Published:Updated:

``பதவியை ராஜினாமா செய்துவிட்டு ஆர்.எஸ்.எஸ்-ஸில் சேர்ந்துவிடுங்கள்!" - ஆளுநர் ரவியைச் சாடிய முத்தரசன்

முத்தரசன்

`ஆர்.எஸ்.எஸ்-ஸின் மனுதர்மக் கொள்கை வெற்றிபெற வேண்டுமென்பதுதான் ஆளுநரின் விருப்பமாக இருக்கிறது. ஆனால், ஆளுநர் பொறுப்பில் இருந்துகொண்டு இப்படியெல்லாம் செயல்படக் கூடாது.' - முத்தரசன்

``பதவியை ராஜினாமா செய்துவிட்டு ஆர்.எஸ்.எஸ்-ஸில் சேர்ந்துவிடுங்கள்!" - ஆளுநர் ரவியைச் சாடிய முத்தரசன்

`ஆர்.எஸ்.எஸ்-ஸின் மனுதர்மக் கொள்கை வெற்றிபெற வேண்டுமென்பதுதான் ஆளுநரின் விருப்பமாக இருக்கிறது. ஆனால், ஆளுநர் பொறுப்பில் இருந்துகொண்டு இப்படியெல்லாம் செயல்படக் கூடாது.' - முத்தரசன்

Published:Updated:
முத்தரசன்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், திருச்சி மாவட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “இந்திய அரசியலமைப்புச் சட்டத்துக்கு விரோதமாகவும், அரசியலமைப்புக்கு உட்பட்டு செயல்படவேண்டிய அமைப்புகளை பா.ஜ.க அரசு தங்களுக்காகவும் பயன்படுத்திவருகிறது. சமீபத்தில் தலைமைத் தேர்தல் ஆணையர் நியமனத்தில் உச்ச நீதிமன்றமே பா.ஜ.க அரசுக்குக் கண்டனம் தெரித்ததோடு, விளக்கம் கேட்டிருக்கிறது. மோடி அரசு அரசியலமைப்புச் சட்டத்தைச் சிதைத்து ஆட்சி செய்கிறது. தமிழ் மொழியைப் புகழ்ந்து பேசும் மோடி இந்தி, சம்ஸ்கிருதத்துக்கு மட்டுமேதான் அதிக நிதி ஒதுக்கி முக்கியத்துவம் கொடுக்கிறார். மொழிகளை மட்டுமல்ல, மாநிலங்களையும் அவர் சமமாக நடத்தவில்லை” என்றார்.

முத்தரசன்
முத்தரசன்

தொடர்ந்து பேசியவர், ``மத்திய அரசு அரசியலமைப்புச் சட்டத்துக்கு விரோதமாகச் செயல்படுகிறது. அதே போக்கைத்தான் தமிழக ஆளுநரும் பின்பற்றுகிறார். இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு. ஆனால், அவரோ ‘உலகிலுள்ள நாடுகள் ஒவ்வொரு மதத்தின் அடிப்படையில்தான் இருக்கின்றன. அதேபோல இந்தியாவும் இந்துக்களின் நாடு’ என பகிரங்கமாகச் சொல்லுகிறார். இது அரசியலமைப்புச் சட்டத்துக்கே விரோதமானது. இப்படிச் சொன்ன இந்த ஒரே ஒரு காரணத்துக்காக ஆளுநர் பொறுப்பிலிருந்து உடனடியாக அவர் டிஸ்மிஸ் செய்யப்பட வேண்டும். மேலும், சனாதனம்தான் இந்த நாட்டை ஒற்றுமைப்படுத்தியது என்கிறார். உண்மையில் சனாதனம்தான் மக்களைப் பிளவுபடுத்தியது. திருக்குறள், `உலகப்பொதுமறை’ எனப் போற்றப்படுகிறது. ஆனால், ஆளுநரோ அது, `இந்துக்களின் குறள்’ என்கிறார். வேண்டுமென்றே இப்படியான கருத்துகளைச் சொல்லி சர்ச்சைகளை உருவாக்குகிறார். ஆர்.எஸ்.எஸ்-ஸின் மனுதர்மக் கொள்கை வெற்றி பெற வேண்டுமென்பதுதான் ஆளுநரின் விருப்பமாக இருக்கிறது. ஆனால், ஆளுநர் பொறுப்பில் இருந்துகொண்டு இப்படியெல்லாம் செயல்படக் கூடாது. ஆளுநர் ரவி விரும்பினால் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தில் சேர்ந்து அதன் கொள்கைகளைப் பரப்பட்டும். உலகத்திலேயே அதிசமயான இயக்கமென்றால் அது ஆர்.எஸ்.எஸ்-தான். அவர்களுடைய சொந்தக் கொள்கைகளை பகிரங்கமாகச் சொல்லாமல் மூடி மறைத்து, ஒளித்து அமைப்பை நடத்திவருகிறார்கள். அந்த அமைப்பினுடைய பிரதிநிதியாகத்தான் தமிழக ஆளுநர் செயல்படுகிறார். ஆகவே, அவரை ஆளுநர் பதவியிலிருந்து நீக்க வேண்டும். ஒன்றிய அரசு ஆளுநரைத் திரும்பப் பெற வேண்டும். ஆளுநரைக் கண்டித்து டிசம்பர் 29-ம் தேதி ஆளுநர் மாளிகைக்கு முன்பாக முற்றுகைப் போராட்டம் நடத்தவிருக்கிறோம்.

தமிழ்நாட்டில் காவல்துறையால் தேடப்படும் நபர்கள் அத்தனை பேரும் பா.ஜ.க-வில்தான் அடைக்கலம் பெற்றிருக்கின்றனர். அதுமட்டுமல்ல, அவர்கள்தான் அங்கு மிகப்பெரிய பொறுப்புகளையும் வகித்துக்கொண்டு இருக்கிறார்கள் - இரா.முத்தரசன்

ராஜீவ் கொலை வழக்கு குற்றவாளிகள் விடுதலை விவகாரத்தில் ஆளுநரை உச்ச நீதிமன்றம் கண்டித்திருக்கிறது. ஆன்லைன் சூதாட்டத்துக்குத் தடை உள்ளிட்ட சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட 20 மசோதாக்களைக் கிடப்பில் வைத்திருக்கிறார். மோடி ஆதரவோடு போட்டி அரசாங்கத்தை ஆளுநர் ரவி நடத்திவருகிறார் என்பதற்கான அடையாளம் இது. தமிழ்நாட்டில் காவல்துறையால் தேடப்படும் நபர்கள் அத்தனை பேரும் பா.ஜ.க-வில்தான் அடைக்கலம் பெற்றிருக்கின்றனர். அதுமட்டுமல்ல, அவர்கள்தான் அங்கு மிகப்பெரிய பொறுப்புகளையும் வகித்துக்கொண்டு இருக்கிறார்கள். பெண்களை இழிவுபடுத்துவதில் பா.ஜ.க-வைப்போல வேறு கட்சி இருக்க முடியாது” என்றார்.