Published:Updated:

தவறுகளை தடுக்கும் கடமை முதல்வருக்கு இருக்கிறது! - கறார் காட்டும் கே.பாலகிருஷ்ணன்

கே.பாலகிருஷ்ணன்
பிரீமியம் ஸ்டோரி
கே.பாலகிருஷ்ணன்

நீர்நிலையில் இருக்கும் நீதிமன்றத்தில் அமர்ந்துகொண்டு ஏழைகளின் வீடுகளை இடிக்க உத்தரவிடுகிறார்கள்.

தவறுகளை தடுக்கும் கடமை முதல்வருக்கு இருக்கிறது! - கறார் காட்டும் கே.பாலகிருஷ்ணன்

நீர்நிலையில் இருக்கும் நீதிமன்றத்தில் அமர்ந்துகொண்டு ஏழைகளின் வீடுகளை இடிக்க உத்தரவிடுகிறார்கள்.

Published:Updated:
கே.பாலகிருஷ்ணன்
பிரீமியம் ஸ்டோரி
கே.பாலகிருஷ்ணன்

“ஏழைகளின் வீடுகளை இடித்துத்தள்ளி, அவர்களைக் கண்ணீரும் கம்பலையுமாக நடுரோட்டில் நிறுத்துவது அரசுக்கு அழகா... இது போன்ற நடவடிக்கையை முதல்வர் அனுமதிக்கிறாரா?” – சென்னையில் ஏழை மக்களின் குடியிருப்புகள் அதிகாரிகளால் இடிக்கப்பட்டதைக் கண்ட வேதனையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் உதிர்த்த வார்த்தைகள் இவை. ஆட்சியாளர்கள் மத்தியில் இந்த வார்த்தைகள் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கின்றன. அவரிடம், சில கேள்விகளை முன்வைத்தோம்...

“தி.மு.க அரசின் பல நடவடிக்கைகளை வரவேற்றும் பாராட்டியும் வருகிறீர்கள். ஆனால், சென்னை ஆர்.ஏ.புரம் கோவிந்தசாமி நகரில் மக்களின் குடியிருப்புகள் இடிக்கப்பட்ட விவகாரத்தில், அரசைக் கடுமையாக விமர்சித்திருக்கிறீர்களே?”

“கோவிந்தசாமி நகரில் பொதுப்பணித் துறைக்குச் சொந்தமான இடத்தில் அமைந்துள்ள ஏழை மக்களின் குடியிருப்பு தொடர்பான வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் பல ஆண்டுகளாக நடைபெற்றுவருகிறது. தனியார் ஒருவர் தொடர்ந்த அந்த வழக்கை முந்தைய அ.தி.மு.க அரசு சரியாக நடத்தவில்லை. அதுதான் பிரச்னைக்குக் காரணம். இப்போது, அந்த வீடுகளை இடிப்பதற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. வழக்கைத் தொடர்ந்த வசதி படைத்த அந்த நபருக்குச் சாதகமான தீர்ப்பு அது. பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஏழைகளின் வீடுகளை இடித்துவிட்டார்கள். அதனால், ஒருவர் தீக்குளித்து இறந்துவிட்டார். வீடிழந்த மக்கள் குழந்தை, குட்டிகளுடன் நடுத்தெருவில் நிற்கிறார்கள். எனவேதான், `கோர்ட் உத்தரவை நிறைவேற்றுவதாகச் சொல்லி, ஏழைகளின் வீடுகளை இடிப்பதை அரசு வேடிக்கை பார்க்கலாமா?’ என்று கேட்டேன். உடனடியாக முதல்வர் தலையிட்டு, ‘இதுபோல இனி நடக்காது’ என்று உறுதியளித்தார். அது வரவேற்கத்தக்கது.”

“ஆனால், அதற்கு மறுநாளே ஒட்டன்சத்திரத்தில் பழங்குடி மக்களின் வீடுகளை அதிகாரிகள் இடித்துவிட்டார்கள். சிதம்பரத்திலும் அது போன்ற சம்பவம் நிகழ்ந்ததே..?”

“இதற்கு முக்கியக் காரணம் நீதிமன்றங்கள்தான். நீர்நிலைப் புறம்போக்கில் இருக்கும் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று உயர் நீதிமன்றமும், உச்ச நீதிமன்றமும் பல உத்தரவுகளையும் தீர்ப்புகளையும் வழங்கியுள்ளன. நீர்நிலைப் புறம்போக்கு உள்ளிட்ட நிலங்களை வகை மாற்றம் செய்வதற்கான உரிமை மாநில அரசுக்கு இருக்கிறது. ஆனால், அப்படி வகை மாற்றம் செய்வதற்கு மாநில அரசு முடிவெடுக்கும்போது, அதற்கு எதிரான உத்தரவையும் தீர்ப்பையும் நீதிமன்றம் வழங்குகிறது. எனவே, நீதிமன்றங்களைத்தான் நாம் கேள்வி கேட்க வேண்டும். சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளை நீர்நிலையில்தான் கட்டப்பட்டிருக்கிறது. நீதிபதிகளின் குடியிருப்பு, சென்னை போட் கிளப்பில் குடியரசுத் தலைவர் தங்கும் மாளிகை, ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் அதிகாரிகள் குடியிருப்பு ஆகியவை நீர்நிலைகளில்தான் கட்டப்பட்டிருக்கின்றன. இவையெல்லாம் நீதிமன்றத்தின் கண்களுக்குத் தெரியவில்லை.”

“அந்தக் கட்டடங்களையும் இடிக்க வேண்டும் என்கிறீர்களா?”

“நீர்நிலையில் இருக்கும் நீதிமன்றத்தில் அமர்ந்துகொண்டு ஏழைகளின் வீடுகளை இடிக்க உத்தரவிடுகிறார்கள். ஆனால், நீர்நிலைகளில் இருக்கும் அதிகாரம், வசதி படைத்தவர்களின் வீடுகளையும் நிறுவனங்களையும் அகற்ற வேண்டுமென ஏன் நீதிமன்றம் உத்தரவிடவில்லை என்ற கேள்வியை முன்வைக்கிறோம்.”

தவறுகளை தடுக்கும் கடமை முதல்வருக்கு இருக்கிறது! - கறார் காட்டும் கே.பாலகிருஷ்ணன்

“தங்கள் ஆட்சியை `திராவிட மாடல் ஆட்சி’ என்று தி.மு.க குறிப்பிடுகிறது. ஆனால், ‘மதுரையில் ஆர்.எஸ்.எஸ் நிகழ்ச்சிக்கான சில வசதிகளை அரசே ஏற்படுத்திக் கொடுத்தது. மயிலாப்பூரில் சிவராத்திரி விழாவை அரசே நடத்துகிறது. ஆம்பூர் பிரியாணி திருவிழாவில் பீஃப் பிரியாணிக்குத் தடைபோடப்படுகிறது. பட்டினப்பிரவேச விவகாரத்தில் அரசு பல்டி அடிக்கிறது. ஆகவே, இது `ஆரிய மாடல் ஆட்சி’ என்று சிலர் விமர்சிக்கிறார்களே?”

“மிகச்சிறிய பிரச்னைகளைக்கூட ஊதிப்பெருக்கி தமிழகத்தில் மதக் கலவரங்களை ஏற்படுத்திவிட முடியாதா என்று பா.ஜ.க பார்க்கிறது. மைக்கேல்பட்டியில் என்ன நடந்தது என்பதை நாடே பார்த்தது. எனவே, தமிழக அரசு ஒவ்வொரு பிரச்னையையும் மிகுந்த எச்சரிக்கையுடன் அணுகுகிறது. ஆனால், ஒரு சில சம்பவங்களைவைத்து, `இது ஆரிய மாடல் ஆட்சி’ என்று விமர்சிப்பது ஏற்புடையதல்ல.”

“பா.ஜ.க மீதான பயம் காரணமாகத்தான் பட்டினப் பிரவேசம், பிரியாணி திருவிழா போன்ற பிரச்னைகளில் தமிழக அரசு பின்வாங்கிவிட்டது என்கிறார்களே?”

“இது ஒரு நல்ல நகைச்சுவை. தி.மு.க-வோ, எங்கள் கூட்டணிக் கட்சிகளோ பா.ஜ.க-வுக்கு பயப்படும் நிலையில் இல்லை. மத்தியில் இருக்கும் அதிகாரத்தைவைத்து அவர்களால் என்ன செய்துவிட முடியும்?”

“ஆட்சிக்கு வந்த பிறகு, கூட்டணிக் கட்சிகளுக்கான முக்கியத்துவத்தை தி.மு.க குறைத்துவிட்டதாகச் சொல்லப்படுகிறதே..?”

“அப்படி இல்லை. தி.மு.க எதிர்க்கட்சியாக இருந்தபோது பல பிரச்னைகளுக்கு ஒன்று சேர்ந்து போராடினோம். தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகு, அரசிடம் எங்கள் கோரிக்கைகளை வைக்கிறோம். அவற்றில் பல கோரிக்கைகளை அரசு நிறைவேற்றுகிறது. உதாரணமாக, விக்னேஷ் காவல் மரணம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி விசாரணை வேண்டுமென்று வலியுறுத்தினோம். உடனே சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. வீடுகள் இடிப்பு விவகாரத்தில் நாங்கள் தலையிட்டவுடன், ‘இனிமேல் இப்படி நடக்காது’ என்று முதல்வர் அறிவித்திருக்கிறார்...”

“கரப்ஷனும் கமிஷனும் தி.மு.க ஆட்சியில் அதிகரித்துவிட்டதாக அ.தி.மு.க-வும் பா.ஜ.க-வும் குற்றம்சாட்டுகின்றனவே?”

“இந்த ஆட்சியில், தவறுகளோ முறைகேடுகளோ நடந்தால் அவற்றைக் கண்காணித்து, தடுக்க வேண்டிய கடமை முதல்வருக்கு இருக்கிறது. ஆனால், இப்படியான குற்றச்சாட்டை முன்வைப்பதற்கான தார்மிக உரிமை அ.தி.மு.க-வுக்கோ, பா.ஜ.க-வுக்கோ கிடையாது. ஊழல் வழக்கில் தண்டனை பெற்றவர்கள் கரப்ஷன் பற்றிப் பேசுவது வேடிக்கை இருக்கிறது!”

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism