந்த ஞாயிற்றுக்கிழமை ஷாகீன் பாக் போராட்டம் 100-வது நாளை எட்டியது. டெல்லி அரசின் உத்தரவை ஏற்று, தற்போது ஷாகீன்பாக்கில் 5 பெண்கள் மட்டுமே போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். மற்றவர்கள் தங்கள் படுக்கைகளில், அவர்களின் காலணிகளை வைத்து விட்டு கலைந்து சென்றனர்.

ஷாகீன் பாக் அதிக மக்கள் நெருக்கடி உள்ள பகுதி. எனவே, சாலையை மறித்துப் போடப்பட்ட பந்தலை அவிழ்த்து விட வேண்டுமென்று போராட்டக்காரர்களில் ஒரு சாரார் கூறினர். மற்றோர் தரப்பு அதற்கு எதிர்ப்பு தெரிவித்தது. இதனால், போராட்டக்காரர்களிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. கொரோனாவுக்கு எதிராகப் போராடும் டாக்டர்கள், செவிலியர்கள், மருத்துவத்துறை ஊழியர்களை உற்சாகப்படுத்தும் விதமாக நேற்று மாலை 5 மணிக்குப் பொது மக்கள் கைதட்டி பாராட்ட வேண்டுமென்று பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்திருந்தார். ஆனால், ஷாகீன் பாக் பகுதி மக்கள் இதை ஏற்கவில்லை. ஒரு சிலரே மருத்துவர்களை ஊக்கப்படுத்தும் விதத்தில் கை தட்டினர்.

ஷாகீன்பாக்கில் பெட்ரோல் குண்டு வீச்சு
ஷாகீன்பாக்கில் பெட்ரோல் குண்டு வீச்சு
`ஹேய், கொரோனா..!’ -டெல்லியில் வடகிழக்கு மாநில இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்

கடந்த சனிக்கிழமை இரவு போராட்டத்தைத் தொடரலாமா அல்லது கைவிடலாமா என்பது குறித்து இரு தரப்பாகப் பிரிந்து போராட்டக்காரர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகச் சொல்லப்படுகிறது. ஷாகீன் பாக் போராட்டத்துக்கு ஏற்கெனவே ஆதரவு தெரிவித்துள்ள நடிகை ஸ்வரா பாஸ்கர், "ஷாகீன்பாக் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள முதிய பெண்கள் போராட்டதைக் கைவிட்டு சாலையில் போடப்பட்டுள்ள பந்தலைப் பிரித்து விட்டு தங்களை தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும்" என்று ட்விட்டர் வழியாகக் கோரிக்கை விடுத்திருந்தார். வழக்கறிஞர் மேனகா குருசாமியும், "கொரோனா அச்சம் விலகும் வரை போராட்டத்தை மக்கள் கைவிட வேண்டும்" என்று கோரினார்.

ஆனால், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள 45 வயது சுல்தானா, ``சட்டத்தை மீறி நாங்கள் எந்தச் செயலிலும் ஈடுபடவில்லை'' என்று மறுப்பு தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், ``அரசு 5 பேருக்கு மேல் கூடக்கூடாது என்று சொல்லியிருக்கிறது. நாங்கள் இங்கே ஐந்து பேர்தான் இருக்கிறோம். கொரோனாவத் தடுக்க முறையாக சானிடைஸர் பயன்படுத்துகிறோம். மாஸ்க் கட்டியுள்ளோம். முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை நாங்கள் மேற்கொண்டிருக்கிறோம். அரசு, சி.ஏ.ஏ. , என்.ஆர்.சி போன்ற கொடுமையான சட்டத்தை நீக்கும் வரையில் நாங்கள் இங்கிருந்து அகலமாட்டோம்'' என்று தெரிவித்தார்.

ஷாகீன்பாக் போராட்டம்
ஷாகீன்பாக் போராட்டம்

இதற்கிடையே, மக்கள் ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்ட ஞாயிற்றுக்கிழமை காலையில், ஷாகீன்பாக் போராட்டக்காரர்களின் பந்தல் அருகே பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன. பைக்கில் வந்த இருவர் பெட்ரோல் குண்டுகளை வீசி விட்டு ஓடி விட்டனர். இதனால், நல்லவேளையாக யாரும் காயமடையவில்லை. இது குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது, பெண்கள் தங்கியுள்ள அந்தக் கூடாரத்தைச் சுற்றி தன்னார்வத் தொண்டர்கள் சிலர் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டனர்.

இந்தப் போராட்டத்தை பெண்கள் முன்னெடுக்கக் காரணமாக இருந்தவர்களில் ஒருவரான அபித் ஷேக் கூறுகையில், ``கடந்த டிசம்பர் 16-ம் தேதி நாங்கள் இந்தப் போராட்டத்தைக் கையில் எடுத்தோம். சி.ஏ.ஏ, என்.ஆர்.சி சட்டத்தை நீக்கினால் மட்டுமே கொரோனாவுக்கு எதிராக அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு தருவோம்'' என்று கூறியிருந்தார்.

144 தடை... பொது இடங்களில் குவியும் மக்கள் கூட்டம்... கட்டுக்குள் வருமா கொரோனா?

இந்த நிலையில், இன்று ஷாகீன்பாக் போராட்டக்காரர்கள் பந்துலுக்குள் சென்ற போலீஸ் அங்கு போராட்டத்தில் ஈடுபட்ட 6 பெண்கள் மற்றும் 3 இளைஞர்களைக் கைது செய்தனர். இது குறித்து டெல்லி தென்கிழக்குப் பகுதி துணை கமிஷனர் கூறுகையில், "அரசின் 144 தடையுத்தரவை மீறியவர்கள் கைது செய்யப்பட்டனர். பந்தலும் அகற்றப்பட்டது. நாட்டில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், போராட்டக்காரர்களிடம் போராட்டத்தைக் கைவிட கோரிக்கை விடுத்தோம். அவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. தொடர்ந்து கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது'' என்றார்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு