Published:Updated:

``மதத்தின் மீது யார் வெறி கொண்டாலும், அந்த மதத்துக்குத்தான் தீங்கு விளைவிக்கிறார்கள்” - சி.பி.ஆர்

சி.பி.ராதாகிருஷ்ணன்

``கேராளவில் இருக்கும் கம்யூனிஸ்ட்டுகள் பி.எஃப்.ஐ-யை எதிர்க்கிறார்கள், இங்கு இருக்கும் கம்யூனிஸ்ட்டுகள் தி.மு.க-வுக்கு ஜால்ரா போட வேண்டும் என்பதற்காக பி.எஃப்.ஐ-யை ஆதரிக்கிறார்கள். இங்குதான் சிந்திக்க வேண்டியுள்ளது.” - சி.பி.ராதாகிருஷ்ணன்

``மதத்தின் மீது யார் வெறி கொண்டாலும், அந்த மதத்துக்குத்தான் தீங்கு விளைவிக்கிறார்கள்” - சி.பி.ஆர்

``கேராளவில் இருக்கும் கம்யூனிஸ்ட்டுகள் பி.எஃப்.ஐ-யை எதிர்க்கிறார்கள், இங்கு இருக்கும் கம்யூனிஸ்ட்டுகள் தி.மு.க-வுக்கு ஜால்ரா போட வேண்டும் என்பதற்காக பி.எஃப்.ஐ-யை ஆதரிக்கிறார்கள். இங்குதான் சிந்திக்க வேண்டியுள்ளது.” - சி.பி.ராதாகிருஷ்ணன்

Published:Updated:
சி.பி.ராதாகிருஷ்ணன்

தீபாவளிக்கு முந்தைய நாளன்று நிகழ்ந்த கார் வெடிப்புச் சம்பவத்தால் மீண்டும் பரபரப்பாகியிருக்கிறது கோவை. இந்த விவகாரத்தில் பல்வேறு யூகங்களின் அடிப்படையில் தமிழக பா.ஜ.க கேள்விகளை முன்வைப்பதோடு, மாநில அரசையும் விமர்சித்துவருகிறது. இந்த நிலையில் கோவையைச் சேர்ந்த பா.ஜ.க-வின் மூத்த தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணனிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்...

``கோவைச் சம்பவத்தையும், அதில் தமிழ்நாடு அரசின் செயல்பாடுகளையும் எப்படிப் பார்க்கிறது பா.ஜ.க?”

``ஒரு கொடூரமான வரலாறு மீண்டும் திரும்புவதற்கான நிகழ்வாகத்தான் இதைப் பார்க்கிறோம். இந்தச் சதித்திட்டம் வெற்றிபெற்றிருந்தால் மிகப்பெரிய பேரழிவை கோவை மீண்டும் சந்தித்திருக்கும். அதிர்ஷ்டவசமாக, கடவுள் அருளால் ஒரு பெரும் நாசகர வேலை வெளிச்சத்துக்கு வந்துவிட்டது. அதில் ஒளிவு மறைவற்ற விசாரணையை மக்களின் பார்வைக்குக் கொண்டுவரவேண்டியதே தமிழக அரசின் முதல் கடமை. ஆனால், ஏறத்தாழ ஒன்றரை டன் அமோனியம் நைட்ரேட் வெடிமருந்து சிக்கியிருப்பதாகச் சொல்லப்படும் நிலையில், வழக்கம்போல தி.மு.க அரசு 75 கிலோதான் என்று சொல்லி இந்த விவகாரத்தை மூடி மறைக்கப் பார்க்கிறது.”

கோவை கார் சிலிண்டர் வெடிப்பு
கோவை கார் சிலிண்டர் வெடிப்பு

``பொதுமக்கள் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் விவகாரத்தைத் தமிழக அரசு ஏன் மூடி மறைக்க வேண்டும்?”

``வாக்கு அரசியல்தான். கடந்தகாலத்திலும் இதேபோல்தான் தீவிரவாதிகளின் வீடுகளில் புகுந்து சோதனை செய்ய வேண்டுமென்று காவல்துறை சொன்னபோது, தேர்தல் நேரம் என்று அன்றைய தி.மு.க அரசு அதைத் தடுத்து நிறுத்தியது. அதன் விளைவாக, மிகப்பெரிய கொடூரத்தை கோவை சந்தித்தது. நாடு முழுவதும் பி.எஃப்.ஐ அமைப்பு தடைசெய்யப்பட்டவுடனேயே இங்கொன்றும் அங்கொன்றுமாக பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டபோதே தமிழக அரசு நடவடிக்கை எடுத்திருந்தால் இது போன்ற துர்நிகழ்வு நடந்திருக்காது. நடவடிக்கை எடுக்க வேண்டிய காவல்துறையின் கைகளை தி.மு.க அரசு கட்டிப்போட்டிருப்பதாலேயே இந்தக் குற்றச்சாட்டை முன்வைக்கிறோம்.”

``கோவையில் நடந்த சம்பவத்தைச் சுட்டிக்காட்டி இதைத் தமிழக அரசு தடுக்கத் தவறிவிட்டது எனக் கூறும் அதேவேளையில், பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் அல்லது ஆதரவு அளிக்கும் மாநிலங்களில் நடைபெற்ற அசம்பாவிதச் சம்பவங்களுக்கு பொறுப்பேற்று அந்த அரசுகள் ராஜினாமா செய்த வரலாறு உண்டா?”

``தமிழ்நாடு அரசாங்கம்போல் தூங்கி வழிந்துகொண்டிருப்பது பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் இல்லை. உறுதியுடன் காவல்துறை செயல்பட வேண்டும். அதில் ஒவ்வொரு முறையும் காவல்துறை வெற்றிபெறுகிறபோதுதான் தீவிரவாதிகள் முயற்சி தோற்கடிக்கப்படும். தீவிரவாதி ஒரு முறை வெற்றிபெற்றுவிட்டால் மிகப்பெரிய பேராபத்து நிகழ்ந்துவிடும். அதுபோல் பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் நிகழ்வதில்லை. இன்னும் சொல்லப்போனால் கேரளத்தில் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சி செய்கிறது. அங்கு இருக்கும் கம்யூனிஸ்ட்டுகள் பி.எஃப்.ஐ-யை எதிர்க்கிறார்கள், இங்கு இருக்கும் கம்யூனிஸ்ட்கள் தி.மு.க-வுக்கு ஜால்ரா போட வேண்டும் என்பதற்காக பி.எஃப்.ஐ-யை ஆதரிக்கிறார்கள். இங்குதான் சிந்திக்கவேண்டியிருக்கிறது. இஸ்லாமிய தீவிரவாதி இஸ்லாத்தைக் காப்பதற்காக இல்லை, இஸ்லாம் மீது வெறிகொள்ள வைக்க வேண்டும் என்பதற்காகச் செயல்படுகிறார். எந்த மதத்தின் மீது யார் வெறிகொண்டாலும், அதில் இந்து, கிறிஸ்தவர் யாராக இருந்தாலும் அந்த மதத்துக்குத்தான் தீங்கு விளைவிக்கிறார்கள்.”

கோவை வெடிப்பு சம்பந்தமாக அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை
கோவை வெடிப்பு சம்பந்தமாக அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை

``அதேவேளையில் பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ் மீதும் இந்து தீவிரவாதி என்கிற விமர்சனம் எழத்தானே செய்கிறது?”

“இந்து மதத்துக்கு எதிராக இவர்கள் சொல்வதைக் கண்டிப்பதற்கு ஒரு கட்சிக்குக்கூட வக்கில்லை. ஆ.ராசா மாதிரியான நபர்கள் சொல்வதை யாராவது கண்டித்தார்களா... இந்து தாய்மார்களை எல்லாம் விபசாரி என்று ஒருவர் சொல்கிறார் என்றால், ஸ்டாலின் அதற்கு எதிராகக் குரல் கொடுத்திருக்க வேண்டாமா. பா.ஜ.க மட்டும் குரல் கொடுக்கும்போது இந்து மதத்தை வைத்து அரசியல் செய்வதாகச் சொல்கிறார்கள். ஆ.ராசா போன்றவர்களெல்லாம் வாய் மூடிக்கொண்டிருந்தால் எங்கு வரப்போகிறது இந்து மத அரசியல்... பா.ஜ.க முன்னேற்றத்துக்கான அரசியலைத்தான் முன்னெடுத்துச் செல்கிறது. இந்துக்களுடைய நம்பிக்கைகளையெல்லாம் பழித்தும், இழித்தும் பேசும்போது அதைப் பார்த்துக்கொண்டிருக்க வேண்டும் என்பது சரியான அணுகுமுறை இல்லை.”

ராசா
ராசா
விகடன்

``காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக கார்கே பொறுப்பேற்றிருக்கிறாரே?”

“தலையாட்டி பொம்மைதான் வேண்டும் என்பது நேரு குடும்பத்தினுடைய சிந்தனையாக இருக்கிறது. மன்மோகன் சிங்கை பிரதமர் ஆக்கினார்கள், பத்து ஆண்டுக்கால ஆட்சிக்குப் பிறகு நாற்பத்தி நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்களாகச் சரிந்துபோனார்கள். இப்போது இன்னொரு தலையாட்டி பொம்மையைக் கொண்டுவந்திருக்கிறார்கள். ‘காங்கிரஸைக் கலைத்துவிடலாம்’ என்று காந்தி அவர்கள் வெளிப்படுத்திய சிந்தனையை இவர் நடத்திக்காட்டுவார் என்பது வரும் காலங்களில் தெரியும். மக்களைத் திரட்டக்கூடிய சக்தி இல்லாதவரை ஒரு கட்சி அகில இந்திய தலைமைப் பொறுப்புக்கு கொண்டுவருகிறது என்று சொன்னால், அதுவும் எதிர்க்கட்சியாக இருக்கிற நேரத்தில் அது தனக்குத்தானே சவக்குழியைத் தோண்டிக்கொள்கிறது என்றுதான் அர்த்தம்.”

குழந்தைகளுடன் ராகுல்
குழந்தைகளுடன் ராகுல்

``ஒரு பக்கம் ராகுலின் நடைப்பயணத்தை பா.ஜ.க விமர்சித்தாலும், அவருக்கான செல்வாக்கு கூடிக்கொண்டே செல்கிறதே?”

“என்ன செல்வாக்கு கூடுகிறது... நடைப்பயணம் செல்லும் ராகுல் காந்தி என்ன மாற்றுத் திட்டத்தை, மகத்தான அறிக்கையைச் சொல்லிவிட்டார். மன்மோகன் சிங் இரண்டாவது முறையாகப் பிரதமராக வரவேண்டிய நேரத்தில், ‘ராகுல் காந்தியைப் பிரதமர் ஆக்கிவிடலாம். மன்மோகன் சிங்கை ஜனாதிபதி ஆக்கிவிடலாம்' என்று தலைவர் கலைஞர் ஓர் அருமையான யோசனையைச் சொன்னார். ஆனால், மக்கள் அளித்த வாக்குகளைப் பெற்று, பிரதமராக வருவதற்கு முயலாத ராகுல் காந்தி, இன்றைக்கு நடைப்பயணம் சென்று மக்களைத் திரட்டுவதாகச் சொல்வதெல்லாம் வீண் கற்பனை. அதிகாரத்தைப் பயன்படுத்தி மக்களுக்குச் சேவை செய்ய வேண்டும். அதிகாரத்தில் அமருவதன் மூலமாக மக்களுக்கான நல்ல திட்டங்களை செயல்படுத்த முடியும் என்கிற சிந்தனையே இல்லாதவர்தான் ராகுல் காந்தி.”

``அண்ணாமலை தலைமையில் தமிழக பா.ஜ.க வளர்கிறது என்று சொன்னாலும், உட்கட்சிப்பூசல் அதிகமாகிக்கொண்டே இருக்கிறதே?”

``அண்ணாமலை அவர்கள் வந்த பிறகு ஓர் உத்வேகத்தோடு வளர்ச்சி பெற்றுவருகிறது என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. ஓர் இயக்கம் வேகமாக வளர்கிறது, புதியவர்கள் உள்ளே வருகிறார்கள், பல்வேறு இயக்கங்களிலிருந்து பல்வேறு அனுபவங்கள் கொண்டவர்கள் உள்ளே வருகிறார்கள். இப்படி எல்லோருமாக இணைகிறபோது உட்கட்சி ஜனநாயகத்தைக்கொண்ட பா.ஜ.க-வில் கருத்துகளும், மாற்றுக் கருத்துகளும் பரிமாறப்படும். ஆனால், எடுக்கிற முடிவு ஒருமித்த கருத்தாக மட்டுமே இருக்கும். இதைப் புரிந்துகொள்ள முடியாதவர்கள் யாராவது ஒரு கருத்தைச் சொல்லிக்கொண்டேயிருப்பார்கள்.”

அமித் ஷாவுடன் எடப்பாடி, ஓ.பி.எஸ்
அமித் ஷாவுடன் எடப்பாடி, ஓ.பி.எஸ்

“தமிழ்நாட்டில் இன்று ஆக்கபூர்வமான எதிர்க்கட்சி யார்..?”

``தமிழ்நாட்டில் எத்தனை எதிர்கட்சிகள் இருந்தாலும், இன்று தி.மு.க-வை முழுமையான துணிவோடும், ஆக்கபூர்வமாகவும், ஆதாரபூர்வமாகவும் எதிர்ப்பதில் பா.ஜ.க முன்னணியில் இருக்கிறது. அதை நோக்கி வளர்ந்துவருகிறோம். அதேவேளையில் நான்கு எம்.எல்.ஏ-க்களை வைத்துக்கொண்டு நாங்கள்தான் எதிர்க்கட்சி என்று சொல்வது எப்படிச் சரியான அணுகுமுறையாக இருக்கும். ஆனால், தி.மு.க-வின் அராஜகத்தை எதிர்த்து போராடுகிற, தோல்விகளை வெளிச்சம் போட்டுக் காட்டுகிற, இஸ்லாமிய தீவிரவாதத்தை மறைமுகமாக ஆதரிக்கும் போக்குகளையெல்லாம் வெளிப்படையாக எதிர்க்கிற ஒரு எதிர்க்கட்சியாக பா.ஜ.க மட்டும்தான் இருக்கிறது.”

இந்தக் கேள்வி பதில்களோடு...

“ஒரு பக்கம் விசாரணை நடந்துகொண்டிருக்கையில், ‘இது தற்கொலைப்படைத் தாக்குதல்’ என முந்திக்கொண்டு அறிவிக்கிறாரே அண்ணாமலை..?”

“இந்தச் சம்பவத்துக்கு எந்த ஓர் அமைப்பும் பொறுப்பேற்காத நிலையில், மதத் தீவிரவாதமாக பா.ஜ.க கட்டமைக்க முயல்வது ஏற்புடையதா?”

“என்.ஐ.ஏ கண்காணிப்பு வளையத்தில் இருக்கும் ஒரு நபரின் பெயர் இந்த விவகாரத்தில் அடிபடும் நிலையில், மாநில அரசின் உளவுத்துறையை மட்டும் பா.ஜ.க குறிவைத்துக் குற்றம்சாட்டுவது ஏன்?

“தமிழக பா.ஜ.க-வில் மூத்த தலைவர்களெல்லாம் அதிருப்தியில் இருப்பதாகச் செய்திகள் வருகின்றனவே?”

“ ‘தமிழகத்தில் மத்திய அமைச்சர்களின் தொடர் ஆய்வு ஆரோக்கியமானதல்ல’ என்று உங்கள் கூட்டணியிலிருக்கும் அ.தி.மு.க-வினரே விமர்சிக்கிறார்களே?”

போன்ற கேள்விகளுக்கு 2.11.2022 தேதியிட்ட ஜூனியர் விகடன் இதழுக்கு பதில் அளித்திருக்கிறார் பா.ஜ.க மூத்தத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன்.