Published:Updated:

`பாலன் இல்லம், நல்லகண்ணு மீது அவதூறு... இது வலைதள சுதந்திரமா?’ - கொந்தளிக்கும் கம்யூனிஸ்ட்டுகள்

நல்லகண்ணு
நல்லகண்ணு

சுதந்திரப் போராட்ட வீரரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவருமான இரா.நல்லகண்ணுவை ஆபாசமாகச் சித்திரித்து முகநூலில் யாரோ சிலர் வெளியிட்டுள்ள பதிவு, கம்யூனிஸ்ட் கட்சியினர் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

கம்யூனிஸ்ட் கட்சியையும் கம்யூனிஸ்ட் தலைவர்களையும் அவதூறு செய்து இழிவுபடுத்தும் செயல்கள் சமூக வலைதளங்களில் சமீபகாலமாகத் தொடர்கின்றன. சென்னை தி.நகரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலத் தலைமை அலுவலகமான `பாலன் இல்லம்' செயல்பட்டுவருகிறது. அந்த அலுவலகத்தின் புகைப்படத்தை ஆபாசமான வாசகங்களுடன் முகநூலில் சிலர் பதிவிட்டுள்ளனர்.

மேலும், பெண் செயற்பாட்டாளர் ஒருவரை அவதூறு செய்யும் வகையிலும் ஒரு பதிவு அதில் இடம்பெற்றுள்ளது. அந்தப் பதிவுக்கு அருவருக்கத்த வகையில் சிலர் பின்னூட்டங்களைப் பதிந்துள்ளனர். அந்தப் பதிவை வெளியிட்ட நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, சென்னை மாநகர காவல் ஆணையரிடம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தென் சென்னை மாவட்டச் செயலாளர் எஸ்.ஏழுமலை புகார் அளித்துள்ளார்.

இரா.முத்தரசன்
இரா.முத்தரசன்

அத்துடன், அந்தச் செயலைக் கண்டித்து மாநிலம் தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது. ஜூலை 22-ம் தேதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடைபெறவுள்ள அந்த ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் பங்கேற்கும் என்று அதன் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் அறிவித்துள்ளார்.

இது குறித்து கூறியிருக்கும் கே.பாலகிருஷ்ணன், ``இத்தகையப் பதிவுகள் வலைதளச் சுதந்திரம் அல்ல. இது வலைதளத்தில் நிகழ்த்தப்படும் மிகப்பெரிய அராஜகம். எங்கோ ஒரு மூலையில் போகிற போக்கில் யாரோ ஒருவர் போடும் பதிவுகளாக இதைப் பார்த்துவிட்டு கடந்துவிட முடியாது. கருத்துகளுடனும் கொள்கையுடனும் மோதுவதற்கு திராணியற்ற சக்திகளின் வழிகாட்டுதல் காரணமாகவோ, அத்தகை மனநிலை கட்டமைக்கப்படுவதன் காரணமாகவோ இதுபோன்ற இழிசெயல்கள் நடப்பதாகவே கருத வேண்டியுள்ளது” என்கிறார்.

கே.பாலகிருஷ்ணன்
கே.பாலகிருஷ்ணன்

ஜூலை 22-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும் சுதந்திரப் போராட்ட வீரருமான நல்லகண்ணுவை ஆபாசமாகச் சித்திரித்து முகநூலில் ஒரு பதிவு வெளியாகியுள்ளது. இதற்குக் காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை மாநகர காவல் ஆணையரிடம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் புகார் அளித்துள்ளார்.

`கந்த சஷ்டி' கலகமும்... கழகங்களின் அமைதியும்! - கே.டி.ராகவன் vs சுப.வீ

``தமிழ்நாட்டின் மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரும் விடுதலைப் போராட்ட வீரரும் தமிழ்நாட்டு மக்களின் நன்மதிப்பைப் பெற்றவரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினருமான இரா.நல்லகண்ணு புகைப்படத்தை ஆபாசமாகச் சித்திரிக்கும் வார்த்தைகள் அடங்கிய முகநூல் பதிவு வெளியாகியுள்ளது. மக்களின் நன்மதிப்பைப் பெற்ற தலைவரை இழிவுபடுத்தவும் அவரது தூய்மையான, எளிமையான பொதுவாழ்க்கையைக் களங்கப்படுத்தவும் சிலர் முயன்றுள்ளனர்.

நல்லகண்ணு
நல்லகண்ணு

இதன் மூலம், கம்யூனிஸ்ட் இயக்கங்களின் தொண்டர்களையும் பொதுமக்களையும் ஆத்திரமூட்டியுள்ளனர். இதற்கு காரணமான நபர்களைக் கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று புகார் மனுவில் இரா.முத்தரசன் கூறியுள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு