கடலூர் தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினரான டி.ஆர்.வி ரமேஷ் பண்ருட்டியில் முந்திரி ஏற்றுமதி செய்யும் தொழில் செய்துவருகிறார். அதற்காக எல்.என் புரத்தில் உள்ள தனது நிலத்தை தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் அடகு வைத்து கடன் வாங்கியிருக்கிறார். ஆனால் அதன் பிறகு தவணை தொகையையும், வட்டியையும் செலுத்தாமல் இருந்திருக்கிறார் எம்.பி ரமேஷ். அதனால் அவரது கடன் பாக்கி சுமார் 55 கோடி ரூபாயை தொட்டதாகக் கூறப்படுகிறது. அதை செலுத்த வேண்டும் என்று வங்கி தரப்பில் பலமுறை நோட்டீஸ் அனுப்பியும், செய்தித் தாள்களில் விளம்பரம் கொடுக்கப்பட்டும் எம்.பி ரமேஷ் அதனை கண்டுகொள்ளாமல் இருந்திருக்கிறார். அதனால் நீதிமன்றத்தை அணுகிய வங்கி தரப்பு, ரமேஷின் சொத்துகளை பறிமுதல் செய்வதற்கான ஆணையை பெற்று அதற்கான நடவடிக்கைகளில் இறங்கியது. ஆனால் அந்த உத்தரவுக்கு எம்.பி ரமேஷ் தடை ஆணையை வாங்கியதால், அவரது சொத்துகளை வங்கியால் கையகப்படுத்த முடியவில்லை. இந்த நிலையில்தான், நேற்று முன்தினம் அந்த தடை ஆணை காலாவதியானதாகக் கூறப்படுகிறது.

அதனால் மீண்டும் நீதிமன்றம் சென்ற வங்கி தரப்பு, எம்.பி ரமேஷின் சொத்துகளை ஜப்தி செய்வதற்கு அனுமதி கேட்டது. நீதிமன்ற ஆணையுடன் இன்று எம்.பி ரமேஷின் சொத்துக்களை பறிமுதல் செய்ய சென்ற வங்கி அதிகாரிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றனர் எம்.பி-யின் ஆதரவாளர்கள். அதனால் அவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸார் அங்கு குவிக்கப்பட்டனர். அவர்கள் உதவியுடன் எம்.பி ரமேஷின் சொத்துகளை கையப்படுத்தியதுடன், நீதிமன்ற உத்தரவுப்படி `இந்த இடம் ஜப்தி செய்யப்பட்டிருக்கிறது' என்ற அறிவிப்பு பலகையையும் வைத்தனர் வங்கி அதிகாரிகள்.

இது குறித்து வங்கி அதிகாரிகளிடம் கேட்டபோது, ``கடன் குறித்த விபரங்களை வெளிப்படையாக கூற முடியாது" என்று கூறிவிட்டனர். அதேசமயம் எம்.பி ரமேஷை தொடர்புகொண்டு இந்த ஜப்தி நடவடிக்கை குறித்து கேட்டபோது, “நான் எனது வழக்கறிஞரிடம் பேசிக்கொண்டிருக்கிறேன். பிறகு பேசுகிறேன்” என்று சுருக்கமாக முடித்துக்கொண்டார்.
கடந்த 2021-ம் ஆண்டு முந்திரி தொழிலாளி கோவிந்தராஜ் என்பவர் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில், எம்.பி ரமேஷ் மீது கொலை வழக்கு பதிவுசெய்த சி.பி.சி.ஐ.டி போலீஸ், நீதிமன்றத்தில் அதற்கான குற்றப் பத்திரிகையையும் தாக்கல் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.