Published:Updated:

“மார்க்சியமும் மின்சாரமும் நிராகரிக்க முடியாதவை!”

சி.பி.ஐ மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன்

பிரீமியம் ஸ்டோரி

பேருந்து வசதிகூட இல்லாத ஒரு குக்கிராமத்தில் எளிய விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர், தோழர் இரா.முத்தரசன். பாரம்பர்யமிக்க இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளரான அவரைச் சந்தித்தோம்.

‘‘கம்யூனிசத்தின்மீது உங்களுக்கு எப்படி ஈர்ப்பு ஏற்பட்டது?’’

‘‘ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டம் (இப்போது திருவாரூர் மாவட்டம்) திருத்துறைப் பூண்டி ஒன்றியத்தில் உள்ள ஆலிவலம், நான் பிறந்த குக்கிராமம். பெரிய நிலப்பிரபு ஒருவருக்குச் சொந்தமான `பண்ணையடிமை கிராமம்’ அது. எனக்கு ஒன்பது வயதோ, பத்து வயதோ ஆனபோதுதான் அங்கு பள்ளிக்கூடமே வந்தது. அதனால் வயது கடந்துதான் ஒன்றாம் வகுப்பில் சேர்ந்தேன். அம்மைநோயால் பாதிக்கப்பட்டதால், 8-ம் வகுப்பு தேர்வு எழுத இயலவில்லை. அதற்குமேல் நான் பள்ளிக்கூடமே போகவில்லை.

“மார்க்சியமும் மின்சாரமும் நிராகரிக்க முடியாதவை!”

விவசாயக் கூலித் தொழிலாளர்கள் நிறைந்த அந்தப் பகுதியில், கம்யூனிஸ்ட் கட்சிக்கு நல்ல செல்வாக்கு. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கிளைச் செயலாளராக கோவிந்தராஜ் என்கிற தோழர் இருந்தார். அவர் என்னை ‘ஜனசக்தி’ பத்திரிகையை வாசிக்கச் சொல்வார். எங்கள் கிராம டீக்கடையின் பெட்ரோமாக்ஸ் வெளிச்சத்தில் ஜனசக்தியை வாசிப்பேன். கட்சித் தோழர்களும், விவசாயத் தொழிலாளர்களும், இளைஞர்களும் அமர்ந்து கேட்பார்கள்.

‘எரிமலை’ என்ற தலைப்பில் தோழர் அறந்தை நாராயணன், ‘சவுக்கடி’ என்ற தலைப்பில் தோழர் தா.பாண்டியன் எழுதும் கட்டுரைகள் அதில் இடம்பெற்றிருக்கும். தோழர்கள் பா.மாணிக்கம், கல்யாணசுந்தரம், நல்லகண்ணு ஆகியோரின் கட்டுரைகளும் இருக்கும். அவற்றை வாசிப்பேன். பிறகு, அது பற்றி அனைவரும் கருத்து சொல்வார்கள். கடைசியில் கிளைச் செயலாளர் விளக்கங்களைச் சொல்வார். எனக்கு அரசியல் தெளிவு ஏற்படுவதற்கு அதுதான் காரணம்.’’

‘‘நூற்றாண்டு கண்ட இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் பலம் என்ன, பலவீனம் என்ன?’’

‘‘சுதந்திர இந்தியாவின் முதல் பொதுத் தேர்தலில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பல மாநிலங்களில் வெற்றி வாகை சூடியது. நாடாளுமன்றத்திலும் நிறைய இடங்களைப் பெற்று பிரதான எதிர்க்கட்சியாக இருந்தது. சென்னை மாகாணத்தில் ஆட்சியமைப்பதற்கான சூழல் உருவாகியும், ஆட்சியமைக்க முடியாமல் போனது. அவ்வளவு செல்வாக்குடன் இருந்த கம்யூனிஸ்ட் கட்சி, 1964-க்குப் பிறகு பெரும் பின்னடைவைச் சந்தித்தது. அதற்கு, கட்சி இரண்டாகப் பிளவுபட்டது முக்கிய காரணம். அது, இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்துக்கு மட்டுமல்லாமல் இந்தத் தேசத்துக்கும் பெரும்பாதிப்பு.

அதே நேரத்தில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி யிலிருந்து சி.பி.எம்., பிறகு சி.பி.எம்-மிலிருந்து சி.பி.ஐ (எம்.எல்) எனப் பிளவுகள் ஏற்பட்ட போதிலும், அடிப்படைக் கொள்கைகளை கம்யூனிஸ்ட் இயக்கம் விட்டுவிடவில்லை. மார்க்சிய கொள்கையில் மிகுந்த நம்பிக்கை யோடும் உறுதியோடும் இருக்கிறோம். பொதுப் பிரச்னைகளில் ஒன்றிணைந்து செயல்படுகிறோம். இது ஒரு பலம்.’’

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

“இந்திய நாடாளுமன்றத்தின் செயல்பாடுகளில் கம்யூனிஸ்ட்டுகளின் பங்களிப்பு பற்றிச் சொல்லுங்கள்…”

‘‘கம்யூனிஸ்ட் தலைவர்கள் பலர், புகழ்மிக்க நாடளுமன்றவாதிகளாக இருந்திருக்கின்றனர். தோழர்கள் ஏ.கே.கோபாலன், ஜோதிர்மாய் பாசு, ஹிரேன் முகர்ஜி, இசட் ஏ அகமது, பி.ராமமூர்த்தி, எம்.கல்யாணசுந்தரம், பால தண்டாயுதம், கே.டி.கே.தங்கமணி, காத்தமுத்து உட்பட பலர் சிறந்த நாடாளுமன்றவாதிகளாக இருந்தனர்.

`தமிழ்நாடு’ எனப் பெயர் சூட்ட வேண்டும் என்று தனிநபர் மசோதாவைத் தாக்கல் செய்தவர் தோழர் பி.ராமமூர்த்தி. சீனப் போரின்போது பாதுகாப்புக் கைதியாக அவர் சிறைவைக்கப் பட்டதால், நாடாளுமன்ற விவாதத்தில் பங்கேற்க முடியவில்லை. அவருக்குப் பதிலாக மேற்கு வங்கத்தைச் சேர்ந்த தோழர் பூபேஷ் குப்தா, அந்தத் தனிநபர் தீர்மானத்தை முன்மொழிந்து மிகச்சிறப்பாக விவாதம் செய்தார். அதை ஆதரித்து அண்ணா பேசினார்.

இரா.முத்தரசன்
இரா.முத்தரசன்

பூபேஷ் குப்தா பேசுகிறார் என்றால், எந்தக் குறுக்கீடும் இருக்காது; விதிகள் அனைத்தும் தளர்த்தப்படும். அவர் பேசத் தொடங்கினால், நாடாளுமன்ற இருக்கைகள் அனைத்தும் நிரம்பி இருக்கும். குடியரசுத் தலைவராக இருந்த டாக்டர் ராதாகிருஷ்ணன், ‘பூபேஷ் குப்தா என் மாணவர். இன்னும் சில காலம் என் மாணவராக அவர் நீடித்திருந்தால், அவருடைய கொள்கைக்கு நான் சென்றிருப்பேன்’ எனக் குறிப்பிட்டார். அந்தளவுக்கு மிகத் திறமையாக வாதிடக் கூடியவர்.

இந்திரஜித் குப்தா, இந்தியாவின் உள்துறை அமைச்சராகவே செயல்பட்டவர். தேர்தல் சீர்திருத்தம் கொண்டுவர தனி அறிக்கையை அவர் அளித்தார். அது அமல்படுத்தப் பட்டிருந்தால், தேர்தல் முறையில் மிகப்பெரிய மாற்றம் வந்திருக்கும். தோழர்கள் டி.ராஜாவும் சீதாராம் யெச்சூரியும் மாநிலங்களவை உறுப்பினர்களாக மிகச் சிறப்பாகப் பணியாற்றியிருக்கிறார்கள். எதிர்க்கட்சிகளின் கருத்துகளை செவிமடுத்து கேட்கும் ஜனநாயகத் தன்மை அன்றைக்கு இருந்தது. கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள், மக்கள் பிரச்னைகளைத்தான் பேசுவார்கள் என்ற எண்ணம் ஆட்சியாளர்களிடம் இருந்தது.”

‘‘ஒருகாலத்தில் லட்சக்கணக்கான இளைஞர்களை உறுப்பினர்களாகக்கொண்ட இடதுசாரி அமைப்புகளாக இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் இருந்தன. இன்றைக்கு இளைஞர்களை ஈர்க்கக்கூடிய கட்சியாக கம்யூனிஸ்ட் கட்சி இருக்கிறதா?’’

இரா.முத்தரசன்
இரா.முத்தரசன்

‘‘பெரும்பகுதி இளைஞர்கள் கம்யூனிஸ்ட் கட்சிக்கு வரவில்லை என்பதை ஒப்புக்கொள் கிறேன். அதேநேரம், இடதுசாரி சிந்தனையுள்ள ஏராளமான இளைஞர்களை இங்கு பார்க்க முடிகிறது. சே குவாரா பனியன் அணிந்த இளைஞர்களை அதிகம் பார்க்க முடிகிறது. இடதுசாரிப் புத்தகங்களை வாசிக்கக்கூடிய இளைஞர்கள் ஏராளம் இருக்கின்றனர். அவர்களையெல்லாம் கம்யூனிஸ்ட் கட்சிக்குள் கொண்டுவர வேண்டியிருக்கிறது. அதற்கு எது தடையாக இருக்கிறது என்பதைக் கண்டறிந்து, அந்தத் தடையை அகற்ற வேண்டும். அதற்கான பணியை நிச்சயம் செய்வோம்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் பெண்களுக்கும் இளைஞர்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று பேசிவந்தோம். அதை இப்போது செயல்படுத்திவருகிறோம். உதாரணமாக, எங்கள் கட்சியின் உயர்ந்த அமைப்பான தேசிய நிர்வாகக் குழுவுக்கு தேர்வுசெய்யப்படுபவர்கள், நீண்ட காலம் கட்சிப்பணி ஆற்றிய அனுபவம் கொண்டவர்களாகத்தான் இருப்பார்கள். இப்போது, கட்சிக்கு வந்து சில ஆண்டுகளே ஆன இளைஞர்களையும் அதில் சேர்த்துள்ளோம். மாணவர் தலைவரான கன்ஹையா குமார் சமீபத்தில் தேசிய நிர்வாகக் குழுவுக்குத் தேர்வு செய்யப்பட்டார். அதுபோல் மாநில அளவிலும் முக்கிய முடிவுகளை எடுக்கக்கூடிய அமைப்புகளில் இளைஞர்களை இணைத்துள்ளோம். இதன்மூலம் நிறைய நல்ல மாற்றங்கள் வரும்.”

“மார்க்சியம் என்பது ஒரு விஞ்ஞானம். அந்தக் கொள்கையின் அடிப்படையில் செயல்படும் கம்யூனிஸ்ட்டுகளுக்கு, இந்தியாவில் எப்போது மக்கள் ஜனநாயகப் புரட்சி நடக்கும் என்ற கணிப்பு இருக்கிறதா?’’

‘‘மார்க்சியம் ஒரு விஞ்ஞானம் என்பது மிகச்சரி. விஞ்ஞானம் என்பது படிப்படியாக வளர்ந்துகொண்டே இருக்கும். அதை ஒருபோதும் பின்னுக்கு இழுக்க முடியாது. அதுபோல்தான் மார்க்சியமும். மார்க்சியத்தை நிராகரிக்கவே முடியாது. அதைத்தான், ‘மார்க்சையும் மின்சாரத் தையும் நிராகரித்துவிட்டு எதிர்காலத்தில் எந்த நாடும் ஒரு மில்லிமீட்டர்கூட நகர முடியாது’ என்று கவிப்பேரரசு வைரமுத்து மிகச்சரியாகச் சொன்னார்.

அதேநேரம், புரட்சிக்கு காலவரையறை செய்ய முடியாது. நாம் எடுக்கிற முயற்சிகளும் அவற்றால் கிடைக்கிற வெற்றிகளையும் பொறுத்துதான் அது அமையும். அதற்காக, வெகுகாலம் காத்திருக்க வேண்டியிருக்கும் என்று நான் கருதவில்லை. ஏனென்றால், மக்களின் எந்த ஒரு பிரச்னையையும் முதலாளித்துவத்தால் தீர்க்க முடியவில்லை. மக்களின் வாழ்க்கையில் மாற்றமும் மகிழ்ச்சியும் ஏற்பட வேண்டுமென்றால், அது சோசலிசத்தால் மட்டுமே முடியும். சோசலிசம்தான் அனைத்துப் பிரச்னைகளையும் தீர்க்கும்.’’

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு