Published:Updated:

கவுன்சிலர்கள் VS அதிகாரிகள்... என்ன நடக்கிறது சென்னை மாநகராட்சியில்?

பிரியா
பிரீமியம் ஸ்டோரி
பிரியா

அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில் நியமிக்கப்பட்ட அதிகாரிகள்தான் இன்னமும் இருக்கிறார்கள்

கவுன்சிலர்கள் VS அதிகாரிகள்... என்ன நடக்கிறது சென்னை மாநகராட்சியில்?

அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில் நியமிக்கப்பட்ட அதிகாரிகள்தான் இன்னமும் இருக்கிறார்கள்

Published:Updated:
பிரியா
பிரீமியம் ஸ்டோரி
பிரியா

சென்னை மாநகராட்சியில் கவுன்சிலர்களுக்கும், அதிகாரிகளுக்கும் இடையிலான மோதல் மாமன்றக் கூட்டம் வாயிலாக வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. ஜூலை 30-ம் தேதி மாநகராட்சிக் கூட்டம் நடந்தபோது, “ஆய்வுக்கு வரும் அதிகாரிகள் எங்களிடம் எந்தவிதத் தகவலும் தெரிவிப்பதில்லை. தன்னிச்சையாகச் செயல்படுகிறார்கள்” என்ற குற்றச்சாட்டை தி.மு.க கூட்டணிக் கட்சி கவுன்சிலர்களே கோரஸாகச் சொன்னார்கள். இதையடுத்து, “ஒவ்வொரு வார்டிலும் மேற்கொள்ளப்படும் பணிகள் குறித்து மாமன்ற உறுப்பினர்களுக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும். ஆய்வின்போது அதிகாரிகள், கவுன்சிலர்களுக்கும் அழைப்புவிடுக்க வேண்டும்” என மேயர் பிரியா அறிவுறுத்தினார். ஆனால், மேயரின் உத்தரவை அதிகாரிகள் மதிக்கவில்லை என்கிறார்கள் கவுன்சிலர்கள்.

கவுன்சிலர்கள் VS அதிகாரிகள்... என்ன நடக்கிறது சென்னை மாநகராட்சியில்?

இது குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கவுன்சிலர் ரேணுகாவிடம் கேட்டபோது, “என்னுடைய வார்டில் என்ன நடக்கிறது என்பதே எனக்குத் தெரியவில்லை. அதிகாரிகளும் கவுன்சிலர்களும் தனித்தனிப் பாதையில் சென்றுகொண்டிருக்கிறோம். நாங்கள் மக்கள் பணி செய்வதற்கு அதிகாரிகள் தடையாகத்தான் இருக்கிறார்கள்” என்றார்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கவுன்சிலர் அம்பேத்வளவனிடம் கேட்டபோது, “அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில் நியமிக்கப்பட்ட அதிகாரிகள்தான் இன்னமும் இருக்கிறார்கள். அவர்கள் எங்களை மதிப்பதேயில்லை என்று மாநகராட்சி கூட்டத்தில் நான் புகார் சொன்ன பிறகே, உயரதிகாரிகளின் ஆய்வுப் பணிகள் குறித்து தகவல் தருகிறார்கள். ஆனால், கீழ்நிலை அதிகாரிகள் வார்டுக்கு வரும்போது தகவல் தருவதில்லை. அதிகாரிகள், ஒப்பந்ததாரர்களின் ஒத்துழைப்பு இல்லாததால் மக்களிடம் நாங்கள் கைகட்டி நிற்கிறோம்” என்றார்.

சி.பி.எம் கவுன்சிலர் ஜெயராமனோ, “மாமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் பேசவும், மக்கள் பிரச்னைக்காக மனு கொடுக்கவும்தான் கவுன்சிலர்கள் இருக்கிறோமா என்று எண்ணும் அளவுக்கு அதிகாரம் இல்லாதவர்களாக இருக்கிறோம். கவுன்சிலர்களுக்குக் கூடுதலான அதிகாரம் இருந்தால்தான் மக்கள் பிரச்னையைத் தீர்க்க முடியும்” என்றார்.

கவுன்சிலர்களின் புகார்கள் குறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, “சிறு சிறு பிரச்னைகளை நேரடியாகத் தீர்க்காமல், கவுன்சிலர்கள் வழியாகச் செய்தால் நேரம்தான் விரயமாகும். மழைக்காலத்துக்குள் பணிகளை முடிக்கவேண்டியதிருப்பதால், கடும் வேலை நெருக்கடியில் நாங்கள் இருக்கிறோம். நாங்கள் வேண்டுமென்றே இப்படி நடந்துகொள்வதாக கவுன்சிலர்கள் கருதுவது தவறான புரிதல். சில கவுன்சிலர்கள், ‘எல்லாவற்றையும் எங்களிடம் சொல்லுங்கள்’ என்று கூறுவது மக்கள் மீதான அக்கறையில் இல்லை. காசு பார்க்கத்தான்” என்றனர்.

கவுன்சிலர்கள் VS அதிகாரிகள்... என்ன நடக்கிறது சென்னை மாநகராட்சியில்?

இது குறித்து, மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடியிடம் பேசியபோது, “மேல் மட்டத்திலிருந்து கீழ் நிலை வரையில் உள்ள அதிகாரிகள் எப்போது ஆய்வுக்குச் சென்றாலும் கவுன்சிலர்களுக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியிருக்கிறோம். இது பற்றி சமீபத்தில் ஒரு சுற்றறிக்கைகூட அனுப்பியிருக்கிறேன். அதேநேரத்தில் அதிகாரிகள் ‘சர்ப்ரைஸ் விசிட்’டுக்குச் செல்லும்போது கவுன்சிலர்களை உடன் அழைத்துச் செல்ல முடியாது. சர்ப்ரைஸ் விசிட் சென்றுவிட்டு வந்த பிறகுதான், அதை கவுன்சிலர்களிடம் தெரிவிக்க முடியும். புகார் தெரிவிக்கப்பட்ட சில அதிகாரிகளை மாற்றியிருக்கிறோம்” என்றார்.

மக்கள் சேவையாற்றத்தான் கவுன்சிலர்களும் அதிகாரிகளும் சண்டைபோடுகிறார்களா?!