விருதுநகர் தலைமை தபால் நிலையம் அருகே அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை செயல்பட்டுவருகிறது. இந்த மருத்துவமனையில் விருதுநகர் அருகேயுள்ள பரங்கிநாதபுரத்தைச் சேர்ந்த தொழிலாளி முனியசாமி என்பவர் தன் மனைவி முத்துலட்சுமியை மகப்பேறுக்காக அனுமதித்திருந்தார். இந்த நிலையில், முனியசாமி-முத்துலட்சுமி தம்பதியினருக்கு கடந்த ஐந்து நாள்களுக்கு முன்னர் அறுவை சிகிச்சை மூலமாக ஆண் குழந்தை பிறந்தது.
தொடர்ந்து தாய்க்கும்-சேய்க்கும் மகப்பேறுகால சிகிச்சைகளை மருத்துவர்கள் கொடுத்துவந்தனர். முத்துலட்சுமி இதற்காக, பிரசவ வார்டில் 108-வது அறையில் தங்கவைக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார். இந்த நிலையில், நேற்று நள்ளிரவு பச்சிளம் குழந்தை தூங்கிக்கொண்டிருந்த கட்டில் திடீரென உடைந்து கீழே விழுந்தது. இதில் குழந்தைக்கு தலையில் காயம் ஏற்பட்டதில் குழந்தை அலறிஹ் துடித்தது. இதனால் பதறிப்போன முனியசாமியும் முத்துலட்சுமியும் கூச்சலிட்டு மருத்துவரை அழைத்தனர். இரவு நேரம் என்பதால் உடனடியாக முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு குழந்தை மதுரை இராசாசி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பிவைக்கப்பட்டது.


தற்போது காயம்பட்ட குழந்தைக்கு மதுரை இராசாசி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு மருத்துவர்களால் சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. இந்தச் சம்பவம் குறித்து முனியசாமி-முத்துலட்சுமி தம்பதியரின் உறவினர்களிடம் பேசினோம். ``மருத்துவமனையின் அலட்சியப் போக்கினால் நடந்த இந்தச் சம்பவத்தை நினைத்து மனம் குமுறிப் பேசியதற்கு ஆறுதல்கூடச் சொல்லாமல், மருத்துவமனை நிர்வாகத்தினர் மரியாதை குறைவாகப் பேசித் திட்டினார்கள்" என்றனர்.
இந்தச் சம்பவம் விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.