Election bannerElection banner
Published:Updated:

``நூறு சதவிகித வி.வி.பேட் ரசீதுகளையும் எண்ண வேண்டும்" முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் கோரிக்கை!

முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் தேவசகாயம், சசிகாந்த் செந்தில்
முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் தேவசகாயம், சசிகாந்த் செந்தில்

ஓட்டுச்சீட்டில் நாம் ஓட்டுப்போடுவோம். ஓட்டு எண்ணும்போது நமது ஓட்டுக்களை கண்காணிக்க ஏஜெண்டுகள் இருப்பார்கள். ஆனால் இ.வி.எம் மெஷினில் ஓட்டுப்போடும் வாக்காளனை குருடன் ஆக்குகிறார்கள் என்கின்றனர் முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள்.

தேர்தலுக்கான பிரஜைகள் ஆணையத்தின் நிர்வாகிகளான முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் தேவசகாயம், சசிகாந்த் செந்தில் மற்றும் ராம்பிரகாஷ் ஆகியோர் நாகர்கோவிலில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

அப்போது அவர்கள் கூறுகையில், ``தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடக்கிறது. கன்னியாகுமரி மாவட்டத்த்தில் மிக முக்கியமாக இடைத்தேர்தலும் சேர்ந்து நடக்கிறது. இ.வி.எம் எனப்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்து சமூக வலைதளங்களில் நிறைய தகவல்கள் பகிரப்படுகின்றன. இ.வி.எம் சிஸ்டம் ஜனநாயக தேர்தலுக்கு தகுதியற்றது. மெஷினின் டெக்னாலஜி நன்றாகத்தான் உள்ளது. ஆனால் யாருக்கு ஓட்டுப்போட்டேன் என எனக்குத் தெரியுமா? தெரியாது. அது சரியாக எண்ணப்படுகிறதா என்பதும் எனக்கு தெரியாது. ஓட்டுச்சீட்டில் நாம் ஓட்டுப்போடுவோம். ஓட்டு எண்ணும்போது நமது ஓட்டுக்களை கண்காணிக்க ஏஜெண்டுகள் இருப்பார்கள். ஆனால் இ.வி.எம் மெஷினில் ஓட்டுப்போடும் வாக்காளனை குருடன் ஆக்குகிறார்கள்.

இப்போது ஓட்டு எண்ணுவதில் தான் குளறுபடி நடக்கிறது. வி.வி.பேட் ரசீதுகளை எண்ண 5,6 நாள்கள் ஆகும் என்கிறது தேர்தல் ஆணையம். ஆனால், கூடுதலாக 12 மணிநேரம்தான் ஆகும். 6-ம் தேதி ஓட்டுப்பதிவு நடக்கிறது, மே 2-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கிறது. அவ்வளவு நாட்கள் காத்திருக்கும் உங்களால் கூடுதலாக 12 மணி நேரம் காத்திருக்க முடியாதா?

நான் ஓட்டு போடுவது ஒன்று, நீங்கள் எண்ணுவது மற்றொன்று. நூற்றுக்கு நூறு வி.வி பேட் ரசீதுகளையும் எண்ண வேண்டும். மேற்கு வங்கத்தில் இது பெரிய கிளர்ச்சியாக உள்ளது. தமிழகத்தில் இப்போதுதான் கிளர்ச்சி ஆகிறது.

வி.வி.பேட் -ல் பதிவாகும் சீட்டுக்களை எண்ண வேண்டும் என்றார் முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி தேவசகாயம்
வி.வி.பேட் -ல் பதிவாகும் சீட்டுக்களை எண்ண வேண்டும் என்றார் முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி தேவசகாயம்

மக்கள் மத்தியில் சந்தேகம் வந்தால், அதை தீர்த்து வைப்பது தேர்தல் ஆணையத்தின் வேலை. எனவே நூறு சதவிகிதம் வி.வி.பேட் ரசீதுகளை கையால் எண்ண வேண்டும். இரண்டும் நூறு சதவிகிதம் ஒத்துப்போனால் முடிவை அறிவிக்கலாம். இல்லையென்றால் கையால் வி.வி.பேட் ரசீதுகள் எண்ணப்பட்டு அதையே முடிவாக அறிவிக்க வேண்டும். 2017-ல் இ.வி.எம்-ஐ ஹேக் செய்ய முடியுமா என சவால் விட்டார்கள். இந்தியாவில் முதல் முறையாக அதை திறந்தும் காட்டினார்கள். அதில் சந்தேகத்துக்கு இடமான சில சர்க்யூட்டுகள் இருந்தன. அதை நாங்கள் கடிதமாகக் விளக்கிக் கொடுத்தோம். ஓட்டை எப்போது வேண்டுமானாலும் மாற்ற முடியும் என்ற நிலை இருக்கிறது.

இப்போதைய மெஷினில் ஹேக்கிங் நடக்க 100 சதவிகிதம் வாய்ப்பு உள்ளது. அதில் உள்ள பொருட்கள் இங்கு தயாரிப்பது இல்லை. ஒன்றிணைப்பதை மட்டும்தான் இங்குள்ள கம்பெனிகள் செய்கின்றன.

முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி தேவசகாயம் செய்தியாளர் சந்திப்பு
முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி தேவசகாயம் செய்தியாளர் சந்திப்பு

மக்களிடம் பேசினாலும், இ.வி.எம்-கள் மீது நம்பிக்கை இல்லாமல் பேசுகிறார்கள். சாதாரண மக்களுக்கு சந்தேகம் வந்ததை கண்டுகொள்ளாமல் இருப்பது சரியில்லை. எந்த ஒரு எலக்ட்ரானிக் இயந்திரத்தையும் ஹேக் செய்ய முடியும். நாங்கள் ஹேக் செய்யப்பட்டது என்று சொல்ல வரவில்லை. ஆனால் ஆகக் கூடிய சாத்தியங்கள் இருக்கும் ஒரு சிஸ்டத்தை, முறைப்படி உபயோகப்படுத்த முடியுமா என்பதுதான் நம் கேள்வி. ஜனநாயக முறைக்கு இது சரியான சிஸ்டமா என தேர்தல் கமிஷன் பார்க்க வேண்டும். இந்தியாவில் 10 லட்சம் மெஷின்கள் இருந்தால், அதில் 4,000 மெஷின்களை மட்டும் சோத்தித்துப் பார்த்தால் சரியாக இருக்குமா? வரும் சட்டசபை தேர்தலில் வி.வி.பேட்டில் வரும் எல்லா ஓட்டர் சிலிப்பையும் எண்ண வேண்டும். அப்போதுதான் மக்களுக்கு நம்பிக்கை வரும். இதில் வீம்புபார்க்க வேண்டிய அவசியம் இல்லை" என்றனர்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு