Published:Updated:

`அனுப்புநர் முகவரியே இல்லாத கம்பெனிக்கு டெண்டர்!' - செங்கோட்டையன் துறையில் ஊழல் விளையாட்டு

வெளிப்படையாக டெண்டர் நடத்தப்படுவதாக வெளியுலகுக்குக் காட்டிவிட்டு, மறைமுகமாக அனைத்து வேலைகளையும் செய்து முடித்துவிட்டனர். இதன் பின்னணியில் அமைச்சரின் தலையீடு இருக்கிறது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் செயலால் கொதித்துப் போய் இருக்கின்றன டெண்டரில் பங்கேற்ற நிறுவனங்கள். `ஊரக விளையாட்டுப் போட்டிகளுக்கு வழங்கப்படும் பதக்கங்களுக்கான கொள்முதலில் மிகப் பெரிய முறைகேடு நடந்திருக்கிறது' எனவும் குற்றம் சுமத்துகின்றனர்.

டெண்டர் அறிவிப்பு
டெண்டர் அறிவிப்பு

சென்னை எழும்பூரைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வருகிறது தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம். ஒவ்வோர் ஆண்டும் கிராமப்புற இளைஞர்களிடம் இருக்கும் விளையாட்டுத் திறமைகளைக் கண்டறியும் வகையில் ஊரக விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்தப் போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்குப் பதக்கங்கள் வழங்கப்படுகின்றன. இந்தப் பதக்கங்களைக் கொள்முதல் செய்வதற்காக டெண்டர் விடப்படுகிறது. கடந்த ஜூன் மாதம் 7.10 கோடி மதிப்பிலான டெண்டர் அறிவிக்கப்பட்டது. இந்த டெண்டரில் 12 நிறுவனங்கள் பங்கேற்றன. இதில் 7 நிறுவனங்களுக்குக் கடந்த 16-ம் தேதி அழைப்புவிடுத்துள்ளனர் அதிகாரிகள். இதையடுத்து, டெண்டர் முடிவுகளைக் காணச் சென்ற தனியார் நிறுவனங்களுக்கு அதிர்ச்சியளித்துள்ளனர் விளையாட்டு மேம்பாட்டு ஆணைய அதிகாரிகள்.

டெண்டரில் பங்கேற்ற சில நிறுவனங்களின் பிரதிநிதிகளிடம் பேசினோம். "10 லட்சம் செட் பதக்கங்களுக்கான (ஒரு செட் என்பது 3 மெடல்கள் உள்ளடக்கியது) டெண்டர் இது. இதற்கான தகுதியாக சிலவற்றை வரையறை செய்திருந்தனர் அதிகாரிகள். அதன்படி, ஆண்டுக்கு 10 கோடி ரூபாயை ஈட்டும் நிறுவனம் மட்டும்தான் இந்த டெண்டரில் பங்கேற்க முடியும். பான் எண், சேல்ஸ் வரி எண், ப்ரைஸ் பிட் (Bid), டெக்னிக்கல் பிட், ஆண்டு வருமானம் குறித்த அறிக்கை என ஏராளமான ஆவணங்களைக் கொடுக்க வேண்டும். இவற்றைச் சீலிடப்பட்ட கவரில் சமர்ப்பிக்க வேண்டும். ப்ரைஸ் பிட்டில்தான் டெண்டர் தொகை குறித்துத் தெரிவிக்கப்பட்டிருக்கும். இந்த ஆவணங்களை அதிகாரிகள் சரிபார்த்த பிறகு எங்களுக்கு அழைப்புவிடுக்கப்படும். ஆனால், அப்படி எந்த அழைப்பும் எங்களுக்கு வரவில்லை. டெண்டர் அறிவிப்பின்போது, சரவணன் என்பவருக்கே முழு டெண்டரும் ஒதுக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். சரவணன் அளித்த ஆவணங்களைப் பார்த்தபோது அதிர்ச்சியே மிஞ்சியது" என விவரித்தவர்கள்,

டெண்டர் அறிவிப்பு
டெண்டர் அறிவிப்பு

"டெண்டர் ஆவணங்களில் எதை எதனோடு இணைக்க வேண்டும் என்ற குறைந்தபட்ச புரிதல்கூட இல்லாமல் இருந்தது. இப்படியொரு நிறுவனத்தின் பெயரையே இப்போதுதான் கேள்விப்படுகிறோம். அந்த நிறுவனத்துக்குப் பதக்கங்களைக் கொள்முதல் செய்வதற்கான அனுபவமும் இல்லை. டெக்னிக்கல் தொடர்பான பிட்டில்(Bid) வைக்கப்பட வேண்டிய மெடல்களின் மாதிரிகளை அவர் ப்ரைஸ் பிட்டில் இணைத்து அனுப்பியிருந்தார். இதைவிடக் கொடுமை, அனுப்புநர் முகவரியே இல்லாமல் சரவணன் தொடர்பான ஆவணங்கள் இருந்தன. இப்படிப்பட்ட ஒருவருக்கு 7 கோடி ரூபாய்க்கான மொத்த டெண்டரையும் ஒதுக்கியுள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதுதொடர்பாக ஆணையத்தின் அதிகாரிகளிடம் கேட்டால், `எதுவும் பேசக் கூடாது என அமைச்சர் தரப்பில் கூறியுள்ளனர்' என்கின்றனர். வழக்கமாக, எல் 1 ஆக ஒரு நிறுவனம் தேர்வாகும்போது அடுத்து வரக் கூடிய நிறுவனங்களுக்கும் சரிபாதி பணிகளைப் பிரித்துக் கொடுப்பது வழக்கம். `இந்த முறை சரவணனே அனைத்துப் பணிகளையும் எடுத்துச் செய்வார்' என அறிவித்துவிட்டனர். வெளிப்படையாக டெண்டர் நடத்தப்படுவதாக வெளியுலகுக்குக் காட்டிவிட்டு, மறைமுகமாக அனைத்து வேலைகளையும் செய்து முடித்துவிட்டனர். இதன் பின்னணியில் அமைச்சரின் தலையீடு இருக்கிறது" என ஆவேசத்தை வெளிப்படுத்தினர்.

செங்கோட்டையன்
செங்கோட்டையன்

`பதக்க' கொள்முதல் முறைகேடு தொடர்பாக, டெண்டர் எடுத்த சரவணனிடம் பேசினோம். அவர் சார்பாக நம்மிடம் பேசிய அவரது மேலாளர் விக்னேஸ்வரன், "நீங்கள் சொல்வது போல எதுவும் நடக்கவில்லை. இதுதொடர்பாக நாங்கள் பேச முடியாது. எஸ்.டி.ஏ.டி அதிகாரிகளிடம் விளக்கம் வாங்கிக் கொள்ளுங்கள்" என்றார் கொதிப்புடன்.

Vikatan

அமைச்சர் செங்கோட்டையனைத் தொடர்பு கொண்டோம். "சட்டசபை அலுவல்களில் பிஸியாக இருக்கிறார்" என விவரித்த அவரது உதவியாளர் கதிர் முருகன், "டெண்டர் தொடர்பான பணிகளை எஸ்.டி.ஏ.டி அதிகாரிகள்தான் கவனித்து வருகின்றனர். அவர்களே தன்னிச்சையாக தகுதிவாய்ந்த நிறுவனங்களைத் தேர்வு செய்கின்றனர். நாங்கள் அதில் தலையிடுவதில்லை. நீங்கள் தெரிவித்த தகவல்களை அமைச்சரின் கவனத்துக்குக் கொண்டு செல்கிறேன்" என்றார் இயல்பாக.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு