அண்மையில் பீகார் மாநில வேளாண்அமைச்சர் சுதாகர்சிங் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். “எங்கள் வேளாண்துறையில் திருட்டுச் செயல்களைச் செய்யாத ஒரு பிரிவுகூட இல்லை. மேலும், இந்தத் துறையின் பொறுப்பாளராக நானே இருப்பதால், அத்தகையவர்களுக்கு தலைவராகவும் ஆகிவிட்டேன். அதோடு, விதைக் கழகம் வழங்கும் தரமற்ற விதைகளை எந்த விவசாயியும் தன்னுடைய வயல்களில் பயன்படுத்துவதில்லை.
விவசாயிகளுக்கு நிவாரணம் கொடுப்பதற்குப் பதிலாக, விதை நிறுவனங்கள் ரூ.100 முதல் 150 கோடி திருடுகின்றன. ஊழல் அதிகாரிகளால் நிறைந்துள்ள துறைக்கு நான் அமைச்சராக இருந்து பயனில்லை. எனவே ராஜினாமா செய்கிறேன் " என்று தெரிவித்திருக்கிறார்.

இதுபற்றி தமிழ்நாடு காவிரி உழவர்கள் பாதுகாப்பு சங்கத்தின் செயலர் சுவாமிமலை விமலநாதனிடம் பேசினோம்.
"பீகார் வேளாண் அமைச்சர் சுதாகர்சிங் ராஜினாமா செய்திருப்பது உண்மையிலேயே ஊழல் முறைகேடுகளின் எதிரொலியா அல்லது அரசியல் லாபங்கள் கருதி செய்துள்ளாரா ?என்ற கேள்வி எழுகிறது. 2018 -ஆம் ஆண்டு மத்திய அரசு "பிரதான் மந்திரி கிஷான் சம்மான் நிதி யோஜனா" என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தி, சிறு குறு விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ. 6,000 விவசாயிகள் வங்கி கணக்கில் வழங்கியது.
திட்டத்தில் பல மாநிலங்களில் பெரியளவில் ஊழல் நடைபெற்றது. "பி.ஜே.பி. ஆளும் உத்தரப்பிரதேசம், கர்நாடகாவில் கூட வேளாண்மைக்குத் தொடர்பில்லாத போலி பயனாளிகள் பயனடைந்துள்ளார்கள்" என்று இந்திய அரசின் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அறிக்கை வெளியிட்டிருந்தது. அதில் எந்தெந்த மாநிலங்களில் எத்தனைக் கோடிகள் ஊழல் நடைபெற்றுள்ளது என்பதை தெளிவுபடுத்திருந்தது .அதில் பீகாரும் அடக்கம். இவர் தூய்மையானவர் என்றால் அப்போதே ராஜினாமா செய்திருக்கலாம். விதை கழகத்தில் முறைகேடு என்பது திடீரென ஏற்பட்டதல்ல. தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கிறது.

Also Read
அந்த முறைகேடு முறைகேடுகளை களைவதற்கு இவர் என்ன முயற்சி எடுத்தார்? எத்தனை பேர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்தார்? லஞ்ச ஊழல் தடுப்பு பிரிவை பயன்படுத்தி சட்டப்படி நடவடிக்கை மேற்கொண்டாரா? அமைச்சரவை கூட்டத்தில் எடுத்துரைத்தாரா? என்பதெல்லாம் தெரியவில்லை. தமிழகம் உள்பட பல மாநிலங்களில் விவசாயிகளுக்கு வழங்கப்படும் பல்வேறு மானியங்கள், திட்டங்களில் மோசடிகள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. என்றாலும் தனது துறையில் ஊழல் நடக்கிறது என்பதை சுதாகர்சிங் வெளிப்படையாக தெரிவித்து ராஜினாமா செய்திருப்பது பாராட்டுக்குரியது" என்றார்.