Published:Updated:

திருவல்லிக்கேணி: கொம்பில் கட்சி நிறம்; சாலையை மறித்துச் செல்லும் மாடுகள்- என்ன சொல்கிறது மாநகராட்சி?

சாலையில் நிற்கும் மாடுகள்

உதயநிதி ஸ்டாலினின் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் மாடுகளால் மக்கள் சந்திக்கும் பிரச்னைகள் அதிகரித்துவருகின்றன.

Published:Updated:

திருவல்லிக்கேணி: கொம்பில் கட்சி நிறம்; சாலையை மறித்துச் செல்லும் மாடுகள்- என்ன சொல்கிறது மாநகராட்சி?

உதயநிதி ஸ்டாலினின் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் மாடுகளால் மக்கள் சந்திக்கும் பிரச்னைகள் அதிகரித்துவருகின்றன.

சாலையில் நிற்கும் மாடுகள்

`சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் மாடுகளால் மக்கள் சந்திக்கும் பிரச்னை அதிகரித்துவருகின்றன. பல ஆண்டுகளாகவே திருவல்லிக்கேணியின் சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கடும் சிரமத்துக்கு ஆளாகிவருவதாகவும், இது குறித்துப் பலமுறை புகாரளித்தும் எந்தவொரு நடவடிக்கையையும் சென்னை மாநகராட்சி மேற்கொள்ளவில்லை' எனவும் அந்தப் பகுதி மக்கள் புலம்பித்தள்ளுகின்றனர்.

சாலையில் நிற்கும் மாடுகள் , நாகோஜி தெரு, திருவல்லிக்கேணி
சாலையில் நிற்கும் மாடுகள் , நாகோஜி தெரு, திருவல்லிக்கேணி

இது குறித்து திருவல்லிக்கேணி மக்களிடம் பேசியபோது, ``திருவல்லிக்கேணியின் பாரதி சாலை, பார்த்தசாரதி கோவில் தெரு, நாகோஜி தெரு, ஆலங்காத்தா தெரு, சிங்கராச்சாரி தெரு, வெங்கடாசலம் தெரு, கங்கை கொண்டான் மண்டபம் என மக்கள் பயணிக்கும் சாலைகளெல்லாம் அறிவிக்கப்படாத திறந்தவெளி மாட்டுத்தொழுவங்களாகவும் மாடுகள் சுற்றித்திரியும் பகுதிகளாவும் முழுக்க மாறிவிட்டன. இந்தப் பகுதியில் இயங்கிவரும் தி இந்து உயர்நிலைப் பள்ளி, ராகவேந்திரா ராவ் பள்ளி, ஜடாவ்பாய் பள்ளி, என்.கே.டி.பள்ளி, கெல்லட் பள்ளி உள்ளிட்ட பள்ளிகளில் படிக்கும் குழந்தைகள் நாள்தோறும் அச்சத்துடனேயே இந்த சாலைகளில் சென்றுவருகின்றனர்.

கூரிய கொம்புகளுடைய இந்த மாடுகள் சாலையை அடைத்துக்கொண்டு செல்வதும், வழியில் பயணிப்பவர்களை சமயத்தில் முட்டிவிடுவதும், சாலையோரக் கடைகள் வைத்திருப்பவர்களின் பொருள்களை உண்பதும் வாடிக்கையாகிவிட்டது. இது தவிர திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலுக்கு வரும் பக்தர்களையும் இந்த மாடுகள் பதம்பார்த்துவிடுகின்றன. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் கோயிலுக்கு வந்த இரண்டு பெண்கள் மாடு முட்டி உயிரிழந்திருக்கின்றனர்" எனக் குமுறினார்கள்.

சாலையில் நிற்கும் மாடுகள், சிவராமன் தெரு, திருவல்லிக்கேணி
சாலையில் நிற்கும் மாடுகள், சிவராமன் தெரு, திருவல்லிக்கேணி

அந்தப் பகுதிகளில் இருக்கும் கடை வியாபாரிகளிடம் பேசியபோது, ``கங்கை கொண்டான் மண்டபம், ஜாம் பஜார் போன்ற பகுதிகளிலுள்ள மார்க்கெட்டுகளில் புகுந்து காய்கறிகள், பழங்கள், கீரைகள், வாழைத்தார்கள், மாலைகள் என அனைத்தையும் தின்றுவிடுகின்றன. தினமும் இது போன்று நிகழ்வதால் கைகளில் மாடு ஓட்டும் கம்புகளோடுதான் காவல் காத்து அமர்ந்திருக்கிறோம். கயிறுகள்கூட கட்டப்படாமல் வரும் மாடுகளை தடுத்து நிறுத்தக்கூட முடியாமல் திணறுகிறோம்" என வேதனை தெரிவித்தனர்.

ஜாம்பஜார், திருவல்லிக்கேணி
ஜாம்பஜார், திருவல்லிக்கேணி

வாகன ஓட்டிகளிடம் பேசியபோது, ``சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளால், திருவல்லிக்கேணி ஹை ரோடு, பாரதி சாலை போன்ற பிரதான சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும், மாடுகளின் சாணங்கள் ரோட்டிலேயே கிடப்பதால் அதில் தவறுதலாகச் செல்லும் இரு சக்கர வாகன ஓட்டிகள் வழுக்கி கீழே விழுந்து விபத்துக்கு ஆளாகின்றனர். மேலும், சாலையோரங்களில் வைக்கப்பட்டிருக்கும் குப்பைத்தொட்டிகளில் உணவு தேடுவதற்காக அவற்றை அப்படியே சாலையில் கவிழ்த்து விட்டுவிடுகின்றன மாடுகள்.

கடந்த சில நாள்களுக்கு முன்னர் பைக்கில் ஒருவர் தன் மனைவி, மூன்றரை வயது குழந்தையோடு திருவல்லிக்கேணி ஹை ரோடு சாலையில் பயணித்துக்கொண்டிருந்தபோது, மாலைக் கடைக்காரர் தனது கடையிலிருந்து மாட்டை விரட்டியிருக்கிறார். அப்போது மிரண்டு ஓடிய மாடு ரோட்டின் குறுக்கே செல்ல மாட்டின்மீது பைக் மோதி குடும்பத்துடன் கீழே விழுந்துவிட்டார். இதேபோல பல சம்பவங்களை அடுக்கலாம். இது போன்ற பலதரப்பட்ட பிரச்னைகளை நாள்தோறும் எதிர்கொண்டுவருகிறோம்" என்றனர்.

பாரதி சாலை, திருவல்லிக்கேணி
பாரதி சாலை, திருவல்லிக்கேணி

`நீண்டகாலமாக நடந்துவரும் இந்த மாட்டுப் பிரச்னைகள் குறித்து மாநகராட்சியிடம் புகாரளித்தீர்களா?' என அந்தப் பகுதியைச் சேர்ந்த பெயர் வெளியிடப்பட விரும்பாத முக்கியப் பிரமுகர் ஒருவரிடம் கேட்டபோது, ``பல முறை மாநகராட்சி அலுவலர்களுக்குப் புகாரளித்துவிட்டோம். ஆனால், எந்த நடவடிக்கையும் இல்லை. ஒருமுறை நான் மாநகராட்சி அதிகாரிகளுக்கு தொலைபேசி மூலம் அழைத்து புகார் தெரிவித்தேன். அடுத்த நாளே மாடுகளின் உரிமையாளர்கள் என்னைச் சூழ்ந்துகொண்டு `ஏன் புகாரளித்தாய்... உனக்கு ஏன் இந்த தேவையில்லாத வேலை?' எனக் கேட்டு மிரட்ட ஆரம்பித்துவிட்டனர். நான் தனிப்பட்ட முறையில் அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்தது மாடுகளின் உரிமையாளர்களுக்கு எப்படித் தெரிந்தது... எனது பெயர், தொலைபேசி எண்ணை யார் அவர்களுக்கு கொடுத்தது என்ற கேள்விக்கு இன்றுவரை எனக்கு விடை கிடைக்கவில்லை.

குப்பைகளை உண்ணும் மாடு
குப்பைகளை உண்ணும் மாடு

அதேபோல, மாநகராட்சித் தடையை மீறி சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளைப் பிடிப்பதற்காக `கால்நடைகள் பிடிக்கும் வாகனம்' வரும்போதெல்லாம் உரிமையாளர்கள் பத்திரமாக மாடுகளை அவிழ்த்துவிடாமலும், அரசு ஒதுக்கியிருக்கும் மாட்டுத்தொழுவத்திலும் கட்டிவைத்துவிடுகிறார்கள். அதாவது கால்நடை பிடிக்கும் வண்டி வரப்போவதை முன்கூட்டியே மாடுகளின் உரிமையாளருக்கு மாநகராட்சி அதிகாரிகள் சிலரே தகவல் சொல்லி, எச்சரிக்கை செய்துவிடுகின்றனர். மாநகராட்சி அதிகாரிகளுக்கும், மாடுகளின் உரிமையாளர்களுக்கும் இடையே ஏதோ `டீலிங்' இருப்பதுபோலத் தெரிகிறது" எனச் சந்தேகம் கிளப்பினார்.

மேலும், ``கட்சிகளில் இருக்கும் மாடுகளின் உரிமையாளர்கள் தங்கள் மாடுகளின் கொம்புகளில் கட்சிக்கொடியின் கலர்களை பெயின்ட் அடித்து அடையாளத்தோடு வெளியில் விட்டுவிடுகிறார்கள். குறிப்பாக, திமுக ஆட்சிக்கு வந்த பின்னர், தி.மு.க கொடியின் கறுப்பு சிவப்பு பெயின்ட் அடித்த மாடுகளின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது. அந்தக் கட்சிக்காரர்களின் மாடுகளை மட்டும் பயந்துகொண்டு மாநகராட்சி அதிகாரிகள் பிடிக்க மாட்டார்கள். முக்கியமாக, இரவுகளில்தான் பெரும்பாலானோர் மாடுகளை அவிழ்த்துவிடுவார்கள்" எனப் போட்டுடைத்தார்.

கொம்பில் தி.மு.க கொடி வண்ணம் பூசப்பட்ட மாடு
கொம்பில் தி.மு.க கொடி வண்ணம் பூசப்பட்ட மாடு

அதைத் தொடர்ந்து, திருவல்லிக்கேணி 116-வது வார்டு தி.மு.க கவுன்சிலர் ஏ.ஆர்.பி.எம்.காமராஜைத் தொடர்புகொண்டு பேசினோம். ``ஆமாம்... மாடுகள் பிரச்னை இருக்குதுதான். அதுக்காக என்ன பண்றது... மாட்டோட உரிமையாளர்களும் எங்களுக்கு ஓட்டுப்போட்டவங்கதானே... அவங்களையும் பாத்துதான் முடிவெடுக்க முடியும். எங்களால முடிஞ்சவரைக்கும் நடவடிக்கை எடுக்குறோம். மேலும் தகவல் வேணும்னா என்னை நேர்ல வந்து பாருங்க... பேசுவோம்" என்றார்.

கொம்பில் தி.மு.க கொடி வண்ணம் பூசப்பட்ட மாடு
கொம்பில் தி.மு.க கொடி வண்ணம் பூசப்பட்ட மாடு

மாடுகள் பிரச்னை, மக்களின் குற்றச்சாட்டுகள் மற்றும் சென்னை மாநகராட்சி மேற்கொள்ளும் நடவடிக்கைகள் குறித்து சென்னை மாநகராட்சியின் துணை மேயர் மகேஷ்குமாரிடம் பேசினோம். ``ஏற்கெனவே சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் சென்னை மாநகராட்சியின் மாட்டுத் தொழுவம் இருக்கிறது. ஆனால், மாடுகளின் உரிமையாளர்கள் யாரும் அதைப் பயன்படுத்திக்கொள்வதில்லை. மாறாக, திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவில் பகுதியில் அவிழ்த்து விட்டுவிடுகிறார்கள். அங்கு கோயிலுக்கு வரும் பக்தர்கள் `பசுக்களுக்கு உணவளித்தால் பாக்கியம்' என்ற நம்பிக்கையில் அங்கிருக்கும் கடைகளில் விற்கும் அகத்திக்கீரை, பழங்கள் ஆகியவற்றை வாங்கி உணவாக, நேர்த்திக்கடனாக மாடுகளுக்குக் கொடுக்கின்றனர். அதனால் அந்தப் பகுதிகளில் மாடுகள் அதிகமாகக் காணப்படுகின்றன.

இப்படி மாநகராட்சியின் விதிகளை மீறி, சட்டவிரோதமாகச் சாலைகளில் அவிழ்த்துவிடப்படும் மாடுகளைப் பிடித்து, மாடுகளின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கிறோம். மீட்கப்பட்ட மாடுகளை புளூ கிராஸ் அமைப்புக்கு அனுப்புகிறோம். அங்கிருந்து குன்னவாக்கம், பொன்னேரி ஊத்துக்காடு போன்ற இடங்களிலுள்ள மாட்டுத் தொழுவங்களுக்கு அவை அனுப்பப்படுகின்றன. மேலும், இந்த மாடுகள் பிரச்னை திருவல்லிக்கேணியில் மட்டுமல்ல மண்டலம் 5, சைதாப்பேட்டை, கோயம்பேடு போன்ற இடங்களிலும் இருக்கின்றன" எனத் தெரிவித்தார்.

சென்னை மாநகராட்சி துணை மேயர் மகேஷ்குமார்
சென்னை மாநகராட்சி துணை மேயர் மகேஷ்குமார்

தொடர்ந்து, ``மாடுகளின் உரிமையாளர்களுக்கு மாநகராட்சி அதிகாரிகள் சிலர் தகவல் சொல்வதாகச் சொல்லப்படுவது தவறான செய்தி. மாடுகளின் உரிமையாளர்கள்தான் , `மாநகராட்சி அதிகாரிகள் கால்நடை பிடிக்கும் வண்டிகளில் மாடுகளை ஏற்றும்போது, மாடுகளுக்குக் காயம் ஏற்படுகிறது, மாடுகளை அதிகாரிகள் சித்ரவதை செய்கிறார்கள்' என்றெல்லாம் சொல்லி புகைப்படங்கள் எடுத்துப் பரப்பி, பெரிய பிரச்னையாக்கிவிடுகிறார்கள். அதனால்தான், `கர்ப்பிணியாக இருக்கும் மாடுகளையும், கன்றுக்குட்டிகளையும் பிடிக்காதீர்கள். அபராதம் மட்டும் போட்டு விட்டுவிடுங்கள்’ என வாய்மொழி உத்தரவு போட்டிருக்கிறோம். தவிர, கட்சி பெயின்ட் அடித்த மாடுகளை கைவைப்பதில்லை என்று சொல்வதெல்லாம் பொய். அப்படியெல்லாம் கிடையவே கிடையாது" என மறுப்பு தெரிவித்தார்.

இரவில் உலவும் மாடுகள்
இரவில் உலவும் மாடுகள்

மேலும், மாட்டின் உரிமையாளர்களுக்குக் கோரிக்கைவைக்கும்விதமாகப் பேசிய துணை மேயர் மகேஷ்குமார், ``சென்னை மாநகராட்சி, மாடு வளர்ப்பதற்குத் தடைசெய்யப்பட்ட பகுதிதான். மாடுகளை ரோட்டில் அலையவிட்டீர்களென்றால் அது குற்றம். அதற்காக மாநகராட்சி அதிகாரிகள் தொடர்ந்து அபராதம் விதிப்போம். இப்படி அவிழ்த்துவிடப்படும் மாடுகள் குப்பைத்தொட்டிகளில் உணவுகள் தேடும்போது பிளாஸ்டிக் கவர்களையும் தின்றுவிடுகின்றன. சமீபத்தில் `புளூ கிராஸ்' அமைப்பினர் ஒரு மாட்டின் வயிற்றிலிருந்து அரைமூட்டை பிளாஸ்டிக் எடுத்திருக்கின்றனர். இது பாவமில்லையா?" எனக் கேள்வி எழுப்பினார்.

சென்னை மாநகராட்சி
சென்னை மாநகராட்சி

மேலும், ``சென்னை மாநகராட்சியில் மாடுகள் அதிகமாக இருக்கும் மண்டலங்கள், பகுதிகளில் ஆய்வுநடத்தவிருக்கிறோம். எந்த மண்டலத்தில் மாடுகள் அதிகம் இருக்கின்றனவோ அந்தப் பகுதிகளில் மாநகராட்சி சார்பில் பொதுவான மாட்டுத் தொழுவங்களை அமைக்கவிருக்கிறோம். அந்த இடங்களில் மாட்டின் உரிமையாளர்கள் மாடுகளைவைத்து பராமரித்துக்கொள்ளலாம். பட்ஜெட் கூட்டம் முடிந்த பிறகு 2023-24 ஆண்டுக்குள் இந்த மாடுகள் பிரச்னைக்குத் தீர்வு காணப்படும்" என உறுதியளித்தார்.