Published:Updated:

`ஆடையைக் கொண்டு அடையாளம் காண்பீர்களாமே; சொல்லுங்கள் நான் யார்?’- மோடிக்கு எதிராக கொதித்த மம்தா

மம்தா பானர்ஜி
மம்தா பானர்ஜி

குடியுரிமைச் சட்டத்துக்கு மேற்கு வங்கத்தில் மம்தா தலைமையில் இன்றும் பேரணி நடந்தது.

குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக அஸ்ஸாமில் பற்றிய தீ இப்போது டெல்லியைச் சூழ்ந்துள்ளது. இந்த நிலையில், ஜார்க்கண்ட் மாநிலத் தேர்தல் பிரசாரத்தில் டிசம்பர் 15-ம் தேதி பேசிய பிரதமர் நரேந்திர மோடி, நெருப்பினை பரப்புபவர்களை அவர்களின் ஆடைகளைக் கொண்டு அடையாளம் காண முடியும் என்றும் கூறியிருந்தார். காங்கிரஸ் கட்சியையும் அதன் கூட்டணிக் கட்சிகளைக் குறிப்பிட்டு பிரதமர் இந்தக் கருத்தை முன்வைத்தார். ``நாடே பற்றி எரிகிறது, அவர்கள் ஆடையைப் பற்றி பேசுகிறார்கள்” என மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கடுமையாகச் சாடியுள்ளார்.

மோடி
மோடி
ANI

குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக மம்தா தலைமையில் நேற்று பேரணி நடந்தது. அப்போது பேசியவர், ``நான் உயிரோடு இருக்கும்வரை வங்காளத்தில் குடியுரிமைச் சட்டத்தை நடைமுறைப்படுத்த விடமாட்டேன். என்னுடைய அரசை கலைக்க விரும்பினால் தாராளமாகச் செய்யுங்கள். குடியுரிமைச் சட்டத்தை நடைமுறைப்படுத்த விரும்பினால் என்னுடைய சடலத்தைத் தாண்டிதான் அவர்களால் அதைச் செய்ய முடியும்” என ஆவேசமாகப் பேசியிருந்தார்.

`என் சடலத்தின்மீது அமல்படுத்துங்கள் உங்கள் சட்டத்தை..!’ - மம்தா பானர்ஜி ஆவேசம்

குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக இன்றும் மம்தா தலைமையில் பேரணி நடந்தது. ``நாட்டின் எல்லா இடங்களிலும் போராட்டம் நடந்துவருகிறது. போராட்டம் இல்லாத இடங்களே இல்லை. இந்த நேரத்தில் ஆடைகளைப் பற்றி ஒரு கருத்து தெரிவிக்கிறார்கள். அணிந்திருக்கும் ஆடையை வைத்து போராட்டக்காரர்கள் யார் என அடையாளம் காண்பார்களாம். நான் அணிந்திருக்கும் ஆடையை வைத்து நான் யார் எனக் கூறுங்கள். என்னைச் சுற்றி இங்கு ஏராளமான மக்கள் இருக்கிறார்கள். அவர்களும் ஆடை அணிந்துள்ளனர்.

மம்தா பானர்ஜி பேரணி
மம்தா பானர்ஜி பேரணி

தலையில் குல்லா அணிவதனால் நீங்கள் இஸ்லாமியராகிவிட முடியாது. பஞ்சாபிகள் டர்பன் அணிவார்கள், பிஷப்கள் அவர்களுக்கான ஆடைகளை அணிகிறார்கள். என்ன ஆடை அணிய வேண்டும் என்ன உணவு உண்ண வேண்டும் என்பதெல்லாம் உங்களுடைய விருப்பம்தான். `நீங்கள் ஏன் வெள்ளை நிற செருப்பை அணிந்திருக்கிறீர்கள், நாங்கள் உங்களுக்கு காவி நிறத்தில் தருகிறோம்’ எனச் சிலர் என்னிடம் சொல்லக்கூடும். இதுதான் இங்கு மிகப்பெரிய பிரச்னை. ஒருவருடைய ஆடையை வைத்து அவரது அரசியலைக் கூற முடியாது. என்னால் அப்படி சிந்திக்க முடியவில்லை” என மம்தா பேசியுள்ளர்.

அடுத்த கட்டுரைக்கு