அரசியல்
Published:Updated:

ஆளுநர் தலையீட்டுக்கு தி.மு.க சொல்லும் விளக்கம் ஏற்புடையது அல்ல!

முத்தரசன்
பிரீமியம் ஸ்டோரி
News
முத்தரசன்

- தோழர் முத்தரசன் உரிமைக்குரல்

‘இல்லம் தேடிக் கல்வித் திட்டம்’ ஆர்.எஸ்.எஸ் கொள்கையைப் பரப்பும் திட்டம்’ என்று தி.மு.க கூட்டணிக் கட்சிகளே சலசலக்க... ‘கூட்டணிக்குள் குழப்பம் வந்தாச்சுடோய்’ என்றரீதியில் சர்ச்சைகள் சலங்கை கட்ட... திட்டத்துக்கு எதிராகச் சீறிவந்த கூட்டணிக் கட்சியினரே தடாலடியாக ‘யூ டர்ன்’ எடுத்து ஆதரவு தெரிவித்துவருவது, யாரும் எதிர்பாரா திருப்பம். ‘என்னதான் நடந்தது...’ என்பதை அறிந்துகொள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் இரா.முத்தரசனை நேரில் சந்தித்தோம்...

“இல்லம் தேடிக் கல்வித் திட்டத்துக்கான எதிர்ப்பை வாபஸ் பெற்று, தடாலடியாக ஆதரவு தெரிவித்துவிட்டீர்களே... கூட்டணி நிர்பந்தமா?’’

“அந்தத் திட்டம் மீதான எங்கள் ஐயப்பாடுகள் அனைத்தையும் நிவர்த்தி செய்யும்விதமாக முதல்வரே விளக்கமாக அறிக்கை வெளியிட்டுவிட்டார். அதுமட்டுமல்ல... ஒன்றிய பா.ஜ.க அரசின் ‘புதிய கல்விக் கொள்கை’யை எந்தச் சூழ்நிலையிலும் அமல்படுத்த மாட்டோம் என்பதிலும் தமிழக அரசு மிகவும் உறுதிகாட்டியிருக்கிறது. மேலும், திட்டத்தில் இணையும் தன்னார்வலர்கள் அனைவரும் எங்களது நேரடிக் கண்காணிப்பின் கீழ்தான் செயல்படுவார்கள் என்ற உத்தரவாதத்தையும் அரசு அளித்திருக்கிறது. எனவேதான் திட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தோமே தவிர... கூட்டணி நிர்பந்தம் என்றெல்லாம் எதுவும் இல்லை!’’

“ஆனால், ‘புதிய கல்விக் கொள்கை அடிப்படையில் ஆசிரியர்களுக்குப் பயிற்சி’ எனத் தமிழகப் பள்ளிக் கல்வித்துறை சுற்றறிக்கை வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறதே..?’’

“தங்களுக்குவேண்டிய காரியங்களை, அதிகாரிகளைப் பயன்படுத்திச் செய்யவும் ஒன்றிய பா.ஜ.க அரசு தயங்காது. இந்த அடிப்படையில்தான் இப்படியொரு சுற்றறிக்கை பள்ளிக் கல்வித்துறையிலிருந்தே வெளியாகியிருக்கிறது. ஆனால், சுற்றறிக்கையை அனுப்பிய அதிகாரிமீது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டு, பணியிட மாற்றம் செய்யப்பட்டுவிட்டார். ‘எங்கள் கவனத்துக்கு வராமல் சுற்றறிக்கை அனுப்பிவிட்டார்’ என்றெல்லாம் நழுவலாக பதில் கூறாமல், இந்த விஷயத்தில் தமிழக அரசு விழிப்புடன் ரொம்பவும் கவனமாக இருக்கிறது என்பது இதிலிருந்தே தெரிகிறது.’’

“மருத்துவர் ராமதாஸ், சீமான் உள்ளிட்டோர் ‘இ.தே.க திட்டம் என்பது புதிய கல்விக் கொள்கையின் முன்னோடித் திட்டம்தான்’ என்பதற்கான ஆதாரங்களை அடுக்கியிருக்கிறார்களே?’’

“இந்தத் திட்டத்தில் பல்வேறு ஐயப்பாடுகளும், அதையொட்டிய அச்சமும் இருந்ததால்தான் திட்டத்துக்கு எதிராக நாங்களும்கூட அறிக்கை வெளியிட்டோம். ஒன்றிய அரசின் மோசமான புதிய கல்விக் கொள்கையை யார் எதிர்த்தாலும் அவர்களை நாமும் வரவேற்கிறோம்தான். அதேநேரம், தமிழக முதல்வர் இது குறித்து அளித்திருக்கும் அறிக்கை ரொம்பவும் தெளிவாக, விளக்கமாக இருக்கிறது. ‘எக்காரணம் கொண்டும் புதிய கல்விக் கொள்கையைத் தமிழ்நாட்டில் அமல்படுத்த மாட்டோம். தன்னார்வலர்களும்கூட முழுக்க முழுக்க எங்கள் கட்டுப்பாட்டிலேயேதான் இருப்பார்கள். மேலும் விரைவில் தமிழ்நாட்டுக்கென தனிக் கல்விக்கொள்கை உருவாக்கப்படும்’ என்றெல்லாம் உறுதியும் கொடுத்திருக்கிறார். ஒன்றிய அரசுக்கு எதிராக ஆயிரம் அறிக்கைகள் வெளியிட்டிருக்கிறோம். ஓர் அறிக்கைக்குக்கூட அவர்கள் பதில் அளித்தது கிடையாது. ஆனால், இங்கே மாற்றுக் கருத்தையும் உள்வாங்கி, அதற்குரிய விளக்கத்தையும் தமிழக அரசு வழங்கியிருப்பது மெச்சத் தகுந்தது.’’

“ `ஆரம்பப் பள்ளி மாணவர்களுக்குத் திறனறிவுத் தேர்வு நடத்தப்படும்’ எனத் தமிழக அரசு அறிவித்திருப்பது, ‘புதிய கல்விக் கொள்கை’யின் ஓர் அம்சம்தானே?’’

“திறனறியும் தேர்வு முறையை நாங்களும் ஆட்சேபிக்கிறோம்தான். ஆனால், ‘இதற்கு மதிப்பெண்கள் கிடையாது, பாஸ் - ஃபெயில் கிடையாது’ என்றெல்லாம் நமக்கு ஆறுதல் சொல்கிறார்கள். மதிப்பெண் கிடையாது, பாஸ் - ஃபெயில் கிடையாது என்றால் இதை ஏன் கொண்டுவர வேண்டும்... அப்படிக் கொண்டுவருவதன் நோக்கம்தான் என்ன?

சாதியின் பெயரால், காலம் காலமாகக் கல்வி மறுக்கப்பட்ட பெரும்பான்மைச் சமூகத்துக்கு, மீண்டும் அதேபோலொரு நிலையை ஏற்படுத்துவதற்காக ‘புதிய கல்விக் கொள்கை, திறனறியும் தேர்வு முறை, நீட் நுழைவுத் தேர்வு’ என்று பல்வேறு வழிகளில் ஒன்றிய பா.ஜ.க அரசு முயல்கிறது. இதற்குத் தமிழ்நாடும் இரையாகிவிடக் கூடாது.’’

ஆளுநர் தலையீட்டுக்கு தி.மு.க சொல்லும் விளக்கம் ஏற்புடையது அல்ல!

“ `பெரும்பான்மை பலத்துடனான ஒன்றிய பா.ஜ.க அரசுக்கு, தி.மு.க அரசும் அடிபணிந்தே போகும்’ என்ற அரசியல் விமர்சனத்தை ‘இ.தே.க - திட்டம்’ மெய்ப்பிக்கிறதுதானே?’’

“ஒரு வாதத்துக்கு வேண்டுமானால் இதை ஏற்றுக்கொள்ளலாம். ஆனால், நடைமுறை அப்படி இல்லை. உதாரணமாக, புதிய வேளாண் சட்டம், குடியுரிமை திருத்தச் சட்டம் உள்ளிட்டவற்றை வாபஸ் பெறக் கோரி சட்டமன்றத்தில் தீர்மானம் இயற்றியிருக்கிறது தி.மு.க அரசு. அதேபோல், ஒன்றிய பா.ஜ.க அரசுக்கு எதிரான 19 கட்சிகள் அடங்கிய கூட்டத்தில், முதல்வரே பங்கேற்றிருக்கிறார். அதைத் தொடர்ந்து நடைபெற்ற போராட்டத்திலும் தி.மு.க பங்கேற்றிருக்கிறது.”

“அப்படியென்றால், ‘மாநில அரசின் செயல் திட்டங்களை ஆளுநர் ஆய்வு செய்யும் விவகாரம்’ சர்ச்சையானபோதும்கூட தி.மு.க தரப்பிலிருந்து அதிகாரபூர்வ விளக்கம் எதுவும் வராதது ஏன்?’’

“தலைமைச் செயலரே இது விஷயமாக அனைத்துத் துறைச் செயலர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியிருக்கிறார். இந்த நடவடிக்கையை எங்கள் கட்சியும் ஆட்சேபம் செய்திருக்கிறது. அதாவது, தமிழக ஆளுநர், ஒன்றிய அரசின் ஒற்றர். தமிழக அரசின் நிர்வாகத்தில் தலையிடுவதற்கான முயற்சியாக இந்தப் பிள்ளையார்சுழியைப் போடுகிறார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு இங்கே நன்றாகச் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில், ‘மக்கள்நலத் திட்டங்கள் எப்படிச் செயல்படுத்தப்படுகின்றன’ என்று அரசுக் கோப்புகளை ஆளுநர் கேட்பதென்பது ஏற்புடையது அல்ல. எனவே, இதற்கு தி.மு.க அரசு இசையக் கூடாது. ஆனால், ‘இது ஏற்கெனவே உள்ள நடைமுறைதான்’ என்பதுபோல் தி.மு.க தரப்பிலிருந்து விளக்கம் சொல்லப்பட்டிருக்கிறது. அந்த விளக்கம் ஏற்புடையது அல்ல. அதேசமயம், கடந்தகால அ.தி.மு.க அரசுபோல், தி.மு.க அரசு அடிமையாக இருக்காது என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்!’’