Published:Updated:

ஒன் பை டூ: நூறு நாள் வேலைத் திட்டத்தை ஒழித்துக்கட்ட வேண்டும் என்ற சீமானின் கருத்து சரியா?

ஒரு நபருக்குக் குறைந்தபட்சம் வருடத்துக்கு 100 நாள்களாவது வேலையை உறுதி செய்ய வேண்டும். ஆனால், பெரும்பாலான இடங்களில் ஆறு நாள்கள் மட்டுமே வேலை கொடுக்கப்படுகிறது.

பிரீமியம் ஸ்டோரி

லெனின், இந்திய கம்யூனிஸ்ட்

“மிகவும் அபத்தமானது. இன்னும் சொல்லப்போனால் யதார்த்தத்தை அறியாமல், பெரு விவசாயிகளுக்கு ஆதரவாகப் பேசியிருக்கிறார் சீமான். நவீன தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக, கிராமங்களில் விவசாய வேலைகள் இல்லாமல் நகரங்களுக்குக் குடிபெயரும் மக்களைத் தடுத்து, அவர்களின் சொந்த ஊரிலேயே வேலைவாய்ப்பை அளிப்பதுதான் இந்தத் திட்டத்தின் நோக்கம். இந்தியாவிலேயே முதன்முறையாக அரசியலமைப்புச் சட்டத்தின்படி நிறைவேற்றப்பட்ட திட்டமும் இதுதான். அது முழுமையாக அமல்படுத்தப்படவில்லை என்பது உண்மைதான். அதற்காக, இந்தத் திட்டத்தையே ஒழித்துக்கட்ட வேண்டும் என்று சீமான் சொல்வது சரியல்ல. எட்டு மணி நேர விவசாய வேலைக்கு எவ்வளவு சம்பளம் கொடுக்கப்படுகிறது என்பது குறித்தும் சீமான் வெளிப்படையாகப் பேச வேண்டும். விவசாய வேலை இல்லாத கோடைக் காலங்களில்தான் இந்தத் திட்டம் பெரும்பாலும் செயல்படுத்தப்படுகிறது. அதாவது, விவசாயிகள் பாதிக்கப்படக் கூடாது என்கிற நோக்கத்தில் கொண்டுவரப்பட்ட திட்டம் இது. ஆனால், ‘புளியமரத்தடியில் படுத்துக்கொண்டு சம்பளம் வாங்குகிறார்கள்’ என்று சீமான் பேசுகிறார். அவர் ஒரு மணி நேரம் வெயிலில் நின்றால்தான் அந்த உழைப்பின் மகத்துவம், மக்கள் படும் கஷ்டம் தெரியும். சீமானின் பேச்சு வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. இதற்காக அவர் மக்களிடம் பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும்.’’

லெனின்
லெனின்
காளியம்மாள்
காளியம்மாள்

காளியம்மாள், நாம் தமிழர் கட்சி

“மிகச்சரியான கருத்து. இதை அண்ணன் சீமான் மட்டும் சொல்லவில்லை. சென்னை உயர் நீதிமன்றமே சொல்லியிருக்கிறது. மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட இந்தத் திட்டத்துக்கென சில வரையறைகள் இருக்கின்றன. உதாரணமாக, ஒரு நபருக்குக் குறைந்தபட்சம் வருடத்துக்கு 100 நாள்களாவது வேலையை உறுதி செய்ய வேண்டும். ஆனால், பெரும்பாலான இடங்களில் ஆறு நாள்கள் மட்டுமே வேலை கொடுக்கப்படுகிறது. அதற்கான சம்பளப் பணத்திலும் உள்ளூர் அரசியவாதிகள் கமிஷன் எடுத்துக்கொள்கிறார்கள். அதுமட்டுமல்ல... உள்ளூர் பராமரிப்பு, கட்டுமானம், வளங்கள் மறுசீரமைப்புக்காக இந்தத் திட்டம் அமல்படுத்தப்பட்டதாகச் சொல்லப்பட்டது. 2005-லிருந்து தற்போதுவரை இந்தத் திட்டத்துக்கென பல கோடி ரூபாயும் செலவழிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், இதுவரை உருப்படியாக எதுவும் நடக்கவில்லை என்பது ஊரறிந்த விஷயம். கிராமசபைக் கூட்டம் நடக்கும்போது வரவு செலவு கணக்கு, என்னென்ன வேலைகள் நடந்திருக்கின்றன என்பது குறித்து சமூகத் தணிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். ஆனால், தமிழ்நாட்டில் இதுவரை ஓர் ஊராட்சியில்கூட சமூகத் தணிக்கை முறையாக நடைபெற்றதில்லை. அதனால்தான் சொல்கிறோம், இது ஒரு தோல்வியடைந்த திட்டம். மக்களை முழு நேர உழைப்பிலிருந்து வெளியேற்றவும், அவர்களின் நேரத்தை அபகரித்துக்கொள்வதற்கும் மட்டுமே நூறு நாள் வேலைத் திட்டம் பயன்படுகிறது.’’

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு